SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார். இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறன்று பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போப் பிரான்ஸிஸ் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஏனென்றால், பைலேட்டரல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு 38 நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றிருந்தார். இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கவேண்டும், ஆக்சிஜன் குழாய் மூலம் சுவாசிக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை போப் பிரான்சிஸ் கடைபிடிக்கவில்லை.
வயது மூப்பு மற்றும் நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், வாடிகனில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பால்கனியில் தோன்றி, ஈஸ்டர் கொண்டாட கூடியிருந்த ஏறக்குறைய 35,000 மக்களை ஆசீர்வதித்த 24 மணிநேரத்தில் அவரது மரணச் செய்தி வெளியானது.
இறுதி ஆசீர்வாதம்

பட மூலாதாரம், Getty Images
ஈஸ்டர் நாளன்று அவர் மக்களிடையே தோன்றியபோது, கீழே இருந்த மக்கள் கூட்டம் ஆரவரித்தது. “அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்களுக்கு இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்” என்ற வாழ்த்தே அவர் பொதுமக்களிடையே பேசிய இறுதி வார்த்தைகளாக இருந்தன.
உடல்நிலை சீராக இல்லாதபோதிலும், போப் பிரான்சிஸ் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். தன்னை சந்திக்க வந்த பார்வையாளர்களை வரவேற்று உரையாடினார், ஆசி வழங்கினார்.
ஈஸ்டர் திருப்பலிக்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு சென்றிருந்த மௌரோ என்பவர், அதற்கு அடுத்த நாளே போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தது வருத்தமாக இருப்பதாக வருந்துகிறார்.
போப் பிரான்ஸிசை பார்க்கும்போது “பொதுவாக எல்லோரும் ‘போப் வாழ்க!’ என்று ஒரே நேரத்தில் சொல்வது, மிகப்பெரிய கூச்சலாக இருக்கும்… ஆனால், இந்த முறை அந்த கூச்சல், வழக்கத்தை விட குறைவாக இருந்தது, அவரது துன்பத்தை மக்கள் உணர்ந்திருக்கலாம்…”
போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருக்கும் ஆல்பர்டோ என்பவர், “ஈஸ்டர் நாளன்று அவர் எங்களை ஆசீர்வதித்தார், ஆனால் அவரது குரல் மிகவும் சோர்ந்திருந்தது. அவர் எங்களிடம் இறுதி விடை பெற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன்” என கூறுகிறார்.
மருத்துவர்களின் பரிந்துரைகளை புறக்கணித்த போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Getty Images
ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் பிரான்சிஸுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நலப் பிரச்சினைகள் விரைவில் தீராது என்றும், எனவே அவர் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், ஈஸ்டர் திருநாளுக்கு வாடிகனுக்கு திரும்ப விரும்புவதாக போப் கூறிவிட்டார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்துமஸை விட ஈஸ்டர் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
போப்பாண்டவராக செயல்பட்ட தனது பதவிக்காலத்தில் மக்களைச் சந்திப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்ட சுறுசுறுப்பான போப் மருத்துவர்களின் ஓய்வு தொடர்பான பரிந்துரைகளை கடைப்பிடிக்கவேயில்லை.
மார்ச் 23 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்துவிட்டே, காசா சாண்டா மார்ட்டா விருந்தினர் மாளிகையில் உள்ள தனது குடியிருப்புக்குத் திரும்பினார்.
போப் பிரான்சிஸ்க்கு தேவையானது ஆக்ஸிஜனே என்றும், மருத்துவமனையில் இருப்பதைவிட அவர் தனது இல்லத்தில் இருந்தால் அவர் விரைவில் குணமடையலாம் என அவரது மருத்துவக் குழு கூறியது.
ஆனால், ஈஸ்டர் திருநாளுக்கு மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், போப் பிரான்சிஸின் அன்றாடப் பணிகள் அதிகரித்தன. காசா சான் மார்ட்டாவில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவைச் சந்தித்தார். அதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 13 அன்று குருத்தோலை ஞாயிறன்று வாடிகன் பால்கனியில் தோன்றி மக்களை ஆசிர்வதித்தார். மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறி, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 20,000 பேர் கொண்ட கூட்டத்துடன் கலந்தார்.
சிறைச்சாலைக்குச் சென்ற போப்பாண்டவர்

பட மூலாதாரம், Vatican Media
சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள கைதிகளை சந்திக்கும் பழக்கத்தை போப் பிரான்சிஸ் வழக்கமாக கொண்டவர். போப்பாண்டவர் ஆவதற்கு முன்பு தனது சொந்த ஊரான அர்ஜென்டினாவில் செய்தது போல ரோமில் உள்ள ரெஜினா கோலி சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுடன் அரை மணி நேரம் செலவிட்டார். சக்கர நாற்காலியில் போப்பாண்டவர் வலம்வந்தபோது, சிறைச்சாலை ஊழியர்கள் மற்றும் காவலர்கள் அவரை கைதட்டி வரவேற்றனர்.
இயேசு இறப்பதற்கு முந்தைய இரவு தனது சீடர்களின் கால்களை அவர் சுத்தம் செய்ததாகக் கூறப்படுவதைப் பிரதிபலிக்கும் வகையில், கைதிகளின் கால்களை கழுவுவதை போப் பிரான்சிஸ் முந்தைய ஆண்டுகளில் கடைபிடித்தார்.
“இந்த ஆண்டு என்னால் அதைச் செய்ய முடியவில்லை, ஆனால் உங்கள் அருகில் இருக்க விரும்புகிறேன்,” என்று தன்னை தரிசிக்க வந்த கைதிகளிடம் போப் பலவீனமான குரலில் கூறினார். அவர் சிறையைச் சுற்றிப் பார்க்கும்போது அனைவரும் அவரை உற்சாகப்படுத்தினார்.
“நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். வெளியில் இருப்பவர்கள் இவ்வளவு நெருக்கமாக அவரைப் பார்க்க முடியாது, நாங்கள் பார்க்கிறோம்,” என்று கைதிகளில் ஒருவர் இத்தாலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கைதிகளை சந்தித்துவிட்டு சிறையிலிருந்து போப் பிரான்சிஸ் வெளியேறும்போது, இந்த ஆண்டு ஈஸ்டரை எப்படி கொண்டாடுவீர்கள் என்று கேள்வியெழுப்பிய பத்திரிகையாளருக்கு பதிலளித்த அவர், “என்னால் முடிந்த வழியில்!” என்று சொன்னார்.
ஈஸ்டர் ஞாயிறன்று, அவர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார்.
போப் பிரான்ஸிசின் இறுதி ஈஸ்டர்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸை ஈஸ்டர் நாளன்று சந்தித்துப் பேசிய போப் பிரான்சிஸ், அதன்பிறகு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூட்டத்தினரின் முன் தோன்றினார்.
ஆரவரித்த கூட்டத்திற்கு தனது இறுதி ஆசீர்வாதத்தை லத்தீன் மொழியில் வழங்கினார். “நகரத்திற்கும் உலகிற்கும்” என்ற பொருள் கொண்ட அந்த உரையை போப்பாண்டர் உடன் அமர்ந்திருக்க, அவர் சார்பில், பேராயர் டியாகோ ரவெல்லி வாசித்தார்.
அதன்பிறகு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்விதமாக போப் பிரான்சிஸ், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறங்கி மக்களிடையே உலா வந்தார். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வருவதற்கு போப்பாண்டவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் பிரத்யேக சிறிய வெள்ளை மெர்சிடிஸ் பென்ஸ் காரில் அமர்ந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஆசி கூறியவாறு பயணித்தார்.
வரிசையாக நின்றிருந்த மக்களை ஆசீர்வதிக்க அவர் தனது கையை உயர்த்திய போப்பாண்டவரின் அருகில் சில குழந்தைகள் கொண்டு வரப்பட்டன. உலகத்தில் அவர் உலா வந்த இறுதி சந்தர்ப்பம் அதுதான்.
இதற்குப் பிறகு போப் பிரான்சிஸ் திங்களன்று அதிகாலையில் தான் குடியிருந்த காசா சாண்டா மார்ட்டாவில் உயிரிழந்ததாக வாடிகன் கூறியது. பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக மரணம் நேர்ந்துள்ளது.
கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் காசா சாண்டா மார்ட்டா, நூற்றுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட எளிமையான இல்லமாகும். இந்த இல்லம், யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். போப்பாண்டவர்களுக்கு வசதியான ஆடம்பரமான குடியிருப்பு ஒதுக்கப்படுவது வழக்கம்.
ஆனால், போப் பிரான்சிஸ் போப்பாண்டவராக பதவியேற்றதுமே, “மக்கள் மத்தியில் வாழ” வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாகக் கூறி எளிமையான காசா சாண்டா அறையில் குடியேறினார்.
“நான் தனியாக வாழ்ந்தால், தனிமையில் இருக்கலாம்… ஆனால் அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை,” என்று அவர் அப்போது கூறினார்.
எதிர்வரும் நாட்களில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் கார்டினல்கள் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்காக காசா சாண்டா மார்ட்டாவில் தங்குவார்கள்.
ஈஸ்டருக்கான போப்பின் ஆசீர்வாதத்தை ஒளிபரப்பிய பெரிய திரைகளில் இப்போது பிரான்சிஸ் புன்னகைக்கும் முகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அவர் இறந்த 12 மணி நேரத்தில் அவருக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பொதுமக்களுடன் கடைசி ஈஸ்டரைக் கொண்டாடியதற்காக உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் போப் பிரான்சிஸ்க்கு என்றென்றும் நன்றி தெரிவிப்பார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU