SOURCE :- INDIAN EXPRESS
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மண்ணின் வீரம் சார்ந்த பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 2025க்கான உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடந்தது.
பொங்கல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாட்டுப்பொங்கலையொட்டி இன்று பாலமேடு மஞ்சமலையில் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 800க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கூறிய கொம்பு உடைய காளைகளுக்கு பிளாஸ்டிக் குப்பிகள் போடுதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடிந்த பின்னர் அமைச்சர் மூர்த்தி ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
முதலில் கிராமத்தின் மரியாதை காளைகளான 7 கரை மாடுகளும், அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மற்ற காளைகளும் வாடிவாசல் வழியாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை அவற்றின் திமிலைப் பிடித்து வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
அடுத்தடுத்து நடந்த பல சுற்றுகளில் பங்கேற்ற சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் ஒரு நிமிடத்துக்கும் மேல் நின்று களமாடின. பாலமேடு சின்னக்கருப்பு, சத்திரப்பட்டி விஜயா தங்கபாண்டி, தேனி கோட்டூர் அமரன், வெளிச்சநத்தம் ஜோசப் ஆகியோரின் காளைகள் களத்தில் நின்று விளையாடின.
5-வது சுற்றில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் ஜல்லிக்கட்டுக் காளை வீரர்களை நெருங்கவிடாமல் சுற்றிவந்து வீரர்களை மிரட்டியது.
வீர மங்கைகளான மதுரை கருவனூர் பவானி, பாலமேடு ஜோதி, வெளிச்சநத்தம் சத்யா ஆகியோரது காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் ஓடின. அதேபோல திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குணா என்பவரது காளை, ஒரு நிமிடம் வரை வாடிவாசலில் நின்று வீரர்களை மிரட்டியது.
7 ஆவது சுற்றில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் களமிறக்கப்பட்ட திருச்சி மணியின் காளை, பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றதால், அதன் உரிமையாளரே பரிசை பெற்றுச் சென்றார். இறுதிச்சுற்றில் சண்டியர் என்ற காளை களமிறங்குவதாக அறிவித்ததால், வீரர்கள் தடுப்புகள் மீது ஏறி தற்காத்துக் கொண்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5.45 மணிக்கு முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடந்து முடிந்தது. இதில் மாடுபிடி வீரர்கள் 24 பேரும் மாட்டின் உரிமையாளர்கள் 11 பேரும் ஒரு சிறுமி உட்பட பார்வையாளர்கள் 8 பேர் என மொத்தம் 43 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடந்து முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகள் பிடித்து முதல் பரிசான காரை வென்றார். மஞ்சம்பட்டி துளசிராம் 12 காளைகளை பிடித்து இரண்டாம் பரிசான மோட்டர் பைக்கையும் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகள் அடக்கி மூன்றாம் பரிசான எலக்ட்ரிக் பைக் வென்றார்.
இதேபோல சிறந்த காளைக்கான முதல் பரிசு சத்திரப்பட்டி விஜய தங்கப்பாண்டிக்கு டிராக்டர், இரண்டாம் பரிசு சின்னப்பட்டி கார்த்திக்கு கன்றுடன் கறவை மாடு மற்றும் மூன்றாம் பரிசு குருவித்துறை பவித்ரன் என்பவருக்கு விவசாய ரோட்டேட்டர் கருவி பரிசாகவும் வழங்கப்பட்டது.
இது தவிர வெற்றி பெற்ற வீரர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, சைக்கிள், தங்கம், அண்டா, பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
முன்னதாக, போட்டி தொடங்கியபோது, பார்வையாளர் மேடையில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போஸ்டர் ஒட்டி சமூக ஆரவலர்கள் சிலர் ‘Save அரிட்டாப்பட்டி’ என்று குரல் எழுப்பினர். ஸ்டேடியத்தில் இருந்து பார்ப்பதற்கு அதிக பணம் வசூலிப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.
ஜல்லிக்கட்டுத் திருவிழாவைக் காண பட்டு துண்டு அணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதல் உள்ளூர் வாசிகள் என ஏராளமானோர் பார்வையாளர் மாடங்களில் இருந்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.
இப்படியாக தமிழர் திருநாளின் இரண்டாம் நாளான இன்று ஜனவரி 15 பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. நாளை ஜனவரி 16 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி பார்ப்போம்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS