SOURCE :- BBC NEWS
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடசாமிக்கு ஒதுக்கப்பட்ட டைப்-7 பங்களா இது. கடந்த 1978இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தியை ஆதரிக்க முடிவு செய்த சிலரில் வெங்கடசாமியும் ஒருவர்.
இந்திரா காந்திக்கு, 1977ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தங்க இடமில்லாமல் போனது. ஒரு காலத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த முகமது யூனுஸ் அந்த நேரத்தில் 12 வில்லிங்டன் கிரசென்ட்டில் உள்ள தனது பங்களாவை இந்திரா காந்திக்கு கொடுத்தார். பிறகு அவர் தெற்கு டெல்லியில் ஒரு வீட்டிற்குக் குடியேறினார்.
வில்லிங்டன் கிரசென்ட்டில் இந்திரா காந்தியுடன் அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா, அவர்களது இரண்டு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்கா, இளைய மகன் சஞ்சய் மற்றும் அவரது மனைவி மேனகா ஆகியோர் வசித்தனர்.
அரசியல் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு அந்த இடம் மிகச் சிறியதாக இருந்தது.
ரஷித் கித்வாய் தனது ’24, அக்பர் ரோடு’ என்ற புத்தகத்தில் “12 வில்லிங்டன் கிரசென்ட்டில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். எனவே, 24 அக்பர் சாலை காங்கிரஸின் புதிய தலைமையகமாக மாற்றப்பட்டது.
இந்த பங்களாவுக்கு முன்பாக விமானப் படைத் தளபதியின் வீடு இருந்தது. 24, அக்பர் சாலை பங்களாவில், ஒரு டிராயிங் ரூம், டைனிங் ஹால் மற்றும் விருந்தினர் அறை உள்பட மொத்தம் ஐந்து அறைகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார்.
“இந்த வீட்டின் சிறப்பு என்னவென்றால், அதை 10, ஜன்பத்துடன் இணைக்கும் ஒரு வாயில் இருந்தது. அப்போது 10, ஜன்பத் ‘இளைஞர் காங்கிரஸ் தலைமையகமாக’ இருந்தது. பின்னர் இந்த வீடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதலில் ராஜீவ் காந்திக்கும் பின்னர் சோனியா காந்திக்கும் ஒதுக்கப்பட்டது,” என்று கித்வாய் மேலும் குறிப்பிடுகிறார்.
ஆங் சான் சூகியின் வீடு
இந்த வீட்டிற்கு மற்றொரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. இந்த பங்களா 1911 மற்றும் 1925க்கு இடையில் சர் எட்வின் லுடியன்ஸால் கட்டப்பட்டது. பர்மிய தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி 1961இல் இரண்டு ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தார்.
அவரது தாயும், மியான்மர் தலைவர் ஆங் சானின் மனைவியுமான டாக்டர் கின் கி, கணவர் இறந்த பிறகு இந்தியாவுக்கான பர்மாவின் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். டாக்டர் கின் கியின் சிறப்பு அந்தஸ்தை பார்த்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்த பங்களாவுக்கு ‘பர்மா ஹவுஸ்’ என்று பெயரிட்டார்.
ஆங் சான் சூகியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஜஸ்டின் வின்டெல் ‘தி பெர்ஃபெக்ட் ஹோஸ்டஸ்’ என்ற தனது புத்தகத்தில், “இங்கு வசிக்கும்போது சூகி, ஜப்பானிய மலர் அலங்கார கலையான ‘இகேபனா’வை கற்றுக்கொண்டார். இங்கு வசிக்கும்போது அவர் ‘கான்வென்ட் ஆஃப் ஜீஸஸ் அண்ட் மேரி’ பள்ளியில் படித்தார். பின்னர் அரசியல் அறிவியல் படிப்பதற்காக லேடி ஸ்ரீராம் கல்லூரியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரி அப்போது தர்யாகஞ்சில் இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையகமாக தொடர்வதற்கு ஆதரவு
கடந்த 1959ஆம் ஆண்டு இந்திரா காந்தி காங்கிரஸின் தலைவரானபோது 7, ஜந்தர் மந்தர் சாலையில் அமைந்துள்ள பங்களா காங்கிரஸின் தலைமையகமாக மாற்றப்பட்டது. 1969இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்த பங்களாவை மொரார்ஜி தேசாய் தலைமையிலான பிரிவினர் எடுத்துக்கொண்டு விட்டனர். இந்திரா காங்கிரஸ் அலுவலகம் 5 ராஜேந்திர பிரசாத் சாலைக்கு மாறியது.
இந்திரா காந்தி 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 7 ஜந்தர் மந்தர் சாலையில் இருந்த பழைய காங்கிரஸ் தலைமையகத்திற்கு உரிமை கோருவதில் ஆர்வம் காட்டவில்லை.
“ஒருமுறை அல்ல இரண்டு முறை கட்சியை புதிதாகக் கட்டி எழுப்பினேன். காங்கிரஸின் புதிய தலைமையகம், வரவிருக்கும் ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஆற்றலையும் உற்சாகத்தையும் ஊட்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அப்போது அவர் கூறினார்.
இந்திரா காந்தியின் நெருங்கிய சகாக்களான பூட்டா சிங்கும் ஏ.ஆர்.அன்துலேவும் 24 அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்திற்குச் சென்றபோது பங்களாவில் சாதாரண மரச் சாமான்கள்கூட இல்லை. பங்களாவில் இருப்பதிலேயே பெரிய அறை காங்கிரஸ் தலைவர் அலுவலகமாக மாற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் பெயர் பலகையை தயார் செய்த பகத்
இந்திரா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பூட்டா சிங்கிற்கு அங்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டது.
இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் 24 அக்பர் சாலைக்கு வருவதற்கு முன்பு வரை முதலில் 3 ஜன்பத்தில் உள்ள எம்.சந்திரசேகரின் இல்லத்திலும், பின்னர் கமலாபதி திரிபாதியின் பங்களாவிலும் சந்தித்து வந்தனர்.
“கமலாபதி திரிபாதி ஒரு பக்தி சிரத்தையான இந்து. அவரது இல்லத்தில் தினமும் நடக்கும் ஹோமம் மற்றும் பூஜைகள் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிராமணராக இருந்தும்கூட ‘கோவில் போன்ற சூழலில் தன்னால் பணியாறற முடியாது’ என்று காங்கிரஸின் மூத்த தலைவர் அஜீத் பிரசாத் ஷர்மா கூறியதாகச் சொல்லபடுகிறது. தனது வீட்டை கட்சிக்குக் கொடுக்கும்படி தனி ஆளாக வசித்த வெங்கடசாமியை அந்த நேரத்தில் பூட்டா சிங் இணங்க வைத்தார்,” என்று ரஷித் கித்வாய் எழுதியுள்ளார்.
டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவரான ஹர்கிஷன் லால் பகத் தனது சொந்த பணத்தில் மரத்தாலான ஒரு பெயர்ப் பலகையைத் தயார் செய்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் (இந்திரா) என்று எழுதப்பட்டு இருந்தது. இந்தப் பெயர்ப் பலகை, 24 அக்பர் சாலையின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டது.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட அறைகள்
அக்பர் சாலை பங்களாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. “இப்போது அறைகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. பிரதான கட்டடத்தில் காங்கிரஸ் தலைவர், பொதுச் செயலர்கள் மற்றும் பொருளாளர் அறைகள் உள்ளன. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் பங்களாவின் பின்புறத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் கட்டப்பட்டன.”
“இதில் பெரும்பாலான கட்டுமானங்கள் சட்ட விரோதமாகச் செய்யப்பட்டவை. அதன்பிறகு காங்கிரஸ் அரசுகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பொதுப்பணித்துறை தனது விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் கட்டட சட்டங்களை முறையாகப் பின்பற்றாமல் இருந்தன,” என்று ரஷித் கித்வாய் எழுதுகிறார்.
கடந்த 1985ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஒரு நவீன கட்டடத்தில் காங்கிரஸின் தலைமையகத்தை அமைக்க விரும்பினார். அவர் இதற்கென பல இடங்களில் இருந்து நன்கொடை பெற்றார். மேலும் ராஜேந்திர பிரசாத் சாலையில் ஒரு புதிய கட்டடம் கட்டுவதற்காகத் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆனால் 1991இல் ராஜீவ் காந்தியின் திடீர் மரணம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அந்தக் கட்டடத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அலுவலகம் திறக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்திற்கு நான்கு ஏக்கர் நிலம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக விதிகளின் கீழ் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டடம் கட்ட 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கோட்லா சாலையும் தீன்தயாள் உபாத்யாய் சாலையும் சந்திக்கும் இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி சித்தாந்தவாதியின் பெயரால் அமைந்த சாலையில் தனது தலைமையகத்தைக் கட்டுவதற்கு காங்கிரஸ் சிறிது தயங்கியது. எனவே அலுவலகத்தின் நுழைவாயிலை கோட்லா சாலையில் இருந்து வைக்க கட்சி முடிவு செய்தது.
கொடுங்காற்றில் மரம் விழுந்தது
கடந்த 1999 மே மாதம் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த கொடுங்காற்றில் 24, அக்பர் சாலையில் உள்ள ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இந்த விபத்தில் ஒரு எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். கூடவே கட்சித் தலைமையக வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தற்காலிக கோவிலும் தரைமட்டமானது.
இதை ஒரு கெட்ட சகுனமாக கட்சி கருதியது. காங்கிரஸ் தலைமையகம் 24 அக்பர் சாலைக்கு மாற்றப்பட்டதில் இருந்தே அங்கிந்த மரம் இருந்தது. கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் அந்தக் கோவிலை கட்டினார்.
அந்தக் கோவிலில் பிரார்த்தனை செய்தால் அரசியல் ஆசைகள் நிறைவேறும் என்று பல வேட்பாளர்கள் நம்பினர்.
சீதாராம் கேசரியின் இடத்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட சோனியா காந்தி
கடந்த 1996இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதன் சாட்சியாக 24 அக்பர் சாலை ஆனது. காங்கிரஸ் கட்சி முதலில் ஹெச்.டி.தேவ கெளடாவுக்கும், பிறகு இந்தர் குமார் குஜ்ராலுக்கும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வர அனுமதிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
இதற்கிடையில் சீதாராம் கேசரி காங்கிரஸின் தலைவரானார். 1998 மார்ச் 24ஆம் தேதி சீதா ராம் கேசரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தப் பொறுப்பு சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக 1998 மார்ச் 5ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி காங்கிரஸ் அலுவல் குழு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ஜிதேந்திர பிரசாத், ஷரத் பவார், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சோனியா காந்தியை கட்சித் தலைவர் பதவியில் நியமிக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு சீதாராம் கேசரி மறுப்பு தெரிவித்ததோடு, இந்த ஆலோசனையை வழங்கிய தலைவர்கள் தனக்கு எதிராக சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
அகற்றப்பட்ட சீதாராம் கேசரியின் பெயர்ப்பலகை
அதன்பிறகு சீதாராம் கேசரி அலுவல்குழு கூட்டம் முடிவடைந்ததாக அறிவித்தார்.
“இருந்தபோதிலும், காங்கிரஸ் அலுவல் குழுவின் தலைவர்கள் அங்கிருந்து நகரவில்லை. நான் மூத்த தலைவராக இருந்ததால் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நான் ஒரு தீர்மானத்தை முன்வைத்தேன். அதை அலுவல் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். சோனியா காந்தியை கட்சித் தலைவராக ஆக்குவதற்கு விருப்பம் தெரிவித்தமைக்காக கட்சித் தலைவர் சீதாராம் கேசரிக்கு காங்கிரஸ் அலுவல் குழு நன்றி தெரிவிப்பதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.”
“காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை வகித்ததற்காக சீதாராம் கேசரிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு சில அலுவல் குழு உறுப்பினர்கள் இந்த முன்மொழிவின் நகலை சோனியா காந்தியிடம் எடுத்துச் சென்று காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர்,” என்று பிரணாப் முகர்ஜி தனது ‘தி கோஅலிஷன் இயர்ஸ் (The Coalition Years)’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அந்தக் கோரிக்கையை சோனியா ஏற்றுக்கொண்டார். ‘இப்போதும் நான்தான் காங்கிரஸ் தலைவர்’ என்று சீதாராம் கேசரி முழக்கமிட்டார். ஆனால் கட்சியின் துணைத் தலைவர் ஜிதேந்திர பிரசாத், ‘இப்போது சோனியா காந்திதான் கட்சியின் தலைவர்’ என்று பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் அறிவித்தார்.
“பதவியில் இருந்து நீக்கப்பட்ட சீதாராம் கேசரி அறையைவிட்டு வெளியே வந்தார். தாரிக் அன்வரும் அவரைப் பின்தொடர்ந்தார். அறையை விட்டு வெளியே வந்தபோது தனது பெயர் பலகை அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக, ‘சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்’ என்ற கணினி பிரிண்ட் அவுட் அங்கு ஒட்டப்பட்டிருப்பதை கேசரி கண்டார்,” என்று ரஷித் கித்வாய் எழுதியுள்ளார்.
அடுத்த பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்வு செய்த சோனியா
ஓர் ஆண்டு கழித்து, 24 அக்பர் சாலையில் நடந்த காங்கிரஸ் அலுவல் குழு கூட்டத்தில் ஷரத் பவார், பிஏ சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் ‘வெளிநாட்டு வம்சாவளி’ பிரச்னையில் சோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
சோனியா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இந்த தலைவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது காரும் சேதப்படுத்தப்பட்டது. தனது கிழிந்த குர்தாவை மாற்ற அவர் வீட்டிற்குத் திரும்ப வேண்டியிருந்தது.
கிளர்ச்சி செய்த ஒருவரான தாரிக் அன்வர் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தே இந்தத் தாக்குதலுக்குக் காரணம். 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்தது.
நாட்டின் அடுத்த பிரதமர் சோனியா காந்திதான் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில் மன்மோகன் சிங்கை இந்தியாவின் அடுத்த பிரதமராக உட்கார வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சோனியா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU