SOURCE :- BBC NEWS
20 நிமிடங்களுக்கு முன்னர்
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட காஸா போர்நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு தொடங்கியுள்ளது.
காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அப்படியென்றால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்படும். மேலும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கே போர்நிறுத்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணயக்கைதிகளில் பெயர் பட்டியலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஹமாஸ் வழங்காததால், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது.
இந்தநிலையில், முதலில் விடுவிக்கப்பட உள்ள மூன்று பணயக்கைதிகளில் பெயரை ஹமாஸ் வெளியிட்டது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 33 பணயக்கைதிகள் விடுதலை பெற உள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட பட்டியலில், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸால் பிடிக்கப்பட்ட மிக இளைய மற்றும் மூத்த பணயக்கைதிகள் இடம்பெற்றுள்ளனர். கஃபிர் பிபாஸ் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டபோது ஒன்பது மாதக் குழந்தை. தனது இரண்டு பிறந்தநாளை பணயக்கைதியாக அந்த குழந்தை கழித்தது. 86 வயதான ஷ்லோமோ மன்ட்சூர், கடத்தப்பட்ட மிக வயதான பணயக்கைதி ஆவார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வரும் சில மணிநேரத்திற்கு முன்புவரை கூட, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் இன்று காலை முதல் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது
இன்று காலை ஏற்பட்ட தாமதம் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளின் முதல் கட்ட பரிமாற்றத்திற்கான நேரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்கு முதல்கட்ட பரிமாற்றம் நடைபெறவிருந்தது.
போர்நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில், தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த போர்நிறுத்தம் “பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் நோக்கில், ஹமாஸை அழிக்க உறுதிபூண்டது இஸ்ரேல். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்துள்ளன.
காஸாவில் இதுவரை 46,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காஸாவில் இருந்து அநேக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் பல இடங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பணயக் கைதிகளில் ஏற்கனவே 94 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU