SOURCE :- BBC NEWS
33 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (12/01/2024) வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டதாக இந்து தமிழ் நாளிதழ் கூறியுள்ளது.
நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், நாளை தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 4-ம் தேதி கோயிலில் கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘கனகசபையில் வழிபட பக்தர்களை அனுமதித்தால் சிரமம் ஏற்படும்’ என்று கோயில் தீட்சிதர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். மேலும், கோயிலுக்குப் பாதுகாப்பு தருமாறும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா என்பவர் எதிர்ப்புத் தெரிவித்தார். “ஆருத்ரா தரிசன விழாவைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் நேற்று கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
ஏற்கெனவே சிலமுறை கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதில் சர்ச்சை நிலவியதும், பின்னர் காவல்துறை அனுமதியுடன் பக்தர்கள் கனகசபையில் தரிசனம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு
மத்திய அரசு போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருப்பதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எனப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெற முடியும். ஆனால், இத்திட்டம் குறித்து விரிவான செயல்முறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. விரைவில் வெளியிடும் என நம்புகிறோம். மத்திய அரசுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கை பெற்று முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“கல்விச் செலவுக்கு பணம் தர பெற்றோரை கட்டாயப்படுத்தலாம்”
கல்விச் செலவுக்கு பெற்றோரிடம் இருந்து கட்டாயப்படுத்தி மகள் பணம் வாங்கலாம், அதற்கான சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவர் தனது மனைவிக்கு 73 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்க முன்வந்திருந்தார். அதில், 43 லட்ச ரூபாயை அவரது மகளின் படிப்புச் செலவுக்கானது. அந்த பணத்தை வேண்டாம் என்று மகள் கூற, பணத்தை திரும்பப் பெற தந்தை மறுத்துவிட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “மகள் என்ற முறையில் அந்த பெண் தனது கல்விச் செலவுக்கு பெற்றோரிடம் இருநது பணம் பெற சட்டப்பூர்வ உரிமையும், இழக்க முடியாத உரிமையும் உள்ளது. தனது கல்வியைத் தொடர பெற்றோரிடம் இருந்து போதிய நிதியை தருமாறு மகள் கட்டாயப்படுத்த முடியும். இந்த வழக்கில், தந்தை அளித்த பணத்தைப் பெற மகளுக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்தது.
இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும் – ஐஎம்எஃப்
நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும் எனறு ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலீனா ஜார்ஜியேவா கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதுகுறித்த விவரம் எதையும் அவர் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமெரிக்காவைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மேம்பாட்டை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக பார்க்கப்படும் சீனா பணவீக்கத்திற்கு எதிரான பாதிப்பை சந்தித்து வருகிறது. உலகப் பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடைய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
கம்பீர், ரோகித்துடன் பிசிசிஐ நிர்வாகிகள் சந்திப்பு
ஆஸ்திரேலியாவில் படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அணியின் பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரை பிசிசிஐ நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
மும்பையில் நடந்த இந்த சந்திப்பில், பிசிசிஐ இணைச் செயலாளர் தேவாஜித் சைக்கியா (இன்று செயலாளராக பொறுப்பேற்கிறார்), தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் உள்ளிட்டோர் இருந்தனர். தற்போது ஐசிசி தலைவராக உள்ள முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் உடனிருந்தார்.
கம்பீர் மற்றும் அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள பிற உதவியாளர்களின் செயல்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரோகித்தும், கோலியும் இடம் பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, வங்கதேசத்தை வென்ற இந்திய அணி அதன் பின்னர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
SOURCE : THE HINDU