SOURCE :- BBC NEWS

காஸா பகுதியின் வடக்கே உள்ள அல்-ஷாதி முகாமில் உள்ள ஒரு தற்காலிக கூடாரத்தில், 33 வயதான எனாஸ் அபு டாக்கா தனது மகள் நிவீனை கைகளில் ஏந்தியவாறு அமர்ந்துள்ளார். காலை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க ஒரு மின்விசிறி அவரது பின்னால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
நிவீனின் உடல்நிலை எந்த நேரத்திலும் மோசமடையக் கூடும் என்று எனாஸ் கவலைப்படுகிறார். நிவீனுக்கு இப்போது ஏழு மாதங்கள் தான் ஆகின்றன. போரின் போது, இதயத்தில் ஒரு ஓட்டையுடன் பிறந்தாள் நிவீன்.
காஸாவில் சுகாதார வசதிகள் மோசமடைந்துவரும் நிலையில், நிவீனை உயிருடன் வைத்திருக்க தான் போராடியது குறித்து தாய் எனாஸ் விளக்குகையில், பெரிய பழுப்பு நிற கண்களை கொண்டுள்ள நிவீன் அழுது கொண்டிருந்தாள்.
“போர்ச் சூழல் அவளது வாழ்க்கையை மிகவும் மோசமாக்கியது,” என்று எனாஸ் பிபிசியிடம் கூறுகிறார். “அவள் எடை அதிகரிக்கவில்லை, ஆனால் அவள் எளிதில் நோய்வாய்ப்படுவாள்.”
நிவீன் உயிர் பிழைப்பதற்கான ஒரே வாய்ப்பு காஸாவிற்கு வெளியே அவசர சிகிச்சை பெறுவதாகவே இருந்தது. மார்ச் மாத தொடக்கத்தில், ஜோர்டான் நாட்டில் அது சாத்தியமானது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால், நிவீன் உட்பட காஸாவைச் சேர்ந்த 29 நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் ஜோர்டானின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அழைத்துச் செல்லப்பட்டனர். நிவீனுடன் அவரது தாயும் மூத்த சகோதரியும் உடன் சென்றனர்.
ஜோர்டான் மருத்துவமனைகளில் 2,000 நோய்வாய்ப்பட்ட காஸா குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மன்னர் அப்துல்லா அறிவித்த பிறகு, ஜோர்டானுக்கு முதலில் அழைத்துவரப்பட்ட குழந்தைகள் இவர்கள்தான். தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோரின் பின்னணி குறித்த சோதனைகளைச் செய்யும் இஸ்ரேலிய அதிகாரிகள், இந்த பயணங்களை ஒருங்கிணைத்தனர்.
ஜோர்டானில் மருத்துவர்கள் நிவீனுக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சையை செய்தனர். அதைத் தொடர்ந்து நிவீன் மெதுவாக குணமடையத் தொடங்கினார்.
ஆனால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, காஸாவில் போர் நிறுத்தச் சூழல் பாதிக்கப்பட்டு, மீண்டும் முழு வீச்சில் போர் தொடங்கியது.
பல வாரங்களாக, ஜோர்டானில் உள்ள தனது மகளின் மருத்துவமனை அறையில் இருந்தவாறு, காஸாவில் இருந்து வரும் செய்திகளை கேட்டறிந்தார் எனாஸ். காஸாவில் இருக்கும் தனது கணவர் மற்றும் பிற குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலைப்பட்டார்.
மே 12ஆம் தேதி இரவு, ஜோர்டானிய அதிகாரிகள் எனாஸிடம், ‘நிவீனின் சிகிச்சை முடிந்துவிட்டதாகவும், அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் மறுநாள் காஸாவிற்கு திருப்பி அனுப்புவதாகவும்’ கூறினர்.
எனாஸ் அதிர்ச்சியடைந்தார்.
“போர் நிறுத்தம் இருந்தபோது நாங்கள் காஸாவில் இருந்து வெளியேறினோம். போர் மீண்டும் தொடங்கிய பிறகு அவர்கள் எங்களை எப்படி திருப்பி அனுப்ப முடியும்?” என்று அவர் விரக்தியுடன் கூறுகிறார்.

முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லையா?
எனாஸ் இப்போது காஸாவில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் இணைந்துள்ளார். தங்கள் மகளின் சிகிச்சையை முழுமையாக முடிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாகவும், நிவீனின் நிலை மோசமடையக்கூடும் என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
“என் மகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இது அவள் மரணத்திற்கு வழிவகுக்கும்” என்று எனாஸ் கூறுகிறார்.
“அவளுக்கு இதய நோய் உள்ளது. சில நேரங்களில் மூச்சுத் திணறி, உடல் நீல நிறமாக மாறுகிறது. அவளால் ஒரு தற்காலிக கூடாரத்தில் தொடர்ந்து வாழ முடியாது.”
மே 13-ஆம் தேதி 17 குழந்தைகளை “அவர்களின் சிகிச்சை முடிந்த பிறகு” காஸாவிற்கு திருப்பி அனுப்பியதாக ஜோர்டான் அறிவித்தது. அடுத்த நாள், நோய்வாய்ப்பட்ட நான்கு குழந்தைகளைக் கொண்ட ஒரு புதிய குழு காஸாவில் இருந்து ஜோர்டானுக்கு அனுப்பப்பட்டது.
திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து குழந்தைகளும் நல்ல மருத்துவ நிலையில் இருப்பதாக ஜோர்டான் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். சிகிச்சையை முடிக்கவில்லை என்ற கூற்றுகளையும் அவர்கள் நிராகரித்தனர்.
குழந்தைகள் குணமடைந்தவுடன் அவர்களை திருப்பி அனுப்பும் நோக்கம் குறித்து அரசு ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர், மேலும் இது “அரசியல் மற்றும் நடைமுறை காரணங்களுக்காக” அவசியம் என்றும் கூறினர்.
“ஜோர்டானின் கொள்கை பாலத்தீனியர்களை அவர்களின் நிலத்திலேயே வைத்திருப்பதும், அவர்களின் எல்லைக்கு வெளியே அவர்கள் இடம்பெயர்வதற்கு பங்களிப்பதில்லை என்பதும் ஆகும்” என்று பிபிசிக்கு அனுப்பப்பட்ட வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 17 குழந்தைகள் திரும்புவது, காஸாவிலிருந்து மேலும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை புதிதாக இங்கு வர அனுமதிக்கும் என்றும் அது கூறியது.
ஆனால் ஹமாஸ் நடத்தும் காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், “குழந்தைகளுக்கு இன்னும் மருத்துவ கவனிப்பு தேவை என்றும், அவர்கள் போர் சூழலுக்குத் திரும்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

‘வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டோம்’
தனது மகனின் நிலை, 30 வயதான நிஹாயா பஸலை கவலையடையச் செய்கிறது. அவரது மகன் முகமது, இப்போது ஒரு வயதைக் கடந்துவிட்டார். ஆஸ்துமா மற்றும் கடுமையான உணவு ஒவ்வாமையால் முகமது அவதிப்படுகிறார். தனது மகனுக்குத் தேவையான முழு சிகிச்சையும் கிடைக்கவில்லை என்று அவர் நம்புகிறார்.
“நாங்கள் மீண்டும் பயத்திலும் பசியிலும், மரணத்தால் சூழப்பட்டும் வாழத் தொடங்கினோம்,” என்று நிஹாயா கண்ணீருடன் கூறுகிறார்.
“இந்தக் குழந்தைக்குக் குடிக்கத் தேவையான பால் எப்படிக் கிடைக்கும்? ஒரு வயதுக்கு மேல் ஆன பிறகும் அவன் சாப்பிடுவதில்லை, ஏனென்றால் சாப்பிட்டால் உடனடியாக அவனது உடல்நிலை மோசமடைகிறது.”
பத்து வாரங்களுக்கும் மேலாக, இஸ்ரேல் காஸா பகுதியை கடுமையான முற்றுகையில் வைத்திருந்தது. உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் பரிமாற்றத்தை துண்டித்தது. காஸாவில் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் குறிக்கோள் என்று இஸ்ரேல் கூறியது.
அங்கு வசிக்கும் பாலத்தீனியர்கள் ‘பஞ்சத்தின் அபாயத்தில்’ இருப்பதாக சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கின்றன. அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து காஸாவிற்கு ‘குறைந்தபட்ச’ அளவிலான உணவை அனுமதிப்பதாக திங்களன்று (மே 19) இஸ்ரேல் அறிவித்தது.

காஸாவுக்கு திரும்பியவர்களின் பணம் பறிக்கப்பட்டதா?
நிஹாயா இப்போது தனது மைத்துனரின் குடும்பத்துடன் அல்-ஷாதி முகாமில் ஒரு சிறிய, கூடாரப் பகுதியில் வசித்து வருகிறார். அவர் ஜோர்டானில் இருந்தபோது போர் மீண்டும் தொடங்கியது. அதனால் அவரது கணவரும் மற்ற மூன்று குழந்தைகளும் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து இங்கு வந்து சேர்ந்தனர்.
“நான் என் குழந்தைகளை இங்கே விட்டுவிட்டேன். என் கணவரை இங்கேயே விட்டுவிட்டேன். நான் இல்லாதபோது அவர்கள் நரக வேதனையை அனுபவித்தார்கள்,” என்று கூறி நிஹாயா கண்ணீர் விட்டு அழுகிறார்.
“நான் ஜோர்டானில் இருந்தபோது என் மனம் காஸாவில் இருந்த அவர்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. அனைத்தையும் பொறுத்துக்கொண்டது என் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சிகிச்சையை முடிக்கும் முன்னரே என்னை ஏன் கட்டாயப்படுத்தி திரும்ப அனுப்ப வேண்டும்?” என்கிறார்.
அவர் பேசும்போது, இஸ்ரேலிய கண்காணிப்பு டிரோன்களின் சத்தம் அவருடைய பேச்சை கேட்கவிடாமல் செய்கிறது. அவருடைய குழந்தை கூடாரத்திற்குள் அங்குமிங்கும் ஓடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தான் காஸாவுக்கு திரும்பியது குறித்தும், அதனால் ஏற்பட்ட மனச்சோர்வு குறித்தும் விவரிக்கும்போது, தன்னுள் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடுகிறார் நிஹாயா.
“நாங்கள் அதிகாலை நான்கு மணிக்கு பிறகு அங்கிருந்து கிளம்பினோம், இரவு 22:45 மணியைக் கடந்து காஸாவை அடைந்தோம்,” என்று அவர் கூறுகிறார். எல்லைப் பகுதியை அடைந்தபோது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக நிஹாயா கூறுகிறார்.
“அவர்கள் எங்களை திட்டத் தொடங்கினர். எங்களை அடிப்பதாக மிரட்டினர். எங்கள் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டார்கள். எங்கள் மொபைல் போன்கள், பைகள் மற்றும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டார்கள்,” என்று நிஹாயா கூறுகிறார். யாரிடம் பணம் இருந்ததோ அவர்களின் பைகள் அனைத்தையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பறிமுதல் செய்ததாகக் அவர் குறிப்பிடுகிறார்.
இதேதான் தனக்கும் நடந்தது என்று எனாஸ் கூறுகிறார், குழந்தையின் மருத்துவப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.
ஆனால், ஜோர்டானில் இருந்து திரும்பிய மக்களிடமிருந்து “விதிகளை மீறி வைத்திருந்த அளவுக்கு அதிகமான பணத்தைத் தான் பறிமுதல் செய்ததாக” இஸ்ரேலிய ராணுவம் பிபிசியிடம் கூறியது. மேலும் அவை “காஸாவிற்குள் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டது.
முழுமையான விசாரணை முடியும் வரை பணம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிடுகிறது.
ஆனால், மற்ற தனிப்பட்ட உடைமைகள் ஏன் பறிமுதல் செய்யப்பட்டன என்பதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை.
ஜோர்டானில் இருந்து ‘வெறும் கையுடன்’ திரும்பி வந்ததாக நிஹாயா கூறுகிறார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து, எடுத்துச் சென்ற பைகளில் தனது மகனின் மருத்துவ பதிவுகள் கூட இருந்தன என்று அவர் கூறுகிறார்.
நிவீன் மற்றும் முகமது போன்ற குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்கியுள்ளதாக ஜோர்டான் கூறுகிறது. இரு குடும்பங்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.
ஆனால், உலகின் மிகக் கொடிய போர் மண்டலங்களில் ஒன்றான காஸாவில் வாழ்வது என்பது, கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் குழந்தைகள் அடைந்த அனைத்து முன்னேற்றங்களையும் சீர்குலைத்துவிடும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
“சிகிச்சைக்குப் பிறகு என் மகன் இருந்த நிலையைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்போது அவர்கள் அவனை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர விரும்புகிறார்களா? என் மகன் இறப்பதை நான் விரும்பவில்லை.” என்று கண்ணீருடன் கூறுகிறார் நிஹாயா.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU