SOURCE :- BBC NEWS

 முகமது பின் சல்மான், இந்தியா, நரேந்திர மோதி, சௌதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

27 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஏப்ரல் 22) இருநாள் பயணமாக சௌதி அரேபியா சென்றுள்ளார். அந்நாட்டின் ஜெட்டா நகரை சென்றடைந்த மோதிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் நரேந்திர மோதி இருவரும் இருநாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டு கவுன்சிலின் (Strategic Partnership Council) கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

சௌதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் பிரதமர் மோதி சௌதி அரேபியா சென்றுள்ளார்.

முன்னதாக சௌதி இளவரசர் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக செப்டம்பர் 2023-ல் டெல்லி வந்திருந்தார். 2014-ல் பிரதமரானதில் இருந்து நரேந்திர மோதி சௌதி அரேபியாவுக்குப் பயணிப்பது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பாக 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பயணித்துள்ளார்.

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகள் உள்ள சூழலில் பிரதமர் மோதி சௌதி அரேபியா செல்கிறார். இந்தியாவின் முஸ்லிம் தலைவர்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதால் கோபமடைந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

வக்ஃப் சட்டத்திருத்தம் இந்த மாதம் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. 1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வக்ஃப் சட்டத்தில் தற்போது மத்திய அரசின் பங்கு அதிகரித்துள்ளது. இஸ்லாமிய சட்டங்களின்படி, வக்ஃப் என்பது மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட சொத்துக்களை குறிப்பதாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்த சொத்துக்களை விற்பதற்கும் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் 9.4 லட்சம் ஏக்கர் வக்ஃப் சொத்துக்களில், 8.7 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியம் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு படைகள் மற்றும் இந்திய ரயில்வேக்குப் பிறகு அதிக நிலம் வைத்துள்ள மூன்றாவது அமைப்பு வக்ஃப் வாரியம் தான்.

புதிய சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் வக்ஃப் வாரியத்தில் பிரதிநிதித்துவம் பெறுவார்கள். ஏதாவது வக்ஃப் சொத்து, அரசு நிலம் என அடையாளம் காணப்பட்டால், அது வக்ஃப் ஆக கருதப்படாது. இதுமட்டுமல்லாமல், வக்ஃப் வாரியம், சொத்துக்களை ஆய்வு செய்யலாம் என்கிற உரிமையும் இந்த சட்டத்த்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

 முகமது பின் சல்மான், இந்தியா, நரேந்திர மோதி, சௌதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

சௌதி இளவரசருடன் வக்ஃப் பற்றியும் விவாதிக்கப்படுமா?

வக்ஃப் வாரியத்தின் நடைமுறையை பதிப்பிக்கும் அதிகாரம், வக்ஃப் கணக்குகளை பதிவு செய்யும் மற்றும் பதிப்பிக்கும் அதிகாரம் இனி மத்திய அரசிடம் இருக்கும்.

வக்ஃப்-ன் கணக்குகளை இனி சிஏஜி அல்லது வேறு அதிகாரி விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடலாம். வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய நிலம் வக்ஃபுக்குச் சொந்தமானதா, இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதே மிகப்பெரிய கவலையாக உள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மற்றும் பிளவுபடுத்துவதாகவும் உள்ளது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கிடையே, அரசு வக்ஃப் சொத்துக்களின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள விரும்புவதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு சிறப்பான ஒரு சமயத்தில் பிரதமர் மோதி சௌதிக்குச் சென்றுள்ளார்.

மெக்கா மற்றும் மெதினா புனித மசூதிகள் சௌதி அரேபியாவில் தான் உள்ளன. முகமது நபியின் பிறப்பிடம் மெக்கா. இத்தகைய ஒரு சூழலில், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு இது விசேஷமானதாகிறது.

பிரதமர் மோதியின் சௌதி அரேபியா பயணம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில் ப்ளூம்பெர்க் செய்தியாளர், சௌதி இளவரசர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையே இந்தியாவில் வக்ஃப் வாரியம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறீர்களா என கேள்வி கேட்டார்.

அதற்கு விக்ரம் மிஸ்ரி பதிலளிக்கையில், “சௌதி அரேபியா அல்லது வேறு ஏதேனும் அரசுத் துறையால் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயம் எழுப்பப்பட்டதாக நான் பார்க்கவில்லை. இருவர் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்த விஷயம் ஏன் வரும் என எனக்குத் தெரியவில்லை.” என்றார்.

இந்தியாவில் வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள் பற்றி சௌதி அரேபியா தற்போது வரை பொது வெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது உண்மை தான். எந்த நாடுகளின் உள்விவகாரங்கள் பற்றியும் கருத்து தெரிவிப்பதில் இருந்து சௌதி அரேபியா விலகியே இருந்து வருகிறது. சௌதி அரேபியா ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓ.ஐ.சி) இந்திய முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வரும் நிலையில் வக்ஃப் சட்டம் பற்றி தற்போது வரை எதுவும் தெரிவிக்கவில்லை.

 முகமது பின் சல்மான், இந்தியா, நரேந்திர மோதி, சௌதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் சர்ச்சை பற்றி இஸ்லாமிய நாடுகள் என்ன சொல்கின்றன?

பாகிஸ்தான், ஓ.ஐ.சி அமைப்பை அதன் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக இந்தியா விமர்சித்து வந்துள்ளது. காஷ்மீரில் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கும், சிஏஏ – என்ஆர்சிக்கு எதிராகவும் ஓ.ஐ.சி பலமாக குரல் எழுப்பியுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் ஓ.ஐ.சி-ஐ தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளான ஓ.ஐ.சி-ன் உறுப்பு நாடுகளிடம் இந்த விஷயத்தை எழுப்பியுள்ளதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம், இந்தியாவின் புதிய வக்ஃப் சட்டத்தை முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் மத உரிமை மீறல் என பாகிஸ்தான் கூறியிருந்தது. இத்தகைய சட்டத்தை நிறைவேற்றியிருப்பது இந்தியா பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதையும் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதையும் காட்டுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

“பாகிஸ்தானின் அறிக்கையை நாங்கள் முழுவதுமாக நிராகரிக்கிறோம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தான் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட்டிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்,” என இந்திய வெளியுறவுத் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தான் தவிர வங்கதேசத்திலும் இந்தியாவின் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி டாக்காவில் இதற்கு எதிராகப் போராடியுள்ளது. இது தவிர வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸின் பத்திரிகைத் துறை செயலாளர், இந்தியாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோதி முஸ்லிம் விரோதமாக இருப்பதாகவும் வகுப்புவாத அரசியலை ஊக்குவிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இஸ்லாமிய நாடுகள் உடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கு தடையாக வரவில்லை.

எனினும், ஜூன் 2022-ல் பாஜக தலைவர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் பற்றி தெவித்த கருத்து நிறைய சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. இஸ்லாமிய நாடுகளும் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தன. அதன் பின்னர், பாஜக நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்தது.

ஆனால், இந்திய அரசு இஸ்லாமிய நாடுகள் உடனான உறவுகளை அதிகரிப்பதற்கு , மோதியின் இந்துத்துவ சித்தாந்தத்தை சுட்டிக்காட்டி அந்நாடுகளில் எதிர்ப்பு ஏதும் எழவில்லை. இதற்கு இந்த நாடுகளில் மன்னராட்சி இருப்பதும் மக்களுக்குப் போராட உரிமை இல்லாததும் ஒரு காரணம்.

 முகமது பின் சல்மான், இந்தியா, நரேந்திர மோதி, சௌதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

இஸ்லாமிய நாடுகளும் இந்துத்துவ சித்தாந்தமும்

2022 ஆம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது ஆமதாபாத்தில் சரஸ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோதி இஸ்லாமிய நாடுகள் உடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம் என்றார். “2014 முதல் சௌதி அரேபியா, யுஏஇ, பக்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகள் உடன் நம் நட்பை வலுப்படுத்தியுள்ளோம். இந்த நாடுகளின் பாடத்திட்டத்தில் யோகா அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அபுதாபி மற்றும் பக்ரைனில் இந்துக்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன.” என்றார்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்திருந்தார். அவரை விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மோதி வரவேற்றார்.

சௌதி இளவரசர் அப்போது அந்நாட்டின் பிரதமராகக் கூட ஆகி இருக்கவில்லை.

அந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் பேசிய முகமது பின் சல்மான், “நாம் இருவரும் சகோதரர்கள். பிரதமர் மோதி என்னுடைய மூத்த சகோதரர். நாம் அவருடைய இளைய சகோதரர், நான் அவரைக் கண்டு பிரம்மிக்கிறேன். அரேபிய தீபகற்பத்துடனான இந்தியாவின் உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. வரலாறு எழுதப்படுவதற்கு முன்பாகவே நம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நம் டிஎன்ஏவில் உள்ளது.” என்று கூறியிருந்தார்.

மேலும் அவர், “கடந்த 70 ஆண்டுகளாக சௌதி அரேபியாவின் உருவாக்கத்தில் இந்திய மக்கள் நண்பர்களாகவும் கூட்டாளிகளாவும் இருந்துள்ளனர்.” என்றார்.

2016ஆம் ஆண்டில் பிரதமர் மோதி வந்தபோது அவருக்கு சௌதி அரேபியாவின் உயரிய விருதான ‘கிங் அப்துல் அஜிஸ் சாஷ்’ விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர், 2019 அக்டோபரில் பிரதமர் மோதி சௌதி சென்றார். இந்த ஆண்டு பிப்ரவரியில் சௌதி இளவரசர் இந்தியா வந்திருந்தார்.

மோதியின் இரண்டாவது பயணத்தின் போது சௌதி அரேபியா உடன் ஸ்டிராடஜிக் பார்ட்னர்ஷிப் கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சிலில் இரண்டு துணை குழுக்கள் உள்ளன. ஒன்று அரசியல், பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளுக்கானது. மற்றொன்று பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களுக்கானது. பிரதமர் மோதியின் பயணத்தின்போது இந்தக் குழுவின் கூட்டமும் நடத்தப்பட இருக்கிறது.

இந்தப் பயணம் முக்கியமானது என விவரித்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர். இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு சௌதி அரேபியா உடன் இணைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்கள் சௌதி அரேபியாவில் வேலை செய்கின்றனர். யுஏஇ-க்கு அடுத்து அதிக இந்திய தொழிலாளர்கள் வேலை செய்யும் இரண்டாவது இடம் சௌதி தான்.

இஸ்லாமிய உலகின் வலுவான குரலாக சௌதி அரேபியா உள்ளது. அதே சமயம், உலக அரசியலில் அதற்கே உரிய தனித்த முக்கியத்துவம் கொண்டுள்ளது சௌதி அரேபியா.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU