SOURCE :- BBC NEWS

செந்தில் பாலாஜி, பொன்முடி

பட மூலாதாரம், x

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

வி. செந்தில் பாலாஜி, கே. பொன்முடி ஆகியோரின் வெளியேற்றத்தை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தங்களுக்கான வெற்றியாகச் சுட்டிக்காட்டிவருகின்றன.

ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்சிக்கு இவ்வளவு நெருக்கடியான விவகாரமானது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை. சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் தி.மு.க.வின் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக வெற்றிபெறுவது, பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது” போன்ற பல விஷயங்களைப் பற்றி பேசினாலும், சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் பேசிய பேச்சுகள்தான் தலைப்புச் செய்தியாயின.

“மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறைசொல்வார்கள். அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்.

பல்வேறு பக்கங்களில் இருந்துவரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் நான்.

ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன்.

சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது” என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

பொன்முடி, செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், @BJP4TamilNadu

ஸ்டாலின் சொன்னது என்ன?

ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாகவே தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.ஏல்.ஏக்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, செயல்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படிப் பேசினார் மு.க. ஸ்டாலின்.

இது நடந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தபோதிலும், இன்னமும் இந்தப் பேச்சுக்கு அர்த்தமிருப்பதைப்போல இருக்கிறது நிலைமை.

ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் அமைச்சர்கள், பொதுவெளியில் பேசக்கூடாததைப் பேசும் அமைச்சர்கள் என நெருக்கடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரு அமைச்சரவை மாற்றத்தைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி வி. செந்தில் பாலாஜியும் கே. பொன்முடியும் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பத்மநாபபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ் அமைச்சரவையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், நிகழ்ந்திருக்கும் இந்த அமைச்சரவை மாற்றம் கிட்டத்தட்ட ஒரு கட்டாயத்தின் காரணமாகவே நடந்திருப்பதாகச் சொல்லலாம்.

அமைச்சரவையிலிருந்து வெளியேறியிருக்கும் இரு அமைச்சர்களுமே பதவியில் நீடிப்பதில் கடும் நெருக்கடியில் இருந்தனர்.

வி. செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை 2011- 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து, அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவுசெய்தது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் அமைச்சரவை பயணம்

செந்தில்பாலாஜி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார். இவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தன.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 471 நாட்கள் சிறையில் இருந்த பிறகு அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆனால், சிறையிலிருந்து வெளியில் வந்த மூன்று நாட்களிலேயே, அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதியே மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இதனை எதிர்த்து வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், ‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சராக நீடிக்க வேண்டுமா?’ என்பதை ஏப்ரல் 28க்குள் முடிவுசெய்து தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

பொன்முடி, செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், @KPonmudiMLA

பொன்முடியின் அமைச்சரவை பயணம்

கே. பொன்முடியைப் பொறுத்தவரை, ஏப்ரல் ஆறாம் தேதியன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டவர் சைவம் – வைணவத்தை பாலியல் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப்பேசினார்.

இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தி.மு.கவில் அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பாக, 2023ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஏற்கனவே தனது பதவியை இழந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

“முதலமைச்சரைப் பொறுத்தவரை இந்த மாற்றத்தை அவர் சந்தோஷமாக செய்திருக்க மாட்டார். வேறு வழியில்லாமல்தான் இதனைச் செய்திருக்க வேண்டும். பொது இடங்களில் கவனமாக பேசுங்கள் என மூன்று, நான்கு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டங்களிலும் சொன்னார், பொதுக்குழுவிலும் சொன்னார், வேறு கூட்டங்களிலும் சொன்னார். ஆனால், யாரும் காதுகொடுக்கவில்லை.

துடுக்குத்தனம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இந்த மாற்றத்தின் மூலம் அமைச்சர்களின் அலட்சியம் கலந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வருமென எதிர்பார்க்கிறேன்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி. லக்ஷ்மணன்.

கே. பொன்முடியின் பதவி நீக்கத்திற்கான காரணத்தை சுட்டிக்காட்டியே இந்தக் கருத்தை முன்வைக்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

மனோ தங்கராஜ்

பட மூலாதாரம், @Manothangaraj

அமைச்சர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் காரணமாக அமைச்சரவை மாற்றம் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. முதலமைச்சரின் குடும்பம் குறித்துப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியானதையடுத்து நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பொதுவெளியில் மோசமாக நடந்துகொண்ட ஒரு நிகழ்வையடுத்து அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

“இவ்வளவு நடந்தும் சட்டப்பேரவையில் தனது துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என வெளிப்படையாக, ஆதங்கத்தோடு குறிப்பிடுகிறார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இப்படிப் பேசுவது எல்லோருக்கும் தர்மசங்கடத்தை அளிக்காதா?

இதனால்தான் அடுத்த சில நாட்களிலேயே, அவரது இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் பேச வேண்டியதாயிற்று. பொன்முடியைப் பொறுத்தவரை, அவரது பேச்சுக்காக வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென நீதிமன்றம் கூறியதால் அவர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், அது காரணமல்ல. அவர் தொடர்ந்து இதுபோல பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இப்போதைய பேச்சுக்காக அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவியை பறித்ததே போதுமானதுதான்.

ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பேசிய வீடியோவை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சமூகவலைதளங்களில் சுற்றில்விட்டால், அது நெருக்கடியை ஏற்படுத்தும் என மு.க. ஸ்டாலின் கருதுகிறார். அதனால்தான் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன், “சட்டமன்றத் தேர்தலின்போது ஆ. ராசா பேசிய ஒரு பேச்சை வைத்து, மேற்கு மாவட்டங்களில் தி.மு.கவுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால், அந்தப் பகுதிகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து தி.மு.க. ஆகவேதான் இந்த முறை முன்பே சுதாரித்துக்கொண்டார். ஆனால், ஆரம்பத்திலேயே அமைச்சர் பதவியிலிருந்தும் பொன்முடி நீக்கப்பட்டிருந்தால் இவ்வளவு விவாதமாகியிருக்காது” என்கிறார் ப்ரியன்.

தமிழ்நாடு அமைச்சரவை

பட மூலாதாரம், TNDIPR

எதிர்பார்த்ததைப் போலவே இந்த அமைச்சரவை மாற்றத்தை தங்களது வெற்றியாகவே அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

கே. பொன்முடிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க., அவருடைய நீக்கம் தங்களுடைய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கெடு விதித்த பிறகே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியிருக்கும் இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்புக்கோரவேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஆனால், இந்த அமைச்சரவை மாற்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.

“தி.மு.கவினரிடம் கட்சிப் பதவி வேண்டுமா, அரசுப் பதவி வேண்டுமா என்றால் கட்சிப் பதவியைத்தான் கேட்பார்கள். இந்த விவகாரம் வெளியானவுடனேயே கே. பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அப்போதே அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டதைப்போலத்தான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, மாற்றுத் திறனாளிகள் குறித்து மோசமான சொற்களில் குறிப்பிட்டதற்காக தானே முன்வந்து மன்னிப்புக் கோரினார் பொதுச் செயலாளர் துரைமுருகன். இதெல்லாம் இவர்கள் போராடித்தான் நடந்ததா?” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் செயல்பாட்டின் மூலம் முதலமைச்சரை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்களா? “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதனை வைத்து ஆட்சியை விமர்சிக்க முடியும். இப்போது அதுபோல ஏதுமில்லாததால் இதுபோன்ற விவகாரங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.

பழைய காலத்தைப் போல இப்போதும் பேச முடியாது என்று பல முறை முதல்வர் சொல்லிவிட்டார். அது மீறப்படும்போது நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர். ஆனால், அ.தி.மு.கவிலும் பா.ஜ.கவிலும் எவ்வளவோ அநாகரீகமாக பேசுகிறார்கள். அது விவாதித்திற்கே உள்ளாவதில்லையே” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தை பொன்முடி விவகாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

“ஒருவர் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அமைச்சராக முடியாது என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது. செந்தில் பாலாஜின் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு பல வருடங்கள் நடக்கும் அதுவரை அவர் சிறையில் இருக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இப்போதும் அதேகேள்வி பொருந்துமே” என்கிறார் லக்ஷ்மணன்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவரது ஜாமீனை ரத்துசெய்யக்கோரும் வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

இதனால், அவரது தலைமீது தொங்கிய கத்தியிலிருந்து அவருக்கு சற்றே ஆறுதல் கிடைத்திருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU