SOURCE :- INDIAN EXPRESS
Jan 19, 2025 22:11 IST
கோ கோ உலககோப்பை: ஆடவர், மகளிர் இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன்!
கோ கோ உலககோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் நேபாள அணியுடன் மோதிய இந்திய அணி 54-36 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவில் நடந்த கோ கோ உலககோப்பை தொடரில், ஆடவர் மகளிர் என இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
Jan 19, 2025 22:08 IST
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு போராட்டக்குழுவுடன் சென்ற தவெக ஆனந்த்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நாளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு, நடைபெறும் இடம் தொடர்பாக மீண்டும் சிக்கல் ஏற்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு போராட்டக்குழுவுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றுள்ளார்.
Jan 19, 2025 20:19 IST
திருமயம் சமூக ஆர்வலர் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம்
புதுக்கோட்டை திருமயம் அருகே லாரி மோதி சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உயிரிழந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Jan 19, 2025 20:18 IST
கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: குற்றவாளியின் தாய் உருக்கம்!
எனது மகனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கட்டும். நீதிமன்றம் அவரை தூக்கிலிடச் சொன்னாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றொர் வலியை நான் உணர்கிறேன். கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராயின் தாய் பேட்டியில் கூறியுள்ளார்.
Jan 19, 2025 19:52 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Jan 19, 2025 18:21 IST
நல்ல தலைவர் தேவை – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இல்லத்தில் நடைபெற்ற நூலகத் திறப்பு விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தலைவர் முக்கியம் அல்ல, தத்துவம் தான் முக்கியம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தத்துவத்தை செயல்படுத்த நல்ல தலைவர் தேவை” எனக் கூறினார்.
Jan 19, 2025 17:48 IST
உறுப்பினர் சேர்க்கையில் 1 கோடியை எட்ட உள்ளோம் – அண்ணாமலை
பா.ஜ.க மிக வேகமாக வளர்ந்து வருவதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 48 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Jan 19, 2025 17:14 IST
புஸ்ஸி ஆனந்த் ஆய்வு
ஏகனாபுரத்தில் விஜய்யின் நிகழ்வு நடைபெறும் இடத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை நாளைய தினம் விஜய் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Jan 19, 2025 16:48 IST
தி.மு.க மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
சர்வாதிகார ஆட்சியை நடத்தியது தி.மு.க தான் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகள் பா.ஜ.க-விற்கு தனிப்பெரும்பான்மை இருந்தும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளித்ததாக கூறிய அவர், தனிப்பெரும்பான்மை இல்லாத போதும் கூட அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க இடம் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
Jan 19, 2025 16:15 IST
அம்பேத்கர் திடலில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடி வரும் பொதுமக்களை, நாளை (ஜன 20) த.வெ.க தலைவர் விஜய் சந்திக்கிறார். இந்த சந்திப்பு காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் 1 மணி வரை கேரவனில் இருந்தபடி விஜய் உரையாற்றுகிறார்.
Jan 19, 2025 15:46 IST
ஐ.ஐ.டி இயக்குனர் இவ்வாறு பேசுவது வருந்தத்தக்கது – அமைச்சர் பொன்முடி
ஐ.ஐ.டி போன்ற மிகச்சிறந்த கல்லூரியின் இயக்குனர் இவ்வாறு பேசுவது வருந்தத்தக்கது. ஆளுநரைப் போலவே ஐ.ஐ.டி இயக்குநரும் மாறிவிட்டார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
Jan 19, 2025 15:28 IST
காசாவில் போர் நிறுத்தம் அமல்; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹமாஸ் தரப்பிலிருந்து பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
Jan 19, 2025 14:54 IST
இரட்டை கொலை – ஆவடி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
Jan 19, 2025 14:38 IST
அமெரிக்காவில் டிக்டாக் சேவைகளை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் டிக்டாக் (TikTok) செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், தனது சேவைகளை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது
Jan 19, 2025 14:09 IST
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது – அண்ணாமலை
மத்திய அரசை குறை கூறுவதே, இங்குள்ளவர்களின் முழுநேர வேலை, தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் வரும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
Jan 19, 2025 13:43 IST
ஜன.25 முக்கியமான நாள்: நரேந்திர மோடி
ஜனவரி 25 ஆம் தேதி முக்கியமான நாள் ஆகும் என நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜனவரி 25 இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட தினம் என்பதால் அது முக்கியமான நாள் ஆகும். அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பிற்கு இடம் அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Jan 19, 2025 13:40 IST
காசா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்டம் அமலுக்கு வராது. காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
Jan 19, 2025 12:44 IST
“குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு”
பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்; குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு என அன்புமணி விமர்சித்துள்ளார். பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டண கொள்ளையை நடத்தி வருகின்றன. ம்னி பேருந்து கட்டண கொள்கைக்கு தி.மு.க அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது. ஐகோர்ட் பலமுறை அளித்த தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்துக்கான கட்டணத்தை அரகே நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Jan 19, 2025 12:38 IST
தனியார் திருமண மண்டபத்தில் பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்
மேல்படவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். ஏகனாபுரம் அருகே உள்ள காலி மைதானத்தில் மக்களை சந்திக்க இருந்த நிலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Jan 19, 2025 12:26 IST
“மக்கள் கோரிக்கைகளை விஜய் அரசுக்கு கூறலாம்” – தங்கம் தென்னரசு
போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். பரந்தூரில் மக்களை சந்திக்கும் த. வெ.கலைவர் விஜய்யின் கோரிக்கைகளை அரசுக்கு கூறலாம். பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட அதிகமான நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார்.
Jan 19, 2025 12:22 IST
தி.மு.கவில் இணைந்த திவ்யா சத்யராஜ்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்.
Jan 19, 2025 11:41 IST
பரந்தூர் விமான நிலையம் ஏன் தேவை? – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்று. மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை விட சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. போராடுபவர்களை எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்திக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
Jan 19, 2025 11:38 IST
பரந்தூர் விமான நிலையம் – தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலையம் மிக அவசியமான ஒன்று, தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கலாம். விஜய் உள்பட யார் வேண்டுமென்றாலும், பரந்தூர் சென்று மக்களை தாராளமாக சந்திக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
Jan 19, 2025 11:25 IST
ஈபிஎஸ் தவறான தகவலை கூறுகிறார் -தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக, ஈபிஎஸ் முற்றிலும் தவறான தகவலை தெரிவித்துள்ளார். பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தவறான குற்றச்சாட்டை ஈபிஎஸ் கூறியுள்ளார். அடிப்படை புரிதலின்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
உள்நாட்டு உற்பத்தி அளவை பொறுத்தே, கடன் வாங்கும் அளவு, திருப்பி செலுத்தும் திறன் முடிவு செய்யப்படுகிறது. நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரம்பை விட குறைவாகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை கட்டுக்குள் உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
Jan 19, 2025 11:23 IST
மத்திய அரசு நிதிப் பங்கீட்டை தரவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங்கீட்டை தரவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 4 தென் மாநிலங்களுக்கு சேர்த்தே ரூ.27,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சுமையையும் நாங்கள் தான் சரி செய்கிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்
Jan 19, 2025 09:20 IST
சென்னையில் விடிய விடிய மழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 4.2 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
Jan 19, 2025 08:56 IST
மே மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது
Jan 19, 2025 07:56 IST
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் காலம் நீட்டிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளர்.
Jan 19, 2025 07:54 IST
சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது
மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சைஃப் அலிகான் இல்லத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசர்வடவலியில் பதுங்கியிருந்தவரை காவல்துறை கைது செய்தது,
போலீசாரிடம் பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் குற்றவாளி தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கூறியதாக தகவல். தானேவில் உள்ள பாரில் பணியாற்றி வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைய என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெறுகிறது.
SOURCE : TAMIL INDIAN EXPRESS