SOURCE :- BBC NEWS

ஹர்பஜன் சிங் .

பட மூலாதாரம், Getty Images

19 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங், சமீபத்தில் தெரிவித்த கருத்தின் காரணமாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

போட்டியின் போது, ​​ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில், மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து, ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“உண்மையான ரசிகர்கள் தோனிக்கு மட்டுமே உள்ளனர்” என்று போட்டியின் போது ஹர்பஜன் சிங் கூறினார்.

அதனையடுத்து, விராட் கோலியின் ரசிகர்கள் சிலர் சமூக ஊடகத்தில் ஹர்பஜன் சிங்கின் கருத்துக்கு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

ஹர்பஜன் சிங் கூறியது என்ன?

 விராட் கோலியின் ரசிகர்.

பட மூலாதாரம், Getty Images

ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங் தவிர, கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவும் கலந்து கொண்டார்.

அதில் ஹர்பஜன் சிங் பேசியதாக வைரலாகும் வீடியோவில், மகேந்திர சிங் தோனிக்கு அதிகளவில் ‘உண்மையான ரசிகர்கள்’ இருப்பதாக ஹர்பஜன் சிங் கூறுகிறார்.

“உங்களிடம் பலம் இருக்கும் வரை விளையாடுங்கள். அது என் அணியாக இருந்திருந்தால், நிச்சயமாக வேறொரு முடிவை எடுத்திருப்பேன். ரசிகர்கள் (அவர்களின் ஹீரோவை) நேசிப்பார்கள் என்பது இயல்பான ஒன்று தான்” என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங், “உண்மையான ரசிகர்களில் பெரும்பாலோர் அவருடைய (தோனியின்) ரசிகர்கள் என்று நான் நினைக்கிறேன். மீதமுள்ளவர்கள் (ரசிகர்கள்) இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில்… பெரும்பாலும் ‘பெட்கிராம்’ வேலை செய்பவர்கள்” என்றார். (‘பெட்கிராம்’ – உண்மையான ரசிகர்களாக இல்லாமல், பணம் கொடுத்து சமூக ஊடகங்களில் உருவாக்கப்படும் போலி ரசிகர்கள்)

“ஆனால் அவர்களின் ரசிகர்கள் உண்மையானவர்கள். இங்கும் அங்கும் நீங்கள் காணும் எண்களை ஒதுக்கி விடுங்கள்.”

வைரலான இந்த வீடியோவில் ஹர்பஜன் சிங் விராட் கோலியின் பெயரைப் பயன்படுத்தவில்லை என்றாலும், விராட் கோலியின் ரசிகர்கள் சிலர் சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

விராட் கோலி, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சின்னசாமி மைதானம்

பட மூலாதாரம், Getty Images

ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து வைரலான பிறகு, அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்திற்குச் சென்று விராட் கோலியின் ரசிகர்கள் உண்மையானவர்கள் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“272 மில்லியன் என்பது ஒரு நகைச்சுவையா?” என்று சமூக ஊடகத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

அதாவது விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 272 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள் என்பதைக் குறிப்பிடும் வகையில், சமூக ஊடக பயனர்கள் “272 மில்லியன்” என பதிவிட்டுள்ளனர். (இந்த 272 மில்லியன் என்பது 27 கோடியை குறிக்கிறது)

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோலி முதல் முறையாக சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடவிருந்த நேரத்தில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் மழை காரணமாக இந்தப் போட்டி தொடங்கவில்லை.

விராட் கோலியின் ரசிகர்கள் 18ம் எண் கொண்ட வெள்ளை டி-சர்ட்களையும், கோலியின் புகைப்படம் கொண்ட டி-சர்ட்களையும் அணிந்து மைதானத்திற்கு வந்திருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில், 18ம் எண் கொண்ட வெள்ளை நிற ஜெர்சியை விராட் கோலி அணிந்திருந்தார்.

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனால் அவர் இன்னும் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார்.

இந்த முறை நடந்த ஐபிஎல்லில், மகேந்திர சிங் தோனியின் ஃபார்ம் மற்றும் பேட்டிங் ஆர்டர் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஓய்வு குறித்து தோனியிடம் கேட்டபோது, ​​பின்னர் முடிவு செய்வேன் என்று தோனி கூறினார்.

யூடியூபர் ராஜ் ஷமானிக்கு மகேந்திர சிங் தோனி பேட்டியளித்தார். அதில், “நான் இன்னும் ஐபிஎல் விளையாடிக்கொண்டிருக்கிறேன். விஷயங்களை எளிமையாக வைத்துக்கொள்கிறேன், ஒவ்வொரு ஆண்டையும் தனியாக பார்க்கிறேன். இப்போது எனக்கு 43 வயதாகிறது, ஜூலையில் 44 வயதாகிவிடும்” என்று கூறியிருந்தார்.

“இதற்குப் பிறகு நான் இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் இருக்கும், ஆனால் அது உங்களால் தீர்மானிக்கப்படும் விஷயமல்ல, உங்களது உடலால் தீர்மானிக்கப்படுகிறது”என்றார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வர்ணனை செய்யும் போது, ​​மகேந்திர சிங் தோனி பற்றிய உரையாடல் ஒன்று நடந்தது. அப்போது ஹர்பஜன் சிங் தோனியின் ரசிகர்கள் குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். அது தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் கூறிய கருத்துக்களுக்காக, அவர் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் 2025 ொடரில் ஹர்பஜன் சிங் வர்ணனையாளர் ஆக இருந்த போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பற்றி கூறிய கருத்து, சமூக ஊடகங்களில் பலரால் ‘இனவெறி’ பேச்சாகக் வர்ணிக்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் 18வது ஓவரில், இஷான் கிஷான் மற்றும் ஹென்ரிச் கிளாசனுக்கு எதிராக ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்து வீசிக் கொண்டிருந்தார்.

அந்த ஓவரில் கிளாசென் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

அப்போது ​​வர்ணனை செய்து கொண்டிருந்த ஹர்பஜன் சிங், “லண்டனில், கருப்பு டாக்ஸியின் மீட்டர் வேகமாக ஓடுகிறது, இங்கே ஆர்ச்சர் சாஹப்பின் மீட்டரும் வேகமாக ஓடுகிறது” என்று கூறினார்.

அதன் பின்னர் இந்த கருத்துக்கு ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கினர்.

முன்னதாக, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்தை அறைந்த சர்ச்சைக்காக ஹர்பஜன் சிங் செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.

ஆனால், ஸ்ரீசாந்துடனான தகராறு குறித்து ஹர்பஜன் சிங் பலமுறை வருத்தம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஹர்பஜன் மீது தனக்கு எந்தப் புகாரும் இல்லை என்று ஸ்ரீசாந்தும் கூறியுள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC