SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
38 நிமிடங்களுக்கு முன்னர்
ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில், பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கும் ‘ஓரளவு பங்கிருக்கிறது’ என்று கூறிய அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ், இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான உறுதியை வழங்கினார்.
கடந்த வியாழக்கிழமை, வாஷிங்டனில் அளித்த பேட்டியில் சமீபத்திய தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள், ‘அந்தப் பகுதியில் பரவலான பிராந்திய மோதலாக’ மாறிவிடாது என்று நம்புவதாக வான்ஸ் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் காஷ்மீரைச் சேர்ந்த குதிரை ஓட்டி உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் உச்சநிலையை அடைந்துள்ளது.
பல பத்தாண்டுகளாக புழக்கத்தில் இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. அதே சமயம் தண்ணீரைத் தடுக்கவும், திசைதிருப்பவும் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ‘போர் நடவடிக்கையாக’த்தான் கருதப்படும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை அளித்துள்ளது.
ஜே டி வான்ஸ் என்ன கூறியுள்ளார்?
‘பிரெட் பேயருடன் சிறப்பு அறிக்கை’ என்ற ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கான இந்தியாவின் பதிலடி பரவலான பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காமல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஜே டி வான்ஸ் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிடுகிறது.
“பாகிஸ்தான் இந்த விஷயத்தில் எந்த அளவு சம்பந்தப்பட்டிருந்தாலும், அந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து தண்டனை அளிக்க இந்தியாவுக்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ” என்கிறார் அவர்.
“மோதல் என்று வந்துவிட்டால், அதுவும் அணு ஆயுதம் வைத்திருக்கும் இரண்டு நாடுகளுக்கு இடையில் வந்து விட்டால், நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்போம்,” என்றார் அவர்.
பஹல்காம் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22ம் தேதி, வான்ஸ் தன் மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்திருந்தார். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

வான்ஸின் கருத்துக்கு இந்தியாவில் என்ன எதிர்வினை?
சில நாட்கள் முன்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் இந்தியாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது குறித்தும், அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸின் சமீபத்திய அறிக்கை குறித்தும் இந்தியாவில் பல கருத்துகள் நிலவுகின்றன.
“ஜே டி வான்ஸின் வார்த்தைகள், இந்தியாவின் தகுந்த பதிலடிக்கு முழு ஆதரவு அளிப்பதாக உள்ளன; தனது மண்ணில் இயங்கி வரும் தீவிரவாதிகள் குறித்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருப்பது; இது பிராந்திய மோதலாக மாறாமல் இருக்க வேண்டும் என்று அக்கறை தெரிவித்திருப்பது பல விஷயங்களைக் குறிக்கின்றன,” என்று சர்வதேச விவகாரங்களில் நிபுணரும் ஜேஎன்யூ பேராசிரியருமான அமிதாப் மது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
“இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க துணை அதிபர ஜே டி வான்ஸ், இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவின் எதிர்வினை பரவலான பிராந்திய மோதலை ஏற்படுத்திவிடக்கூடாது என்று இந்தியாவிடம் குறிப்பிட்டிருக்கிறார், ” என்று X தளத்தில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தாந்த் சைபால்.
மூத்த பத்திரிக்கையாளர் கீதா மோகன், எக்ஸ் தளத்தில் ‘அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான அணு ஆயுதப் போர் வந்துவிடக்கூடாது என்று கவலைப்படுவதாகவும், தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ” எழுதியுள்ளார்.
மோதி அண்ட் இந்தியா புத்தகத்தை எழுதிய பத்திரிகையாளர் ராகுல் சிவசங்கர், “பஹல்காம் சம்பவம் நடக்கும்போது துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் இந்தியாவில் தான் இருந்தார்… நம் விருந்தோம்பலை அனுபவித்தார். ஆனால் அதற்கு ஒரு வாரம் கழித்து பாகிஸ்தானை எந்த நிபந்தனையும் இல்லாமல் குறைகூற அவரால் முடியவில்லை. அதற்கு பதிலாக, பாகிஸ்தான் ‘எந்த அளவு சம்பந்தப்பட்டிருந்தாலும்’ இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி சொல்கிறார்,” என்று X தளத்தில் எழுதியுள்ளார்.
அப்ஸர்வ் ரிசர்ச் ஃபௌண்டேஷனின் மூத்த உறுப்பினரும், பாதுகாப்பு நிபுணருமான சுஷாந்த் ஷரின், “நாம் எதைப் பற்றி புகார் சொல்கிறோம்? அரசியல் நிலைப்பாடுகளையும், சொந்த விஷயங்களையும் குழப்பி அடித்து நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்கிறோம். ஆனால் வெள்ளையர்கள் நம்மை விட இந்த விஷயத்தில் அதிக புத்திசாலிகள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள்,” என்று X தளத்தில் எழுதியுள்ளார்.
திட்ட விவகார நிபுணர் பிரம்மா செல்லனி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் செயல்பாடுகள் அவர்கள் ராஜாங்க ரீதியாக நடுநிலையில் இருக்கிறார்கள் எனவும், ‘இந்த பயங்கரவாதத் தாக்குதலின் தீவிரத்தைக்’ குறைத்து மதிப்பிடவும், ‘பொறுப்பு கூறலை உறுதி செய்வதற்குமான’ ஒரு முயற்சி என்று தனது X பக்கத்தில் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், x/@narendramodi
அமெரிக்க செயலாளர்கள் என்ன பேசினர்?
வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹேக்ஸெட், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினார். ‘அமெரிக்கா இந்தியாவுடன் நிற்பதாகவும், அதன் தற்காப்பு உரிமையை ஆதரிப்பதாகவும்’ தெரிவித்தார்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் அலுவலகம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு பீட் ஹேக்ஸெட் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்,” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவது, பயிற்சி அளிப்பது, நிதி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஒரு நெடிய வரலாறு இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர், அமெரிக்க அமைச்சரிடம் கூறினார். இந்தக் கொடூரமான தீவிரவாத நடவடிக்கையை சர்வதேச சமூகம் தெளிவாகவும், ஒருமனதாகவும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக,” அறிக்கை குறிப்பிடுகிறது.
முன்னதாக புதன்கிழமை, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருடன் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, நிலவும் பதற்றத்தைக் குறைத்து ‘பொறுப்பான தீர்வை’ எட்டுமாறு வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட அமெரிக்காவின் மேல்மட்டத் தலைவர்கள் இந்தத் தாக்குதலை ‘தீவிரவாதம்’ என்றும் ‘பகுத்தறிவற்றது’ என்றும் கண்டித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அமைச்சர் தராரின் விளக்கம்
‘பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதற்கான நம்பத்தகுந்த மற்றும் உண்மையான உளவுத்துறைத் தகவல்கள் இருக்கின்றன’ என்று பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அதௌவுல்லா தரார் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
‘இந்தியா 24 – 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த நினைக்கிறது’ என்று இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நள்ளிரவுக்குப் பிறகு வெளியிட்ட அவசர அறிக்கையில் தரார் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தான் இப்படி அறிக்கை கொடுத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் தரார்.
“நான் இந்தத் தகவலை சர்வதேச சமூகத்துடன் சரியான நேரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி சரியான நேரத்தில் உலகுக்குத் தெரிவிக்கும்போது அது அந்தத் தாக்குதலைத் தடுப்பதற்கான வழிமுறையாகவும் செயல்படுவது நிரூபிக்கப்படுகிறது,” என்கிறார் அவர்.
இப்படி தகவல்களை வெளியிட்டது, இந்தியத் தாக்குதலுக்கான வாய்ப்பைக் குறைத்ததா என்பது பற்றி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பெக்கி ஆண்டர்சன் கேள்வி எழுப்பியபோது, “ஒருவரைத் தடுக்க மூன்று வழிகள் உள்ளன: முதலில் உங்கள் திறமை, அடுத்து நாட்டின் உறுதிப்பாடு, மூன்றாவது தகவல் தெரிந்திருப்பது, நம் நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் சொல்வதற்கு,” என்று கூறினார் தரார்.

பட மூலாதாரம், Getty Images
மேற்கத்திய நாடுகளின் நீண்டகாலக் கூட்டாளியான பாகிஸ்தானுக்கு, ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு முக்கியத்துவம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள இந்தியாவைத் தனது முக்கியக் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானைக் குற்றம் சுமத்தியுள்ளது. பாகிஸ்தானோ இதை மறுத்து, பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் தெற்காசியாவின் இந்த இரண்டு அண்டை நாடுகளுடனும் பல மட்டங்களில் தொடர்பு வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குக் காரணமானவர்களை தண்டிப்பது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு நடுவே இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் கூறுகிறது.
பல பத்தாண்டுகளாக நடைமுறையில் இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தான் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், அதை ‘போர் நடவடிக்கையாகத்தான்’ பார்ப்போம் என்றிருக்கிறது பாகிஸ்தான்.
இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை பரஸ்பரம் அடுத்த நாட்டுக்கு மூடிவிட்டன. தாக்கும் முறை, இலக்கு மற்றும் தாக்குதலுக்கான கால அவகாசம் ஆகியவற்றை முடிவு செய்வதற்கான முழு அதிகாரமும் இந்திய பாதுகாப்புப் படையினரிடம் உள்ளது என்று பிரதமர் மோதி அறிவித்துள்ளார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU