SOURCE :- BBC NEWS

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மைல்ஸ் பர்க்
  • பதவி,
  • 25 மே 2025, 02:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்

சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார். 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது.

1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

ஒலெக் கோர்டிவ்ஸ்கி, அப்படிப்பட்ட ஒரு டபுள் ஏஜெண்ட் (ஒரு நாட்டின் உளவுத்துறையில் இருந்துகொண்டு வேறொரு நாட்டிற்கு வேலை பார்ப்பவர்கள்). லண்டனில் கேஜிபி நிலைய தலைவராக இருந்து கொண்டு பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ6-ற்கு பல வருடங்களாக ரகசியமாக வேலை பார்த்து வந்தார். ஆனால், ஒரு நாள் மாஸ்கோவில் மருந்தளிக்கப்பட்டு, ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு கிட்டத்தட்ட கொலை செய்யப்படும் நிலையில் இருந்தார். எம்.ஐ6 அவரை காரின் பின்பகுதியில் வைத்து சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே அழைத்து வந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார்.

அதன்பின்னர் தன்னைக் காட்டிக் கொடுத்தது யார் எனக் கண்டறிய கோர்டிவ்ஸ்கி முயற்சித்தார். “நான் ஒன்பது வருடங்களாக என்னைக் காட்டிக் கொடுத்தது யார் என கணித்து வந்தேன். ஆனால் எனக்கு பதில் கிடைக்கவில்லை” என 1994-ஆம் ஆண்டு 28 பிப்ரவரி-ஆம் தேதி பிபிசியின் டாம் மேன்கோல்ட்டிடம் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதற்கான பதில் இரண்டு மாதங்களில் கழித்து கோர்டிவ்ஸ்கிக்கு கிடைத்தது.

“சிஐஏ மற்றும் இதர உளவு அமைப்புகளில் எனக்குத் தெரிந்த அனைத்து உளவாளிகளையும் காட்டிக் கொடுத்தேன்” என அமெரிக்க நீதிமன்றத்தில் சிஐஏ அதிகாரி ஆல்ட்ரிச் அமெஸ் ஒப்புக்கொண்டபோது கோர்டிவ்ஸ்கிக்கு தெரியவந்தது.

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம், Getty Images

1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மேற்கு நாடுகளுக்கு உளவு பார்த்த 30-க்கும் மேற்பட்ட உளவாளிகளைக் காட்டிக் கொடுத்து 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆபரேஷன்களை சமரசம் செய்துவிட்டதாக அமெஸ் ஒப்புக்கொண்டார். கேஜிபியால் கொலோகொல் என அறியப்பட்ட அமெஸின் துரோகம், சோவியத் ராணுவ உளவுத்துறையின் மூத்த அதிகாரியும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குலக நாடுகளுக்கு தகவல்களை வழங்கி வந்தவருமான ஜெனரல் டிமிட்ரி பாலியாகோவ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிஐஏ உளவாளிகளின் இறப்புக்கு காரணமானது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய கேஜிபியின் உளவாளியான அமெஸ் தண்டிக்கப்பட்டு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

1960களில் பிரிட்டன் உளவாளியான கிம் ஃபில்பி, சோவியத் ஏஜெண்டாக வேலை பார்த்தது அம்பலமானது போது பிரிட்டன் அரசு அதிர்ந்து போனதைப் போலவே அமெஸ் ஏற்படுத்திய பாதிப்பின் வீரியத்தால் அமெரிக்க அரசு அதிர்ந்து நின்றது” என 1994-ல் அளித்த பேட்டியில் தெரிவித்தார் மேன்கோல்ட்.

சோவியத்துக்கு எதிரான சிஐஏவின் உளவு பிரிவுக்கு தலைமை தாங்கியதால்தான் அமெஸால் இந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது. இது சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்கள் மற்றும் அதன் உளவாளிகள் அடையாளம் காண்பதற்கு உதவிய தகவல்களை தடையின்றி அணுக அனுமதித்தது. அமெஸின் பதவி இதர மேற்கத்திய உளவு அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்து கொள்ள அவரை அனுமதித்தது. இவ்வாறு தான் பிரிட்டன் உளவு அமைப்புகளான எம்.ஐ6 மற்றும் எம்.ஐ5-க்கு தகவல்களை வழங்கி வந்த கேஜிபி அதிகாரியான கோர்டிவ்ஸ்கி இவருடன் தொடர்பில் வந்தார். இந்த கூட்டங்கள் தான் “கேஜிபி உளவாளியே, கேஜிபி அதிகாரியிடம் தகவல் வழங்கும் விநோதமான சூழ்நிலையை உருவாக்கியது” என்றார் மேன்கோல்ட்.

“அமெரிக்கர்கள் விளக்கம் அளிப்பதில் மிகவும் தீவிரமாகவும் நன்றாகவும் செயல்பட்டனர்” என்கிறார் கோர்டிவ்ஸ்கி. மேலும் அவர், “நான் மிக ஆர்வமுடன் இருந்தேன். எனக்கு அமெரிக்கர்களைப் பிடித்துப் போனது. என் அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் அமெஸ் அங்கு இருந்தார் என்பதை உணர்கிறேன். என் புதிய தகவல்கள், புதிய பதில்கள் அன அனைத்தையுமே அவர் கேஜிபியிடம் கொடுத்திருப்பார்” என்றார்.

குடிப் பழக்கம் மற்றும் விவாகரத்து

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம், Alamy

அமெஸ் மிக இளம் வயதிலே உளவு உலகிற்கு அறிமுகமானார். அவரின் தந்தை சிஐஏ ஆய்வாளராக இருந்த நிலையில் கல்லூரியில் இடைநின்ற தன்னுடைய மகனுக்கு அங்கேயே வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால் பிற்காலத்தில் உளவு அமைப்பிற்கு துரோகம் இழைக்க வேண்டும் என்கிற அமெஸின் முடிவு அவரின் சித்தாந்த சறுக்கல்களை விடவும் பணத்தேவையைச் சார்ந்தே இருந்தது.

தொடக்கத்தில் உளவு அதிகாரியாக நன்றாக வேலை செய்து வந்தார் அமெஸ். அவரின் மனைவியும் சக சிஏஐ ஏஜெண்டுமான நான்சி செகெபார்த் உடன் 1960களின் இறுதியில் துருக்கியில் முதலில் பணியமர்த்தப்பட்டார். அங்கு வெளிநாட்டு உளவாளிகளை வேலைக்குச் சேர்ப்பது தான் அவரின் பணியாக இருந்தது. ஆனால் அமெஸ் களப்பணிக்கு ஏற்றவர் அல்ல என நினைத்த அவரின் மேலதிகாரிகள் அவரை சிஐஏ தலைமையிடத்திற்கு அழைத்துக் கொண்டனர். அமெரிக்கா திரும்பிய பிறகு ரஷ்ய மொழி கற்றுக்கொண்டார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான ஆபரேஷன்களைத் திட்டமிடும் பணி வழங்கப்பட்டது.

மதுபானங்களுடன் அவரது தந்தையின் போராட்டங்கள் அவரின் சிஐஏ பணியை பாதியில் நிறுத்தியது. அதே போல அமெஸின் குடிப்பழக்கம் அவரின் வளர்ச்சியை தடம்புரளச் செய்தது. 1972-ல் அவர் குடிபோதையில் மற்றொரு பெண் சிஐஏ ஊழியருடன் சமரசமான சூழ்நிலையில் இன்னொரு ஏஜெண்டால் கண்டறியப்பட்டார். வேலையிலும் கவனக் குறைவான அணுகுமுறை அவருக்கு உதவவில்லை. 1976-ல் ஒருமுறை உளவுத் தகவல்கள் அடங்கிய பெட்டியை ரயிலில் தவறவிட்டு வந்தார்.

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம், Getty Images

வேலையில் மீண்டும் சோபிக்கும் முயற்சியில் 1981-ஆம் ஆண்டு மாஸ்கோவில் இரண்டாவது வெளிநாட்டு பணியை ஏற்றுக் கொண்டார். அவரின் மனைவி நியூயார்க்கிலே இருந்தார். ஆனால் அவரின் நடத்தை மற்றும் நீடித்த அதீத குடிப்பழக்கத்தாக் ஒரு தேர்ந்த சிஐஏ அதிகாரி எனப் பெயர் பெற தவறினார். 1981-ல் மாஸ்கோவில் ஒரு விபத்தில் சிக்கினார். எந்த அளவிற்கு போதையில் இருந்தார் என்றால் காவல்துறையின் கேள்விக்கு பதிலளிக்கவோ அவருக்கு உதவ வந்த அமெரிக்கா தூதரக அதிகாரியையோ கூட அவரால் அடையாளம் காண முடியவில்லை. அதன் பிறகு, தூதரகத்தில் ஒரு கியூப அதிகாரியுடனான வாக்குவாதத்தைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய பிறகு அவரின் குடிப்பழக்கத்தை மதிப்பிட அவரின் மேலதிகாரிகள் முடிவு செய்தனர்.

அமெஸ் தொடர்ந்து திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபட்டு வந்தார், அதில் ஒன்று தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. 1982-ம் இறுதியில் அவர் சிஐஏவுக்காக வேலை பார்த்த கொலம்பியரான மரியா டெல் ரொசாரியோ காசாஸ் டுபுய் உறவில் இருந்தார். அந்த உறவு தீவிரமாகவே தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரொசாரியோவை திருமணம் செய்து அமெரிக்கா அழைத்து வர முடிவு செய்தார்.

சிஐஏவில் பெரிதாக சோபிக்காத நிலையிலும் அவருக்குத் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டன. 1983-ல் சிஐஏ தலைமையிடத்தில் சோவியத் ஆபரேஷன்களை முறியடிப்பதற்கான உளவு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது சிஐஏவின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கச் செய்தது.

நான்சியுடனான விவாகரத்து உடன்படிக்கையின்படி ஜோடியாக அவர்கள் பெற்ற கடனை அடைப்பதோடு அவ்ருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கவும் ஒப்புக் கொண்டார் அமெஸ். இத்துடன் அவரது இரண்டாவது மனைவியின் விலையுயர்ந்த ரசனைகள், ஷாப்பிங் மீதான அவரின் தீரா விருப்பம் மற்றும் கொலம்பியாவிற்கு அவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளால் அவரின் பணச் சிக்கல் கட்டுப்பாடின்றி சென்றது. தனது அதிகரித்த கடன்கள் தான் தன் வசம் இருந்த ரகசியங்களை விற்க அவரைத் தூண்டியதாக பின் நாளில் அரிசோனா செனடர் டென்னிஸ் டிகோன்சினியிடம் கூறியுள்ளார். “நான் மிகுதியான பொருளாதார நெருக்கடிகளை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அளவு கடந்து எதிர்வினையாற்றிவிட்டேன்” என அமெஸ் தெரிவித்திருந்தார்.

நாட்டிற்குச் செய்த துரோகம்

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம், Getty Images

“அது பணத்தைப் பற்றியது. அவரின் துரோகம் பணத்தைத் தாண்டி எதற்காகவும் இல்லை என யாரையும் அவர் நம்ப வைக்க முயற்சித்ததாக நான் நினைக்கவில்லை” என அவரைக் கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரியாக லெஸ்சி ஜி வைஸர் 2015-ல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரியில் தெரிவித்தார்.

1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி குடிபோதையில் அமெஸ் வாஷிங்டனில் சோவியத் தூதரகத்திற்குச் சென்றார். உள்ளே சென்றவர் அங்கே வரவேற்பில் இருந்தவரிடம் சில டபுள் ஏஜெண்ட்களின் பெயர் பட்டியலை வழங்கி தான் சிஐஏ அதிகாரி என்பதற்கான ஆவணங்களையும் காண்பித்து 50,000 டாலர் வேண்டும் என்கிற குறிப்பையும் வழங்கினார். இது தன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு கொண்டு வரும் ஒரு முறை நிகழ்வு என நம்பியதாகவும், ஆனால் விரைவில் “நான் கோட்டை கடந்துவிட்டேன், என்னால் திரும்ப முடியாது” என ஒரு செனட் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு கேஜிபிக்கு அமெஸ் பல ரகசிய தகவல்களை வழங்கி வந்தார். சோவியத்தின் விண்வெளி நிலைகளை ஒட்டுக் கேட்கும் தொடர்பு சாதனங்கள் தொடங்கி சோவியத்தின் அணு ஆயுத ஏவுகணைகளை கணக்கிடும் நவீன தொழில்நுட்பம் வரை அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி சிஐஏவில் இருந்து அவர் எடுத்துச் சென்றார். அவரின் பணி சோவியத் தூதரக அதிகாரிகள் உடனான அதிகாரப்பூர்வ கூட்டங்களை உள்ளடக்கியதால் தன்னைக் கையாள்பவர்களை எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவரால் நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது. அவர் ரகசிய ஆவணங்கள் அடங்கிய பைகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ‘டெட் ட்ராப்’ என அழைக்கப்படும் ரகசிய இடங்களில் விட்டுவிட்டு செல்வார்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

“அவர் ஒரு இடத்தில் ஆவணங்களை விட்டுச் செல்கிறார் என்றால் அங்குள்ள தபால்பெட்டியில் ஒரு தடத்தை வைத்துவிடுவார். அந்த அடையாளத்தை ரஷ்யர்கள் பார்த்தால் அந்த ட்ராப்பில் ஆவணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வார்கள்” என்றார் வைஸர். “பின்னர் ஆவணங்களை எடுத்த பிறகு ரஷ்யர்கள் அந்தத் தடயத்தை அழித்துவிடுவார்கள். இதனால் ஆவணப் பரிமாற்றம் பாதுகாப்பாக நடைபெற்றது என்பதை அவர் தெரிந்துகொள்வார்”

அமெஸ் கசியவிட்ட ரகசிய உளவுத் தகவல்களால் சோவியத் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சிஐஏ உளவாளிகளையும் கண்டறிந்து அமெரிக்காவின் ரகசிய ஆபரேஷன்களையும் கேஜிபி முறியடித்துவிடும் சாத்தியம் இருந்தது. “அமெரிக்காவுக்கு இத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்திய வேறொரு உளவாளியை நான் அறிந்திருக்கவில்லை” என்றார் வைஸர். நிறைய சிஐஏ உளவாளிகள் திடீரென காணாமல் போனது 1986-ல் சிஐஏவுக்குள்ளே உளவாளியைத் தேடும் முயற்சியைத் தூண்டிவிட்டது. ஆனால் அமெஸ் அதில் சிக்காமல் பல வருடங்கள் தப்பித்துவந்தார்.

அவரின் துரோகத்திற்கு நன்றாக சம்பாதித்து வந்தார் அமெஸ். சோவியத் ஒன்றியத்திடமிருந்து மொத்தமாக 2.5 மில்லியன் டாலர்கள் பெற்றார். தனது புதிய செல்வத்தை மறைக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வருடத்திற்கு 70,000 டாலருக்கு மேல் சம்பளம் பெறாத நிலையில் 540,000 டாலர் மதிப்புள்ள வீட்டை பணம் செலுத்தி வாங்கினார். வீட்டை மேம்படுத்த ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்து ஜாகுவார் கார் ஒன்றையும் வாங்கினார். அவரின் ஆடம்பர வாழ்க்கை முறை தான் அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, 1994-ல் வைஸர் தலைமையிலான எஃப்.பி.ஐ குழுவால் கைது செய்யப்படுவதற்கும் வித்திட்டது.

சிஐஏ, ரஷ்யா, அமெரிக்கா, கேஜிபி

பட மூலாதாரம், Getty Images

எஃப்.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட பிறகு அமெஸ் அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைத்தார். சோவியத் அதிகாரிகளுடனான சந்திப்பு மற்றும் பணம் பற்றி தெரியும் என ஒப்புக்கொண்ட அவரின் மனைவி ரொசாரியோவிற்கு குறைந்த தண்டனை கிடைக்க வேண்டும் என கோரிக்கைக்கு மாறாக அவரின் உளவு நடவடிக்கைகளின் ஆழத்தை விவரித்தார். ரொசாரியோ ஐந்து ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். டபுள் ஏஜெண்டாக அம்பலமான சிஐஏ அதிகாரியான அமெஸ் இண்டியானா மாகாணத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அவரின் தண்டனைக் காலத்தை தொடர்ந்து கழித்து வருகிறார்.

இதுநாள் வரை அமெஸ் தனது செயல்களுக்கோ இல்லை அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கோ எந்த விதமான வருத்தமும் வெளிப்படுத்தவில்லை. “அவருக்கு தன்னைப் பற்றி மிக உயரிய எண்ணம் இருந்தது” என அமெஸ் பற்றி குறிப்பிடுகிறார் வைஸர். “அவர் பிடிபட்டதற்காக வருந்துகிறார். உளவாளியாக இருந்ததற்கு வருந்தவில்லை” என்றார் வைஸர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC