SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Reuters
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கியது.
அதன் எதிரொலியாக இந்திய எல்லையில் வசிக்கும் மக்கள் கிராமங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றனர்.
“இங்கு போர் ஆபத்து உள்ளது, பாகிஸ்தான் நள்ளிரவில் எங்களை தாக்குமா என்று எங்களுக்கு தெரியாது, என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, உணவு மற்றும் உடைகளுடன் எங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கிறோம்.”
ஃபெரோஸ்பூரின் டெண்டிவாலா கிராமத்தைச் சேர்ந்த பன்ஜோ பாய் என்ற பெண்மணியின் வார்த்தைகள் இவை, பஞ்சாபின் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் மனதில் உள்ள அச்சத்தை அவருடைய வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

பன்ஜோ பாயும் அவருடைய குடும்பத்தாரும் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மோகாவின் தரம்கோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர்.
ஃபெரோஸ்பூரில் உள்ள 12-14 எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.
கால்நடைகள் மற்றும் வீடுகளை பராமரிப்பதற்காக குடும்பத்தில் ஓரிருவர் மட்டும் அங்கேயே தங்கும் நிலையில், பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராமத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.
எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எந்தவொரு அதிகாரபூர்வ உத்தரவோ, அறிவுறுத்தலோ இல்லை, எனினும் இங்கு வசிக்கும் மக்களிடையே அச்சம் சூழ்ந்துள்ளது.
இந்த கிராமங்களுக்குள் செல்வதற்கு உள்ளூர் மக்களுக்கு அனுமதி கிடைத்தாலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அதுவே, வெளியூரை சேர்ந்தவர்கள் எல்லையோர கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

பட மூலாதாரம், Reuters
பிபிசி பஞ்சாபிடம் பேசிய ஃபெரோஸ்பூர் வருவாய் கோட்ட அதிகாரி, கிராமத்திலிருந்து வெளியேறுமாறு அரசோ அல்லது ராணுவமோ மக்களுக்கு அறிவுறுத்தவில்லை என்று கூறினார்.
“பீதியோ அச்சமோ அடையத் தேவையில்லை என மக்களை கேட்டுக்கொள்கிறோம், யாரும் இங்கிருந்து வெளியேற வேண்டியதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
மே ஆறாம் தேதி நள்ளிரவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடத்திய தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீண்டும் இடம்பெயர வேண்டுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பட மூலாதாரம், Gurdev Singh/BBC
தாக்குதலுக்குப் பின்பு பீதியில் மக்கள்
பன்ஜோ பாய் அச்சமடைந்திருப்பதைப் போலவே, ஹசாரா சிங்வாலா பகுதியில் வசித்து வரும் ஜீத் சிங்கும் தனது உறவினர்களின் வீட்டுக்குக் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடிவு செய்துவிட்டார்.
“நேற்று இரவு நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கிராமத்தினரிடையே அச்சம் அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார். “மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர். நாங்களும் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.”
பேசிக் கொண்டிருக்கும்போதே சாலையில் செல்லும் டிராக்டர் ஒன்றை பார்த்து பெருமூச்சுவிடும் ஜீத் சிங், “இரவுக்குப் பிறகு விஷயங்கள் எப்படி மாறும் என்று தெரியவில்லை, இந்தப் பகுதி முழுவதும் வெறிச்சோடி போய்விடும் போலிருக்கிறது” என்று அச்சம் தெரிவிக்கிறார்.
டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு கைகாட்டி நிறுத்தினோம். இவர் ஜீத் சிங் வசிக்கும் அதே கிராமத்தில் வசிக்கிறார்.
“யாரும் எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லவில்லை, ஆனால் நாங்கள் கிளம்புகிறோம்” என்று சொல்லும் அவர், 1971 போரின் போது சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்ட பாலத்தை ராணுவம் தகர்த்ததை நினைவுகூர்கிறார். “ஒருவேளை இந்த முறையும் அவர்கள் அதை வெடிக்கச் செய்தால் என்ன செய்வது?” என்று கேட்கிறார்.

பட மூலாதாரம், EPA
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களான அமிர்தசரஸ், டார்ன் தரன், குர்தாஸ்பூர் மற்றும் பதான்கோட் ஆகியவற்றில் வசிக்கும் மக்கள், ஃபெரோஸ்பூர் பகுதிகளை சேர்ந்த மக்களைப் போல இடம்பெயரவில்லை.
ஆனால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பஞ்சாபின் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களை மூட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பதான்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் மற்றும் ஃபாசில்கா மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் அடுத்த 72 மணி நேரத்துக்கு மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கையினால், எல்லை மாவட்ட மக்களிடையே சிறிது பதற்றம் நிலவுகிறது.
பிபிசிக்கு கிடைத்த தகவல்களின்படி, நிலைமையைக் கருத்தில் கொண்டு குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் ஃபெரோஸ்பூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பொருட்களை பாதுகாக்கத் தொடங்கிவிட்டனர்.
அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரில் உள்ள விமான நிலையங்களில் பொதுமக்களுக்கான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC