SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், ASISGUARD.COM
42 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த வியாழக்கிழமை இரவு (மே 08) பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளை டிரோன்கள் மூலம் குறிவைத்ததாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, பாகிஸ்தான் ராணுவம் வியாழன் இரவு இந்தியாவின் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்து சுமார் 300-400 டிரோன்களை ஏவியதாகக் கூறினார்.
இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தத் தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
லே முதல் சர் கிரீக் வரையிலான 36 இடங்களில் 300-400 டிரோன்களை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய பாதுகாப்புப் படை அவற்றுக்கு நேரடித் தாக்குதல் மற்றும் மின்னணு தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி அந்த டிரோன்களை வீழ்த்தியதாகவும் கர்னல் சோபியா குறிப்பிட்டார்.
இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல்களை மேற்கொள்வதன் நோக்கம், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிப்பதும், உளவுத் தகவல்களை சேகரிப்பதுமே என்று கூறிய அவர், “வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் மீதான தடயவியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் அவை துருக்கியின் அசிஸ்கார்ட் சோங்கார் டிரோன்கள் எனத் தெரிய வந்துள்ளது” என்றார்.
சோங்கார் டிரோன் என்றால் என்ன?

பட மூலாதாரம், ASISGUARD.COM
சோங்கார் டிரோன்கள், அசிஸ்கார்ட் என்ற துருக்கியின் பாதுகாப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானங்களாகும்.
துருக்கிய ராணுவத்தின் ஆயுத உற்பத்தியாளரான அசிஸ்கார்ட் நிறுவனத்தின் இணையதளத் தகவல்படி, சோங்கார் டிரோன்கள் இலக்குகளைக் கண்டறிந்து அழிக்கவல்ல சிறப்புத் திறன்களைக் கொண்டுள்ளன. அதோடு, இவை துருக்கியின் முதல் ஆயுதமேந்திய டிரோன் அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது 2020இல் முதல்முறையாக துருக்கிய ஆயுதப் படைகளில் இணைக்கப்பட்டது.
இதில் கண்காணிப்புக்கும் நிகழ்நேர படங்களைப் பதிவு செய்வதற்கும் பயன்படுத்த உதவும் வகையிலான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, தேவைப்பட்டால் தாக்குதலுக்கும் இந்த டிரோன்களை திறம்படப் பயன்படுத்தலாம்.
“தரைவழி வாகனங்களுடன் ஒருங்கிணைந்து அதிக எண்ணிக்கையிலான குண்டுகளை எறிவதற்கு இதைப் பயன்படுத்தலாம். அதோடு, எல்லையிலும் எல்லை தாண்டியும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சோங்காரை பயன்படுத்தலாம்,” என்று அசிஸ்கார்ட் இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் வரம்பு 5 முதல் 10 கி.மீ வரை உள்ளது. மேலும், இது தானாகவே பறந்து தரையிறங்கும் திறனையும் கொண்டுள்ளது.
சோங்கார் ட்ரோன் எவ்வாறு செயல்படுகிறது?
ஷார்ட் வீடியோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அசிஸ்கார்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, தானியங்கி இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது சோங்கார் டிரோனின் சிறப்பம்சங்களில் ஒன்று.
இரவிலும் பகலிலும் ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதைத் திறம்படப் பயன்படுத்த முடியும்.
ஆயுதமேந்திர சோங்கார் டிரோன்களில் தாக்குதல் நடத்துவதற்கான ரைபிள்கள், கிரெனேடுகளை வீசும் கருவி, பல கையெறி குண்டுகளை ஒரே நேரத்தில் வீசக்கூடிய கருவி, மோர்டார் குண்டுகளை வீசும் கருவி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் ஆகியவற்றைப் பொருத்தலாம் என்று அசிஸ்கார்ட் நிறுவனம் கூறுகிறது. இவற்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து அதன் இலக்கைத் தாக்க முடியும்.
சோங்கார் டிரோன்களில் பொருத்தப்பட்ட தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் ஒரு சில விநாடிகளில் 200 குண்டுகள் வரை சுடக்கூடிய திறன் கொண்டவை.
இவை நிகழ்நேர காணொளியைப் பகிரும் திறன் கொண்டவை. மேலும், தரையில் இருந்து இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, அவற்றில் தானாகவே இலக்கை நோக்கி இயக்கப்படுவதற்கான திறனும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன.
ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவை என்பதால், அது துல்லியத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாக அசிஸ்கார்ட் கூறுகிறது.
தகவல் தொடர்பு செயலிழப்பு, பேட்டரி செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டால், இந்த டிரோன்கள் தாமாகவே கிளம்பிய இடத்திற்குத் திரும்பும் கொண்டவை என்பது இவற்றின் மற்றுமொரு சிறப்பம்சம்.
சோங்கார் டிரோன்களை தரையில் செல்லும் வாகனங்களிலிருந்து இயக்கலாம் அல்லது தனித்த ஆளில்லா விமானங்களிலிருந்தும் பறக்கவிடலாம் என்று அசிஸ்கார்ட் கூறுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டில், நெருக்கமான போர் மற்றும் கண்காணிப்பில் உதவுவதற்காக இது 4×4 கவச வாகனத்தில் நிறுவப்பட்டது. 2024ஆம் ஆண்டில், ரெப்கான் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம், அசிஸ்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இதனை மேம்படுத்தியது. சோங்கார் டிரோனில் 40மிமீ மல்டிபிள் கிரெனேட் லாஞ்சருடன் (கையெறி குண்டு) பொருத்தி, அதன் தாக்குதல் திறனை அதிகரித்தது.
பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கி

பட மூலாதாரம், Getty Images
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை தொடங்கியதில் இருந்து துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மேல் 7ஆம் தேதியன்று பாகிஸ்தானில் இந்திய விமானத் தாக்குதலுக்குப் பிறகு துருக்கி அதிபர் ரசீப் தையிப் எர்துவான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபிடம் பேசினார்.
துருக்கி அதிபர் அலுவலக தகவலின்படி, பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க துருக்கி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்றும் இதுதொடர்பான தங்கள் ராஜ்ஜீய உறவுகள் தொடரும் என்றும் எர்துவான் கூறினார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கான பாகிஸ்தானின் முடிவை துருக்கிய அதிபரும் ஆதரித்துள்ளார்.
பொதுமக்கள் இடையிலான பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுத் தனது சமூக ஊடக பக்கங்களில் அதிபர் எர்துவான் கவலை தெரிவித்திருந்தார். “பாகிஸ்தான், இந்தியா இடையிலான பதற்றங்கள் ஏவுகணைத் தாக்குதல்களுடன் தீவிர மோதலாக அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாகப் பல பொதுமக்கள் பலியாகலாம் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்றும் அவர் கூறியிருந்தார்.

“தாக்குதலில் உயிரிழந்த எங்கள் சகோதரர்களுக்கு அல்லாவின் கருணை கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். மேலும், சகோதர மக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது.
மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU