SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 20, 2025 21:07 IST

    சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய அப்பாவு

    பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார். மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கீடு செய்ததாகக் கூறி அப்பாவு வ்வெளியேறினார். ஆளுநர் குறித்த அப்பாவு பேச்சு நிகழ்ச்சி குறிப்பில், பதிவாகாது என ஹரிவன்ஷ் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சபாநாயகர் அப்பாவு மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார். 

  • Jan 20, 2025 20:57 IST

    அரசமைப்புக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர்; சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு

    பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “அரசமைப்புக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார்; அரசமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் ஆளுநர் தலையிடுகிறார்; அரசமைப்பு விதிகளை தமிழக ஆளுநர் கேலிக்கூத்தாக்கி வருகிறார்; தமிழக ஆளுநரின் தலையீடு கவலை அளிப்பதாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

    Advertisment

  • Jan 20, 2025 19:59 IST

    2026-ல் எஸ்.வி.சேகரை பயன்படுத்தினால் போதும் – ஸ்டாலின்

    சென்னையில் நடைபெறும் எஸ்.வி.சேகரின் நாடகப் பிரியா குழுவின் 50 ஆண்டு விழாவில் பங்கேற்று வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2026-ல் எஸ்.வி. சேகரை பயன்படுத்திக்கொண்டால் போதும், எந்த கட்சியில் இருந்தாலும்   துணிச்சலாக பேசக்கூடியவர், சிரிக்கை வைக்கக்கூடியவர் எஸ்.வி.சேகர்” என்று பேசினார்.

  • Jan 20, 2025 19:31 IST

    விருது வென்ற தேவயானி இயக்கிய படம்  

    முதன்முறையாக நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ குறும்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது  

    Advertisment

    Advertisement

  • Jan 20, 2025 19:25 IST

    ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 

    திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளது என்பதும், இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும், சூரசம்ஹாரம், சஷ்டி போன்ற திருவிழாக் காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் இங்குள்ள கடலில் நீராடிவிட்டு முருகப் பெருமானை வழிபடுவது என்பதும் வாடிக்கை.

    இப்படிப்பட்ட பிரசித்திப் பெற்ற திருக்கோவிலை ஒட்டியுள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், 20 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் உருவாகியுள்ளதாகவும், இதனால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் கற்கள் கொட்டப்படுவதால்தான் அரிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். திருச்செந்தூர் கடற்கரையைப் பொறுத்த வரையில், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், பிற நாட்களில் கடற்கரையை தாண்டி கடல் நீர் வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலை நீடித்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்குள் திருச்செந்தூர் கோவிலில் உள்ள கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணறு வரை கடல் அலை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்தப் பிரச்சனைக்குத் நிரந்தரத் தீர்வு காண I.I.T. நிபுணர்கள் குழுவுடன் ஆய்வு செய்திருப்பதாகவும், இதனுடைய அறிக்கையின் அடிப்படையில் அரசிடமிருந்து நிதியைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களின் கருத்தினையும் கேட்டு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதேபோன்று, திருச்செந்தூர் முருகப் பெருமானை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்துச் செல்வதால், பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளவும், அங்கு அவர்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, காற்றோட்ட வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை மேற்கொள்ளவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே உள்ளது. முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, திருச்செந்தூரில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுக்கவும், பக்தர்களுக்கு விரைந்து தரிசனம் கிடைக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

  • Jan 20, 2025 19:08 IST

    119 பேர் பணியிட மாற்றம்

    கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 119 பேரை பணியிட மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    Jan 20, 2025 19:07 IST

    வள்ளலார் சர்வதேச மையம் – உத்தரவு

    வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணிகள் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    Jan 20, 2025 18:53 IST

    65 அடியை எட்டிய வைகை அணையின் நீர்மட்டம் 

    வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை அணைக்கு வினாடிக்கு 890 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக 500 கனஅடி தண்ணீரும், குடிநீருக்காக 69 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    Jan 20, 2025 18:45 IST

    நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் – அமைச்சர் சக்கரபாணி

    22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தொடர் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார். 

    Jan 20, 2025 18:40 IST

    வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவு

    வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    Jan 20, 2025 18:37 IST

    ‘அ.தி.மு.க – பா.ஜ.க காப்பி பேஸ்ட் அரசியல்’: அமைச்சர் சிவசங்கர்

    “அ.தி.மு.க – பா.ஜ.க கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அண்ணாமலை நேற்று போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து, `பசையே’ இல்லாமல், காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் பிரதமர் மோடி நடத்தும் பொம்மலாட்ட நாடகத்தில் அச்சுபிசகாமல் ஆடுகிறார்”  என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

    Jan 20, 2025 18:01 IST

    கோமியம் விவகாரம் –  காமகோடி மீண்டும் திட்டவட்டம்

    கோமியம் விவகாரத்தில் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “கோமியம் குடித்தால் காய்ச்சல் வராது என்பது அமெரிக்க ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது கோமியம் குடிப்பது எங்களது வழக்க நடைமுறையிலும் இருக்கிறது, நானும் கோமியம் குடிப்பேன்.” என்று கோமியம் குறித்த அமைச்சர் பொன்முடியின் விமர்சனத்துக்கு ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி மீண்டும் திட்டவட்டமான பதில் தெரிவித்துள்ளது. 

    Jan 20, 2025 17:52 IST

    அ.தி.மு.க பொதுச்செயலாளர், இரட்டை இலை சின்னம் விவகாரம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு 

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

    Jan 20, 2025 17:29 IST

    `விடாமுயற்சி’ பட உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயிண்ட்

    வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் `விடாமுயற்சி’ படத்தின், தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை  ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. 

    Jan 20, 2025 17:24 IST

    ஐ.ஐ.டி இயக்குனரா?, ஆர்.எஸ்.எஸ் பிரசாரகரா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 

    கோமியம் குறித்து பெருமை பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும். ஐ.ஐ.டி. இயக்குனரா?, ஆர். எஸ்.எஸ். பிரசாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு காமகோடியின் செயல்பாடு இருக்கிறது என்று குறிப்பிட்டு, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. 

    Jan 20, 2025 16:54 IST

    தமிழ்நாட்டில் கழிவு கொட்டிய விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

    தமிழ்நாட்டில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

    Jan 20, 2025 16:27 IST

    யு.ஜி.சி புதிய விதிகள் – இந்தியா கூட்டணி முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

    யு.ஜி.சி விதிகள் திருத்தம் தொடர்பாக இந்தியா கூட்டணி ஆளும் முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டைப் போன்று தங்கள் மாநில சட்டமன்றங்களிலும் யுஜிசி விதிகளை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என டெல்லி, இமாச்சல், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

    Jan 20, 2025 16:06 IST

    நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி தரப்பில் இருந்து ‘கரும்பு விவசாயி’ சின்னம் கோரப்பட்ட நிலையில், அதனை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    Jan 20, 2025 15:45 IST

    இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டி

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து,  சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    Jan 20, 2025 15:42 IST

    மத்திய கல்வி அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

    புதிய யு.ஜி.சி வரைவு விதியை திரும்பப் பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த விதிகள் மாநிலங்களின் கல்வி முறை மற்றும் கல்வி கொள்கைகளுக்கு முரணாக இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Jan 20, 2025 15:25 IST

    நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    Jan 20, 2025 15:02 IST

    மருத்துவர் கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

    கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    Jan 20, 2025 14:19 IST

    ட்ரோன்கள் பயன்படுத்த தடை

    சிவகங்கை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று (ஜன 20) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார்.

    Jan 20, 2025 13:48 IST

    சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி மதுரையில் புகார்!

    எடிட் செய்யப்பட்ட போலியான போட்டோவை வைத்து ஏமாற்றி, பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்று, பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, மதுரை மாநகர் காவல் ஆணையரிடம், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Jan 20, 2025 13:23 IST

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    Jan 20, 2025 13:21 IST

    இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்: மீனவர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை!

    சென்னை கடலோரப் பகுதிகளில் ஆமைகள் இறந்து ஒதுங்கியது தொடர்பாக மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோரக் காவல்படை, கடல்சார் அதிகாரிகள், வனத்துறையினர் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிவேக எஞ்சின் விசைப்படகுகளினால் ஆமைகள் இறப்பதாக அதிகாரிகள் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் காசிமேடு பகுதியில் அவ்வகை படகுகள் இருந்தால் பறிமுதல் செய்யுங்கள் என்றும் காரைக்கால் பகுதியில் இருந்து அதிவேக எஞ்சின் படகுகளில் வந்து அத்துமீறி மீன்பிடிப்பதால் ஆமைகள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Jan 20, 2025 12:39 IST

    கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடி பழனிசாமி ஆலோடப்பாசனை நடத்துகிறார்.

    Jan 20, 2025 12:07 IST

    முல்லை பெரியாறு அனை பராமரிப்பு பணிக்கு தடையாக கேரளா: தமிழக அரசு வாதம்

    முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணி செய்ய கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது என்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அணையில் எந்த புனரமைப்பு பணிகளையும் செய்ய கேரளா தடையாக உள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல், அணையை பாதுகாக்க நிபுணர்கள் அமைக்க வேண்டும் என கேரள அரசு இங்கே கூறுகிறது. ஆய்வு நடத்தலாம். ஆனால், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது,

    Jan 20, 2025 12:02 IST

    குப்பை கூளமாக மெரினா: காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரை

    காணும் பொங்கல் அன்று விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என்று பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது, காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதறங்கு மக்கள் தான் காரணம். அதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்று கூறியுள்ளது. 

    Jan 20, 2025 11:39 IST

    கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்க காரணம் என்ன? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

    சென்னை கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்க காரணம் என்ன என்பது குறித்து, தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வலைதான் கடல் ஆமைகள் உயிரிழக்க காரணமா?” எனவும் பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினா முதல் கோவளம் வரை கடலோரப் பகுதியில் ஆமைகள் இறந்து ஒதுங்குவது தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

    Jan 20, 2025 11:19 IST

    காவிரி – குண்டாறு இணைப்பு – தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு தடை கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையும் நிராகரித்துள்ளது. இத்திட்டத்திற்காண முதற்கட்ட அனுமதி கூட ஒன்றிய அரசு வழங்காத நிலையில், தமிழ்நாடு அரசு இதை செயல்படுத்த தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் அபய் ஓஹா, உஜ்ஜல் புயான் அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்கள். 

    Jan 20, 2025 11:10 IST

    புதுக்கோட்டை விவகாரம் – 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதிஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிக்கு பிப் 3 ஆம் தேதி வரை காவல் விதித்து திருமயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    Jan 20, 2025 11:04 IST

    சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 1 மணி வரை 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    Jan 20, 2025 10:58 IST

    சென்னை – மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் காயம்

    சென்னை அமைந்தகரையில் மாஞ்சா நூல் அறுத்து, இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் காவலரான ரம்யா என்பருக்கு பலத்த காயம். பணிக்குச் செல்லும் போது ஸ்கைவாக் அருகே உள்ள மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்ததில் கழுத்து மற்றும் கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Jan 20, 2025 10:54 IST

    சேலம் – 10 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு

    சேலம் மாவட்டத்தில் இரவு நேர வாகனத் தணிக்கைப் பணியில் மெத்தனம் காட்டியதாக பெண் காவல் உதவி ஆய்வாளர், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு செய்துள்ளார். 

    Jan 20, 2025 10:52 IST

    விவசாயிகளுக்கு இழப்பீடு – சண்முகம் வலியுறுத்தல்

    பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு  ₹35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல். 

    Jan 20, 2025 10:26 IST

    சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    கனிமவளக் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். உண்மை குற்றவாளிகளை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை அரசு திசை திருப்புகிறது மதுரம் கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

    Jan 20, 2025 10:12 IST

    நெல்லை – மாமனார், மாமியாரை கொன்ற மருமகன் கைது.

    நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டி கொன்றுள்ளார் மருமகன். மாமனார் பாஸ்கர், மாமியார் செல்வராணியை வீட்டிக்கொன்ற மரியகுமாரை கைது செய்து பெருமாள்புரம் போரிலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Jan 20, 2025 10:06 IST

    போக்குவரத்து நெரிசல் – விடுமுறைக்கு பின் சென்னைக்கு திரும்பும் மக்கள்.

    வானகரம் – கோயம்பேடு சாலையில் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல். பொங்கல் விடுமுறைக்கு பின் சென்னை திரும்பும் மக்கள். 

    Jan 20, 2025 09:52 IST

    சென்னையை உலுக்கிய இரட்டை கொலை

    ஆவடி அருகே சகோதரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் பிரவீன், பாலாஜி, கார்த்திக், நவீன்குமார், சத்யா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கணேஷ் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சகோதர்கள் இருவரும் கொல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளிகளான கணேஷ், மாதேஷ், தருண் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Jan 20, 2025 09:38 IST

    வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவுபெறுகிறது. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும். 

    Jan 20, 2025 09:30 IST

    சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

    பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் சென்னை திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் வருகை காரணமாக சிங்கப் பெருமாள் கோயில் பகுதியை கடக்க நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS