SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
மே 7 ஆம் தேதி காலை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. மே 6-ம் தேதி இரவு, இந்தியா பாகிஸ்தானுக்குள் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது, காலையில் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
பாகிஸ்தானும் பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியது, அடுத்த நான்கு நாட்களுக்கு இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.
இத்தகைய சூழ்நிலையில், உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றின என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாக சீனா வெளிப்படையாக கூறியுள்ளது. துருக்கியும் பாகிஸ்தானுடன் இருந்தது.
மறுபுறம், இந்தியாவுக்காக எந்த நாடும் அவ்வாறு கூறவில்லை.
இந்தியாவுக்கு தற்காப்பு உரிமை உண்டு என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் இஸ்ரேலுடன் ஒப்பிடுகையில், சீனா மிகப் பெரிய நாடு மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க யாரையும் சார்ந்து இல்லை என்று கூறலாம், ஆனால் வெளியுறவுக் கொள்கை அல்லது ராஜ்ஜிய ரீதியிலான வெற்றி என்பது நெருக்கடி காலங்களில் எத்தனை நாடுகள் உங்களுடன் நிற்கின்றன என்பதையும் பொருத்தது .
மூன்றாவது நாடான அமெரிக்காவால் இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து அதிக கேள்விகள் எழத் தொடங்கின.
அதாவது, சண்டை நிறுத்தம் குறித்து அமெரிக்கா ஏற்கெனவே அறிந்திருந்தது, அமெரிக்காதான் இந்தியர்களுக்கு தகவல் கொடுத்ததே தவிர, இந்திய அரசு அல்ல.
மறுபுறம், டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் பயங்கரவாதத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. டிரம்ப் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் வைத்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தத்தையும் இந்தியா ஏற்காது, ஆனால் அமெரிக்கா சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வந்ததாக தெளிவாக கூறியது, பாகிஸ்தானும் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், இதற்கு பதிலளித்த இந்தியா, அமெரிக்காவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுடன் ஒப்பிடப்படுவதற்கு இந்தியா விரும்பவில்லை. ஆனால் இந்த விவகாரம் முழுவதிலும் இதுதான் நடந்தது. சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முதலில் இந்தியாவுக்கு வந்து பின்னர் பாகிஸ்தான் சென்றார். இரானின் வெளியுறவு அமைச்சர் முதலில் பாகிஸ்தான் சென்று பின்னர் இந்தியா வந்தார்.
அதேசமயம், இந்தியாவையும், பாகிஸ்தானையும் அமெரிக்கா ஒரே மாதிரியாக நடத்தியது. பாகிஸ்தானிடமிருந்து தன்னை ‘டி-ஹைஃபனேட்’ (de-hyphenate) செய்யும் முயற்சியில் இந்தியா மிகவும் வெற்றி பெறவில்லை என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
‘டி-ஹைஃபனேட்’ என்பது முரண்பட்ட நலன்களைக் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணுவதாகும்.
இந்நிலையில், பாகிஸ்தானுடனான பதற்றத்தில் மோதி அரசின் ராஜதந்திரம் அல்லது வெளியுறவுக் கொள்கை வெற்றி பெற்றதா என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான தி இந்துவின் தூதரக விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், மத்திய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, “இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் பேசிய அனைத்து உலகத் தலைவர்களின் முழு கவனமும் பதற்றங்களைக் குறைப்பதில் இருந்தது, பயங்கரவாதத்தித்தின் மீது அல்ல. தன்னை பாகிஸ்தானுடன் ஒப்பிடக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது, ஆனால் அது நடக்கவில்லை. இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகம் 140 பில்லியன் டாலர், பாகிஸ்தானுடனான வர்த்தகம் சுமார் 10 பில்லியன் டாலர், இருப்பினும் டிரம்ப் இரு நாடுகளையும் ஒரே அளவில் வைத்திருக்கிறார்” என்று பேசினார்.
காஷ்மீர் பிரச்னையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது, அதே நேரத்தில் இந்தியா அதை எல்லா வகையிலும் நிறுத்த விரும்புகிறது. இந்த முறை காஷ்மீர் பிரச்னையை சர்வதேசமயமாக்குவதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அல்லது ஐ.நா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வாதிட்டு வருகிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து உலக அளவில் விவாதிக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் நலனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
அணிசேரா நிலையிலிருந்து பல அணிசேர்க்கை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பாதையை அணிசேரா கொள்கையை நோக்கி வகுத்தார். இந்தியாவின் மற்ற பிரதமர்களும் இந்த வழியைப் பின்பற்றினர்.
ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பன்முகத்தன்மையை நோக்கி நகர்த்தி வருகின்றனர். அதாவது, நாங்கள் எந்தக் குழுவிலும் அங்கம் வகிக்க மாட்டோம் என்பதும், அனைத்து குழுக்களுடனும் இருப்போம் என்பதும் நேருவின் வெளியுறவுக் கொள்கையாக இருந்தது.
‘மல்டி அலைன்மென்ட்’ (பல அணிசேர்க்கை) என்ற வார்த்தையை முதன்முதலில் சசி தரூர் 2012 -ல் பயன்படுத்தினார். அப்போது சசி தரூர் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
சசி தரூர், “அணிசேரா கொள்கை அதன் விளைவை இழந்துவிட்டது. 21 ஆம் நூற்றாண்டு பல அணிசேர்க்கைகளின் நூற்றாண்டாகும். இந்தியா உட்பட எந்த நாடும் மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேற முடியாது. நாம் தனித்திருக்க முடியாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவும் உலகளாவியதாக மாறியுள்ளது” என்றார்.
1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் 120 நாடுகள் கொண்ட அணிசேரா நாடுகளின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல் பிரதமர் நரேந்திர மோதி ஆவார். நேருவின் அணிசேராக் கொள்கையை இந்தியா பின்னுக்குத் தள்ளுகிறது என்ற செய்தியை மோதி இதன் மூலம் தெரிவித்தார்.
மோதி அரசில் அமெரிக்காவுடனான நெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை இயற்கையான நட்பு நாடு என்று மோதி வர்ணித்தார், இது அணிசேரா பாரம்பரியத்துக்கு முரணானது.
அமெரிக்காவுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் நெருக்கம் சந்தர்ப்பவாதமானது என்றும், சோவியத் யூனியனுடன் இந்தியா கொண்டிருந்த அதே நம்பிக்கையை இந்தியா கொண்டிருக்கவில்லை என்றும் பலர் நம்புகிறார்கள்.
2019-ம் ஆண்டில், இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள், ஆனால் இது ஒவ்வொரு விவகாரத்தின் அடிப்படையிலான ஒத்துழைப்பு என்று கூறியிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கருத்தியல் ரீதியானது அல்ல என்று கூறப்படுகிறது. சீனா தனது மேலாதிக்கத்துக்கு சவால் விடுவதால் அமெரிக்கா இந்தியா மீது அனுதாபம் கொள்கிறது என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
பன்முக ஒருங்கிணைப்பின் விளைவாக இந்தியா குவாட் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இரண்டிலும் உறுப்பினராக உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீனா, ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகும். ஆனால், குவாட் அமைப்பு சீனாவுக்கு எதிரான அமைப்பாக பார்க்கப்படுகிறது. குவாட் அமைப்பில் இந்தியா இருப்பது ரஷ்யாவுக்கும் பிடிக்கவில்லை.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2020 டிசம்பரில், “மேற்கு ஒரு ஒற்றை துருவ உலகத்தை மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால் ரஷ்யாவும் சீனாவும் அதற்கு அடிபணிய வாய்ப்பில்லை. இருப்பினும், குவாட் என்று அழைக்கப்படுவது போன்ற இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் சீன எதிர்ப்பு கொள்கையின் பகடைக்காயாக இந்தியா இன்னும் உள்ளது.” என்று பேசினார்.
குவாட் அமைப்பின் பங்கு குறித்த கேள்வி

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானும் இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த அமைப்பின் உறுப்பு நாடான சீனா, மற்றொரு உறுப்பு நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளிப்படையாக நின்றது, அதே நேரத்தில் சீனாவைப் போல ரஷ்யாவின் ஆதரவை இந்தியா பெறவில்லை.
அதே நேரத்தில், குவாட் அமைப்பில் உள்ள எந்த நாடும் இந்தியாவுக்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
குவாட் அமைப்பின் பங்கு குறித்து ரஷ்ய ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குவாட் அமைப்பை குறிவைத்து ரஷ்ய அரசியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் டுகின் ஒரு பதிவில், “உண்மையான நெருக்கடியில் குவாட் இந்தியாவுக்கு உதவவில்லை. அமெரிக்கா வெறுமனே மோதலை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்தியது. இதுதான் நட்பு நாட்டின் பங்கா? “
டுகினின் இந்த கருத்து குறித்து, ஆங்கில செய்தித்தாளான தி ஹிந்துவின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜானி, “குவாட் ஒரு பாதுகாப்பு கூட்டணி அல்ல. இந்தியா எந்த வல்லரசின் கைக்கூலியும் அல்ல. இந்தியாவின் கொள்கை தன்னாட்சியாகும். இது வேறொருவரின் மோதலாக இருந்தாலும் அல்லது எங்கள் சொந்த மோதலாக இருந்தாலும், இந்தியா தனது சுயாட்சியில் சமரசம் செய்யாது.” என்று கூறியிருந்தார்.
சர்வதேச அரசியலின் தற்போதைய சித்திரம் முரண்பாடுகள் நிறைந்தது என்று ஸ்டான்லி ஜானி கூறுகிறார்.
ஸ்டான்லி ஜானி, “இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள். இந்தியாவும் ரஷ்யாவும் ராஜதந்திர பங்காளிகள். ரஷ்யா கிட்டத்தட்ட சீனாவின் நட்பு நாடு. ஒரு காலத்தில் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த பாகிஸ்தானை சீனா தனது பாக்கெட்டில் வைத்துள்ளது. துருக்கியுடனான பாகிஸ்தானின் நட்புறவு செழித்து வருகிறது” என்று கூறுகிறார்.
மேலும், “துருக்கி நேட்டோ உறுப்பு நாடு, எனவே அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டாளியாக உள்ளது. அமெரிக்கா இந்தியாவுடன் மூலோபாய, பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையைக் கொண்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானில், நியூயார்க் தாக்குதலை நடத்திய நபரை அமெரிக்கா கொன்றது. இதையடுத்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. இருந்தபோதிலும், அமெரிக்கா பாகிஸ்தானையும் இந்தியாவையும் ஒரே அளவில் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளரான சீனாவிடமிருந்தும், அதன் பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் துருக்கியிடமிருந்தும் பாகிஸ்தான் ராணுவ உதவிகளைப் பெறுகிறது. இதுதான் இன்றைய சர்வதேச அரசியலின் சித்திரம்” என்கிறார்.
அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட்டின் சிந்தனைக் குழுவைச் சேர்ந்த சதானந்த் தூம், இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் விளைவுகளை குவாட் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.
சதானந்த் தூமே தனது எக்ஸ் பக்கத்தில், “சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் தாக்கத்தின் விளைவுகளை குவாட் எதிர்கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். எந்தவித நிபந்தனையும் இன்றி பாகிஸ்தானை சீனா ஆதரித்தது. பாகிஸ்தான் சீனாவின் ஆதரவு நாடு என்பது வெளிப்படையானது. குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்தன என்று யாராவது உறுதியாகக் கூற முடியுமா?” என்று பதிவிட்டிருந்தார்.
சதானந்த் தூமே , “குவாட் நிச்சயமாக மறைந்துவிடும் என்றோ அல்லது வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படும் என்றோ நான் கூறவில்லை. குவாட் அதன் சொந்த காரணங்களுக்காக இருக்கும். ஆனால் இந்தியாவில் குவாட் குறித்த சந்தேகம் அதிகரிக்கும். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகும் வாய்ப்பை இழந்துவிட்டன. குவாட் ஆதரவாளர்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், ரஷ்யா விவகாரத்தில் குவாட் அமைப்பின் மற்ற மூன்று உறுப்பு நாடுகளிலிருந்து இந்தியா வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பிப்ரவரி 2022 -ல் ரஷ்யா யுக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவைத் தவிர குவாட் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் யுக்ரேனுடன் இருந்தனர். ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் கூட அவர்கள் ஈடுபட்டனர். மறுபுறம், குவாட் அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக இல்லாத ஒரே உறுப்பினர் இந்தியா மட்டுமே. ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட எந்தவொரு தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவாக வாக்களிக்கவில்லை.
மாறிவரும் உலக ஒழுங்கு

பட மூலாதாரம், Getty Images
ஆனால் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், யுக்ரேன் தொடர்பான முழு கொள்கையும் மாறியது. அமெரிக்காவே ரஷ்யாவுடன் நின்றது. இந்நிலையில், யுக்ரேன் – ரஷ்யா போரில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் இந்தியா செய்தது சரிதான் என்று கூறப்பட்டது.
மனோகர் லால் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவரும் தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்காசிய ஆய்வுகள் மையத்தின் இணை பேராசிரியருமான முகமது முடாசிர் கமர், பாகிஸ்தானுடனான சமீபத்திய பதற்றத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று நம்பவில்லை என்கிறார்.
டாக்டர் முகமது முடாசிர் கமர், ” இந்தியா யாரையும் சார்ந்த நாடு அல்ல. சீனா பாகிஸ்தானுடன் நிற்கிறது, ஏனென்றால் பாகிஸ்தான் சீனாவை சார்ந்திருக்கிறது, அதாவது பாகிஸ்தானுக்கு சுயாட்சி கிடையாது. உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இனி எந்த நாடும் இந்தியாவை விரட்ட முடியாது. நீங்கள் ஒரு சக்தியாக உருவாகும்போது, உங்கள் நண்பர்களும் அலட்சியம் காட்ட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இதை வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாக பார்க்க முடியாது.” என்று சுட்டிக்காட்டுகிறார்.
டாக்டர் முகமது முடாசிர் கமர், “இந்தியாவின் பன்முக வெளியுறவுக் கொள்கை என்பது அதன் நலன்களுக்காக அனைவருடனும் இருப்பதும், நலன்கள் பாதிக்கப்படும் இடங்களில் அதற்கு எதிராக பேச தைரியம் இருப்பதும் ஆகும். ஒவ்வொரு கொள்கையும் அதன் சொந்த சிறப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒரே ஒரு நிகழ்வை வைத்து எந்த அமைப்பையும் கொள்கையையும் மதிப்பிட முடியாது. குவாட் அமைப்பில் இந்தியாவின் ஒத்துழைப்பு விவகாரங்கள் அடிப்படையிலானது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் அதே நிலைபாடு தான்” என்று விளக்குகிறார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், காஸாவில் இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்கள், அமெரிக்கா மீது வளர்ந்து வரும் அவநம்பிக்கை மற்றும் சீனாவின் எழுச்சி ஆகியவற்றால் பழைய உலக ஒழுங்கு சவாலுக்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், புதிய உலக ஒழுங்கில் இந்தியா தனது இடத்தை உருவாக்குவது ஒரு சவாலாகும்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை உலக ஒழுங்கை தங்களுக்கு ஆதரவாக சாய்க்க முயல்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், துருக்கி, சௌதி அரேபியா, இந்தியா, இந்தோனீசியா மற்றும் ஆப்பிரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் முக்கியமானது.
நேட்டோவில் உறுப்பினராக இருந்தபோதிலும், ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் துருக்கி சேரவில்லை. நேட்டோ ஒரு பாதுகாப்பு கூட்டணியாகும். உலக ஒழுங்கில் முரண்பாடுகள் இருந்தால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்த முரண்பாடுகளால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU