SOURCE :- BBC NEWS

எனர்ஜி டிரிங்க்ஸ்

பட மூலாதாரம், Getty Images

52 நிமிடங்களுக்கு முன்னர்

​​பஞ்சாபில் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் ஆற்றல் தரும் பானங்களின் விற்பனை தடை செய்யப்படும் என்று அம்மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் கூறியுள்ளார்.

அதேபோல், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் ஆற்றல் தரும் பானங்கள் விற்கப்படாது என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது.

“18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளபடி, பள்ளிகளில் ஆற்றல் தரும் பானங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கல்லூரிகளிலும் இந்த பானங்களை விற்பனை செய்வதை தடை செய்வதற்காக ஜே.பி. நட்டாவையும் சந்தித்தேன்” என்று டாக்டர் பல்பீர் சிங் கூறினார்.

மேலும் “பொதுவாகவே இவை தடை செய்யப்பட வேண்டும். ஆனால் அனைத்தும் சட்டத்தால் மட்டும் செய்யப்படுவதில்லை. பெற்றோர்களும் அவற்றை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அவற்றை வைத்திருக்க வேண்டாம் என்று ஆசிரியர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.” என்று கூறிய அவர்,

அவற்றை மாணவர்கள் பார்வையில் படுமாறு வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“இதில் சர்க்கரை மற்றும் கேஃபின் அளவு மிக அதிகமாக உள்ளது. இது இதயம், மூளை போன்றவற்றை எதிர்மறையாக பாதிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மாரடைப்பை ஏற்படுத்துகிறது” என்றும் டாக்டர் பல்பீர் சிங் கூறினார்.

 பல்பீர் சிங்

பட மூலாதாரம், Dr Balbir Singh/FB

ஆற்றல் தரும் பானங்கள் எவ்வாறு தீங்கு விளைவிக்கின்றன ?

உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய கொள்கையில், இளைஞர்கள் அதிக அளவில் சர்க்கரை கலந்த பானங்களை உட்கொள்கின்றனர், இது அவர்களுக்கு குழந்தை பருவத்திலேயே அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் அடையும் ஆபத்தை அதிகரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர்த்தால், பிற்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்பு ஏற்படுவதில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படலாம்.

ஆற்றல் தரும் பானங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் பிலிப்பா ராக்ஸ்பியின் செய்திக் கட்டுரையின்படி , அவை மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

இந்த பானங்களில் பெரும்பாலும் அதிக அளவு கேஃபின் மற்றும் சர்க்கரை உள்ளது. உடனடியாக உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்ற பெயரில் இவை விற்கப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகையில், அவற்றின் பேக்கேஜிங்கில் அவை ‘குழந்தைகளுக்கானவை அல்ல’ என்று பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கடைகளில் அவை பரவலாக விற்கப்படுவதன் மூலம், குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கின்றன.

ஆற்றல் தரும் பானங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஊக்கம் அளிப்பதாகவும், குளிர்பானங்களை விட அதிக ஆற்றலை வழங்குகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

டீசைட் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார ஊட்டச்சத்து பேராசிரியர் அமெலியா லேக் ஆற்றல் பானங்கள் மற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் குறித்த 57 சமீபத்திய ஆய்வுகளை மதிப்பாய்வு செய்தார்.

21 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

“ஆற்றல் தரும் பானங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் நடத்தை மற்றும் கல்விக்கும் தீங்கு விளைவிப்பதாக சான்றுகள் தெளிவாக உள்ளன” என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

“இந்த ஆபத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை.”

சிறுமிகளை விட சிறுவர்கள் அதிக அளவில் ஆற்றல் தரும் பானங்களை அருந்துவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்குவதில் பிரச்னைகள், பள்ளியில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்துவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை ஆற்றல் தரும் பானங்களின் பயன்பாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையவை என்றும் அந்த மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.

உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான ஆய்வுகள் எப்பொழுதும் கவனிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், ஆற்றல் தரும் பானங்கள் நேரடியாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதை தங்கள் ஆராய்ச்சி நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் முக்கியமானவை என்றும், தற்போது கிடைக்கக்கூடிய சிறந்த ஆதாரங்கள் என்றும் டாக்டர் லேக் குறிப்பிட்டார்.

கேஃபினை தவிருங்கள்

எனர்ஜி டிரிங்க்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் 3 மில்லிகிராமுக்கு மேல் கேஃபின் உட்கொள்ளக்கூடாது என்று அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேராசிரியர் லேக் கூறுகையில், “ஆற்றல் தரும் பானம் உள்ள ஒரு பெரிய கேனில் இரண்டு கோப்பை காப்பியில் (எஸ்பிரெசோக்களில்) உள்ள அதே அளவு கேஃபின் உள்ளது” என்று என்கிறார்.

அவற்றில் சர்க்கரையின் அளவும் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் மற்றும் அவர்களது உணவுப் பழக்கங்களும் ஆரோக்கியமற்ற முறையில் இருந்தால், உடல் பருமனுக்கும் காரணமாகலாம்.

லாட்வியா மற்றும் லிதுவேனியா போன்ற சில நாடுகள் ஏற்கனவே குழந்தைகளுக்கு ஆற்றல் தரும் பானங்களை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன, ஆனால் இந்த நடவடிக்கை என்ன வகையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இப்போதே கூற இயலாது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU