SOURCE :- BBC NEWS
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
21 ஜனவரி 2025
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக பேட்டி கொடுத்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெகபர் அலி என்பவர் லாரி மோதி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு 5 பேரில் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யார் இந்த ஜெகபர் அலி?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி (58). இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும், அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவர் திருமயம், வெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கல் குவாரிகள், சாலை பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்துள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2025) தொழுகை முடித்து கொண்டு அவரது கிராமமான வெங்களூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை வழக்காக மாற்றிய காவல்துறை
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய உயிரிழந்த ஜெகபர் அலியின் அண்ணன் ராஜா முஹம்மது, “எனது தம்பி அதிமுக பிரமுகராக இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக பிரச்னைகளில் தலையிட்டு சமூக ஆர்வலராக வாழ்ந்து வந்தார். திருமயத்தைச் சுற்றி சட்டவிரோதமாக அரசு விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு எதிராக கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2025) தொழுகையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவரை கல்குவாரியின் உரிமையாளர் மற்றும் அதில் வேலை செய்யும் நபர்கள் லாரியை கொண்டு மோதி திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர்.” என்று கூறினார்.
இது தொடர்பாக முதலில் வாகன விபத்தாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் ஜெகபர் அலியின் இரண்டாவது மனைவி மரியம் தனது கணவரை கல் குவாரி உரிமையாளர்கள் திட்டமிட்டு கொலை செய்ததாக புகார் அளித்ததன் அடிப்படையில் திருமயம் போலீசார் கொலை வழக்காக மாற்றி, கல் குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் சதீஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், ஓட்டுநர் காசி ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
“தலைமறைவான மற்றொரு உரிமையாளர் ராமையா என்பவர் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக உள்ள ராமையா திமுக பிரமுகர் என்பதால் போலீசார் கைது செய்ய முனைப்பு காட்டவில்லை என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது” என்று உயிரிழந்த ஜெகபர் அலியின் அண்ணன் ராஜா முகமது குற்றம்சாட்டியுள்ளார்.
‘மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம்’
ஜெகபர் அலி, அந்த கல்குவாரியில் நான்கு ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்தார் என அண்ணன் ராஜா முகமது கூறினார்.
“கல்குவாரியின் உரிமையாளர் ராசு மற்றும் ராமையா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்த நிலையில் குவாரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தெரியவந்ததையடுத்து உடனடியாக விதிமீறலை நிறுத்த வேண்டும் என ஜெகபர் அலி சொல்லியும் குவாரி உரிமையாளர்கள் அதை கேட்கவில்லை. இதனால் அவர் வேலையை விட்டு நின்றுவிட்டார்” என்கிறார் ராஜா முகமது.
பின்னர் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 13ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜெகபர் அலி புகார் அளித்ததாக அவர் கூறுகிறார்.
” ஆட்சியரகத்தில் இருந்து வெளியே வந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 17-ஆம் தேதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்” என்று ராஜா முகமது கூறுகிறார்.
“அதன் அடிப்படையில்தான், 17ஆம் தேதி மதியம் சுமார் 2.30 மணியளவில், கல்குவாரியின் உரிமையாளர்கள் திட்டமிட்டு ஜெகபர் அலியை கொலை செய்துள்ளனர்” என்கிறார் ராஜா முகமது.
கல்குவாரி உரிமையாளர் வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார்
உயிரிழந்த ஜெகபர் அலியின் இரண்டாவது மனைவி மரியம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கடந்த 20 நாட்களுக்கு முன்பு என் கணவர் வீட்டில் இருந்தபோது கல்குவாரியின் உரிமையாளர் வந்து வரும் 27ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது ஆஜராகக் கூடாது, மீறி ஆஜரானால் கொலை செய்து விடுவதாக என் முன்னால் மிரட்டி சென்றனர். அதன் அடிப்படையில்தான் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கல்குவாரி உரிமையாளரை கைது செய்யுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று கூறினார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவர்களை காட்டிக் கொடுத்து மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஜெகபர் அலியின் இறப்புக்கு நீதி வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “கனிமவளக் கொள்ளை மட்டுமின்றி அவர் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் இக்கொலைக்கு பொறுப்பு.” என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.”
“கனிமவளக் கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரை சமூக விரோதிகள் லாரி ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் கூறுவது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் தாஞ்சூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரு முதலமைச்சரை இன்று தமிழகம் பெற்று இருக்கிறது.”
“எங்களை பொறுத்தவரை பாரபட்சம் பார்க்காமல் கடமையை செய்வோம். திமுக ஆட்சியில் குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஜெகபர் அலி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
பெயர் கூற விரும்பாத திருமயம் காவல் நிலைய அதிகாரி ஒருவர், ”ராமையாவை தேடி வருகிறோம்” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC