SOURCE :- BBC NEWS

கோடைக் காலத்தில் வழிப்போக்கர்கள் தாகம் தீர்க்க தற்போது தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன.
இது புதிய வழக்கம் அல்ல, பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே இதுபோல தண்ணீர் பந்தல் வைத்து, தாகம் தீர்த்ததற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன.
தண்ணீர் பந்தல்களை அமைத்துத் தாகம் தீர்ப்போருக்கு என நிலங்களையும் மன்னர்கள் தானமாக அளித்துள்ளனர்.
தண்ணீர் பந்தல்கள், அதற்காக அளிக்கப்பட்ட தானங்கள் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் தமிழ்நாடு முழுவதுமே ஆங்காங்கு கிடைக்கின்றன.
காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பழமையான கோவில்களில் உலகளந்த பெருமாள் கோவிலும் ஒன்று.
ஆரம்பத்தில் பல்லவர்களால் கட்டப்பட்டு, பிறகு சோழர்கள், விஜயநகர மன்னர்களால் மேம்படுத்தப்பட்ட கோவில் இது. இந்தக் கோவில் கோபுர வாசலின் வடக்குச் சுவரில் 1339ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு ‘வென்று மண் கொண்ட’ சம்புவராய மன்னரின் 18வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது.
அந்தக் கல்வெட்டு, “சாலைக் கிணறு வெட்டி தண்ணீர் பந்தல் அமைத்து, பராமரித்த ‘ஆற்பாக்கிழான் பெருங்கருணையாளன் திருவேங்கடமுடையான் காலிங்கராயன்’ என்பவருக்கு கீழைத் தெருவில் மனையும், தோப்பு, நன்செய், புன்செய் நிலங்களையும் தானமாக வழங்கியதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது” என்று விளக்கினார் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற துணைக் கண்காணிப்பாளர் கி. ஸ்ரீதரன்.
இதே மாதிரியான செய்தியைக் கூறும் கல்வெட்டு, செவிலிமேடு என்ற ஊரிலும் உள்ளது என்கிறார் ஸ்ரீதரன்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உக்கல் என்ற ஊரில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலின் மேற்குப் புறச்சுவரில் பல முக்கியமான செய்திகள் உள்ளன.
பெருவழி ஒன்றில் கிணறு வெட்டி, தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் இரைத்து வழங்கிய செய்தியை இந்தக் கல்வெட்டு கூறுகிறது என்கிறார் ஸ்ரீதரன்.
“ராஜராஜ சோழனின் பணிமகனும் நித்த விநோத வளநாட்டிலுள்ள (சோழ மண்டலத்தில் உள்ள ஒன்பது வளநாடுகளில் ஒன்று) ஆவூர்க் கூற்றத்து ஆவூரைத் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டவனுமாகிய கண்ணன் ஆரூரன், தன் அரசன் பெயரால் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்தில், உக்கல் என்ற விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில் ஒரு கிணற்றை அமைத்து அதற்கு நிவந்தம் அளித்துள்ளான்,” என்று அவர் விளக்கினார்.

தற்காலத்தில் தண்ணீர் பந்தல்கள் கோடைக் காலத்தில் சில மாதங்கள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் அந்த காலகட்டத்தில் அவை சுமார் ஆறு மாத காலம் நடத்தப்பட்டு வந்ததையும் இந்தக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது என்கிறார் ஸ்ரீதரன்.
இதுபோல தண்ணீர் பந்தல் அமைக்கவும் அதைப் பராமரிக்கவும் தானமாக வழங்கப்பட்ட நிலம் “தண்ணீர் பந்தல் பற்று” என அழைக்கப்பட்டதை திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் கோவிலில் உள்ள விக்கிரம சோழனின் கல்வெட்டு தெரிவிக்கிறது.
மேலும், திருச்சிக்கு அருகில் சோழமாதேவி கிராமத்தில் உள்ள கைலாயம் உடையார் கோவிலில் காணும் ராஜராஜ சோழன் கல்வெட்டில் அந்த ஊர் சபையார் “ராஜராஜன் “என்று அழைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மண்டபத்தில் கூடி முடிவெடுத்ததை கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள அகஸ்தீஸ்வரம் கோவில் கல்வெட்டில் தண்ணீர் பந்தல் முதலாம் ராஜராஜசோழன் பெயரால் ‘ஜெயங்கொண்ட சோழன்’ எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டுகிறார்.

உத்திரமேரூரில் ‘பிரமாணி மண்டபம்’ பகுதியில் நாக நந்தி என்பவரிடம் ஊர் சபையார் 25 கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு அதிலிருந்து வரும் வருவாயை வைத்து, பங்குனி உத்திரம் முதல் கார்த்திகை மாதம் வரை தண்ணீர் பந்தலை நடத்த வேண்டும் என முடிவு செய்ததையும் அதை ஊர் ஏரி வாரிய பெருமக்கள் கண்காணித்து வந்தனர் எனவும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
அதேபோல் திருச்சி அருகே திருப்பராய்த்துறை கோவிலில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலம் (மண்டபத்தின்) முன்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு இரவில் விளக்கு எரிக்கவும் நெல் தானமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் தண்ணீர் பந்தல் இரவிலும் செயல்பட்டதை அறிய முடிகிறது.
மேலும், அதைச் சுத்தம் செய்யவும் நீர் கொண்டு வருபவருக்கும் கலசங்கள் செய்து தரும் குயவருக்கும் உணவளிக்க கூலியாக நெல் அளிக்கப்பட்டதையும் கல்வெட்டு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் காணப்படும் 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் ‘கருணானந்த மடம்’ தண்ணீர் நடை கிணறு தர்மம் செய்ததைக் குறிப்பிடுகிறது.

முதலாம் ராஜேந்திர சோழன் கி.பி. 1044ஆம் ஆண்டு மரணமடைந்தபோது அவரது மனைவிகளில் ஒருவரான வீரமாதேவி அவருடன் உயிர் துறந்தார். “இருவரின் உயிர்களுக்கும் தாகம் தணியும் பொருட்டு வீரமாதேவியின் சகோதரன் சேனாதிபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்தர வேளாண் என்பவன் கிணறு அமைத்து தண்ணீர் பந்தலையும் நிறுவினான்” என்று திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் என்ற ஊரில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் காணும் கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.
மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளும் வண்டி மாடுகளும் தாகம் தீர்த்துக்கொள்ளும் வகையில் பெருவழிச் சாலைகளுக்கு அருகில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. தஞ்சை அரண்மனை அருகிலுள்ள தொட்டி ஒன்றை கடைசி மராட்டிய மன்னர் சிவாஜியின் அரசிகள் இருவரும் கி.பி.1901ஆம் ஆண்டு அளித்ததாக கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், காளையார் கோவில் போரில் 1772இல் இறந்ததால் அவரது நினைவாக சிவன் கோவிலில் 152.5 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை மருது சகோதரர்கள் அமைத்தனர் என்கிறார் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ்.

மேற்கொண்டு பேசியவர், “கோபுரத்தின் கட்டுமானப் பணிக்கு மானாமதுரையில் இருந்து மக்கள் வரிசையாக நின்று செங்கற்களைக் கைமாற்றிக் கொண்டு வந்தனர். அந்த வழியில் இருந்த கொல்லங்குடி என்ற ஊர் புதிதாக உருவான ஊராக இருந்ததால் குடிநீருக்கான ஊரணி வசதி அங்கே இல்லை.
இந்நிலையில், கொல்லங்குடி பகுதியில் குருகாடி பட்டியைச் சேர்ந்த மொட்டையன் சாமி என்பவர் குடிநீர் சேவைக்காக தண்ணீர் பந்தல் வைத்திருந்தார். கோபுரம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், தாகம் தீர்க்க தண்ணீர் கேட்பவர்களுக்கும் தானே தண்ணீரை எடுத்து வந்து தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார். இந்தச் செய்தி மருது பாண்டியர்களுக்கு தெரிந்தவுடன் அவரைக் காண்பதற்காக நேரில் வந்தனர்,” என்று விளக்கினார்.
“செங்கற்களைக் கை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் மொட்டையன் சாமி தண்ணீர் வழங்கிக் கொண்டிருப்பதை நேரில் பார்த்த மருது சகோதரர்கள் அவரைப் பாராட்டினர். அப்போது அவரின் கோரிக்கையை ஏற்று மருது சகோதரர்கள் கொல்லங்குடியில் கல்மண்டபமும் ஊரணியும் அமைத்துத் தந்தனர்.
“கொல்லங்குடியிலும் மொட்டையன் சாமி பிறந்த குருகாடிப்பட்டியிலும் அவருக்குப் பெருமை செய்யும் விதமாக கல் மண்டபங்களைக் கட்டி வைத்ததோடு நிலங்களை வழங்கிச் சிறப்பித்தனர்” என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC