SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானுக்கு தகவல் தந்த விவகாரம் – அரசுக்கு ராகுல் காந்தி 2 கேள்விகள்

10 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மே 17-ம் தேதி தனது எக்ஸ் தள பதிவில் குற்றம்சாட்டியிருந்தார், இந்நிலையில் இன்று மீண்டும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

”ஆபரேஷன் தொடக்கத்தின் போதே, பயங்கரவாதிகள் உட்கட்டமைப்பை தாக்கப் போகிறோம், ராணுவத்தை தாக்கப் போவது இல்லை. ராணுவம் விலகி இருக்கலாம் என பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பினோம். ஆனால், அந்த அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை.” என கடந்த மே 15-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறினார்.

இதனையடுத்து கடந்த மே 17-ம் தேதி ராகுல் காந்தி, ”நமது தாக்குதலின் தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இந்திய அரசு அவ்வாறு செய்ததாக வெளியுறவு அமைச்சர் பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு செய்ய யார் அனுமதி கொடுத்தது? அதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது? ”என இரண்டு கேள்விகளை முன்வைத்தார்.

இது குறித்து கடந்த மே 17-ம் தேதி வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட பிறகுதான், அதன் ஆரம்ப கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்ததாகவும் இது ஆபரேஷன் தொடங்குவதற்கு முன்பே தகவல் கொடுக்கப்பட்டதாக திரிக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் மே 19-ம் தேதியான இன்று ராகுல் காந்தியின் எக்ஸ் தள பதிவில், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கரின் அமைதி அவர் செய்த தவறை ஒப்புக்கொள்வதாக காட்டுவது மட்டுமின்றி கண்டனத்திற்குரியதாக உள்ளது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன். தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு தெரிந்ததால் நாம் எத்தனை விமானங்களை இழந்தோம்? இது குறைபாடு இல்லை. குற்றம். உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இது குறித்து இந்தியா இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU