SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, மோதி, எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

“வாழ்க துருக்கி-பாகிஸ்தான் நட்பு”

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது எக்ஸ் தளப்பதிவில் எழுதிய வரிகள் இவை.

கடந்த செவ்வாய்கிழமை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதற்கு தான் இவ்வாறு பதில் அளித்திருந்தார் எர்டோகன்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் இருந்த சமயத்தில் துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானை ஆதரித்தது.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நிற்பது இது முதல்முறை அல்ல. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அவைகளில் பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானை ஆதரித்துள்ளது துருக்கி.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் துருக்கியின் நிலைப்பாடு என்ன?

இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, மோதி, எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

மே 9ஆம் தேதி, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தொடங்கிய பிறகு எர்டோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அவர் பாகிஸ்தான் மக்களை சகோதரர்கள் என்றும் அவர்களுக்காக அல்லாவிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தார். பஹல்காம் தாக்குதலில் சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற பாகிஸ்தானின் முன்மொழிவை அவர் ஆதரித்திருந்தார்.

தாக்குதலுக்கு சில நாட்கள் கழித்து துருக்கி விமானப் படையின் சி-130 விமானம் பாகிஸ்தானில் தரை இறங்கியது. எனினும், இது எரிபொருள் நிரப்பவே என துருக்கி தெரிவித்திருந்தது. இது போக, மோதல் தொடங்குவதற்கு முன்பாகவே துருக்கியின் போர்க்கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்தது, இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது என்றது துருக்கி.

இந்த மோதலின்போது பாகிஸ்தான் அதிக அளவில் துருக்கி உற்பத்தியான சோங்கர் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக மே 8ஆம் தேதியன்று இந்தியா தெரிவித்திருந்தது.

எனினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இதனை மறுத்திருந்தார்.

சோங்கர் டிரோன்கள் என்பது துருக்கிய பாதுகாப்பு நிறுவனமான அசிஸ்கார்டால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் ஆகும்.

‘ஆபரேஷன் சிந்தூரை’ வெளிப்படையாக கண்டித்த முதல் மேற்காசிய நாடும் துருக்கி தான். பாகிஸ்தானை ஆதரிப்பதில் இருந்து பிற வளைகுடா நாடுகள் விலகியிருந்தன.

துருக்கி ஏன் இந்தியாவுடன் இல்லை?

இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, மோதி, எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 2023-ம் ஆண்டில் துருக்கி மற்றும் சிரியாவை பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ‘ஆபரேஷன் தோஸ்த்’-ஐ இந்திய அரசு அறிவித்திருந்தது. இதன் கீழ் இந்தியாவில் இருந்து துருக்கிக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

அப்போதைய இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனேல், “இந்த ஆபரேஷன் இந்தியா மற்றும் துருக்கி இடையேயான நட்பை பிரதிபலிக்கிறது, நண்பர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இது ஒரு மனிதாபிமான உதவியென்றாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை இது மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

துருக்கி இந்தியாவை நண்பர் என்றும் பாகிஸ்தானை சகோதரர் என்றும் அழைக்கிறது.

இருவரில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலை வரும்போதெல்லாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் பக்கமே துருக்கி சாய்ந்துள்ளது.

துருக்கி ஏன் வேறாக உள்ளது?

இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, மோதி, எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்த சௌதி அரேபிரா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் (யூஏஇ) இன்று தனக்கு வலுவான உறவு இருப்பதாக இந்தியா கோரிவருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் துருக்கி ஏன் வேறாக உள்ளது?

துருக்கியின் அன்காரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார் முனைவர் ஒமைர் அனஸ்.

அவர் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கையில், “இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதால் சௌதி அரேபியா மற்றும் யூஏஇ உடனான இந்தியாவின் உறவுகள் இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது போக லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இந்த நாடுகளில் வேலை செய்கின்றனர். அதே சமயம், இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே குறைவான வர்த்தக உறவுகளே உள்ளன மற்றும் ஒருவருக்கொருவர் அதிக சார்பும் இல்லை. இதனால் தான் துருக்கி பெரிதாக கவலைப்படுவதில்லை. ஆனால், சௌதி அரேபியாவும் யூஏஇ-யும் நடுநிலையாக உள்ளன அல்லது இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன” என்றார்

இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே ராஜாங்க உறவுகள் 1948ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பல பத்தாண்டுகள் கழித்தும் இவர்கள் இருவரும் நெருக்கமான கூட்டாளிகளாக மாற முடியவில்லை.

இந்தியா மற்றும் துருக்கி இடையே பதற்றத்துக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி பாகிஸ்தான் வசம் சாய்வது. இரண்டாவது, பனிப்போர் சமயத்தில் துருக்கி அமெரிக்க முகாமில் இருந்தது, இந்தியா அணி சேராமையைப் பரப்புரை செய்து வந்தது.

பனிப்போர் காலத்து தொடர்பு

இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, மோதி, எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

பனிப்போர் என்பது 1947 தொடங்கி 1991 வரை அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே நிலவி வந்த நீண்ட அரசியல் மற்றும் ராணுவ போட்டி ஆகும்.

பனிப்போர் வலுவிழக்கத் தொடங்கியபோது தாராளவாத மற்றும் மேற்கத்திய சார்பு கொண்ட துருக்கி அதிபரான துர்குத் ஓசல் இந்தியா உடனான உறவுகளை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தார்.

1986-இல் ஓசல் இந்தியாவுக்கு வந்தார். இந்த பயணத்தின்போது இருநாட்டின் தூதரகங்களிலும் ராணுவ பிரதிநிதிகளின் அலுவலகங்கள் அமைப்பதை முன்மொழிந்தார். அதன் பின்னர், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1988-இல் துருக்கிக்குப் பயணம் செய்தார். ராஜீவ் காந்தியின் பயணத்துக்குப் பிறகு இரு நாடுகள் இடையேயான உறவுகள் பல முனைகளில் மேம்பட்டன.

ஆனால், இதற்குப் பிறகும் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இருந்தது. எனவே, இந்த உறவில் எந்த நெருக்கமும் இல்லை.

நரேந்திர மோதி 2014-இல் இந்திய பிரதமரானார். அதே வருடத்தில் எர்டோகனும் துருக்கியின் அதிபர் ஆனார். 2017-இல் எர்டோகன் அதிபராக இந்தியாவுக்கு வந்தார். ஆனால், பிரதமர் மோதி அதிகாரப்பூர்வ பயணமாக துருக்கிக்கு எப்போதும் செல்லவில்லை.

2019-இல் பிரதமர் மோதி துருக்கிக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், ஐ.நா பொதுச் சபையில் காஷ்மீர் பற்றிய எர்டோகனின் கருத்தைத் தொடர்ந்து அந்தப் பயணம் தள்ளிவைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானை ஆதரித்த பிறகு இந்தியாவின் கோபம் பற்றி துருக்கி கவலைப்படவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்காசிய படிப்புகளுக்கான மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.கே. பாஷா, “அமெரிக்க காரணியால் இந்தியா என்ன நினைக்கிறது என்பது பற்றி துருக்கி கவலைப்படவில்லை. அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடு இந்தியா. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உடனான துருக்கியின் உறவுகள் கடந்த சில வருடங்களாக சுமூகமாக இல்லை” என்றார்.

துருக்கி மற்றும் பாகிஸ்தானின் பொதுவான நலன்கள்

இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, மோதி, எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் இஸ்லாமிய அடையாளம் தான் நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான உறவின் அடித்தளமாக இருந்துள்ளது.

ஆனால் இது, இதனுடன் மட்டும் முடிந்துவிடுவது இல்லை. நெருக்கடியான காலங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் ஆதரவாக இருந்துள்ளன.

பனிப்போர் காலத்தில் பாகிஸ்தானும் துருக்கியும் மத்திய ஒப்பந்த அமைப்பு (CENTO) மற்றும் வளர்ச்சிக்கான பிராந்திய ஒத்துழைப்பு (Regional Cooperation for Development) போன்ற அமைப்புகளில் ஒன்றாக இருந்துள்ளன.

சிப்ரஸில் கிரீஸ் நாட்டுக்கு எதிரான துருக்கியின் கோரிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. 1964 மற்றும் 1971-இல் ராணுவ உதவிகளையும் வழங்கியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்து வருகிறது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது, அதற்கு அடுத்த மாதமே ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசுகையில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதை எதிர்த்தார் எர்டோகன்.

எனினும், சில காலமாக முக்கியமான மேடைகளில் காஷ்மீர் விவகாரத்தை எர்டோகன் எழுப்பவில்லை என்கிறார் அனஸ்.

செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரை ஆற்றுகையில் காஷ்மீர் பற்றி எர்டோகன் குறிப்பிடவில்லை. பல வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எர்டோகன் எழுப்பாதது இதுவே முதல் முறை.

ஆனால் எதிர்காலத்தில் காஷ்மீர் மீதான எர்டோகனின் நிலைப்பாடும் மேலும் கடினமாக மாறும் என நம்புகிறார் பேராசிரியர் ஏ.கே. பாஷா.

2003-ம் ஆண்டில் பிரதமராகவும் 2014-ம் ஆண்டில் அதிபராகவும் ஆன பிறகு எர்டோகன் பத்து முறைக்கும் மேல் பாகிஸ்தானுக்குப் பயணித்துள்ளார். அவரின் சமீபத்திய பயணம் பிப்ரவரி மாதத்தில் இருந்தது. அப்போது பாகிஸ்தானை ‘இரண்டாவது வீடு’ என விவரித்திருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் இரண்டு நாடுகளும் 24 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஐந்து பில்லியன் டாலர் வர்த்தக இலக்குக்கும் ஒப்புக் கொண்டன.

கடந்த இருபது ஆண்டுகளாக நேட்டோ மீதான துருக்கியின் பிடி வலுவிழந்துள்ளதாக விளக்கினார் ஒமைர் அனஸ். மேலும் அவர், “இதனால் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் உறவுகளை வளர்த்துள்ளது துருக்கி. நேட்டோவில் ஏதாவது நடந்தால் பாகிஸ்தான் தான் துருக்கிக்கு முக்கியமான நாடாக இருக்கும்”.

“மற்றொரு அம்சம் என்பது ஆயுத விவகாரத்தில் ஒருபுறம் மேற்கத்திய நாடுகளும் மறுபுறம் சீனா மற்றும் துருக்கியும் வளர்ந்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது துருக்கி அதன் ஆயுதங்களைச் சோதித்து பார்த்தது. மேலும், உலக நாடுகள் தன்னுடைய ஆயுதங்களை வாங்க வேண்டும் என துருக்கி நினைக்கிறது” என்றார்.

புவிசார் அரசியலில், வளைகுடா பிராந்தியத்தில் சௌதி அரேபியா மற்றும் யூஏஇ-யின் தலைமைச் சவாலை எதிர்கொள்கிறது துருக்கி. இந்த நாடுகளின் செல்வாக்கை குறைக்க வளைகுடா அல்லாத முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான் மற்றும் மலேசியாவுடன் உறவுகளை துருக்கி வலுப்படுத்துகிறது.

இதோடு இந்திய பெருங்கடல் மீதும் தன்னுடைய கவனத்தை அதிகரித்து வருகிறது துருக்கி. சமீப ஆண்டுகளில் துருக்கி கடற்படையும் பாகிஸ்தான் கடற்படையும் இணைந்து இந்திய பெருங்கடலில் கூட்டு போர் ஒத்திகைகள் நடத்தியுள்ளன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU