SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
22 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் வருகிற 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
“ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இங்கு தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியாவும் தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தானும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து ‘சார்க்’ அமைப்பு மூலமாகவும், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகவும் விசா பெற்றுவந்து, தங்கி உள்ளவர்களின் விவரங்களை மத்திய உளவுப்பிரிவு போலீசாரின் ஆலோசனையின் பேரில் குடியுரிமை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து சம்மன் அனுப்பி வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.” என அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “தமிழ்நாட்டில் 250 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 15 பேர் சென்னையில் தங்கி உள்ளனர். அவர்களில் 2 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சார்க் அமைப்பு மூலம் 215 பேர் விசா பெற்று வந்துள்ளனர்.
மற்றவர்கள் திருமணம் விவகாரம் தொடர்பாக வந்து தங்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் வருகிற 29-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. அவர்கள் வெளியேறுகிறார்களா? என்பதை மாநில உளவுப்பிரிவு போலீசார் உதவியோடு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்” என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை’

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, நேற்று (ஏப்ரல் 26) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “கள்ளச் சாராயம், சைபர் கிரைம், மணல் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் உள்ளிட்டோருக்கு மட்டுமே முன்பு தடுப்பு காவல் அளிக்கப்பட்டது. இனிமேல், உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டுபவருக்கும் தடுப்பு காவல் விதிக்கப்படும்.
இந்த மசோதாவின்படி, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி, விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள்.”
மேலும், ”அத்தகைய நபருக்கு எதிராக பொது அறிவிப்பு ஒன்றைப் பிறப்பித்து, அவரது சொத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்யலாம். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும்போது அதைத் திரும்பத்தரக்கோரும் மனுவைத் தள்ளுபடி செய்யும் அதிகாரமும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது” என அந்தச் செய்தி கூறுகிறது.
‘இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு’- உலக வங்கி

பட மூலாதாரம், Getty Images
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில், 17 கோடி பேரை வறுமை கோட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் செய்தி கூறுகிறது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 2011-12ஆம் ஆண்டில் 16.2 சதவீதம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இந்த அளவு கடந்த 2022-23ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. 17 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு மேல் சென்றுள்ளனர்.
கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்களின் சதவீதம் 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் இடைவெளி 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக குறைந்துள்ளது.
குறைந்த நடுத்தர வருவாய் பிரிவில் 37 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்தப் பிரிவில் கிராமங்களில் ஏழ்மையானவர்கள் 69 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாக குறைந்துள்ளனர். நகர்ப்புறங்களில் 43.5 சதவீதத்திலிருந்து 17.2 சதவீதமாக குறைந்துள்ளனர். ஆண்டுக்கு 7 சதவீதம் பேர் குறைந்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2011-12ஆம் ஆண்டு மிக ஏழ்மையானவர்கள் 65 சதவீதம் பேர் இருந்தனர். கடந்த 2022-23ஆம் ஆண்டில் இந்த அளவு 54 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தி கூறுகிறது.
ரயிலை கவிழ்க்க சதி- சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 100 பேரிடம் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த விவகாரத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் 100 பேரிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரக்கோணம் – சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே உள்ள அரிச்சந்திராபுரம் என்னும் இடத்தில் விரைவு ரயில்கள் செல்லும் 4-வது தண்டவாளத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 25) திடீரென சிக்னல் ரத்தானது.
இதைத் தொடர்ந்து சிக்னல் பிரிவில் வேலை செய்யும் ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த இணைப்பில் இருந்த பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டிருப்பதையும், போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனா்.
உடனடியாக சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீசார், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், திருவாலங்காடு ரயில் நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் ரயிலை கவிழ்க்க சதி செய்தல், பொது சொத்துகள் சேதப்படுத்துதல், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் சதி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு அடிப்படையில் அரிச்சந்திராபுரம், சின்னம்மாபேட்டை, வியாசபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இலங்கையில் யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்னைகளுக்கு தீர்வு’ – ஜனாதிபதி உறுதி

பட மூலாதாரம், Getty Images
“இலங்கையில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம்” என இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என்று அச்செய்தி கூறுகிறது.
மேலும் அவர் தனது உரையில், “வடக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்துள்ளார்கள். அதற்கு மனமார்ந்த நன்றி. பழைய அரசியல்வாதிகள் தமிழ் – சிங்கள மக்களை பிரித்தார்கள்.
தேசிய மக்கள் சக்தி அனைத்து இன மக்களும் கௌரவமாகவும் அவரவரின் உரிமைகளுடன் வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மொழி, கலாச்சாரம் என்ற அடிப்படையில் எவரையும் வேறுப்படுத்த போவதில்லை. இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கு உரிமையுண்டு.”
30 ஆண்டுகால யுத்தத்தால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பின்னடைந்தது. யுத்தத்தால் பல பிரச்னைகள் தோற்றம் பெற்றன. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தோற்றம் பெற்ற பிரச்னைகள் இன்றும் உள்ளன.
யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம். யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. விடுவிக்கக் கூடிய அனைத்து காணிகளையும் விடுவிப்பேன். அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும்.” என்று தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU