SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
12 நிமிடங்களுக்கு முன்னர்
நீர் உயிர்வாழ மிகவும் அவசியமான ஒன்று. பல்வேறு சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள், நாள் ஒன்றுக்கு பெண் என்றால் இரண்டு லிட்டர் தண்ணீரும், ஆண் என்றால் 2.5 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றன.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள், சில காரணிகளைப் பொறுத்தே நம்முடைய தேவை உள்ளது என்று கூறுகின்றனர்.
தேவைக்குக் குறைவாக தண்ணீர் அருந்தினால் நீரிழப்புக்கு ஆளாவோம். ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
நம்முடைய உடல் எடையில் 60% எடை நீரால் ஆனது. அது நம்முடைய செல்கள், உடல் உறுப்புகள், இரத்தம் மற்றும் பல்வேறு உடலியக்கப் பாதைகளில் இடம் பெற்றுள்ளது.
ஸ்காட்லாந்தில் அமைந்திருக்கும் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தில் நீர்ச்சத்து நிபுணராக இருக்கும் மருத்துவர் நிதியா ரோட்ரிகுஸ் – சான்செஸ், “நீர் ஒரு ஊட்டச்சத்து,” என்று குறிப்பிடுகிறார்.
“புரதம், விட்டமின்கள், மாவுச்சத்து மற்றும் நார்சத்து போன்றவற்றை முறையாக எடுத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் குடிநீரை ஒரு ஊட்டச்சத்தாக நினைப்பதில்லை,” என்றும் தெரிவிக்கிறார் அவர்.
முக்கியமான பங்காற்றும் நீர்
நம் உடலின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் நீர் முக்கியமானது. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கருத்துப்படி, அதன் முக்கியப் பணிகளில் சில,
- ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை செல்களுக்கு எடுத்துச் செல்வது
- பாக்டீரியாக்களை சிறுநீர்ப்பையில் இருந்து வெளியேற்றுவது
- செரிமானத்திற்கு உதவுவது
- மலச்சிக்கலை தடுப்பது
- இரத்த அழுத்தத்தை சீராக்குவது
- மூட்டுகளை உராய்வில் இருந்து காப்பது
- உடல் உறுப்பு மற்றும் திசுக்களை பாதுகாப்பது
- உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்வது
- சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை சீராக வைத்துக் கொள்வது

பட மூலாதாரம், Getty Images
தேவையான அளவு நீர் பருகவில்லை என்றால் என்ன நடக்கும்?
வியர்வை, சிறுநீர் கழித்தல், ஏன் சுவாசிப்பது மூலமாகக் கூட நம்முடைய உடலில் இருந்து நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடல் முறையாக இயங்க, நீரிழப்பை ஈடுகட்ட வேண்டும். இதை ஆங்கிலத்தில் வாட்டர் பேலன்ஸ் என்று அழைக்கின்றனர்.
நாம் குடிக்கும் நீரைக் காட்டிலும் உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகமாக இருந்தால் நீரிழப்பு ஏற்படும். இது பல்வேறு வகையான ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு வழிவகை செய்யும்.
நீரிழப்பு அறிகுறிகள்
- அடர் மஞ்சள் நிற, அதிக நாற்றம் கொண்ட சிறுநீர் வெளியேறுதல்
- வழக்கத்திற்கு குறைவாக சிறுநீர் கழித்தல்
- தலைசுற்றல்
- சோர்வு
- வறண்ட வாய், உதடுகள் மற்றும் நாக்கு
- குழி விழுந்த கண்கள்
உலக சுகாதார அமைப்பின் படி, சில நேரங்களில் நீரிழப்பு குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இதயத்துடிப்பை வேகமாக்கும். உடல் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகை செய்யும்.
அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தானதா?
ஆம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
மிகக் குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமாக நீர் அருந்தினால் அதன் மூலம் ஹைபோநெட்ரீமியா ஏற்படும். இது நீரே நஞ்சாக மாறும் சூழலை குறிப்பதாகும். இரத்தத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறையும் போது, செல்கள் வீங்கத் துவங்கும்.
ஹைபோநெட்ரீமியாவின் சில அறிகுறிகள்
- குமட்டல், வாந்தி
- தலைவலி
- குழப்பம்
- ஆற்றல் இழப்பு, தலைசுற்றல், சோர்வு
- ஓய்வின்மை, எரிச்சல்
- தசைகள் வீக்கமடைதல், தசைப்பிடிப்பு
- வலிப்பு
- சில நேரங்களில் கோமா

பட மூலாதாரம், Getty Images
உடலின் தேவைக்கு அதிகமாக நீர் அருந்தினால் என்ன நடக்கும்?
2018-ஆம் ஆண்டு லண்டன் மாரத்தானில் பங்கேற்க தன்னுடைய மகள் மற்றும் மருமகனுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ஜோஹன்னா பெர்ரி. வெப்பம் அதிகமாக இருந்த அன்று, ஓடிவந்தவர்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கும் தண்ணீரை ஜோஹன்னா அதிகமாக வாங்கிக் குடித்த வண்ணம் அவர் போட்டியில் பங்கேற்றார்.
பிபிசியின் தி ஃபுட் செய்ன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடைசியாக மாரத்தான் போட்டியின் இறுதிக்கோட்டை அரைகுறையாக பார்த்ததாக ஞாபகம்,” என்றார்.
மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவர். போட்டியை வெற்றிகரமாக அவர் நிறைவேற்றிய காட்சியை வீடியோவாக அவருடைய கணவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். ஆனால் ஜோஹன்னாவுக்கோ அது ஞாபகம் இல்லை.
“என்னுடைய இணையர் மற்றும் மற்ற நண்பர்கள் அங்கே நின்று எனக்கு கையசைத்தனர். நான் தள்ளாடிக் கொண்டிருந்தேன். நாங்கள் வீட்டுக்கு வந்த பிறகு என்னுடைய உடல் நலம் மிகவும் மோசமானது. நான் மயங்கியிருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
“நான் அதிகமாக நீர் அருந்தியிருந்தேன். என் உடல் இயங்கத் தேவையான உப்பு மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அனைத்தும் வெளியேறிவிட்டது,” என்று அவர் நினைவுகூறுகிறார்.
உடலின் தேவைக்கு அதிகமாக நீர் அருந்தினால் என்ன நடக்கும் என்பதை ஜோஹன்னாவின் விவகாரம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
நீர் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சிக்கொள்ளப்படும். உறிஞ்சப்படும் அதிகப்படியான நீரானது சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீராக வெளியேறும். இருப்பினும், நமது சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் திரவத்தை மட்டுமே வடிகட்டி எடுக்க இயலும்.

பட மூலாதாரம், Getty Images
நமக்கு தேவையான நீரின் அளவு தான் என்ன ?
ஆரோக்கியமாக இருக்க, நாள் ஒன்றுக்கு ஆறு முதல் எட்டு கோப்பை நீர் பருக வேண்டும் என்று பல்வேறு ஆரோக்கிய அமைப்புகள் பரிந்துரை செய்கின்றன.
ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு, பெண் ஒருவர் 2 லிட்டர் நீரையும், ஆண் ஒருவர் 2.5 லிட்டர் நீரையும் நாள் ஒன்றுக்கு பருக வேண்டும் என்று கூறுகிறது. தண்ணீர் இல்லாமல் உணவு மூலமாகவும் இந்த நீர்த்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
காய்கறிகள், பழங்கள், அரிசி, விதைகள் என பெரும்பாலான உணவுகளில் நீர் உள்ளது. உதாரணமாக, தர்பூசணியில் 92% நீர் உள்ளது.
ஆனால் இந்த பரிந்துரையானது அனைவருக்கும் பொருந்தாது.
ஸ்காட்லாந்தின் அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஜான் ஸ்பீக்மென், “20 முதல் 60 வயது வரை உள்ள ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.8 லிட்டர் நீர் தேவை. அதே போன்று இதே வயதுள்ள பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் முதல் 1.6 லிட்டர் வரையில் நீர் தேவை. நீங்கள் 85 வயதை அடைந்தால் உங்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லிட்டர் நீரே தேவைப்படும்,” என்று கூறுகிறார்.
23 நாடுகளில் உள்ள 5000 நபர்கள் எவ்வளவு நீரை பருகுகிறார்கள் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார்.
ஒருவரின் உடல் எடை, இயக்கம், வயது, பாலினம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே தனி ஒருவரின் நீர் தேவை அமைந்துள்ளது.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பதே உங்களுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை உறுதி செய்யும் என்று அவர் கூறுகிறார்.
நீங்கள் வெப்பமான ஒரு பகுதியில் வாழும் போது உங்களுக்கு தேவைப்படும் நீரின் அளவானது, குளிரான பிரதேசத்தில் வாழும் நபர்களின் தேவையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
தாகம் எடுத்தல் என்பது உங்கள் நீர் தேவையை சுட்டிக்காட்டும் இயற்கையான சமிக்ஞை. நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்வது சிறுநீரின் நிறம். இளம் மஞ்சள் நிறம், உங்கள் உடலில் போதுமான அளவு நீர் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. கடும் மஞ்சள் நிறம் உங்களுக்கு நீரிழப்பு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும் போது நீங்கள் அதிகமாக தண்ணீர் பருக வேண்டும்.
உலக ரேடியோ சேவை நிகழ்ச்சியான தி ஃபுட் செய்னை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்த கட்டுரை
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC