SOURCE :- BBC NEWS
கோவையில் வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து, செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காண இரண்டு ஆண்டுகளாகும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்.
திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளாட்சிகள் சார்பில் வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கடந்த மார்ச் மாதத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சமர்ப்பித்த வருடாந்திர அறிக்கையின்படி, மொத்தம் 257 சதுர கி.மீ. பரப்பளவில், 100 வார்டுகளை கொண்டுள்ள கோவை மாநகராட்சியின் 2022 மக்கள்தொகை 22,88,052 ஆக இருந்துள்ளது.
மாநகராட்சியில் மொத்தம் 5,38,170 வீடுகளும், 14,847 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளும், 628 குடியிருப்பு அல்லாத வளாகங்களும் இருக்கின்றன. இவற்றிலிருந்து தினமும் 1,250 மெட்ரிக் டன் குப்பைகள் குவிவதில் 950 முதல் 1,100 மெட்ரிக் டன் வரையிலான குப்பைகளைச் சேகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துர்நாற்றம், பல்கிப் பெருகும் ஈக்கள்
இந்தக் குப்பைகள் அனைத்தும், மாநகராட்சி எல்லைக்கு வெளியே வெள்ளலுாரில் மாநகராட்சியால் விலைக்கு வாங்கப்பட்ட 654 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் குவிக்கப்படுகின்றன.
குப்பைக் கிடங்கு அமைத்தபோது, அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின், மலையாகக் குவிந்த குப்பையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்குப் பாதிப்புகள் உண்டாகத் துவங்கியதாகக் கூறுகின்றனர்.
துர்நாற்றம், ஈக்கள் தொல்லை என பாதிப்பு அதிகமான நிலையில், இதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன. சில வழக்குகள் இன்னும் விசாரணையிலும் உள்ளன. மாநகராட்சி சார்பில் சில உறுதிகளும் தரப்பட்டுள்ளன.
ஆனால் நடைமுறையில் இவை எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் செயல்திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யாவிட்டால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் எச்சரித்துள்ளார்.
கோவை மாநகராட்சி குப்பை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் விடுத்துள்ள எச்சரிக்கைக்கான காரணமென்ன, அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன, மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
குப்பைக் கிடங்கை இடம் மாற்ற வலியுறுத்தி, கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தவர் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன்.
குறிச்சி–வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவின் செயலாளர் மோகன் சார்பிலும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு அமைப்புகளுடன் சட்டப்போராட்டங்களுடன், பல விதமான களப்போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று நடந்த மனித சங்கிலி போராட்டத்தில், வெள்ளலுார், போத்தனுார், கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், ”கடந்த 2013 ஆம் ஆண்டில் பசுமை தீர்ப்பாயத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில், 2018 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஓராண்டுக்குள் குவிந்துள்ள 15.5 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழித்துவிடுவோம்.
நகரில் 65 இடங்களில் குப்பை தரம் பிரிப்பு நிலையம் அமைத்து, ஆங்காங்கே அவற்றைப் பிரித்து விடுவோம். ஏற்கெனவே 20 அமைத்து விட்டோம். வெள்ளலுாரில் 600 டன் குப்பையைக் கையாளும் திறன் உள்ளது. அதற்குக் கூடுதலாக இனி குப்பை வராது என்று மாநகராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதையே பசுமை தீர்ப்பாயம் உத்தரவாகவும் வழங்கியது.” என்றார்.
குப்பைக் கிடங்கை நேரில் பார்வையிட்ட நீதிபதி
இந்த வழக்கில், கடந்த 2018-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கிய அப்போதைய நீதிபதி ஜோதிமணி, மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு கமிட்டியையும் அமைத்தார்.
நீதிபதி ஜோதிமணி ஓய்வுபெற்ற பிறகு, அவரே இந்தக் குழுவின் தலைவராக வெள்ளலுாருக்கு இரு முறை வந்து பார்த்து, பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கிச் சென்றார்.
இவை எதையுமே இன்று வரை மாநகராட்சி சொன்னபடி நடைமுறைப்படுத்தவில்லை என்பதோடு குழுவையும் கலைத்துவிட்டதாகச் சொல்கிறார் ஈஸ்வரன்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைச் செயல்படுத்த வலியுறுத்தி, மற்றொரு மனுவை (Execution Petition) கடந்த 2021-ஆம் ஆண்டில் தாக்கல் செய்தார் ஈஸ்வரன். அந்த வழக்கு, அடுத்த ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்று வரையிலும் விசாரணையில் இருக்கிறது.
”திடக்கழிவு மேலாண்மை 2016 விதிகளின்படி, மாநகராட்சியால் குப்பையைத் தரம் பிரித்து வாங்க வேண்டும்; மட்கும் குப்பையை உரமாக மாற்ற வேண்டும்; மீதியுள்ள குப்பையில் மறு பயன்பாட்டுக்குரிய குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும்.
எதுவுமே செய்ய முடியாத குப்பைகளை நிலம் நிரப்புதல் (Land Filling) முறையில் அதற்கான செயல்முறையின்படி கையாள வேண்டும். ஆனால் இவர்கள், அந்த முறையில் எதையும் செய்யாமல் குப்பையின் மீது மண்ணைப் போட்டு, மீண்டும் குப்பையைப் போட்டு நிலத்தை மேடாக்கும் (Land Capping) வேலையைச் செய்கின்றனர்,” என்கிறார் ஈஸ்வரன்.
அதோடு, “இதில் புதையும் குப்பை மீத்தேன் வாயுவை உருவாக்கி, காற்றை மாசுபடுத்துவதுடன், பெரும் ஆபத்தாக நிலத்தடி நீர் மட்டத்தையும் பாழாக்குகிறது” என்கிறார்
வெள்ளலுார் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள பகுதிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது.
வளாகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் மலை மலையாகக் குவிந்துள்ளன. ஒரு பகுதியில் கழிவுநீர்ப் பண்ணை செயல்படுகிறது. குப்பை தரம்பிரிப்புப் பணி பெயரளவில் நடந்து வருகிறது. இறைச்சிக் கழிவை அழிக்கும் இன்சினரேட்டரும் மற்றொரு பகுதியில் செயல்படுகிறது. ஒட்டுமொத்தமாக அந்த வளாகத்திற்குள் வீசும் துர்நாற்றம், சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது.
அங்கு மட்டுமின்றி, வெள்ளலுார், போத்தனுார், கோணவாய்க்கால்பாளையம், சுந்தராபுரம், குறிச்சி ஆகிய பகுதிகளைத் தாண்டி, மதுக்கரை வரையிலுமாக 10 கி.மீ. சுற்றளவுக்கு, இந்த துர்நாற்றம் வீசியது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் பலரிடமும் பேசியபோது, மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் இந்த துர்நாற்றம் மிக அதிகமாகி விடுவதாகக் கூறினர்.
சில நாட்களில், கோவையின் கிழக்குப் பகுதியான சிங்காநல்லுார் வரையிலும் துர்நாற்றம் வீசுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
தண்ணீரில் துர்நாற்றம்
வெள்ளலுார் குப்பைக் கிடங்கு காரணமாக, அதைச் சுற்றிலும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்யும் வகையில், மகாலிங்கபுரம், ஸ்ரீராம் நகரிலுள்ள மக்கள் பலரும் தங்கள் வீடுகளின் போர்வெல் தண்ணீரை காண்பித்தனர்.
அந்தத் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருந்ததுடன், அந்தத் தண்ணீரில் ஒருவித துர்நாற்றம் இருப்பதையும் அறிய முடிந்தது.
போத்தனுாரில் பெட்ரோல் பங்க் ஊழியராகவுள்ள அப்பாஸ், ”எனக்குப் பூர்விகம் பாலக்காடு. இங்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வெள்ளலுார் குப்பைக்கிடங்கு நாற்றம் தாங்காமலே வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
வெள்ளலுார் குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்த குறிச்சி – வெள்ளலுார் மாசுத் தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், ”2018- ஆம் ஆண்டு கொடுத்த உறுதியின்படி, 15.5 லட்சம் மெட்ரிக் டன் குப்பையையே இன்னும் முழுமையாக அழிக்கவில்லை. ஆனால் அதே 2018ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை தினமும் குப்பையைக் கொட்டியுள்ளனர். அதுவே இப்போது 10 லட்சம் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது.” என்றார்.
துர்நாற்றம், ஈக்கள் தொல்லை, நிலத்தடி நீர்மட்ட மாசுபாடு ஆகிய பாதிப்புகளைத் தாண்டி, கடந்த ஏப்ரலில் இந்த குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 4 நாட்கள் ஆனது.
அப்போது வெளியான நாளிதழ் செய்தியை வைத்து, டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தாமாக முன் வந்து மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்தது.
ஈஸ்வரன், மோகன் ஆகியோருடைய வழக்குடன் அந்த மனுவையும் சேர்த்து, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில்தான் இப்போது கோவை மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”தீ விபத்து அடிக்கடி நடக்கிறது. அதனால் ஏற்படும் புகையால் குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. வறட்டு இருமல், சுவாசக் கோளாறு எனப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில பகுதிகளில் நிலத்தடி நீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்தில், 250 இருக்க வேண்டிய டிடிஎஸ் 2500 அளவுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
தினமும் சேகரமாகும் 1200 டன் குப்பையை 5 மண்டலங்களில் பிரித்து அழித்துவிட்டால் பிரச்னையே இல்லை. வெள்ளலுார் வருவது குறைந்துவிடும், லாரிகள் வாடகை மிச்சம். இந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஆனால் மாநகராட்சி சொன்னபடி 65 குப்பை தரம் பிரிப்பு நிலையங்களில் இப்போது 18 மட்டுமே செயல்படுகின்றன. மொத்தமே 3 டன்தான் கையாளப்படுகிறது. மற்ற குப்பைகள் அனைத்தும் வெள்ளலுாரில்தான் திறந்தவெளியில் குப்பையாகக் கொட்டப்படுகின்றன” என்றார் மோகன்.
மாநகராட்சி ஆணையர் கூறுவது என்ன?
இந்த விவகாரத்தில் அடுத்து மாநகராட்சி என்ன செய்யப் போகிறது என்பது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்தால் 98 பக்கத்துக்கு செயல்திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பசுமைத் தீர்ப்பாயத்தில் இது சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால்தான் இப்போது அபராத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த செயல்திட்ட அறிக்கையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களில் குப்பை அளவு குறைக்கப்படும் என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 654 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலுார் பேருந்து நிலையத்துக்கு தரப்பட்ட 54.15 ஏக்கர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வீடு கட்டத் தரப்பட்ட 50.25 ஏக்கர், அதிவிரைவுப் படை குடியிருப்புக்கு வழங்கிய 57.60 ஏக்கர் போக குப்பைக் கிடங்கு 492 ஏக்கரில்தான் செயல்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,உரம் தயாரிப்பு மையம், இறைச்சிக் கழிவு கையாளும் மையம் போக, 8 ஏக்கரில் மட்டும்தான் புதிதாக குப்பை கொட்டப்படுவதாகவும், 212 ஏக்கர் காலியிடமாக இருப்பதாகவும் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. பயோ மைனிங் முதல் கட்டம் மூலமாக 50 ஏக்கரை மீட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கள ஆய்வில் கண்டவற்றையும், மனுதாரர்கள் மற்றும் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்தும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, அவற்றில் பல புகார்களை அவர் மறுத்தார்.
”எல்லோரும் கிட்டதட்ட 600 ஏக்கரிலும் குப்பை கொட்டுவதாக நினைக்கிறார்கள். மொத்தத்தில் 150 ஏக்கர் பரப்பளவில்தான் குப்பை கொட்டப்படுகிறது. இதுபற்றி பசுமைத் தீர்ப்பாய நீதிபதியிடமும் விரிவாக விளக்கிவிட்டோம். 98 பக்க செயல்திட்ட அறிக்கையை வழக்கறிஞர் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டார். அத்துடன், கடந்த 3 மாதங்களில் எடுத்துள்ள நடவடிக்கையையும் சேர்த்து இன்னும் 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்றார் அவர்.
திடக்கழிவு மேலாண்மைக்காக 200 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஆணையர் சிவகுரு பிரபாகரன், பயோ மைனிங் இரண்டாவது கட்டம் மற்றும் பயோ சிஎன்ஜி டெண்டர் விரைவில் திறக்கப்பட்டு, பணிகள் துவக்கப்படும் என்று தெரிவித்தார்.
பயோ மைனிங் இரண்டாவது கட்டம் முடியும்போது மேலும் 9 லட்சம் டன் குப்பையைக் காலி செய்து, 85 ஏக்கர் நிலத்தை மீட்போம் என்றார்.
”பல டன் குப்பை உரம் தயாரிப்புக்குப் போகிறது. எம்.சி.சி (Micro Composting Centre) மற்றும் எம்.ஆர்.எஃப் (Material Recovery Facility Centre) மூலமாக பல டன் குப்பை கையாளப்படுகிறது. இப்போது தினமும் 100–150 டன் மட்டுமே குப்பையாக இங்கு கொட்டப்படுகிறது. இன்னும் இரு ஆண்டுகளில் இந்தப் பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காணப்படும்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்.
ஆனால், ”ஏற்கெனவே அழிப்பதாகச் சொன்ன 15.5 லட்சம் டன் குப்பையில் 7 லட்சம் டன் பயோ மைனிங் முதல் கட்டத்தில் அழித்துள்ளனர். பயோ மைனிங் இரண்டாவது கட்ட திட்டத்தில், 2024 ஏப்ரலில் இருந்து 2025 பிப்ரவரிக்குள் 7.43 லட்சம் டன் குப்பையை அழித்து விடுவோம் என்று மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் பயோ மைனிங் இரண்டாவது கட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால்தான் மாநகராட்சியின் எந்த வாக்குறுதியையும் நம்ப முடியவில்லை” என்றார் ஈஸ்வரன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU