SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

26 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானின் நீர்வழிப் பாதையை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவை எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸின் ‘நயா பாகிஸ்தான்’ நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், “இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். அந்தக் கட்டமைப்பை நாங்கள் அழிப்போம்” என்றார்.

“சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானது அல்ல, அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாகும். ஒரு தாக்குதல் என்பது பீரங்கி குண்டுகள் அல்லது துப்பாக்கிகளால் நடத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கு பல வடிவங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று இது. இதன் காரணமாக, எங்கள் நாட்டு மக்கள் பசி அல்லது தாகத்தால் இறக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, ‘1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை’ நிறுத்தி வைப்பது உள்பட, பாகிஸ்தானுக்கு எதிரான பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முன்னதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவருமான பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியாவில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுக்கூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிலாவல் பூட்டோ, ‘ஒன்று, சிந்து நதியில் எங்களுக்கான தண்ணீர் பாயும் அல்லது அவர்களின் ரத்தம் பாயும்’ என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மத்திய நீர் மின்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உள்பட இந்தியாவின் பல பெரிய தலைவர்கள் பூட்டோவின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர்.

இருப்பினும், பிபிசியுடனான உரையாடலில், பிலாவல் பூட்டோ தனது கருத்து குறித்து விளக்கமளித்தார். அந்தப் பேரணியில் ‘சாமானிய பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை’ மட்டுமே தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

‘இந்தியா மீதான சர்வதேச அழுத்தம்’

இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், ANI

ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக மீறியுள்ளது. தற்போது, ​​இந்த விவகாரத்தை நாங்கள் (பாகிஸ்தான்) பல மன்றங்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்” என்று கூறினார்.

பஹல்காம் சம்பவம் தொடர்பாக இந்தியா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மற்றும் போர் அச்சுறுத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “போர் அச்சுறுத்தல் இல்லையென்றோ அல்லது குறைந்துவிட்டது என்றோ கூற முடியாது. 2019 ஆம் ஆண்டிலும் கூட 12 நாட்களுக்குப் பிறகு இந்தியா பதிலளித்துள்ளது” என்று கூறினார்.

பிப்ரவரி 14, 2019 அன்று, சிஆர்பிஎஃப் வாகனத் தொடரணியின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.

‘கடந்த சில நாட்களாக இந்தியா மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது’ என்று கவாஜா ஆசிப் கூறினார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் அறிக்கை குறித்து பேசிய கவாஜா ஆசிப், “இந்தியா தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் (ஜே.டி. வான்ஸ்) ஒரு வாய்ப்பை அளித்துள்ளார். இந்தியா ஏதாவது செய்ய விரும்பினால், அதைச் செய்யட்டும் என்பதற்காக..” என்று கூறினார்.

“இது அமெரிக்க துணை அதிபரின் தனிப்பட்ட அறிக்கையாக இருக்கலாம், ஏனெனில் கொள்கை அறிக்கை வெள்ளை மாளிகையிலிருந்து வரும்” என்று ஆசிப் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில், “பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ‘ஏதோவொரு வகையில் பொறுப்பு'” என்று கூறியதோடு, இந்தியாவுக்கு அது ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை (மே 1) ஒரு நேர்காணலில், “சமீபத்திய (பஹல்காம்) தாக்குதலுக்கான இந்தியாவின் பதில் பரந்த பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காது என்பதே அமெரிக்காவின் நம்பிக்கை” என்று வான்ஸ் கூறினார்.

“பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.” என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதல் நடந்த சமயத்தில், வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

இந்தியா மீதான அழுத்தத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயற்சி

இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், சௌதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளிடம், ‘பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க உதவுமாறு’ வலியுறுத்தியுள்ளார், மேலும் இந்த நாடுகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை (மே 2) பாகிஸ்தானுக்கான சௌதி அரேபியாவின் தூதர் நவாஃப் பின் சயீத் அல் மாலிகியுடன் பேசியதாக ‘ரேடியோ பாகிஸ்தான்’ தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு தெற்காசியாவின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஷாபாஸ் ஷெரீப், “பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் அதைக் கண்டிக்கிறது” என்றார்.

வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் ஹம்மாத் அபித் இப்ராஹிம் சலீம் அல்-ஜாபியையும் சந்தித்தார்.

“பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பாகிஸ்தானே” என்று அவர் கூறினார்.

அதேபோல, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் குவைத் தூதர் நாசர் அப்துல் ரஹ்மான் ஜாசரையும் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்துள்ளார்.

“கடந்த சில ஆண்டுகளில், ‘பயங்கரவாதத்திற்கு’ எதிரான பாகிஸ்தானின் போரில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 152 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பை பாகிஸ்தான் சந்தித்துள்ளதாகவும்” அவர் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் என்ன செய்கின்றன?

இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்து, ‘இந்தியா இனி பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த முடியாது’ என்று கூறியது.

இது தவிர, ‘1972ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தையும்’ நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், வியாழக்கிழமை மேடுஹல் ‘பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ)’ பாகிஸ்தான் எஃப்எம் வானொலியில் இந்திய பாடல்களின் பயன்பாட்டை நிறுத்தியது.

இந்த தேசபக்தி சார்ந்த முடிவு என்றும், முழு நாட்டின் கூட்டு உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பிபிஏவின் இந்த முடிவை நான் மிகவும் பாராட்டுகிறேன். இது போன்ற சமயங்களில் நாட்டின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் அடிப்படை உணர்வை ஆதரிப்பதற்காகவும் நாம் ஒன்றாக நிற்கிறோம் என்பதை இந்த முடிவு காட்டுகிறது” என்று பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறினார்.

“தேசிய நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக ஊடகக் குழுக்களை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமூக ஊடகக் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டன. இவற்றில் ஷாபாஸ் ஷெரீப்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமும் அடங்கும்.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC