SOURCE :- INDIAN EXPRESS
Jan 15, 2025 21:57 IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் நவீன் உயிரிழப்பு; ரூ.3 லட்சம் நிவாரணம் – ஸ்டாலின் அறிவிப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவீன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார்.
Jan 15, 2025 21:36 IST
அஜித் ரசிகர்களுக்கு விருந்து; விடாமுயற்சி டிரெய்லர் நாளை வெளியீடு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித் உடன் நடிகை திரிஷா நடித்துள்ளார்.
Jan 15, 2025 21:08 IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளை உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம்
ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில் முன்னுரிமை தர கோரி 200க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jan 15, 2025 20:58 IST
மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை 30 முதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 170 நாட்களில் அணையில் இருந்து 7.68 டி.எம்.சி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Jan 15, 2025 20:52 IST
எருமை மாடுகளுக்கு சிறப்பு செய்து திராவிடர் கழகத்தினர் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
எருமை மாடுகளுக்கு சிறப்பு செய்து திராவிடர் கழகத்தினர் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடினர். மாட்டுப் பொங்கலின் போது பசு மற்றும் காளை மாடுகளை மட்டுமே கொண்டாடுவதாகவும், எருமை மாடுகளை ஒதுக்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருவதாகவும் தெரிவித்து இவ்வாறு செய்துள்ளனர். எருமை மாடுகளை ஒதுக்குவது வர்ணபேதம் என்றும் மக்களுக்கு பயனளிக்கும் எல்லா மாடுகளையும் ஒன்றாகக் கருதி கொண்டாட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
Jan 15, 2025 20:27 IST
ஒடிசா கடற்கரையில் திருவள்ளுவர் மணற் சிற்பம்; ஸ்டாலின் பாராட்டு
ஒடிசா பூரி கடற்கரையில் பிரபல மணற் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவர் மணற் சிற்பத்தை செய்துள்ளார். மணற் சிற்பத்தின் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Jan 15, 2025 19:01 IST
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 13 காளைகளைத் தழுவிய ரஞ்சித்குமாருக்கு பைக் பரிசு
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 13 காளைகளைத் தழுவிய நவல்பட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
Jan 15, 2025 18:59 IST
பாலமேடு ஜல்லிக்கட்டு: 43 பேர் காயம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை காயமடைந்தவர்கள் விபரம்: மாடுபிடி வீரர்கள் 24 பேர் காயம் அடைந்துள்ளனர். மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். பார்வையாளர்கள் சிறுமி உள்பட 8 பேர் காயம் அடைந்துள்ளனர். மொத்தம் 43 பேர் காயம் அடைந்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக 4 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Jan 15, 2025 18:56 IST
பாலமேடு ஜல்லிக்கட்டு : முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்கள் இவர்கள்தான்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 14 காளைகளைப் பிடித்து நத்தம் பார்த்திபன் முதல் இடத்தைப் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த டுள்துளசி 12 காளைகளைப் பிடித்து 2வது இடத்தைப் பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளைப் பிடித்து 3வது இடத்தைப் பிடித்தார்.
Jan 15, 2025 18:51 IST
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் – இ.டி நடவடிக்கை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Jan 15, 2025 18:48 IST
மோடி அரசு தோற்றதாக பேச்சு: மன்னிப்பு கேட்டது மெட்டா
ஆளும் அரசு தோற்றதாக மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதற்கு மெட்டா தெற்காசிய, இந்திய பிரிவுக்கான தலைவர் ஷிவ்நாத் துக்ரால் மன்னிப்பு கேட்டார். மெட்டாவுக்கு இந்தியா மிக முக்கிய நாடாகத் தொடர்கிறது. தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். கோவிட்டுக்கு பிறகான 2024 தேர்தலில் ஆளும் அரசு தோற்றதாக ஜுக்கர்பெர்க் ஜனவரி 10-ம் தேதி பேசினார்.
Jan 15, 2025 18:42 IST
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Jan 15, 2025 18:40 IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : டாஸ்மாக் கடைகள் அடைப்பு!
நாளை உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடை மற்றும் இரண்டு மனமகிழ் மன்றங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில், “மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FI.-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 15, 2025 17:53 IST
நாமக்கலில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற 1.5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Jan 15, 2025 17:46 IST
இந்தியா சாதனை
அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் அடித்து வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி. 80 பந்துகளில் 135 விளாசி அதிவேகமாக சதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.
Jan 15, 2025 17:27 IST
500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Jan 15, 2025 17:01 IST
‘ஆளுநரை திரும்ப பெற வேண்டும்’ – காங்., தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தல்
“அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மதம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது; அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பதை ஏற்க முடியாது. தமிழனத்தையும், திருவள்ளுவரையும் அவமானப்படுத்தும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
Jan 15, 2025 16:42 IST
பொங்கல் விடுமுறை – கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு பனிப்பொழிவுடன் இதமான காலநிலை நிலவுவதால் உற்சாகமாக படகு சவாரி, குதிரை சவாரி செய்து விடுமுறையை ஜாலியாக கழிக்கின்றனர். பனிமூட்டம் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள், நீர்நிலைகள் கூட தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Jan 15, 2025 16:38 IST
மண்டபம் மீனவர்கள் 6 பேர் விடுதலை
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Jan 15, 2025 16:23 IST
திருவண்ணாமலையில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்தனர். வெறி நாய் கடித்ததில் காயம் அடைந்த 25 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Jan 15, 2025 15:42 IST
‘ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்’ – ஆளுநர் மீது ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
வண்ணாரப்பேட்டை கல்மண்டபம் சந்திப்பு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார். அவர் தமிழகத்தில் வியாபாரம் செய்ய வந்துள்ளார், வியாபாரம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆன்மீகத்தை வைத்து எத்தனை தடை கற்கள் போட்டாலும் படிக்கற்களாக மாற்றி திமுக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
Jan 15, 2025 15:30 IST
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 15, 2025 15:28 IST
ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை விதிப்பு
கோவளத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை விதித்து செங்கல்பட்டு ஆட்சியர் சீல் வைத்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஹெலிகாப்டரை இயக்கியதால், சீல் வைக்கப்பட்டுள்ளது.
Jan 15, 2025 15:24 IST
திருச்சியில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- எஸ்.பி செல்வ நாகரத்தினம்
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு பணியை திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் வளநாடு உள்ளிட்ட நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்தவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Jan 15, 2025 14:37 IST
ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை விதிப்பு
கோவளத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை விதித்து செங்கல்பட்டு ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஹெலிகாப்டரை இயக்கியதால், சீல் வைக்கப்பட்டுள்ளது.
Jan 15, 2025 14:16 IST
திருவள்ளுவரின் சிறந்த பக்தர் மோடி
திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் மோடிக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
Jan 15, 2025 14:15 IST
சனாதன முறையில் ஒழுக்கத்தை கற்பித்தவர் திருவள்ளுவர்- ஆளுநர் ஆர்.என்.ரவி
“சனாதன முறையில் ஒழுக்கத்தை கற்பித்தவர் திருவள்ளுவர். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் கற்றுக் கொடுத்தவர், திருவள்ளுவர்.
சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கத்துக்கான நெறிமுறைகளை வகுத்தவர், திருவள்ளுவர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒப்பற்ற திருக்குறளை வழங்கியவர், திருவள்ளுவர்” என திருவள்ளுவர் திருநாளை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து பதிவிட்டுள்ளார்.
Jan 15, 2025 14:13 IST
சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்ட திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் காளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது அதற்கு முன்னதாக வாடிவாசலில் இருந்து ஏற்கனவே சென்ற காளை மீது முட்டிக்கொண்டதில் தலையில் அடிபட்டு திடீரென மயங்கிய நிலையில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. மோதிய மற்றொரு காளைக்கு தொடையில் படுகாயம் அடைந்த நிலையில் அந்தக் காளை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளை இறந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
Jan 15, 2025 14:01 IST
அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Jan 15, 2025 13:43 IST
தமிழகத்தில் 18, 19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மாவட்டங்களில் 18ம்தேதி கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Jan 15, 2025 13:24 IST
தருணம் படத்தின் திரையிடல் நிறுத்தி வைப்பு
கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான தருணம் படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளளதாக விளக்கம். புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 15, 2025 13:22 IST
நெட்ஃபளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் அறிவிப்பு
குட் பேட் அக்லி, ரெட்ரோ, துருவ் விக்ரமின் BISON, பிரதீப் ரங்கநாதனின் டிராகன், துல்கர் சல்மானின் ‘காந்தா’, வைபவ் நடிக்கும் ‘பெருசு’ ஆகிய படங்களின் ஒடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃபளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
Jan 15, 2025 13:15 IST
ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு மாலை அணிவித்து வண்ண பொடி பூசினால் போட்டி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Jan 15, 2025 13:08 IST
சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்
சூரியூரில் ₹3 கோடி செலவில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த திடலாக பயன்படுத்தப்படும் என திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Jan 15, 2025 12:32 IST
அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடக் கோரியதாக வெளியான செய்திக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார். தனுஷ்கோடி திட்டம் பற்றிய தனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் இத்திட்டத்தில் தமிழக அரசுடன் எந்த நிலப்பிரச்சனையும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
Jan 15, 2025 11:57 IST
ஜல்லிக்கட்டை பார்வையிட்ட முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள்
திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
Jan 15, 2025 11:48 IST
விடுதலை ராஜேந்திரன் நெகிழ்ச்சி பேட்டி
“இந்த விருது, பெரியாரியல் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்வதற்கு ஊக்கப்படுத்தும்..” -2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருதைப் பெற்றுக்கொண்ட பின் விடுதலை ராஜேந்திரன் நெகிழ்ச்சி பேட்டி அளித்துள்ளார்.
Jan 15, 2025 11:28 IST
10 பேருக்கு அரசு விருது
தமிழ்நாடு அரசு சார்பிலான பாரதியார், அண்ணா, காமராசர் உள்ளிட்ட 10 விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகை, தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டது.
Jan 15, 2025 11:21 IST
திருச்சியில் ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டி ஒருவர் படுகாயம்
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப் பாய்ந்து வந்த காளை ஒன்று வேடிக்கை பார்த்த பார்வையாளர் ஒருவரை முட்டித் தூக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜல்லிக்கட்டு திடலில் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Jan 15, 2025 11:09 IST
பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரம் மாடுகளும் தொள்ளாயிரம் வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
Jan 15, 2025 11:07 IST
பாலமேடு ஜல்லிக்கட்டு அப்டேட்
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை காயமடைந்தோர் எண்ணிக்கை14 ஆக உயர்ந்துள்ளது. மதுரை கடவூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துக்குமார் என்பவருக்கு காலை மூட்டியதில் கன்னத்தில் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த முத்துக்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டு இரண்டாம் சுற்று முடிவு களம் கண்ட காளைகள் 102 பிடிபட்ட காளைகள் 20 ஆகும்.
Jan 15, 2025 10:56 IST
`ஏழு கடல் ஏழு மலை’ அப்டேட்
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Jan 15, 2025 10:54 IST
அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு…!
முதல் சுற்று முடிவடைந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Jan 15, 2025 10:12 IST
சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஐஐடி கேண்டினில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை என புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Jan 15, 2025 10:11 IST
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மகாகவி பாரதியார் விருது – கவிஞர் கபிலன், பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொன்.செல்வகணபதி, தமிழ் தென்றல் திரு.வி.க. விருது – ரவீந்திரநாத், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது – வே.மு.பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருது – வி.சி.க. எம்.பி. ரவிக்குமார், பெருந்தலைவர் காமராசர் விருது – கே.வி.தங்கபாலு ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
Jan 15, 2025 09:40 IST
பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று நிறைவு
பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் துளசி, அஜீத் குமார், தினேஷ்குமார், முத்து பிரகாஷ் ஆகியோர் முதல் 4 இடங்களை பிடித்துள்ளனர்.
Jan 15, 2025 09:37 IST
திருவள்ளுவர் திருநாள்
சென்னை மெரினா காமராசர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி மரியாதை செய்தனர்.
Jan 15, 2025 09:31 IST
பாலமேடு ஜல்லிக்கட்டு: காளைகள் மருத்துவ பரிசோதனை மையம்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காலை 9.00 மணி நிலவரப்படி பரிசோதனைக்கு மொத்தம் 118 காளைகள் வந்துள்ளன. அனைத்து காளைகளும் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதிக்கபட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Jan 15, 2025 09:00 IST
Save அரிட்டாபட்டி
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகை வைக்கப்பட்டது.
Jan 15, 2025 09:00 IST
நயன் -விக்கி சுவாமி தரிசனம்
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS