SOURCE :- BBC NEWS

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தர்ராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம், T.M.SOUDARARAJAN

தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர் டி.எம்.சௌந்தராஜன்.

டி.எம்.எஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். திரை நாயகர்களுக்கே உரிய கம்பீரத்தை இவரை விட சிறப்பாக யாராலும் பாடல்களில் வெளிப்படுத்திவிட முடியாது. அதனாலேயே அவரது காலகட்டத்தில் முன்னணியில் இருந்த அத்தனை நட்சத்திரங்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார்.

காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடிய டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த தினம், மே 25. அதை முன்னிட்டு அவரது குரலில் ஒலித்த, 10 சிறந்த பாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

கண் போன போக்கிலே கால் போகலாமா (பணம் படைத்தவன்)

எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்க, 1965-ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய பணம் படைத்தவன் படத்தில் இடம்பெற்ற பாடல். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் கவிஞர் வாலி.

மேற்கத்திய செவ்வியல் இசை வடிவத்தில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் இருக்கும் வரிகள் அறிவுரை கூறும் தொனியிலேயே இருக்கும். முழுக்க தத்துவ வார்த்தைகள் நிறைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் ஒரு நல் ஆசிரியர் பேசுவதைப் போன்ற தன்மையைத் தந்திருக்கும். ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்’ என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தர்ராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம், T.M.SOUDARARAJAN

அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை)

நடிகர் சிவாஜி கணேசனுக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய சில பாடல்களில் சிவாஜியே பாடுகிறாரா அல்லது டி.எம்.எஸ் தனது குரல் மூலம் நடிகராகத் தெரிகிறாரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருவரது திறமையும் கலந்து போயிருக்கும்.

அப்படி ஒருப் பாடலே 1973-ஆம் ஆண்டு வெளியான ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்கிற பாடல். பி. மாதவன் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் வரிகள்.

தனியாளாக தம்பியையும், தங்கையும் தோளில் சுமந்து, ரயிலில் பாடல்கள் பாடி, கையேந்தி அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அண்ணனின் கையறு நிலையை, பாட்டும் பேச்சுமாக, உணர்ச்சிகரமான பாணியில் வெளிப்படுத்தியிருப்பார் டி.எம்.எஸ். உட்கார்ந்த இடத்திலிருந்து சிவாஜி கணேசன் இந்தப் பாடலுக்காக வெளிப்படுத்திய நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும் (தவப்புதல்வன் )

தவப்புதல்வன் (1972) என்கிற சமூகப் படத்தில் நாயகியின் பார்வையில் ஒரு கதை சொல்லப்படும். அதில் அக்பர் அரசவைக் கவிஞராக இருந்த தான்சேன், ஆரோக்கியம் குன்றிய அக்பருடைய மகளுக்கு பாடல் மூலம் சிகிச்சை அளிப்பதாக ஒரு கற்பனைச் சூழல். இதற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல் தான் இசை கேட்டால் புவி அசைந்தாடும்.

இந்தப் பாடலின் அடிப்படை கர்நாடக இசையின் ராகத்தை ஒட்டி இருந்தாலும், பாடலின் ஆரம்பத்தில் இந்துஸ்தானி பாணியில் ஒரு ஆலாபனையுடன் நுழைவார் டி.எம்.எஸ்.

இந்தப் பாடலுக்கான சூழலிலும், வரிகளிலும் இருக்கும் கனிவு, கோபம் உள்ளிட்ட இரண்டு வித்தியாசமான உணர்வுகளையும் டி.எம்.எஸ் அசாதாரணமாகக் கையாண்டிருப்பார். கண்ணதாசன் ஏற்கனவே எழுதிய கவிதையே இந்தப் பாடலுக்கு வரிகளாகவும் பொருந்திப் போனது கூடுதல் சிறப்பு.

யார் அந்த நிலவு (சாந்தி )

பிரபல மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் சிலரின் பாணிக்கு இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பீம் சிங் உள்ளிட்டவர்கள் ரசிகர்கள். அப்படி ஒரு பாணியில் நாம் ஏன் ஒரு பாடலை உருவாகக்கூடாது என்று யோசித்ததில் உருவானதே 1965ஆம் ஆண்டு வெளியான சாந்தி என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘யார் அந்த நிலவு’ என்கிற பாடல்.

அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களுக்கு முற்றிலுமாக புதிய அனுபவத்தைக் கொடுத்த இந்தப் பாடல், உருவாக்கத்தின் போதே பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இதை எப்படிப் பாடப் போகிறோம், நன்றாக இருக்குமா என்கிற சந்தேகத்துடன் பின்வாங்கியிருக்கிறார் டி.எம்.எஸ். அதன் பின் இசையமைப்பாளர் தந்த ஊக்கத்தில் மிகச்சிறப்பாக, மேற்கத்திய இசையின் பாணியை உள்வாங்கிக் கொண்டு தனது பாணியில் மிகச் சிறப்பாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

பாடலைக் கேட்ட சிவாஜி கணேசன், இந்தப் பாடலுக்கேற்றவாரு நடிக்க வேண்டும் என்றே 3 நாட்கள் படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டு, தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தர்ராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம், T.M.SOUDARARAJAN

சிந்து நதியின் மிசை நிலவினிலே (கை கொடுத்த தெய்வம்)

சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் கே.ஆர்.விஜயா எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் கை கொடுத்த தெய்வம் (1964). கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான இந்தப் படத்தின் கதை, இரண்டு நண்பர்களைப் பற்றியது. ஆனால் இதில் தனக்குப் பிடித்த ஒரு பாரதியார் பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று விரும்பினார் இயக்குநர்.

பாரதியாரின் புத்தகத்தை நாயகன் படித்து, அவர் கற்பனையில் வருவதாக இந்தப் பாடலையும் வைத்தார். இதைப் படிக்கும்போது, படத்துக்குப் பொருந்தாத சூழலாகத் தெரிந்தாலும், பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும்.

பாரதி பாடியிருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று யோசிக்க வைப்பார் டி.எம்.எஸ். வரிகள் போலவே, கேரளா, கர்நாடகா எனப் பல்வேறு இடங்களில் படமாக்கிய விதத்திலும் தேசிய ஒருமைப்பாட்டை பேசியிருப்பார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

மாதவிப் பொன்மயிலாள் (இரு மலர்கள்)

தமிழ் திரையில் சிவாஜி கணேசன் – பத்மினி இருவரும் சேர்ந்து நடித்த படங்களுக்கென்றே தனியிடம் உண்டு. 1967ஆம் ஆண்டு வெளியான இந்த இரு மலர்கள் திரைப்படத்தில், படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒரு போட்டியில் நாயகன் பாட, நாயகி நடனமாடும் பாடலாக இந்த மாதவிப் பொன்மயிலாள் வரும்.

வழக்கமாக இப்படி உருவாகும் ஒரு பாடலில் ஸ்வரங்கள் இருக்கும், ஜதிகள் இருக்கும், ஆனால் இரண்டும் கலந்து, சிக்கலான ஒரு அமைப்பில் உருவான இந்தப் பாடலை காதலும், குறும்பும் நிறைந்த குரலில் பாடி அசத்தியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்.

இன்றளவும் பாட்டுப் போட்டிகளில், பாடகர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க கரகரப்பிரியா ராகத்தில் உருவான இந்தப் பாடலைப் பாடினால் போதும். ஆனால் அப்படி யாராலும் மிக எளிதாகப் பாட முடியாத கனமான பாடல். இதுவே டி.எம்.எஸ்ஸின் குரல் வளம் எத்தகையது என்பதையும் காட்டும்.

கவிஞர் வாலி, தான் எழுதிய பாடல்களில் மிகப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மன்னிக்க வேண்டுகிறேன், மகாராஜா ஒரு மகாராணி என டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இரண்டு டூயட் பாடல்களும் இந்தப் படத்தில் பிரபலம். ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தின் இயக்குநர்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தராஜனின் டாப் 10 பாடல்கள்

பொன்மகள் வந்தாள் (சொர்க்கம் )

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் ஒரு கதாபாத்திரம் கனவு கண்டால் என்ன ஆகும்? பொன்னும் பொருளும் நிறைந்த கனவாகத்தானே அது இருக்கும். இதை வெறும் காட்சியாக சொன்னால் மட்டும் போதாது, பாடலாகவும் வேண்டுமென்று முடிவு செய்தார் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா. உருவானது பொன்மகள் வந்தாள் என்கிற பாடல். 1970-ஆம் ஆண்டு வெளியான சொர்க்கம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம் இந்தப் பாடல்.

படத்தின் கதாபாத்திரம் காணும் கனவாக மட்டுமல்ல, கண்ணை மூடிக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையிலும், டி.எம்.சௌந்தரராஜனின் குரலிலும் கூட பொன்னையும் பொருளையும் நம்மால் உணர முடியும். ஆலங்குடி சோமுவின் வரிகளில் இருக்கும் நாயகன் கதாபாத்திரத்தின் கனவு, ஆசை, லட்சியம் என் அனைத்தையும் தனது குரலிலும் கொண்டு வந்திருப்பார் டி.எம்.எஸ்.

பல வருடங்கள் கழித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ரீமிக்ஸை வேறொரு பாடகர் பாடினாலும், கடினமான அந்த ஒரு வரியை மட்டும் டி.எம்.எஸ்ஸின் குரலிலேயே தக்க வைத்திருப்பார்கள். கேட்க எளிமையான பாடலாக இருந்தாலும், பாட, மிகக் கடினமான ஒரு பாடல். அதை டி.எம்.எஸ் தவிர வேறு யாராலும் அதே சிறப்புடன் மீண்டும் பாட முடியாது.

அந்த நாள் ஞாபகம் (உயர்ந்த மனிதன்)

மை ஃபேர் லேடி என்கிற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியமைப்பு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் அந்தக் காட்சிகளைக் காட்டி, இந்த பாணிக்கு ஏற்றவாரு ஒரு பாடல் வேண்டும் என்று விரும்பினார்.

அதில் பிறந்ததுதான் உயர்ந்த மனிதன் (1968) படத்தில் வரும் அந்த நாள் ஞாபகம் என்கிற பாடல். உத்தர் புருஷ் என்கிற வங்காள மொழிப் படத்தின் மறு உருவாக்கமான இதை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கியிருந்தனர். சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நாளை இந்த வேளை பார்த்து, வெள்ளிக் கிண்ணம் தான் என இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அந்த நாள் ஞாபகம் பாடலுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. அன்று வரை தமிழ் சினிமாவில் உருவான பாடல்களிலேயே மிகப் புதுமையான வடிவம் கொண்டது இந்தப் பாடல்.

தொழில்நுட்பம் முன்னேறாத அந்த காலகட்டத்தில், சிவாஜி, மேஜர் சுந்தர் ராஜன், டி.எம்.எஸ் என அனைவரும் சேர்ந்து, வசனம், பாடல் என இந்தப் பாடலுக்குப் பங்காற்றியிருப்பார்கள். இதனைப் பாடலாகவும் பார்க்கலாம், உரையாடலாகவும் புரிந்து கொள்ளலாம். ஆடம்பரமான மேற்கத்திய செவ்வியல் இசையோட ஆரம்பமாகும் இந்தப் பாடல், கதாபாத்திரத்தின் ஏக்கம் என்கிற மெல்லிய உணர்வைப் பேசும். அதற்குத் தன் குரல் நடிப்பால் மிக அழகாக வடிவம் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தர்ராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம், T.M.SOUDARARAJAN

நீயே உனக்கு என்றும் நிகரானவன் (பலே பாண்டியா )

பாடல்களை வர்ணிக்கும் போது மிக அழகான பாடல், உணர்ச்சிகரமான பாடல், கவித்துவமான பாடல் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் மிக நகைச்சுவையான பாடல் என்ற பாராட்டை உண்மையாகப் பெறும் பாடல்கள் வெகு சில.

அதில் என்றும் முதன்மையாக இருக்கும் பாடல், பலே பாண்டியா (1962) திரைப்படத்தில் வரும் நீயே உனக்கு என்று நிகரானவன். ஒரு பக்கம் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த ஒருவர் பாடுவது போல இருக்க வேண்டும், அதே நேரம் படத்தின், அந்தச் சூழலின் நகைச்சுவைத் தன்மை இழையோட வேண்டும். இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கட்டி, தன் குரலில் குழைத்துத் தந்திருப்பார் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

மாதவிப் பொன்மயிலாள் பாடலைப் போலவே, இதுவும் பாட மிகக் கடினமான பாடல். ஆனால் டி.எம்.எஸ்ஸுக்கு அப்படி அல்ல. திரையில் சிவாஜி கணேசனின் அப்பாவித்தனம், கேலி ஒரு பக்கம், கே பாலாஜியின் கடம் வாசிப்பு ஒரு பக்கம், எம்.ஆர்.ராதாவின் அதிரடியான கலாட்டா உடல்மொழி ஒரு பக்கம் என இன்றளவும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும், ரசிக்க வைக்கும் இந்தப் பாடலை வெறும் 7 மணி நேரத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் பி.ஆர்.பந்துலு. இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதா கதாபாத்திரம் பாடும் கொன்னக்கோல் பகுதிகளைப் பாடியவர் எம். ராஜு.

மாசிலா நிலவே நம் (அம்பிகாபதி)

ஓர் அமர காதல் கதையைச் சொல்லும் படம், மொத்தம் 27 பாடல்கள். இன்றைய சூழலில் விளையாட்டுக்காகக் கூட நினைத்து பார்க்க முடியாதவை இவ்விரண்டு விஷயங்களும். ஆனால் அன்று, 1957ஆம் ஆண்டு, பி.நீலகண்டன் இயக்கத்தில் உருவான அம்பிகாபதி திரைப்படத்தில் இது சாத்தியப்பட்டது. ஜி ராமநாதன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு கண்ணதாசன், கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் உட்பட பல கவிஞர்கள் வரிகள் எழுதியுள்ளனர்.

இதில் மாசிலா நிலவே நம் என்று ஆரம்பிக்கும் காதல் பாடலுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இது ராகமாலிகை என்கிற இசை வடிவத்தில் உருவான பாடல். ஒரு பக்கம், புன்னாகவராளி, மாண்ட் என ராகங்களின் அடிப்படையில் வளரும் பாடல், சட்டென ஒரு இடையிசையுடன் மேற்கத்திய வால்ட்ஸ் பாணிக்கு மாறும்.

இசையமைப்பாளரின் இந்த புது முயற்சிக்கு ஈடு கொடுத்திருப்பது டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பானுமதி ஆகியவர்களின் குரல்கள். அந்தந்த மாறுதலுக்கு ஏற்றார்போல டி.எம்.சௌந்தரராஜன் இந்தப் பாடலைப் பாடியிருக்கும் அழகு, இதை காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக நிலைபெற்றிருக்கச் செய்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU