SOURCE :- BBC NEWS

திருமணத்திற்கு 'ஆன்லைனில்' வரன் தேடுகிறீர்களா?

பட மூலாதாரம், Getty Images

வாழ்வில் ஒரு குறிப்பிட்டக் கட்டத்தை அடைந்தவுடன், நாம் அனைவரும் திருமணம் குறித்து யோசிப்போம். சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது முக்கியமானது. அதே நேரத்தில் சவாலானதும் கூட.

இணையத்தை அதிகமாக சார்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலரும் தொழில்நுட்பத்தின் உதவியோடு தங்களுக்கான துணையை தேடுகின்றனர்.

ஆனால் இவ்வாறாக இணைய தளங்கள் மூலமாக வரன் தேடும் போது மோசடிகளும் நிகழ்கின்றன.

சில நேரங்களில் போலியான கணக்குகளை துவங்கி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். வரன் தேடும் நபர்களை மோசடி வலையில், சிக்க வைக்கின்றனர்.

தங்களின் இணையத்தில் பதிவு செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் முழுமையான விபரத்தை இணையங்கள் வழங்குகின்றன. சரியான துணையை தேர்வு செய்வதற்கு இது பெரிய அளவில் உதவியாக உள்ளது. ஆனால் அந்த இணையதளம் நம்ப தகுந்ததாக இல்லை என்றால் மோசடிக்கான வாய்ப்புகள் அங்கு இருக்கலாம்.

மோசடிக்காரர்கள் தவறான தகவல்களை கொடுத்து போலியான கணக்குகளை துவங்குகின்றனர். இத்தகைய சூழலில் ஆன்லைனில் தனக்கான துணையை தேடுவதில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது முக்கியமானது.

சைபர் குற்றங்களை தடுக்கும் காவல்துறையினர் இக்குற்றங்களை குறைக்க சில ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதைப் பின்பற்றுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இணையத்தின் நம்பகத்தன்மை

எந்த ஒரு திருமண தகவல் இணைய தளத்தில் உங்களுக்கான கணக்கை துவங்கி, தகவல்களை பதிவு செய்வதற்கும் முன்பு, இணையத்தின் நம்பகத்தன்மையை நீங்கள் சோதனை செய்ய வேண்டும். பயனர்கள் வழங்கும், ‘ரிவ்யூக்கள்’ மிகவும் முக்கியமானது.

எந்த இணையத்தில் உங்களுக்கான கணக்கைத் துவங்கலாம் என்பதை நண்பர்கள், உறவினர்கள் அல்லது இத்துறையில் தொடர்புடையவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இதே முறையில் தங்களுக்கான துணையை தேர்வு செய்திருந்தால், அந்த அனுபவம் குறித்து அவர்களிடம் பேசுவதன் மூலம் உங்களுக்கு மேலும் பல தகவல்கள் கிடைக்கும்.

நாம் தேர்வு செய்யும் இணைய தளம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

புதிய மெயில் ஐ.டி.

எந்த இணைய தளத்திலும் உங்களுக்கான ஒரு கணக்கைத் துவங்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடாக தர வேண்டும். அதே போன்றுதான், திருமண தகவல் இணையதளங்களிலும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடாக வழங்க வேண்டும்.

இதற்காக பலர் தங்களின் பயன்பாட்டில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி செய்வது ஆபத்தானது.

ஏன் என்றால் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இதைப் பயன்படுத்தி உங்கள் பற்றிய தரவுகளைப் பெற முயற்சிக்கலாம்.

எனவே தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன் மூலம் திருமண தகவல் இணைய தளத்தில் கணக்கை துவங்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரி மூலமாகவே பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

புகைப்படங்கள், தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி போன்றவற்றை தருவதை தவிர்க்கலாம். இது சரியாக இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றாதவரை இது போன்ற தகவல்களை பகிர்வதை தவிர்க்கலாம்.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், cybercrime.gov.in

தகவல்களை உறுதி செய்யவும்

ஆன்லைனில் வரன் குறித்த தகவல்களைப் பெற்றவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்பு அவர் குறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

வரன் அளித்த தகவல்கள் அனைத்தும் உண்மையா பொய்யா, அவரின் பின்னணி குறித்த தகவல்கள் சரியானதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அவர் பணியாற்றும் இடம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரை தொடர்பு கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் வரன் பற்றிய நிச்சயத்தன்மை மட்டுமல்ல, அவர் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறவும் உதவும்.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்

ஆன்லைனில் நீங்கள் வரன் தேடுகிறீர்கள் என்றால், அது குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களின் அனுபவத்தில் இருந்து உங்களுக்கான ஆலோசனையை நீங்கள் பெறலாம்.

மேலும், நீங்கள் யாரை, எங்கே, எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்பதை உங்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிந்து கொண்டிருக்கும் போது, எந்த விதமான அச்சுறுத்தலும் வெகுவாக குறையும்.

மேலும், உங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வேண்டும் என்றால் அது உடனடியாக கிடைக்கும்.

பொது இடத்தில் சந்திக்கவும்

உங்களுக்கான வரனை கண்டறிந்து, ஆரம்ப கட்ட ஆன்லைன் உரையாடல்களுக்குப் பிறகு நேரில் சந்திக்கிறீர்கள் என்றால், அப்போது சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு, அவர்கள் கொடுத்த ஆன்லைன் தகவல்கள் தவிர வேறேதும், குறிப்பாக அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து தெரியாது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடத்தில் அவர்களை சந்திக்க வேண்டும்.

மேலும் அவரை எங்கே சந்திக்கப் போகிறீர்கள் என்பது குறித்த தகவல்களை உங்கள் வீட்டில் அல்லது நண்பர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்கு திருமண தகவல் இணைய தளத்தில் ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் உங்களின் சந்தேகங்கள் அனைத்தையும் வரனிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அவரைப் பற்றி புரிந்து கொள்ள, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது இதர வழிகளிலோ நிறைய கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும். அல்லது நேரில் சந்திக்கும் போது கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் வரன் உங்களிடம் உண்மையை கூறுகிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள நீங்கள் நிறைய கேள்விகள் கேட்பது மிகவும் முக்கியமானது.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், cybercrime.gov.in

தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்

திருமண தகவல் இணையத்தின் மூலம் சந்தித்த நபரிடம் நீங்கள் பேசும் போதோ, அல்லது குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பு கொள்ளும் போதோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து அதிகமாக அவர் கேள்வி எழுப்பும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் பேசும் நபரின் அனைத்து தகவல்கள் மற்றும் பின்னணி குறித்து முழுமையாக நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இத்தகைய தகவல்களை பகிர்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்கவும்

இணைய வழி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் பொதுவாக புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதுண்டு. தவறான வழியில் சித்தகரிக்கும் புகைப்படங்களை காட்டியோ அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியோ அச்சத்தை ஏற்படுத்துவதுண்டு.

எனவே போலியான கணக்கு மூலம் உங்களை மோசடிக்காரர்கள் தொடர்பு கொள்வார்கள். யாரிடமும் உங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிரக் கூடாது.

எனவே புகைப்படங்கள் என்று வரும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், cybercrime.gov.in

பண பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்

ஆன்லைனில் சந்திக்கும் நபர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதையோ, பணம் கொடுப்பதையோ நீங்கள் தவிர்க்க வேண்டும்.

ஏதாவது ஒரு பிரச்னையை கூறி உங்களிடம் பணம் கேட்டால், சந்தேகத்திற்குரிய வகையில் ஏதோ இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே இப்படியான ஒரு சூழலை நீங்கள் சந்திக்கும் போது, அத்தகைய நபரிடம் மேற்கொண்டு பேசுவது குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இது போன்ற ஒரு சூழலில், நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நபரின் முழுமையான தகவல் கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் நீங்கள் முடிவெடுக்கலாம்.

ஆன்லைன் மோசடி, ஆன்லைன் திருமண மையங்கள், மோசடி, தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், cybercrime.gov.in

வெளிநாடு வாழ் இந்தியர்களின் ப்ரோபைல்கள்

இணைய வழியாகவோ, திருமண தகவல் இணைய தளங்கள் வழியாகவோ நீங்கள் உங்களின் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்கிறீர்கள் என்றால், வெளி நாடு வாழ் இந்தியர்களின் ப்ரோபைல்களை நீங்கள் கட்டாயமாக பார்க்க நேரிடும். அது போன்ற ப்ரோபைல்களை நீங்கள் தொடர்பு கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ப்ரோபைல்கள் பார்ப்பதன் மூலமாக எந்த ஒரு உறுதியையும் அவர்களுக்கு தருவதை தவிர்க்கவும்.

நேருக்கு நேர் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வது தொடர்பான எந்த ஒரு உறுதி மொழியையும் அவர்களுக்கு அளிக்காதீர்கள்.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், வேலை போன்ற முழுமையான தகவல்களை பெறுவதற்கு முன்பு எந்த ஒரு முடிவையும் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

இது போன்ற நபர்கள் வெளி நாட்டு முகவரியை உங்களிடம் பகிரும் போது அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடும் போது, இணையத்தின் மூலம் துணையை தேர்வு செய்வதில் நிகழும் மோசடிகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU