SOURCE :- BBC NEWS

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 13 மே 2025, 13:32 GMT

    புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து, அதுவொரு ராணுவ மோதலாக மாறியது. இந்த மோதல் மே 10ஆம் தேதி மாலையில் போர் நிறுத்த அறிவிப்புடன் முடிவுக்கு வந்தது.

இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போதும், அதை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னரும், பரவலாக விவாதிக்கப்பட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.

முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை முதலில் அறிவித்தார். அதேபோல, இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருப்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்புப் படையினர்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறி வருவது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி பேசியபோது, “ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இருப்பதாக மத்திய அரசு சொல்லிக் கொண்டிருப்பதற்குப் மாறாக, இப்போது உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்” என்று கூறியிருந்தார்.

சர்வதேச விவகாரங்களில் நிபுணரும் மோதல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநருமான அஜய் சாஹ்னி பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “காஷ்மீரின் உள்நாட்டு நிலைமை ஏற்கெனவே கணிசமாக மேம்பட்டுள்ளது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து காஷ்மீரின் பாதுகாப்பை மதிப்பிட முடியாது. காஷ்மீரில் 16 ஆண்டுகளாக மோதல் தீவிரமாக இருப்பதை மக்கள் மறந்துவிட்டார்கள். 2001 ஆம் ஆண்டில் மட்டும் 4011 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு 127 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டின் மே மாதத்தில் 50 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பாதுகாப்புப் பணியாளர்கள், பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர்.”

“எனவே காஷ்மீரில் நிலைமை முன்பை விட மேம்பட்டுள்ளது. அங்கு இயல்புநிலை நிலவுவதாகவும் தீவிரவாதம் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும் அரசு கூறுவதுதான் நமது மதிப்பீட்டில் உள்ள தவறு. இது பாதுகாப்பு மதிப்பீடு அல்ல. காஷ்மீரில் அச்சுறுத்தல் இன்றும் உள்ளது, நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும், ஆனால் முன்பைவிட குறைந்துவிட்டது. காஷ்மீருடன் தனக்கு தொடர்பு உள்ளது என்ற எண்ணத்தை பாகிஸ்தான் கைவிடும்வரை அச்சுறுத்தல் இருக்கும்.”

அஜய் சாஹ்னி

‘பாகிஸ்தானின் நீண்டகால உத்தி’

“சிம்லா ஒப்பந்தத்திற்குப் பிறகு, எந்தவொரு சர்ச்சையும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்படும் என்று நாம் கூறியிருந்தோம். ஆனால் அமெரிக்கா இந்த மோதலில் தலையிடுகிறது, அது நீண்ட காலமாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை வெளியில் பேசக்கூடிய விஷயங்கள் அல்ல” என்று அவர் கூறுகிறார்.

“பாகிஸ்தானுக்கு வெளிப்படையான பதில் தேவையில்லை, அவர்களுக்கு தீங்கு விளைவிக்க இந்தியாவிடம் நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. ரகசியமாக பதிலளிப்பது என்றால், அது பழிக்குபழி என்பது கிடையாது. இது பலவிதமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. பொருளாதாரம், சைபர், தகவல் போர் போன்றவை அடங்கும். எனவே பாகிஸ்தானை எதிர்கொள்ள ஒரு நீண்டகால உத்தி இருக்க வேண்டும்.”

உண்மையில், பஹல்காமில் நடைபெற்றத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் அனைத்தையும், வர்த்தகத்தையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.

1971-ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பிறகு, பாகிஸ்தானின் ஒருபகுதி சுதந்திர நாடாக மாறி வங்கதேசமாக உருவெடுத்தது.

இதன் பிறகு, சிம்லா ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் பரஸ்பர பிரச்சினைகளைத் தீர்க்க ஒப்புக்கொண்டன.

தீவிரமடையும் காஷ்மீர் அரசியல்

“நீண்ட காலமாக யாரும் நமக்கு உதவவில்லை என்றபோது, நாம் ஏன் ஒருவரின் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். மறுபுறம், இங்கே நாம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, வெற்றிபெற்றவர்களும் தான். தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம், ஜம்மு-காஷ்மீரில் ஒரே வருடத்தில் 4000 பேர் இறந்தனர் என்ற நிலை மாறி, இப்போது 127 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. தீவிரவாதம் தொடர்கிறது, ஆனால் முடிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இது, நமது சொந்த திறன்கள் மற்றும் சொந்த உழைப்பால் முடிவுக்கு வந்துள்ளது” என்று அஜய் சாஹ்னி பிபிசியிடம் கூறினார்.

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும், இந்த முழு சம்பவத்திலும் இந்தியா டிரம்பின் பெயரைப் பயன்படுத்தவில்லை. அதற்கு காரணம் ஏன் என்ற கேள்விக்கு அஜய் சாஹ்னி பதிலளிக்கிறார். “டிரம்பை புறக்கணிக்க வேண்டும். டொனால்ட் டிரம்பை எதிர்த்து நிற்கவில்லை என்றால், அவர் இடத்தைப் பிடிப்பார். நீங்கள் அவருக்கு இடம் கொடுத்தால், அவர் அழுத்தமாக காலூன்றிவிடுவார்” என்று அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாரிஸில் நடைபெற்ற ஏ.ஐ. மாநாட்டில் மோதியும் வான்ஸும்

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை மாலை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு ‘சண்டை நிறுத்தத்தை’ அறிவித்தார், பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக அவர் கூறியிருந்தார்.

“இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில்” அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாகவும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிறகு சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ‘சண்டை நிறுத்தத்தை’ உறுதிப்படுத்தினார். அத்துடன், அமெரிக்கா மட்டுமல்ல, செளதி அரேபியா, பிரிட்டன் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்தியா அமெரிக்காவின் மத்தியஸ்தத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. டிரம்பின் அறிக்கையும், அதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் உறுதிப்படுத்தலும் நடைபெற்ற பின்னர், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ மோதலைத் தடுக்க இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், PIB INDIA/YOUTUBE

இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை (டிஜிஎம்ஓ) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ பேசியதாக கூறிய விக்ரம் மிஸ்ரி, அதன்பிறகு இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியதாக குறிப்பிட்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும் இதையே கூறினார்.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 11 அன்று ட்ரூத் சோஷியலில், “ஆயிரம் ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாகவே தொடர்ந்து வரும் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க இந்த இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இந்த பிரச்னை தீர்ந்தால் பிராந்தியத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும். இதனால் அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளுடன் வர்த்தகம் அதிகரிக்கும்!” எனப் பதிவிட்டார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அறிக்கையில் காஷ்மீர் பிரச்னையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தை ஏற்க மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் இந்தியா டிரம்பின் பெயரைப் பயன்படுத்தவில்லை

பட மூலாதாரம், Getty Images

நடக்கப்போவது என்ன?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இனி எந்தவிதமான மாற்றம் வரும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அஜய் சாஹ்னி, “என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறப்போவதில்லை. தகவல் போர் என்பது முக்கியமான போராயுதம். ஆனால் இங்கே நாம் அவர்களுக்கு எதிராக தகவல் போரை பயன்படுத்தவில்லை, அவர்களும் அதை நமக்கு எதிராகப் பயன்படுத்தவில்லை. இருதரப்பின் கவனமும் மக்களின் மீதே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அணு ஆயுதப் போர் பற்றி பேசும் அஜய் சாஹ்னி, “அணு ஆயுதப் போர் அவ்வளவு சுலமாக தொடங்கிவிடாது. அணு ஆயுதப் போர் ஏற்படும் என்ற அச்சம் சிறிதளவு இருந்திருந்தால் கூட, டெல்லியில் உள்ள பிற நாட்டு தூதரகங்கள் காலி செய்யப்பட்டிருக்கும். ஆபரேஷன் பராக்கிரம் காலத்தை நினைவுகூரலாம். அப்போது, ஒரு குண்டு கூட சுடப்படாத நிலையில் தூதரகங்கள் காலி செய்யப்பட்டன” என வரலாற்றை நினைவுகூர்கிறார்.

“அணு ஆயுதம் என்ற வார்த்தையை பாகிஸ்தான் மட்டுமல்ல, டிரம்பும் பயன்படுத்தியுள்ளார். அணு ஆயுதம் கொண்டு தாக்குவது என்பது உறுதி செய்யப்பட்ட அழிவைக் குறிக்கிறது, அது பயன்படுத்த முடியாத ஒரு வழிமுறை அல்லது ஆயுதம் என்று சொல்லலாம். ஏனென்றால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், அது மோதிக் கொள்ளும் நாடுகளை மட்டுமல்ல, அவற்றைச் சுற்றியுள்ள பிற நாடுகளையும் அழித்துவிடும். ஒருவேளை உலகிலும் உள்ள அனைத்தையும் அழித்துவிடலாம்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், திங்கட்கிழமை (2025 மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எந்தவொரு அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று உறுதிபடக் கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU