SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், பஹாவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை ஜெய்ஷ்-இ-முகமது (JEM) புதன்கிழமையன்று உறுதி செய்ததாக பிபிசியின் உருது சேவை கூறுகிறது. மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், மருமகனின் மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
அந்த அறிக்கையின் படி பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் இறந்துவிட்டனர்.

யார் இந்த மசூத் அசார்?
கடந்த 1968 ஜூலை 10 அன்று பஹாவல்பூரில் அல்லாபக்ஷ் சபீரின் குடும்பத்தில் மசூத் அசார் பிறந்தார். அசாரின் தந்தை சபீர், பஹாவல்பூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்திய உள்துறை அமைச்சகம், 2024 மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்ட ‘மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்’ பட்டியலில் 57 வயது மசூத் அசாரின் பெயர் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக மசூத் செய்த குற்றங்களின் பட்டியல் நீண்டது. பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் மசூத் அசாரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று ஸ்ரீநகரில் அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். இதில் மசூத் அசாருக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு, 2001 டிசம்பர் 12இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலிலும் அசாரின் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலில், இந்தியாவின் ஆறு பாதுகாப்புப் படையினர் மற்றும் மூவர் உயிரிழந்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், EPA
நாற்பது பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலிலும் மசூத் அசாரின் பங்கு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இவை அனைத்திற்கும் முன்னதாக, காந்தஹார் விமானக் கடத்தலின்போது மௌலானா மசூத் அசார் பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. 1999ஆம் ஆண்டு காந்தஹார் விமானக் கடத்தலின்போது விடுவிக்க வேண்டுமெனக் கோரப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர்.
காந்தஹார் விமானக் கடத்தலின்போது, இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட மசூத் அசாரை அப்போதைய இந்திய அரசின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், சிறப்பு விமானத்தில் காந்தஹாருக்கு அழைத்துச் சென்றார். அன்று முதல், இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக மசூத் அசார் இருக்கிறார்.
மசூத் அசார் தலைவராக இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரில் இருப்பதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது.
பாகிஸ்தான் எல்லைக்குள் 100 கிலோமீட்டர் உட்புறமாக அமைந்திருக்கும் பஹாவல்பூரில் இந்தியா முதன்முறையாகத் தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஹ்-இ-முகமது அமைப்பு அங்கு இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
மசூத் அசாரை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டாலும், அவர் பாகிஸ்தானில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்தது.
ஜிஹாதி நடவடிக்கைகளின் தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images
மௌலானா மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்தக் கோரிக்கைக்கு எதிராகத் தனது வீட்டோ அதிகாரத்தை சீனா பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவின் சுமார் பத்தாண்டு கால முயற்சிகள் மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 2019 மே 1ஆம் தேதியன்று ஐ.நா சபை மௌலானா மசூத் அசாரின் அமைப்பை ‘பயங்கரவாத அமைப்பு’ என்று அறிவித்தது.
இந்திய உள்துறை அமைச்சகத்தால் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மசூத் அசாரின் செயல்பாடுகளின்படி, அவர் தலைமையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இளைஞர்களைத் தூண்டி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2002இல், மௌலானா மசூத் அசார் பற்றிய விரிவான கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டது. இந்தக் கட்டுரையின்படி, மசூத் அசார் கராச்சியில் படிக்கும்போது ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மசூத் அசார் கைது
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, மசூத் அசார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையவில்லை, 1994 ஜனவரியில் டாக்காவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார்.
டெல்லியின் பிரபல ஹோட்டல்களில் சில நாட்கள் தங்கிய மசூத் அசார், முதலில் தேவ்பந்த் நகருக்குச் சென்றார், அங்கிருந்து காஷ்மீர் சென்றார். 1994 பிப்ரவரி 10ஆம் தேதி இந்திய பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மசூத் அசாரை விடுவிப்பதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மசூத் கைது செய்யப்பட்ட 10 மாதங்களில், தீவிரவாதிகள் டெல்லியில் சில வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று, அவர்களை விடுவிப்பதற்கு ஈடாக மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
சஹாரன்பூரில் இருந்து பணயக் கைதிகளை மீட்க உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையின் முயற்சிகள் வெற்றியடைந்தன. மசூத் அசார் சிறையிலேயே இருந்தார். அதன்பிறகு ஓராண்டில் ஹர்கத்-உல்-அன்சார் மீண்டும் சில வெளிநாட்டினரைக் கடத்தி, மசூத் அசாரை விடுவிக்க முயன்றபோது, அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
அப்போதிருந்து, 1999இல் விடுவிக்கப்படும் வரை மசூத் அசார் ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தச் சிறையில், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானி தீவிரவாதிகளின் மொத்த குழு ஒன்று சிறை வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழுவில் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் ஸ்ரீநகர் தளபதி என்று அழைக்கப்படும் சைஃபுல்லா கான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இருந்தனர்.
மசூத் அசார் தீவிரவாதிகள் மீது ஏற்படுத்திய தாக்கம்

பட மூலாதாரம், AFP
மசூத் அசார் சிறையில் இருந்தபோது அவருடன் முக்கியமான சில விஷயங்களை கலந்தாலோசித்ததாக சைஃபுல்லா, ஸ்ரீநகரில் பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமதுவுடனான உரையாடலில் கூறியிருந்தார்.
“மௌலானா மசூத் அசார் உரை நிகழ்த்துவார், ஜிஹாத் சித்தாந்தம் குறித்து விரிவாகப் பேசுவார், அவர் துப்பாக்கியை எடுக்கவில்லை, யாரையும் கொல்லவில்லை” என்று சைஃபுல்லா தெரிவித்திருந்தார்.
மௌலானா அசாரின் பேச்சு, சிறையில் இருந்த தீவிரவாதிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சைஃபுல்லா கூறியிருந்தார். யூடியூபில் மௌலானாவின் வீடியோ துணுக்குகள் இந்தியாவுக்கு எதிரான போக்கை ஏற்படுத்தும் ஆத்திரமூட்டும் பேச்சாக இருந்ததாக ஜுபைர் அகமது தனது செய்தியில் தெரிவித்திருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு பாகிஸ்தானில் தடை இருந்த போதிலும், அந்த அமைப்பு அங்கு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது என்று கூறும் பிபிசி உருது சேவையின் தற்போதைய ஆசிரியர் ஆசிஃப் ஃபரூக்கி, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் உதவிகளைத் தொடர்ந்து அந்த அமைப்பு பெற்று வருவதாகவும் கூறுகிறார். ஆனால் இதற்கு ஆதாரமோ அல்லது எந்தவித சான்றுகளோ இல்லை.
“கடந்த 1999இல் காந்தஹார் சம்பவத்திற்குப் பிறகு, மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் உதவியுடன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் மசூத் அசார் கைது செய்யப்பட்டார், அவரது அமைப்பும் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை மசூத் அசாருக்கு ஆதரவாக வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ பாகிஸ்தான் தலைவர்கள் யாரும் பேசியதில்லை” என்று ஆசிஃப் ஃபரூக்கி தெரிவிக்கிறார்.
பாகிஸ்தானில் ஆதரவு இல்லை

பட மூலாதாரம், ANI
“பாகிஸ்தானில் மசூத் அசாருக்கு பெரிய அளவில் ஆதரவில்லை. ஒரு தீவிரவாதக் குழுவின் தலைவர் என்பதும், அவர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் அனைவருக்கும் தெரியும்” என்று ஆசிஃப் ஃபரூக்கி கூறுகிறார்.
“பல தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ள மசூத் அசாருக்கு இளைஞர்களிடம் அபிமானம் இல்லை. ஆனால் இந்தியாவை தங்கள் எதிரியாகக் கருதும் ஒரு பிரிவினர் அசாரை ஆதரிக்கின்றனர்” என்கிறார் அவர்.
மௌலானா மசூத் அசார் பொது இடங்களில் பெரிய அளவில் நடமாடுவதில்லை. ஹபீஸ் சயீதை போலன்றி, மௌலானா தொடர்பான செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பெரிய அளவில் வெளியாவதும் இல்லை.
கடந்த இருபது ஆண்டுகளில் மசூத்தின் இருப்பு குறித்து பொதுவெளியில் இரண்டு முறை மட்டுமே விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசும் ஆசிஃப் ஃபரூக்கி, “கராச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலும், அதன் பிறகு முசாஃபராபாத்தில் நடைபெற்ற ஜிஹாதி அமைப்புகளின் மாநாட்டிலும் காணப்பட்டார்” என்று தெரிவித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC