SOURCE :- BBC NEWS
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அடையாறு பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எஃப்.ஐ.ஆரில் பதிவான மாணவி தொடர்பான விவரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட மாணவியின் முதல் தகவல் அறிக்கை விவரங்களை யாரும் பார்க்கவோ, தரவிறக்கம் செய்யவோ முடியாதபடி காவல்துறை முடக்கியுள்ளது.
மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று (டிச. 26) அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்பட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா ஆகியோர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தச் சென்ற அ.தி.மு.கவினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா என்று தமிழ்நாடு அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?
என்ன நடந்தது?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நேரத்தில் தனது நண்பருடன் மாணவி பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஞானசேகரன் அந்த நபரை விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியபோது, ஞானசேகரன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீடியோ கால் மூலமாக மாணவியை பேசவைத்தபோது, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் இவர் தான் என அடையாளம் காட்டியதாக கிண்டி காவல்நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சைதாபேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், ஞானசேகரன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், நண்பருடன் இருந்த வீடியோவை கல்லூரி பேராசிரியர்களிடம் காட்டுவேன் எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தனது தந்தையின் எண்ணை எடுத்துப் போன் செய்வதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் மாணவி புகார்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், அந்த வளாகத்திற்குள்ளேயே திங்கள்கிழமையன்று (23.12.24) இரவு பாலியல் வன்முறைக்கு இலக்கானதாக புகார் அளித்தார்.
திங்கள்கிழமையன்று இரவு உணவருந்திய பிறகு மாணவர் ஒருவருடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார்
இதற்கு பிறகு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிப்பதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை நகரின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தையும் பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக் கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறிவிடாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார்.
“வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் விளக்கம்
அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் விளக்கம்
இன்று (டிசம்பர் 26) சென்னையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் திமுகவின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் ரகுபதி தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் இல்லை” என்று கூறிய அவர், “அண்ணா பல்கலை மாணவியின் பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை; தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்” என்றார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வைரலானது. அதுகுறித்து விளக்கம் கொடுத்த அமைச்சர் ரகுபதி, “அந்த நபர் திமுகவின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. பொதுவாக மக்கள் அமைச்சர்களைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் வந்து அமைச்சர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எனவே துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்” என்றார்.
திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலையின் சூளுரை
திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 27ஆம் தேதியன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 10 மணிக்கு தனக்குத் தானே இந்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் செருப்பு அணியப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்துப் பேசியுள்ளார். அப்போது, “ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் இனி போராட்டம் நடைபெறும். திமுக அரசைக் கண்டித்து எனது இல்லத்தின் அருகே நாளை காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்,” என்று தெரிவித்துள்ளார். அதோடு, தான் இனி வழக்கமான அரசியல் செய்யப் போவதில்லை எனவும் “நிர்பயா நிதி ஒதுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கிடையாது. நான் காவல்துறையில் இருந்திருந்தால் வேறுவிதமாக நடவடிக்கை இருந்திருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC