SOURCE :- BBC NEWS

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டபிறகு, இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதற்கிடையே இரண்டு நாடுகளின் அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் பலர் இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி, பல கருத்துகள் இந்தியாவில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

இப்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ‘இந்த நாட்டுக்கு எதிராகக் கண்களை உயர்த்துவோருக்கு’ ராணுவத்துடன் சேர்ந்து தகுந்த பதிலடி கொடுப்பது தன்னுடைய கடமை என்று கூறியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், ANI

ராஜ்நாத் சிங் என்ன சொன்னார்?

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனாதன் சன்ஸ்கிருதி ஜாக்ரான் மஹோத்சவ நிகழ்ச்சியில் பேசினார் ராஜ்நாத் சிங். இந்த சமயத்தில் அவர் பஹல்காம் தாக்குதலையோ, பாகிஸ்தானையோ குறிப்பிடாமல் பல விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தினார்.

“ஒரு நாடாக, இந்தியாவின் பகுதிகளை நமது தைரியமான வீரர்கள் காத்து வருகிறார்கள். அதன் ஆன்மாவை சாதுக்களும், அறிஞர்களும் காத்து வருகிறார்கள். ஒரு பக்கம் போர்க்களத்தில் வீரர்கள் சண்டையிட்டால், மறுபக்கம் சாதுக்கள் நிலத்துக்குள் சண்டையிடுகிறார்கள்.” என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் முன் கூறினார் பாதுகாப்பு அமைச்சர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“நண்பர்களே, ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சராக, இந்த நாட்டின் எல்லைகளை எனது வீரர்களோடு சேர்ந்து பாதுகாப்பது என் கடமை. இந்த நாட்டுக்கு எதிராக கண்களை உயர்த்துவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதும் என் கடமைதான்”.

அவருடைய இந்தக் கருத்துக்கு நிறைய கைதட்டல்களும், முழக்கங்களும் கேட்டன. இதற்குப் பிறகு ராஜ்நாத் சிங், “உங்கள் அனைவருக்கும் நம் பிரதமர் நரேந்திர மோதியை நன்றாகத் தெரியும். அவருடைய வேலை செய்யும் முறையும், உறுதிப்பாடும் நன்றாகத் தெரியும்”.

“தனது வாழ்க்கையில் அபாயங்களை எதிர்கொள்வது எப்படி என்று அவர் நன்றாக கற்றுக் கொண்டார் என உங்களுக்குத் தெரியும். பிரதமர் மோதியின் தலைமையில் நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அதெல்லாம் நடக்கும்”.

அதோடு, அங்கிருந்த சாதுக்கள் மற்றும் சாமியார்களிடம் ஆசீர்வாதம் கேட்ட ராஜ்நாத் சிங், அப்போதுதான் அர்த்தம் இழந்திருக்கும் அரசியல் என்ற வார்த்தையை இந்திய அரசியலில் மறு உருவாக்கம் செய்ய முடியும் என்றார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

யார் என்ன சொன்னார்கள்?

இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகா குரு ராம்தேவும் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். ‘பாகிஸ்தான் இந்தியாவுடன் போருக்கு வந்தால் நான்கு நாள் கூடத் தாங்காது. நாம் நமது அடுத்த குருகுலத்தை கராச்சியில் ஒன்று, லாகூரில் ஒன்று என ஆரம்பிப்போம்,” என்று நிகழ்ச்சியைத் தொடர்புபடுத்திப் பேசினார்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அரசியல்வாதிகளிடமிருந்து கருத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினரான மனோஜ் ஜா, “புல்வாமா எப்படி நடந்தது என்று இப்போது வரை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். புல்வாமா அறிக்கை வந்திருந்தால் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்காது. யாரோ ஒருவருடைய அறிக்கையை எடுத்து குழப்பம் விளைவிப்பதால் ஒன்றும் நடக்காது. இந்த நாடு ஒரே குரலில் சிந்திக்க வேண்டும்,” என்று பாட்னாவில் குறிப்பிட்டார்.

கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற ஒரு ஊர்வலத்தில், ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைஸி, “இப்படிப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் நிற்க வேண்டுமென்றால், பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகள் மீதும், பாகிஸ்தான் போன்ற தோற்ற நாட்டின் மீதும் நாட்டின் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் என்ன சொன்னார்?

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தானின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற பயத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்.

அதோடு அப்படி நடந்தால் பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என்பதையும் சேர்த்தே தெளிவாகக் கூறுகிறார்.

சமீபத்தில் பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவாஜா ஆசிஃப், ‘ஒருவேளை பாகிஸ்தானுக்கு வரக்கூடிய நீரைத் தடுக்கவோ, திசை மாற்றவோ கூடிய அணைகளையோ கட்டடங்களையோ கட்டினால் அவை அழிக்கப்படும்,” என்று கூறியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 1960-ல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வது உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸில் வரும் ‘நயா பாகிஸ்தான்’ நிகழ்ச்சியில் பேசியபோது, “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி தண்ணீரை நிறுத்தவோ, திசை திருப்பவோ கட்டடங்கள் கட்டினால் அதை பாகிஸ்தான் மீதான தாக்குதலாகத்தான் கருதுவோம். அந்தக் கட்டடத்தை அழிப்போம்,” என்றார் பாதுகாப்பு அமைச்சர்.

“சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல. அது பாகிஸ்தான் மீதான போர்தான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் தாக்குவது மட்டும் தாக்குதல் அல்ல, அதில் பல வகைகள் உள்ளன. அதில் இது ஒன்று. இதனால் இந்த நாட்டு மக்கள் பசியாலும், தாகத்தாலும் இறந்து போகலாம்.” என்றார் அவர்.

இதற்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கு, இந்தியாவில் கடுமையான எதிர்வினை இருந்தது.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சுக்கூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில், ‘சிந்து நதியில் ஒன்று தண்ணீர் பாய வேண்டும் அல்லது அவர்களின் ரத்தம் பாய வேண்டும்’ என்றார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய நீர்மின் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் போன்ற இந்தியாவின் பெரிய தலைவர்கள் இந்தக் கருத்துக்குத் தீவிரமான எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

ஆனால் பிபிசியுடனான உரையாடலில், ‘சராசரி பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை’ மட்டுமே தான் பிரதிபலித்ததாகத் தன் கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் பிலாவல் பூட்டோ.

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது இந்தியா. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வைத்தது தவிர பாகிஸ்தானில் இருந்து எல்லா விதமான இறக்குமதியையும் நிறுத்தி வைத்துள்ளது இந்தியா.

அதே நேரத்தில், இந்தியத் துறைமுகங்களுக்குள் பாகிஸ்தானியக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றொரு உத்தரவை கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

“அடுத்த உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லா விதமான இறக்குமதிகளும் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது” என்று மே 2ம் தேதி வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அறிக்கை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை , கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், “1958ஆம் ஆண்டு வணிக கப்பல் சட்டத்தின் 411ம் பிரிவைப் பயன்படுத்தி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கொடி பறக்கும் எந்தக் கப்பலும், எந்த இந்தியத் துறைமுகத்திலும் அனுமதிக்கப்படாது. அதேபோல், இந்தியக் கொடி பறக்கும் எந்தக் கப்பலும் பாகிஸ்தானின் எந்தத் துறைமுகத்துக்குள்ளும் போகாது,” என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் செயல்படுத்தப்படும் எல்லா விமானங்களுக்கும் தன் வான்வெளியில் அனுமதி மறுத்துள்ளது பாகிஸ்தான்.

வாகா எல்லையும் மூடிவைக்கப்பட்டுள்ளது.

சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் SAARC விசா தள்ளுபடி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விசாக்களை நிறுத்தி வைத்துள்ள பாகிஸ்தான், அவை ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றிருக்கிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU