SOURCE :- BBC NEWS

ராம் சரண்

பட மூலாதாரம், Ram Charan/X

ஒரு நதி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது போல, திரைப்படங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். சினிமாவும் அப்படித்தான். புதுவிதக் கதைகளோடு திரைப்படங்களை எடுக்காவிட்டால், குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் போல படங்களும் தேங்கிவிடும். இயக்குநர் ஷங்கரின் தற்போதைய சூழ்நிலை இதுதான்.

சமூகக் கண்ணோட்டம் மட்டும் போதாது. சமூகத்தில் உருவாகும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். மக்களும் சமூகத்தின் ஒரு பகுதி என்பதை உணர வேண்டும். ஏனென்றால் பார்வையாளர்களின் கண்ணோட்டமும் வேகமாக மாறி வருகின்றன.

இது தெரியாமல் பழைய கதையை வைத்து பழைய பாணியில் படம் எடுத்தால் அது கேம் சேஞ்சர் படம் போலத்தான் இருக்கும். ஒரு விளையாட்டில் வெல்ல, நீங்கள் அதைச் சரியாக விளையாட வேண்டும். அதாவது, பழைய கதையைப் பயன்படுத்தினாலும், குறைந்தபட்சம் கதை புதுமையாகவும் புத்துணர்ச்சியூட்டும் விதமாகவும் இருக்க வேண்டும்.

கேம் சேஞ்சர் படத்தின் மீது அதிகளவில் யாருக்கும் எதிர்பார்ப்பு இல்லை. இந்தியன் 2 படத்தைப் பார்த்துவிட்டு பலரும் ஷங்கர் மீது நம்பிக்கை இழந்தனர். ராம் சரணின் நடிப்பும், தில் ராஜுவின் தயாரிப்பு மதிப்பும் உண்மையில் பாராட்டுக்குரியது. இருப்பினும், கதை, திரைக்கதையில் பார்வையாளர்களைக் கவரத் தேவையான புதுமை மற்றும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது.

இடைவேளையின் திருப்பத்தைத் தவிர படத்தின் மற்ற பகுதிகள் யூகிக்கக்கூடிய வகையிலேயே இருந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படத்தின் கதை என்ன?

நாயகன் ராம்நந்தன் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி. விசாகப்பட்டினம் கலெக்டராக அவர் பொறுப்பேற்றவுடன், கள்ளச் சந்தை, சட்டவிரோத கட்டுமானங்கள், மணல் கொள்ளை உள்ளிட்ட அனைத்து ஊழல் நடவடிக்கைகளுக்கும் எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறார்.

முதலமைச்சரின் (ஸ்ரீகாந்த்) மகன் மோபிதேவி (சூர்யா) ஊழலில் ஈடுபடும் அமைச்சர். ராம்நந்தனின் செயல் அவரைக் கோபப்படுத்துகிறது. இருவருக்கு இடையிலும் மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில், ஹீரோவின் காதல் கதையைக் காட்டும் ஃப்ளாஷ்பேக் உள்ளது. பின்னர், அவர் கதாநாயகியை (கியாரா அத்வானி) தேடி மீண்டும் அவருடன் இணைகிறார். அவர் நடத்தும் முதியோர் இல்லத்தில் பார்வதி (அஞ்சலி) என்ற வயதான பெண் வசிக்கிறார். அப்பெண் முதலமைச்சருக்கு நிறைய மனுக்கள் எழுதுகிறார்.

தொடர்ச்சியாக மனுக்கள் எழுதிக்கொண்டே இருந்ததால் அவர் தனது சுயநினைவை இழந்துவிட்டதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பார்வதியின் விருப்பப்படி, கதாநாயகன் முதல்வரைக் காண அவரை அழைத்துச் செல்கிறார். பார்வதிக்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? கதாநாயகன் ராம்நந்தன் யார்?

இதுதான் படத்தின் மீதிக்கதை.

கதை மற்றும் திரைக்கதையில் பார்வையாளர்களை கவர தேவையான புதுமை மற்றும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது.

பட மூலாதாரம், Ram Charan/X

இரண்டாம் பாதியில், பார்வதியின் ஃப்ளாஷ்பேக் வெளிப்பட்டு, ஹீரோவுக்கும் வில்லன்களுக்கும் இடையே பூனை-எலி விளையாட்டு விரிகிறது. கதைக்களம் மிகவும் யூகிக்கக்கூடியதாக மாறுகிறது, படம் எவ்வாறு முடிவடையப் போகிறது என்பதை எல்லாரும் கணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஷங்கர் ஒரு காலத்தில் சிறந்த இயக்குநராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. கதாபாத்திரங்களை எழுதுவதிலும், கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவதிலும் சிறந்து விளங்கினார். பிரமாண்டமான முறையில் பாடல்களைச் சித்தரிப்பது அவரது தனிச்சிறப்பு. வணிக சினிமா வடிவத்திலும் பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை வழங்குவார்.

ஆனால், ‘ஒகே ஒக்கடு” ( தமிழில் முதல்வன்) படத்திற்கும் “கேம் சேஞ்சர்” படத்திற்கும் இடையே 25 வருட இடைவெளி உள்ளது.

கதாநாயகனின் அறிமுகப் பாடல், சண்டைக் காட்சிகள், கதாநாயகி அறிமுகம், காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், வில்லன் அறிமுகம், கதாநாயகன்- வில்லன் இடையிலான மோதல், இடைவெளியில் பிரமாண்டம், இரண்டாம் பாதியில் ஃபிளாஷ் பேக், சண்டை, கதாநாயகனுக்கு ஏற்படும் சிக்கல்கள், கிளைமாக்ஸ் சண்டை, ஐந்து பாடல்கள்…

இதே பாணியில் உருவாக்கப்படும் படங்கள் காலாவதியாகத் தொடங்கிவிட்டன.

இதே பாணியில் உருவாக்கப்படும் படங்கள் காலாவதியாகத் தொடங்கிவிட்டன.

பட மூலாதாரம், Ram Charan/X

கத்தி கூர்மையாக இருந்தால்தான், நீண்ட காலம் அதனால் பயனளிக்க இயலும். அதேபோல் ஒரு கதையை நன்கு வடிவமைத்து, மெருகேற்ற வேண்டும். குறுகிய இரண்டு நிமிட வீடியோக்களுக்கும், ரீல்களுக்கும் பழகிவிட்ட இன்றைய தலைமுறையினரை, 2.45 மணிநேரம் ஒரு திரையரங்கில் உட்கார வைக்க, படக் கதை புதுமையாகவும் மக்களை ஈர்க்கக் கூடிய வகையிலும் அழுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.

“ஜென்டில்மேன்” படத்தில், ஷங்கர் கல்வி முறை குறித்து திரைக்கதை அமைத்தார், அதே நேரத்தில் “ஒகே ஒக்கடு” அரசியல் அமைப்பில் கவனம் செலுத்தியது. “பாரதீயுடு” (இந்தியன்) மற்றும் “அபரிசிடுடு” (அந்நியன்) ஆகியவற்றில் ஊழலைக் குறிவைத்தார்.

இந்தத் திரைப்படங்கள் அவற்றின் வலுவான எழுத்து மற்றும் அழுத்தமான கதைகளால் வெற்றி பெற்றன.

கதாபாத்திர சித்தரிப்பு வலுவான உணர்ச்சிகளுடன் கலந்திருக்க வேண்டும். “பாரதீயுடு (இந்தியன்) படத்தில், கமல்ஹாசனின் பாத்திரம் ஒரு காகிதப் படகு செய்வதற்காகத் தனது மகளுக்கு ₹500 நோட்டைக் கொடுக்கிறார், ஆனால் பின்னர் அவரது மகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு டாக்டருக்கு லஞ்சம் கொடுக்க மறுக்கிறார்.

ஊழலுக்குப் பழக்கப்பட்ட தன் மகனைக்கூட அவர் விட்டு வைக்கவில்லை. கதாபாத்திரங்கள் வலுவாக இருக்கும்போது, ​​​​நடிகர்கள் அற்புதமான நடிப்பை வழங்குகிறார்கள். ஆனால் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் உள்ள பிரச்னை அதன் பலவீனமான திரைக்கதை.

கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம்: அதே பழைய கதையா?

பட மூலாதாரம், Sri Venkateswara Creations

சாய் மாதவ் புர்ராவின் வசனங்கள் சில இடங்களில் பளிச்சிட்டாலும், கதையில் பொருள் இல்லாதிருந்தால் நல்ல வசனங்களால் மட்டுமே படம் வெற்றிபெற முடியாது.

ராம் சரண் மற்றும் சூர்யா சிறந்த நடிப்பை வழங்கிய போதிலும், வழக்கமான இந்தக் கதை ஒட்டுமொத்த படத்தையும் பலவீனப்படுத்தியுள்ளது. கியாரா அத்வானிக்கு அவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. படத்தில் அவர் பெரும்பாலும் சில வசனங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.

அஞ்சலியின் நிலையும் அப்படித்தான். வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி, சத்யா போன்ற நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், படத்தில் உள்ள நகைச்சுவைக் காட்சிகள் பெரிதளவில் ஈர்க்கவில்லை.

சுனில் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டு மறுபக்கம் நடப்பதும் சிரிப்பை வரவழைக்கவில்லை. பிரம்மானந்தம் சிறிதுநேரம் மட்டுமே வந்தாலும் அவரது நடிப்பும் படத்திற்குப் பெரிய அளவில் உதவவில்லை. நடிகர்களில், ஜெயராமின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

அதிகாரத்துவம் பல அடுக்குகளில் செயல்படுகிறது. இருப்பினும், படங்களில், இது பெரும்பாலும் ஹீரோவுக்கு வசதியாக இருக்கும். உண்மையைக் கூறவேண்டுமெனில், கதை நம்மை ஈர்த்தால் நாம் அதன் லாஜிக் குறித்து கேள்வி கேட்க மாட்டோம்.

இப்படத்தில், மருத்துவமனையில் ஸ்ரீகாந்துடன் சூர்யா பழகும் காட்சி “கிளாடியேட்டர்” படத்தின் ஒரு தருணத்தை நினைவூட்டுகிறது. தமனின் பின்னணி இசை பல இடங்களில் சிறப்பாக உள்ளது. சில காட்சிகள் “எனிமி அட் தி கேட்ஸ்” (2001) படத்தில் வில்லன் தோன்றும்போது ஒலிக்கும் இசையை நினைவூட்டுகிறது.

கியாரா அத்வானி

பட மூலாதாரம், Ram Charan/X

இரண்டாம் பாதியில் அப்பண்ணா கதாபாத்திரத்தில் ராம் சரண் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், பழங்குடியின பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீரென அரசியல் கட்சி தொடங்கி மாநில அளவில் போட்டியிடுவது நம்பும்படியாக இல்லை.

நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களைக் கொண்ட பாடல்கள் உயர் ரகமாகவும் வண்ணமயமாகவும் உள்ளன. ஆனாலும் அவை கதையின் நடுவே குறுக்கிடுவது போல் தெரிகிறது.

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் முக்கிய மோதலே கதையின் மையமாக வரும்போது, அரசியல் பின்னணியில் கதையை இயக்கியிருக்க வேண்டும். இருப்பினும், பல துணைக்கதைகள் கவனத்தைத் திசைதிருப்பி, கதையை அதன் பாதையில் இருந்து விலக்கிச் செல்கின்றன.

ஹீரோ கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம், முதலமைச்சரின் ஃப்ளாஷ்பேக், தேர்தல் நிர்வாகம், காதல் கதை என அனைத்துமே கதையின் வெற்றிக்குப் பங்களிக்கத் தவறிவிட்டன.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற கதையம்சம் கொண்ட `ரிபப்ளிக்’ என்ற படம் வெளியாகி வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில், அரசியல் ஊழல்கள் குறித்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க புகார்கள் இல்லை என்று அறியப்பட்டது.

கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம்: அதே பழைய கதையா?

பட மூலாதாரம், Sri Venkateswara Creations

சமூக ஊடகங்களின் வளர்ச்சியால், மக்கள் இப்போது வீட்டு விஷயங்களைவிட அரசியலைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். பழங்கால அரசியல் அணுகுமுறைகள் இனி யாரையும் ஈர்க்காது. ஷங்கர் அதற்கேற்றவாறு மாற வேண்டும் அல்லது ஒதுங்க வேண்டும்.

ராம் சரணின் நடிப்புக்காகப் படத்தைப் பார்க்கலாம். அதே நேரம், ஷங்கரின் வழக்கமான மேஜிக்கை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடையலாம். ஹீரோவுக்கு எந்த அளவுக்கு எதிர்மறையான தோற்றம் அளிக்கப்படுகிறதோ, அந்தளவு அதிகமாக பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

மாறாக நீதி குறித்தும், அறம் குறித்தும் படம் எடுக்கும்போது அவை பிரசார தொனி போலத் தோன்றுகிறது. தத்துவஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் விளக்கினாலும், அதை மாற்றுவதில்தான் உண்மையான சவால் உள்ளதாக கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தார். இந்த மாற்றம் ஏற்பட மிகப்பெரிய தலைவர்கள் ஒன்றிணைந்து போராடினர்.

பெரிய பொருட்செலவில் பெரிய நட்சத்திர நடிகர்களைக் கொண்டு ஊழல் மற்றும் அநீதியை வெளிப்படுத்தும் ஃபார்முலாவில் இருந்து ஷங்கர் விலகினால் தயாரிப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நல்லது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலியுறுத்தினாலும், புதுமையான திரைக்கதை இல்லாமல், பார்வையாளர்களை ஈர்க்க முடியாது. இதை ஷங்கர் உணர்வது நல்லது.

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU