SOURCE :- BBC NEWS

பைசரன், பஹல்காம், ஜம்மு - காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த செவ்வாயன்று தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அதன் பசுமை நிறைந்த அழகான புல்வெளிகளுக்குப் பெயர் பெற்றது.

ஜம்மு காஷ்மீரின் பிர் பஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அனந்த்நாக் மாவட்டத்தின் உள்ள பஹல்காமில் இருந்து ஐந்து – ஆறு கி.மீ தொலைவில் உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7500-8000 அடி உயரத்தில் இருக்கிறது பைசரன். இந்த அழகான பள்ளத்தாக்கானது பசுமையான புல்வெளி நிறைந்த பெரிய நிலப்பரப்பாக உள்ளது. பைன் மற்றும் தேவதாரு மரங்கள் அடங்கிய அடர் காடுகள் இதைச் சுற்றியுள்ளன. இந்தக் காடுகளுக்கு அப்பால் உள்ள பனி சூழ்ந்த மலைகள் இந்த இடத்தை மேலும் வசீகரமாக்குகிறது.

இந்த திறந்த வெளி நிலப்பரப்பில் கோடை காலங்களில் புற்களும், காட்டுமலர்களும் நிரம்பி காட்சியளிக்கும். அதே சமயம் குளிர்காலங்களில் பனிப் போர்வை போர்த்தியிருக்கும்.

இந்த இடம் ‘மினி சுவிட்சர்லாந்து’ என சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அழைக்கப்படுவதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.

பிபிசி தமிழ், வாட்சாப், சேனல்

இந்தப் பள்ளத்தாக்கில் காணப்படும் இயற்கை காட்சிகள் வெகுவாக வசீகரிப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு வித்தியாசமான அமைதியை உணர்கின்றனர்.

இதன் அருகில் உள்ள சிறு நகரம் பஹல்காம் தான். சுற்றுலாப் பயணிகள் பஹல்காமிலே தங்கி, பகல் நேரங்களில் பைசரனைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

”பஹல்காமுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் பைசரன் செல்வதற்கு ஆர்வமாகவே உள்ளார்கள்,” என்கிறார் பஹல்காமில் ஹோட்டல் நடத்தும் ஜாவேத் அஹமது.

அமித் ஷா, பஹல்காம், பைசரன், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், ANI

அடர்வனங்களால் சூழப்பட்ட பைசரன்

பஹல்காமில் இருந்து பைசரன் பள்ளத்தாக்கை அடைய முறையான சாலை வசதிகள் இல்லை. இந்த இடத்தை அடைவதற்கு கரடுமுரடான, மண்சாலைகள் உள்ளன. இவை பைன் மற்றும் தேவதாரு மரங்களின் ஊடாகச் செல்கின்றன. பைசரன் வந்தடைவதே சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கிறது.

வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் பஹல்காமில் இருந்து குதிரைகள் அல்லது கழுதைகள் மீது சவாரி செய்து பைசரனை அடைவார்கள். ஒரு சிலர் கால்நடையாகவும் செல்வார்கள்.

பைசரனை அடைந்ததும் காணக்கிடைக்கும் மென்மையான புற்கள் நிறைந்த நிலப்பரப்பு சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

இங்குள்ள மேடுகளில் இருந்து பார்த்தால், காடுகளைத் தாண்டி பனி போர்த்திய மலைகள் தெரியும். இப்படிப்பட்ட காட்சிகளால்தான் பைசரன் ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த இயற்கை அழகுதான் இந்தியாவின் சுற்றுலா வரைபடத்தில் பைசரனுக்கு ஒரு முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளது. கோடை காலங்களில் சுமார் 15 முதல் 25 டிகிரி வரை இருக்கும் இதன் வெப்பம் குளிர் காலங்களில் 0 டிகிரிக்கும் கீழ் செல்கிறது.

“பைன் மற்றும் தேவதாரு மரங்கள் நிறைந்த அடர்காடுகள் பைசரனைச் சுற்றிலும் உள்ளன. இங்கு மக்கள் அதிகமாக வசிப்பதில்லை. ஒரு சில உணவகங்கள் இருக்கின்றன. அவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேநீரும், சிற்றுண்டியும் வழங்குகின்றன. தற்போது ஸிப்லைன், பாராக்ளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளும் உள்ளன.” என்கிறார் ஜாவேத் அஹமது.

சாகசமான பயணத்துடன் வரவேற்கும் பைசரன்

பைசரன், பெஹல்காம், ஜம்மு காஷ்மீர்,

பட மூலாதாரம், Getty Images

செயற்கைக்கோள் புகைப்படங்களில் பார்கையில், பனியும், மரங்களும் சூழ்ந்த ஒரு தட்டையான சமவெளி போலதான் பைசரன் தோன்றும். ஆனால் அதன் இயல்பான அமைப்பு இயற்கையாக அமைந்த ஒரு கோல்ஃப் மைதானம் போல இருக்கும்.

இதன் அருகே உள்ள கொல்ஹாய் பனிப்பாறையில் இருந்து லிடர் நதி உருவாகிறது. இது பஹல்காம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஊடாகக் கடந்து செல்கிறது. அதில் இருந்து உருவாகி வழியும் நதிகள் இந்தப் பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த காட்சியமைப்பை மேலும் அழகாக்குகின்றன.

வெளியுலகின் இரைச்சலில் இருந்து தனித்து இருக்கிறது பைசரன். மலையேற்றம் செல்பவர்களுக்கும் பிடித்த இடமாக பைசரன் உள்ளது. இங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.

“ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பஹல்காமுக்கு வருகிறார்கள். அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நிச்சயம் பைசரனுக்கும் செல்கிறார்கள்,” என்றார் ஜாவேத் அஹமது.

பஹல்காமில் இருந்து பைசரன் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் எடுக்கும். ஆனால் இந்த மலையேற்றப் பாதை மூலம் நடந்து சென்றால் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் அடையலாம்.

ஏப்ரல் 22 அன்று ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியபோது, அருகிலுள்ள காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இங்கு வந்து சேர இருபது நிமிடங்கள் ஆனது.

காயமடைந்தவர்களும், இறந்தவர்களும் ஹெலிகாப்டர்கள் மற்றும் குதிரைகள் மூலமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பைசரனுக்கு அருகில் உள்ள சாலை ஸ்ரீநகர் – பஹல்காம் நெடுஞ்சாலை தான். பஹல்காமில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் இருக்கிறது ஸ்ரீநகர்.

திரைப்படங்களால் புகழ்பெற்ற பஹல்காம்

பஹல்காமின் மற்றொரு பக்கம் பேதாப் பள்ளத்தாக்கு உள்ளது. 1983ஆம் வருடம் பாலிவுட்டின் திரைப்படமான ‘பேதாப்’ வெளியான பிறகு இந்தப் பகுதி பிரபலமானது. அதனால்தான் இந்த இடம் பேதாப் பள்ளத்தாக்கு எனப் பெயர் பெற்றது.

1970களில் இருந்தே பஹல்காமைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சல்மான் கான் நடித்த பிரபல திரைப்படமான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி பைசரன் பள்ளத்தாக்கில்தான் படமாக்கப்பட்டது.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக பஹல்காமின் அழகைக் காணும் மக்கள் நேரில் வந்து இந்த இடங்களைப் பார்க்கவும் விரும்புகிறார்கள்.

அமர்நாத் யாத்திரையில் முக்கிய இடம் வகிக்கும் பஹல்காம்

ஜம்மு காஷ்மீர், பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு, அமர்நாத் யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

இந்துக்களின் பிரதானமான புனித யாத்திரைகளில் ஒன்றான அமர்நாத் யாத்திரையிலும் பஹல்காம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிவனோடு தொடர்புபடுத்தப்படும் அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பயணம் இந்து மதத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரையில், அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பல பாதைகளில் ஒன்று பஹல்காம் வழியாகச் செல்கிறது.

32 கி.மீ தூர அமர்நாத் யாத்திரையை நடந்தோ அல்லது குதிரைகள் மூலமாகவோ செல்லத் தொடங்கும் முன் பல பக்தர்கள் பஹல்காமில் முகாமிடடுச் செல்கின்றனர்.

அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் பைசரனில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த வருடம், ஜூலை 3ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கும். இந்த யாத்திரைக்காக, இந்தப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

செவ்வாயன்று சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு அரிதான நிகழ்வு. “சுற்றுலாப் பயணிகள் வரும் நேரம் இதுதான். சுற்றுலாத் துறையின் முதுகெலும்பை இந்தத் தாக்குதல் உடைத்துவிட்டது. அப்பாவி சுற்றுலா பயணிகள் இந்த விதத்தில் குறிவைக்கப்படுவார்கள் என்று யாருமே நினைக்கவில்லை,” என்றார் ஜாவேத் அஹமது.

இதற்கும் முன்பும் கூட ஜம்மு காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2000ஆம் ஆண்டில் நுவான் முகாமில் நடைபெற்ற தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். 2017ஆம் ஆண்டில், குல்காம் பகுதியில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள்.

சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை இந்தத் தாக்குதல் அசைத்துப் பார்த்துள்ளது. இங்கு சுற்றிப் பார்க்க வந்தவர்கள் இப்போது ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கொடூரமான சம்பவத்துக்குப் பிறகு பைசரனின் இந்த அழகான பள்ளத்தாக்கு எப்போது சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் என்பது தெரியவில்லை.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU