SOURCE :- BBC NEWS

தோனியின் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு இல்லை

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியூட்டும் வகையிலும், ரசிகர்களுக்கு மிகுந்த சோகமாகவும் அமைந்துள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்து போட்டித் தொடரிலிருந்து முதலில் வெளியேறும் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் 5 போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் அனைத்திலும் வென்றால்கூட 10 புள்ளிகள், ஏற்கெனவே 4 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும்.

இந்த புள்ளிகளால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் உறுதியாகச் செல்ல முடியாது என்பதால் தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

இன்னும் 5 ஆட்டங்களை வீரர்களின் சரியான கலவையை கண்டறிய வேண்டுமானால் பயன்படுத்திக்கொண்டு அடுத்த சீசனுக்கு தயாராகிக்கொள்ளலாமேத் தவிர ப்ளே ஆஃப் சுற்றுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன.

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தபின் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் அடைக்கப்படவில்லை. அடுத்துவரக்கூடிய 5 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஒருவேளை பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கும். ஆனால் ஒரு தோல்வி அடைந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும்.

சிஎஸ்கே வெளியேறியது – சொதப்பும் அணி பற்றி தோனியின் கடும் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேயின் வரலாற்று தோல்விகள்

சன்ரைசர்ஸ் அணி சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதற்கு முன் 5 முறை மோதியும் ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை.

முதல்முறையாக சிஎஸ்கே அணியை அதன் கோட்டையான சென்னையில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 5-1 என்ற கணக்கில் சன்ரைசர்ஸ் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

அதேசமயம், சிஎஸ்கே அணி இந்த சீசனில் மோசமான தோல்விகளைப் பதிவு செய்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக 17ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் சிஎஸ்கே தோற்றது.

15 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் தோல்வியே கண்டிராத சிஎஸ்கே முதல்முறையாகத் தோற்றுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது.

மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

ஹர்சல், மென்டிஸ் ஆட்டநாயகர்கள்

சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியவர் பந்துவீச்சாளர் ஹர்சல் படேல்.

சிஎஸ்கே அணியின் முக்கியமான பேட்டர்களை முக்கியமான தருணத்தில் ஆட்டமிழக்கச்செய்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஹர்சல் ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார், இதில் 14 டாட் பந்துகளும் அடங்கும், அதாவது 2 ஓவர்களில் ரன் ஏதும் ஹர்சல் கொடுக்கவில்லை.

மற்றொரு ஆட்டநாயகனாக இருப்பவர் கமிந்து மென்டிஸ். அதிகாரபூர்வ ஆட்டநாயகனாக இல்லை என்றாலும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மென்டிஸ்.

டிவால்ட் பிரிவிஸை ஆட்டமிழக்கச் செய்ய லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை அந்தரத்தில் 11 மைக்ரோ விநாடிகள் பறந்து சென்று கமிந்து பிடித்த கேட்ச் யாரும் எதிர்பாராதது. சேப்பாக்க ரசிகர்களே வியந்து பாராட்டிய கேட்சாக மாறியது. சிஎஸ்கே ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில் இந்த விக்கெட்டால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையே அதன்பின் உருக்குலைந்தது.

இரு கரங்களாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மென்டிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார்

பட மூலாதாரம், Getty Images

மாற்றத்திலும் மாறாத சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் நேற்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன. பேபி ஏபிடி என்று அழைக்கப்படும் டேவால்ட் ப்ரீவிஸ், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கினர்.

ரவீந்திரா, அஸ்வின், திரிபாதி ஆகியோர் இல்லை. சாம் கரன், தீபக் ஹூடா மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வளவு மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை.

சேப்பாக்கம் போன்ற வறண்ட மைதானத்தில் 154 ரன்களை அடித்துக்கொண்டு அனுபவமே இல்லாத பந்துவீச்சாளர்களை வைத்து, டிஃபெண்ட் செய்வது என்பது மணல் கயிற்றால் மலையை இழப்பதுபோலாகும். முன்னொரு காலத்தில் 130 ரன்களை அடித்துக்கொண்டு சிஎஸ்கே டிஃபெண்ட் செய்திருந்தது. ஆனால் அப்போது இருந்த வீரர்கள், பந்துவீச்சாளர்கள் வேறு இப்போதுள்ள நிலைமை படுமோசமாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் பிரிவிஸ் சேர்த்த 42 ரன்கள்தான் அதிகபட்சம், அடுத்தார்போல் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சிஎஸ்கே அணி 13வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, ஸ்கோர் எப்படியும் 6 ஓவர்களில் 60 ரன்கள் என 180 ரன்களை எட்டிவிடும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் சிஎஸ்கே இழந்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சிஎஸ்கே பறிகொடுத்தது.

சிஎஸ்கே வெளியேறியது – சொதப்பும் அணி பற்றி தோனியின் கடும் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images

கோல்டன் விக்கெட்

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஷீத் ஷமி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மாத்ரே அதிரடியாக பேட் செய்து 6 பவுண்டரிகளை அடித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு உயர்த்தினார்.

சாம் கரனை ஒன்டவுன் இறக்கியும் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை 9 ரன்னில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சீசனில் 6வது முறையாக பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்து மோசமாக பேட் செய்தது சிஎஸ்கே அணி.

மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பட மூலாதாரம், Getty Images

பிரிவிஸ் ஆறுதல்

ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பிரிவிஸ் 3 சிக்ஸர்களை கமிந்து ஓவரில் விளாசினார். 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தநிலையில் ஹர்சல் படேலின் ஸ்லோ பாலில் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அங்கு ஃபீல்டிங் நின்றிருந்த கமிந்து மென்டிஸ் பறந்து சென்று இரு கரங்களாலும் பந்தை தாவிப்பிடித்தார்.

இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்ச் வரிசையில் நிச்சயமாக கமிந்து கேட்ச் இடம் பெறும்.

பிரிவீஸ் ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே பேட்டர்களிடமிருந்துபெரிதாக ரன்கள் ஏதும் வரவில்லை. ஷிவம் துபே(12), ஹூடா(22) தோனி(6), கம்போஜ்(2) ஜடேஜா(21) என விக்கெட்டுகளை இழந்தனர்.


ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட ப்ரிவீஸ 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்

பட மூலாதாரம், Getty Images

2வது பந்தில் விக்கெட்

சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் முகமது ஷமி கோல்டன் விக்கெட் எடுத்தநிலையில் அதற்கு பதிலடியாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

டிராவிஸ் ஹெட் இந்த சீசனில் சில போட்டிகளைத் தவிர்த்து தடுமாறி வருகிறார். அனைத்து பந்துகளையும் பெரிய ஷாட்களாக மாற்றும் அவரின் பாணி, பல நேரங்களில் தோல்வியில் முடிகிறது. இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் பல பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அது மீட் ஆகவில்லை.

ஹெட் 19 ரன்கள் சேர்த்தநிலையில் கம்போஜ் பந்துவீச்சில் போல்டாகினார். அதிரடி பேட்டர் கிளாசன் வந்தவேகத்தில் 7 ரன்னில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தபோதிலும் இஷான் கிஷன் நிதானமாக பேட் செய்து 44 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் முதல் போட்டியில் சதம் அடித்தபின் இந்த ஆட்டத்தில்தான் நிதானமாக பேட் செய்துள்ளார். அனிகேத் வர்மா 19 ரன்களில் நூர் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். 106 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் அணி. ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்ற கேள்வி இருந்தது.

6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் ரெட்டி, கமிந்து இருவரும் சிஎஸ்கே போராட்டத்தை அடக்கும் வகையில் பேட் செய்தனர்.

இருவரையும் பிரிக்க கடைசி நேரத்தில் பல பந்துவீச்சாளர்களை தோனி மாற்றியும் முடியவில்லை.

இந்த இருவரில் ஒருவர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் ஆட்டம் மாறியிருக்கும், ஆனால், கடைசி வரை களத்தில் இருந்து இருவரும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

6வது விக்கெட்டுக்கு இருவரும் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதிஷ் ரெட்டி 19 ரன்களிலும், கமிந்து 32 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images

பல் இல்லாத சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு நேற்று பெரிதாக சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. கம்போஜ், சாம்கரன், பதிராணா, கலீல் அகமது என 4 வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய முடியவில்லை. அன்சுல் கம்போஜ், கலீல் அகமது ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தநிலையில் தோனி அவர்களுக்கு ஓவர்கள் வழங்காமல் சாம்கரனுக்கு வழங்கியது பெரிய தவறாகும்.

சாம்கரன் வீசிய 2 ஓவர்களில் 25 ரன்கள் சென்றது. அது மட்டுமல்லாமல் பதீராணா, நூர்அகமது இருவரம் நோபால்களையும், வைடுகளையும் வாரி வழங்கினார். சிஎஸ்கே நேற்று மட்டும் 14 உதிரிகளை வழங்கியது. இதைக் கட்டுப்படுத்தி இருந்தாலே 10 ரன்களை சேமித்து சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு ரன் நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான் என்றார் தோனி

பட மூலாதாரம், Getty Images

காரணம் என்ன?

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில், “நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். முதல் இன்னிங்ஸில் விக்கெட் அருமையாக இருந்தது அதைப் பயன்படுத்தி பெரிய ஸ்கோராக மாற்ற தவறினோம். 154 ரன்கள் டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இந்த மைதானத்தில் இல்லை. அதிகமாக டர்ன் ஆகவில்லை, வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் ஓரளவு ஒத்துழைத்து, சராசரி மைதானம் போல் இல்லை. 2வது இன்னிங்ஸில் பந்துவீச்சுக்கு எங்களுக்கு ஆடுகளம் சற்று உதவியது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசினர். இன்னும் 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருந்தால் டிஃபெண்ட் செய்திருப்போம்.

நடுவரிசையில் பிரிவிஸ் சிறப்பாக பேட் செய்தார். நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது அதில் எங்கள் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்த வேண்டும். இந்த ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதும், ரன் சேர்ப்பதும் முக்கியமானது. இதுபோன்ற தொடரில் ஏதேனும் ஒரு சில பகுதிகளில் ஓட்டைகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான். இப்படியே கொண்டு செல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா vs பஞ்சாப் கிங்ஸ்

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – ஏப்ரல் 30

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

நாள் – ஏப்ரல் 27

இடம் – மும்பை

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் – ஏப்ரல் 27

இடம் – டெல்லி

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்)

விராட் கோலி (ஆர்சிபி) – 392 ரன்கள் (9 போட்டிகள்)

நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (9 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) – 16 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) – 16 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) – 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

SOURCE : THE HINDU