SOURCE :- BBC NEWS

கே2-18பி கோள், K2-18b planet

பட மூலாதாரம், Cambridge University

  • எழுதியவர், பல்லவ் கோஷ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • 17 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும், உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர உலகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கே2-18பி (K2-18b) எனும் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள எளிய சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் உயிர்களுடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் அந்த கிரகத்தில் கண்டுபிடிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இந்த கண்டுபிடிப்பு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

ஆனால், இந்த முடிவுகளை உறுதி செய்ய இன்னும் அதிக தகவல்கள் தேவை என, அந்த ஆய்வுக் குழுவினரும் சுயாதீன வானியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

விரைவிலேயே தாங்கள் உறுதியான ஆதாரத்தைப் பெறுவோம் என தான் நம்புவதாக, கேம்பிரிட்ஜ் வானியல் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது ஆய்வகத்தில் இந்த ஆய்வை வழிநடத்தும் பேராசிரியர் நிக்கு மதுசூதன் தெரிவித்தார்.

“அந்த கோளில் உயிர்கள் இருப்பதற்கான இதுவரையிலான வலுவான ஆதாரமாக இது உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இதை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது.”

கே2-18பி கோள் எப்படிப்பட்டது?

கே2-18பி கோள் பூமியைவிட இரண்டரை மடங்கு பெரிது, பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் அல்லது 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. எந்தவொரு மனிதரும் தன்னுடைய வாழ்நாளில் பயணிப்பதை விட அதிக தொலைவு இதுவாகும்.

சிறிய சிவப்பு நட்சத்திரத்தின் வழியாக இந்த கோள் சுற்றி கடந்து செல்லும்போது, அதன் மீது படும் நட்சத்திரத்தின் ஒளி மூலம், கோளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்யும் அளவுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வலுவானது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பட மூலாதாரம், NASA

உயிர்களுடன் தொடர்புடைய குறைந்தது இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள் அதன் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது, அதில் ஒன்று டைமெத்தைல் சல்ஃபைடு (DMS), மற்றொன்று டைமெத்தைல் டைசல்ஃபைடு (DMDS). பூமியில் இந்த வாயுக்கள் கடலில் உள்ள ஃபைட்டோபிளாங்டன் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தியாகிறது.

ஒருமுறை கண்காணிக்கப்பட்ட போதே இந்தளவுக்கான வாயு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து தான் ஆச்சர்யப்பட்டதாக பேராசிரியர் மதுசூதன் தெரிவித்தார்.

கே2-18பி

நிக்கு மதுசூதன் யார்?

பேராசிரியர் முனைவர் நிக்கு மதுசூதன் இந்திய வம்சாவளியை சேர்ந்த வானியற்பியலாளர் மற்றும் புறக்கோள் விஞ்ஞானி ஆவார். தற்போது அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவில் (institute) பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

அவர் ஐஐடி வாரணாசியில் பி.டெக் பட்டம் பெற்றார். பின்பு உயற்கல்விக்காக அவர் வெளிநாட்டிற்கு சென்றார். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். 2013 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். தற்போது அங்கு பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

புறக்கோள்களின் வளிமண்டலங்கள், அவற்றின் உட்புறங்கள் மற்றும் உருவாக்கம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.

புறக்கோள்களுக்கான கதிர்வீச்சுப் பரிமாற்றம், கிரக வேதியியல் மற்றும் வளிமண்டல மீட்டெடுப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றியும் அவர் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆராய்ச்சிக்காக அவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய வானியல் சங்கத்தின் கோட்பாட்டு வானியற்பியலுக்கான MERAC பரிசினை அவர் பெற்றுள்ளார்.

‘ஏராளமான உயிர்கள்’

“பூமியில் இந்த வாயுவின் அளவை விட அக்கோளின் வளிமண்டலத்தில் ஆயிரம் மடங்கு அதிகம் உள்ளதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.

“எனவே, உயிர்களுடனான தொடர்பு உண்மையாக இருந்தால், இந்த கோளில் ஏராளமான உயிர்கள் இருக்கும்,” என்றும் அவர் கூறுகிறார்.

பேராசிரியர் மதுசூதன் மேலும் கூறுகையில், “கே2-18பி கோளில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்தினால், அது இந்த விண்மீன் திரளில் உயிர்கள் இருப்பது மிகவும் பொதுவான ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்,” என்றார்.

பிபிசியின் ரேடியோ 5 லைவ் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பேசிய அவர், “அறிவியலுக்கு இது மிக முக்கியமான தருணம், ஆனால் ஒரு உயிரினமாக இது நமக்கும் மிக முக்கியமானது” என்றார்.

“இதிலிருந்து ஒரு உதாரணம் கிடைத்தால், இந்த பிரபஞ்சம் எல்லையற்றதாக இருந்தால், இன்னும் பல கோள்களில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.”

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் விரிவுரையாளரும் இந்த ஆய்வில் பங்கேற்றவருமான முனைவர் சுபிர் சர்கர், இக்கோளில் கடல் இருக்கலாம் என்றும் அதில் ஏராளமான உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் அதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறார், எனினும், “இது உறுதியாக தெரியவில்லை,” என அவர் விஞ்ஞானிகளை எச்சரிக்கிறார்.

மற்ற கோள்களிலும் உயிர்கள் உள்ளதா என்பதற்கான ஆய்வை தங்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

இந்த தருணத்தில் “ஒருவேளை”, “ஆனால்” என நிச்சயமற்ற சூழல் இருப்பதை பேராசிரியர் மதுசூதனின் குழு வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறது.

ஆய்வு முடிவுகளில் சந்தேகம்

முதலாவதாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு கண்டுபிடிப்பு என கூறும் அளவுக்கான தரத்துடன் இல்லை.

அதற்கு, தங்களுடைய ஆய்வு முடிவுகள் 99.99999% அளவுக்கு சரிதான் என்றும் இது எதிர்பாரா வெற்றி அல்ல என்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதை அறிவியல் மொழியில் ‘ஃபைவ் சிக்மா’ (five sigma) முடிவு என்கின்றனர்.

இந்த சமீபத்திய முடிவுகளில் மூன்று சிக்மாக்கள் மட்டுமே உள்ளன அல்லது 99.7% மட்டுமே சரியாக உள்ளது. இது அதிகப்படியானது என தோன்றலாம், ஆனால் அறிவியல் சமூகத்தை சமாதானம் செய்ய இது போதுமானது அல்ல. ஆனால், 18 மாதங்களுக்கு முன்பு அக்குழு அடைந்த ஒரு சிக்மா அல்லது 68% என்பதை விட இது மிகவும் அதிகமானது, அச்சமயத்தில் இதுகுறித்து மிகுந்த சந்தேகம் எழுந்தது.

கே2-18பி கோள், K2-18b planet

ஃபைவ் சிக்மா முடிவை கேம்பிரிட்ஜ் குழு அடைந்தாலும், அது அந்த கோளில் உயிர்கள் இருப்பதற்கான முடிவான ஆதாரம் அல்ல என்கிறார், எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற வானியல் ஆய்வாளருமான கேத்தரீன் ஹேமன்ஸ் கூறுகிறார், இவர் அந்த ஆய்வுக்குழுவை சேர்ந்தவர் அல்ல.

“அவ்வளவு உறுதியான ஆதாரம் இருந்தாலும், அந்த வாயு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி உள்ளது,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“பூமியில் இந்த வாயுக்கள் கடல்வாழ் உயிரினங்களால் உருவாகின்றன. ஆனால், மிக நேர்த்தியான தரவுகள் இருந்தபோதிலும், அப்படிப்பட்ட அந்நிய உலகில் அந்த வாயுக்கள்தான் உயிர்கள் இருப்பதற்கான தோற்றுவாயாக இருக்கும் என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான விநோதமான விஷயங்கள் நடக்கும். மேலும், இந்த கோளில் அந்த மூலக்கூறுகள் உற்பத்தியாகும் அளவுக்கு என்ன மாதிரியான புவியியல் செயல்பாடுகள் நடக்கின்றன என்பது நமக்கு தெரியாது.”

சந்தேகங்களுக்கு ஆய்வுக்குழுவின் பதில்

இதை கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழுவும் ஒப்புக்கொள்கிறது. இக்குழு மற்ற குழுவினருடன் சேர்ந்து டி.எம்.எஸ் மற்றும் டி.எம்.டி.எஸ் ஆகிய வாயுக்கள் உயிரற்ற ஒன்றால் உற்பத்தியாகக் கூடுமா என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து வருகின்றனர்.

“இது எதிர்பாரா வெற்றியாக இருக்க 0.3% இருக்க வாய்ப்புள்ளது,” என பேராசிரியர் மதுசூதன் கூறுகிறார்.

மற்றொரு கோள் ஒன்றில் உயிர்கள் இருப்பது உண்மையாக இருந்தால் அதை கூறுவது, “மிகப்பெரிய கூற்று,” என அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் தெரிவித்தார். “எனவே அதை நாங்கள் முழுமையாக கவனிக்கவும் ஆராயவும் நினைக்கிறோம், இது எந்தவிதத்திலும் எதிர்பாரா வெற்றியாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை திரட்ட விரும்புகிறோம்.” என்றார்.

“இது ஒரிரு ஆண்டுகளில் சாத்தியம்” என்று அவர் கூறினார்.

கே2-18பி பற்றிய தரவுகள் குறித்து மாற்று கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை மற்ற ஆய்வுக்குழுக்கள் முன்வைக்கின்றன. டி.எம்.எஸ் மற்றும் டி.எம்.டி.எஸ் வாயுக்கள் குறித்து மட்டுமல்லாமல், அக்கோளின் கலவை குறித்தும் தீவிரமான அறிவியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்கோளில் பெரியளவிலான கடல் இருக்கும் என்பதை பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் யூகிப்பதற்கான காரணம், அதன் வளிமண்டலத்தில் அம்மோனியா வாயு இல்லாததுதான். மிகப்பரந்த அளவிலான நீருக்கு அடியில் அம்மோனியா உறிஞ்சப்படும் என்பதுதான் அவர்களின் கருதுகோள்.

கே2-18பி கோள், K2-18b planet

ஆனால், உயிர்கள் வாழ்வதைத் தடுக்கும் வகையில் அக்கோளில் உருகிய பாறையும் இருக்கலாம் என்றும் விவரிக்கிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலிவர் ஷார்ட்டில்.

“மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் கோள்கள் குறித்து நாம் அறிந்தவை எல்லாம், அதன் வளிமண்டலத்தில் கடந்து செல்லும் சிறு ஒளியின் வாயிலாகத்தான். எனவே, உயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகளை மட்டுமல்லாமல், மற்ற அனைத்தையும் ஆராய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது,” என்றார் அவர்.

“கே2-18பி குறித்த அறிவியல் விவாதம் இன்னும் அந்த கோளின் அமைப்பு குறித்தே உள்ளது.”

நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த டாக்டர் நிக்கோலஸ், இந்த்க தகவல்கள் குறித்து மற்றொரு விளக்கத்தை அளிக்கிறார். எந்தவொரு மேற்பரப்பும் இல்லாத, ஒரு சிறிய வாயு அமைப்பு என பரிந்துரைக்கும் ஒரு ஆய்வை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த இரு மாற்று விளக்கங்களும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியிலிருந்து கிடைத்தத் தகவல்களுடன் முரணானதாக உள்ளது என, மற்ற குழுக்கள் அதற்கு சவால் விடுக்கின்றனர்.

எச்சரிக்கையுடன் அணுக வேண்டுமா?

பிபிசியின் தி ஸ்கை அட் நைட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேராசிரியர் கிறிஸ் லின்டாட், பேராசிரியர் மதுசூதன் குழு மீது தனக்கு “மிகப்பெரிய மரியாதை” இருப்பதாகவும் ஆனால் அந்த ஆய்வை தான் எச்சரிக்கையுடன் அணுகுவதாகவும் தெரிவித்தார்.

“உயிர்கள் குறித்த தேடுதலில் இது (முக்கிய) தருணம் என கூறுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தருணங்கள் முன்பும் இருந்ததுண்டு,” என அவர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

“இந்த பிரபஞ்சத்தில் என்ன உள்ளன என்பது குறித்து புரிந்துகொள்ள முயற்சிக்கும் பெரும் முயற்சிகளில் ஒன்று,” என்றே இந்த ஆய்வு பார்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அறிவியலின் மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றுக்கு பதிலளிக்க இன்னும் பெரும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்பதை பேராசிரியர் மதுசூதன் ஏற்றுக்கொண்டார். ஆனால், தானும் தன்னுடைய குழுவினரும் சரியான வழியில் பயணிப்பதாக நம்புவதாக அவர் கூறினார்.

“இப்போதிலிருந்து பல பத்தாண்டுகள் கழித்து பார்க்கும்போது உயிர்கள் உள்ள மற்றொரு பிரபஞ்சம் அடையக் கூடியதுதான் என்பதை உணர்ந்து, அங்கீகரித்த தருணமாக நாம் இதைத் திரும்பிப் பார்ப்போம்,” என்றார் அவர்.

“இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கின்றோமா என்ற அடிப்படையான கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியும் என்ற வகையில் இது மிக முக்கியமான புள்ளி.”

இந்த ஆய்வு தி ஆஸ்ட்ரோஃபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC