SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக பெண்கள் இருக்க முடியாது. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பெண்கள் குருத்துவம் செய்வதை ஏற்பதில்லை. இதன் பின்னணி என்ன?
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து புதிய போப்பாண்டவரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கவிருக்கின்றன. புதிய போப்பாண்டவரை கார்டினல்களின் குழு வாக்களித்துத் தேர்வு செய்யவிருக்கிறது.
ஆனால், கத்தோலிக்க கிறிஸ்துவத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே போப் ஆண்டவராக முடியும். ஏன், தேவாலயத்தில் குருமாராகக்கூட ஆண்கள்தான் இருக்க முடியும்.
உலகில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இடைவெளியின்றித் தொடரும் ஒரு தலைமைப் பதவி என்றால், கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமைப் பதவியான போப்பாண்டவரின் பதவிதான்.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித பீட்டர் தான் கத்தோலிக்கக் கிறிஸ்துவத்தின் முதல் தலைவராகக் கருதப்படுகிறார். அவரில் இருந்து துவங்கும் இந்த வரிசை, எவ்வித இடைவெளியும் இன்றி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட போப் ஆண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரும் பெண்கள் கிடையாது.
கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
போப்பாண்டவராக மட்டுமல்ல, கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் பெண்கள் குருமாராகவோ, ஆயராகவோகூட இருக்க முடியாது.
“கத்தோலிக்கத்தில் ஆன்மீகத் தலைமை நிலையை அடைவதில் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. முதலில், கத்தோலிக்கராக இருப்பது. அடுத்ததாக குருமாராக (Priest) இருப்பது. இதற்குப் பிறகு, பிஷப் (Bishop) எனப்படும் ஆயராவது, அதற்குப் பிறகு பேராயராவது (Archbishop), இதற்குப் பிறகு கார்டினல் (Cardinal) என்ற நிலையை அடைவது.
இந்த கார்டினல்களில் இருந்து ஒருவர் போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்தப் படிநிலைகளில் எந்த இடத்திலும் பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் கன்னியாஸ்திரியாக இருக்கலாம். குருமார்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், அவர்களே குருமார்களாக முடியாது. இரண்டாயிரம் ஆண்டு காலமாக இதுவே மரபாக இருந்துவருகிறது. ஒரு போப்பாண்டவர் நினைத்தாலும் இந்த மரபை மாற்ற முடியாது” என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான கிளாட்ஸன் சேவியர்.
இதனை தற்போது காலமான போப் பிரான்சிஸ் பல முறை தெளிவுபடுத்தியிருக்கிறார். 2016ஆம் ஆண்டில் ஒரு சுற்றுப் பயணத்திலிருந்து நாடு திரும்பும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் உரையாடிய அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
அந்தத் தருணத்தில், போப் ஆண்டவராக ஒரு பெண் இருக்க முடியாதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த போப் பிரான்சிஸ், “போப் இரண்டாம் ஜான் பால் இதனைத் தெளிவுபடுத்திவிட்டார். அதனை மாற்ற முடியாது” என்று கூறினார். ஒருபோதும் மாற்ற முடியாதா என மீண்டும் கேள்வியெழுப்பப்பட்டபோது, “போப் இரண்டாம் ஜான் பாலின் பிரகடனத்தைப் படிக்கும்போது அப்படித்தான் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் குறிப்பிடும் பிரகடனம், 1994ல் அப்போதைய போப்பாண்டவராக இருந்த இரண்டாவது ஜான் பாலால் Ordinatio Sacerdotalis என எழுதப்பட்ட திருத்தூதரக மடலைக் (அப்போஸ்தலிக்கக் கடிதம்) குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆண்களுக்கு மட்டும் குருத்துவ நியமனத்தை ஒதுக்குவது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களுக்கு இந்தத் திருத்தூதரக மடலை இரண்டாம் ஜான் பால் எழுதினார். இந்த மடலில், பெண்களைக் குருத்துவப் பணிக்கு நியமிக்க முடியாது என்பதற்கு பல்வேறு காரணங்களை அவர் குறிப்பிட்டார்.
முதலாவது காரணமாக, இது தொடர்பாக கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்த வழக்கத்தை அவர் சுட்டிக்காட்டினார். “கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களிடம் (சீடர்கள்) ஒப்படைத்த போதனை, பரிசுத்தப்படுத்துதல், விசுவாசிகளை நிர்வகித்தல் ஆகிய பணிகளை செய்யும் குருத்துவ நியமனம், கத்தோலிக்க திருச்சபையில் ஆரம்பத்திலிருந்தே எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” என்கிறது அந்த மடல்.
ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்களுக்கு குருத்துவம் செய்வது குறித்து, ஆங்கிலிக்கன் கிறிஸ்துவத்தின் தலைவரான கான்டர்பரியின் பேராயர் டாக்டர் எஃப்.டி. கோகனுக்கு போப் ஆறாவது பால் ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் “புனித நூல்களில் உள்ள பதிவுகளின்படி கிறிஸ்து தனது அப்போஸ்தலர்களை ஆண்களிடமிருந்து மட்டுமே தேர்ந்தெடுத்தார்” என ஆறாவது பால் குறிப்பிட்டிருந்தார். இதனை தனது மடலில் போப் இரண்டாவது ஜான் பால் சுட்டிக்காட்டி ஆண்கள் மட்டுமே குருத்துவம் செய்ய முடியும் என குறிப்பிட்டார்.
வேறொரு முக்கியமான விஷயத்தையும் போப் இரண்டாவது ஜான் பால் குறிப்பிட்டார். அதாவது, “கடவுளின் தாயும் திருச்சபையின் தாயுமான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா, அப்போஸ்தலர்களுக்குரிய பணியையோ அல்லது ஊழிய ஆசாரியத்துவத்தையோ பெறவில்லை. பெண்கள் ஆசாரியத்துவ நியமனத்தில் அனுமதிக்கப்படாததை பெண்கள் குறைந்த கண்ணியம் கொண்டவர்கள் என்று பொருள் கொள்ளவோ அதை அவர்களுக்கு எதிரான பாகுபாடு என்றோ கருத முடியாது. மாறாக, பிரபஞ்ச இறைவனின் ஞானத்துக்குக் கூறப்படும் ஒரு திட்டத்தை உண்மையாகக் கடைப்பிடிப்பதாக இது பார்க்கப்பட வேண்டும்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
முடிவாக, “திருச்சபையின் தெய்வீக அமைப்புடன் தொடர்புடைய ஒரு விஷயத்தில் உள்ள அனைத்து சந்தேகங்களையும் நீக்குவதற்காக, பெண்களுக்கு ஆச்சாரிய நியமனம் வழங்க திருச்சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு திருச்சபையின் அனைத்து விசுவாசிகளாலும் உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் நான் அறிவிக்கிறேன்” என போப் இரண்டாம் ஜான் பால் தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தில் குறிப்பிட்டார். இந்த திருமடலைச் சுட்டிக்காட்டியே, பெண்களுக்கு குருத்துவம் அளிக்க கத்தோலிக்க கிறிஸ்தவம் அனுமதிக்கவில்லை என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார்.
இருந்தபோதும், 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், பொதுநிலை திருத்தொண்டராக (Deacons) பெண்களை அங்கீகரிப்பது குறித்து பரிசீலிப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார். பொதுநிலை திருத்தொண்டர் என்பது, குருத்துவத்துக்கு முந்தைய நிலையாக கத்தோலிக்கத்தில் இருந்துவருகிறது. இருந்தபோதும், பெண்கள் ஒருபோதும் பூசைகளைச் செய்யும் குருமார்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அந்தத் தருணத்திலேயே போப்பாண்டவர் தெளிவுபடுத்தினார்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பெண்களின் பங்கு

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக பிபிசியிடம் வாடிகனிலிருந்து பேசிய வாடிகன் வானொலியின் தமிழ்ப் பிரிவின் தலைவரான செல்வராஜ், இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே இதுதான் வழக்கம் என்கிறார்.
“இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே குருமார்களாக ஆண்களை நியமிப்பதே வழக்கமாக இருக்கிறது. இயேசுவின் காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களில் பெண்களும் இருந்தாலும் 12 ஆண் சீடர்களையே அவர் அங்கீகரித்தார்” என்கிறார் செல்வராஜ்.
ஆனால், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பல பெண்கள் முக்கிய பங்கு வகித்திருப்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் கிளாட்ஸன் சேவியர். “குறிப்பாக, இயேசுவின் தாயாரான மரியாள் மிகுந்த முக்கியத்துவத்தோடு பைபிளில் குறிப்பிடப்படுகிறார். அடுத்தாக, பெத்தானியாவைச் சேர்ந்த மார்த்தாவும் மரியாவும் இயேசுவின் வாழ்வில் பல தருணங்களில் வருவது பல திருவசனங்களில் குறிப்பிடப்படுகிறது” என்கிறார்.
பெண்களை குருமார்களாக்க முடியாது என்பது, ஆணாதிக்கப் பார்வையின் தொடர்ச்சி என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான குழந்தை.
“இயேசுவின் சீடர்கள் 12 பேரும் ஆண்கள்தான் என்று சொல்கிறார்கள். இயேசுவுக்கு ஏகப்பட்ட சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் பெண்களும் இருந்தார்கள். ஆனால், இவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இயேசுவோடு இணைந்து பணியாற்றியவர்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தார்கள்.
இயேசுவோடு சேர்ந்து கூடுதலான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் பெண்கள் தான். ஆகவே, இயேசுவின் படிப்பினைகள் இதற்குத் தடையாக இல்லை. இயேசுவின் இறையியல் இதற்குத் தடையாக இல்லை. ஆனால், ஆணாதிக்கச் சிந்தனையைக் கொண்டவர்கள் பெண்கள் குருத்துவம் பெறுவதை எதிர்க்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர் குழந்தை.
‘பெண்கள் குருமாராக அனுமதிக்க வேண்டும்’

பட மூலாதாரம், Getty Images
முன்பு அருட்சகோதரியாக இருந்து, தற்போது அதிலிருந்து விலகி வழக்கறிஞராக உள்ள தி.ஆ. லூசியா, சமூகத்தில் பிற்போக்கான அம்சங்களை மதங்கள் உள்வாங்கிக் கொள்வதால்தான் இப்படி நடக்கிறது என்கிறார்.
“இயேசுவைப் பொறுத்தவரை அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடினார். அப்படிப் போராடியதாலேயே சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், இந்த மதங்கள் இயேசுவின் பெயரால் பெண்களை ஒடுக்குவதை இன்னமும் தொடர்கின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஆண்களைவிட பெண்கள் ஒருபடி கீழான நிலையில்தான் வைக்கப்பட்டுள்ளனர். பெண்களை குருமாராக அனுமதித்தால்தான் அவர்கள் போப் ஆண்டவராக முடியும்.
ஆனால், குருமார்களாகவே அனுமதிப்பதில்லை. சமூகத்தில் உள்ள பிற்போக்கான அம்சங்களை இந்த மதங்கள் அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றன. இயேசுவின் கோட்பாடுகள் அதனைச் சொல்லவில்லை. இயேசு எல்லாத் தரப்பினருக்குமான விடுதலையைத் தான் பேசினார்” என்கிறார் தி.ஆ. லூசியா.
இயேசுவின் 12 சீடர்களில் பெண்களே இல்லாததை, குருத்துவ மறுப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுவதை மறுக்கிறார் தி.ஆ. லூசியா.
“இயேசுவைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். இயேசு அணிந்திருந்ததைப் போன்ற உடையையா இப்போது அணிகிறார்கள்? இயேசுவா திருச்சபையையும் மதத்தையும் உருவாக்கினார்? இயேசுவா குருத்துவத்தை ஏற்படுத்தினார்? இயேசுவுடன் 12 பேர் அல்ல, 72 பேர் இருந்தனர். இந்த 72 பேரில் பலர் பெண்களாக இருந்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உடனிருந்தவர்கள் பெண்கள்தான். ஆகவே, இயேசுவைக் காட்டி பெண்களுக்கான உரிமையை மறுப்பது சரியானதல்ல” என்கிறார் தி.ஆ. லூசியா.
கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தில் மட்டும்தான் பெண்களை குருத்துவத்துக்கோ, தலைமைப் பொறுப்புக்கோ ஏற்பதில்லையா, கிறிஸ்தவத்தின் பிற பிரிவினரின் நிலை என்ன?
இதற்கு பதிலளித்த பேராசிரியர் குழந்தை, “பெரும்பாலான பழமையான கிறிஸ்தவப் பிரிவுகள் பெண்களை குருத்துவத்துக்கும் தலைமைப் பொறுப்புக்கும் ஏற்பதில்லை. ஆங்கிலிக்கன் கிறிஸ்துவத்திலும் வேறு சில பிரிவுகளிலும் குருமார்களாகவும் ஆயர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்” என்கிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இது இது தொடர்பான விவாதத்தை எழுப்பியபோது, கடும் எதிர்ப்புகளைத் தாங்கள் சந்தித்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.
ஆகவே தற்போதைய நிலையில், கத்தோலிக்கக் கிறிஸ்துவத்தில் பெண்கள் கன்னியாஸ்திரிகளாக தொண்டாற்றுவது, குழுவாக இணைந்து செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட முடியும். போதுமான பொதுநிலை திருத்தொண்டர்கள் இல்லாத இடங்களில் பெண்கள் குருமார்களுக்கு உதவியாக அந்தப் பணிகளைச் செய்வதாகச் சொல்கிறார் குழந்தை. மேலும், சில இடங்களில் நடக்கும் கம்யூன்களில் ‘நன்மை’ தரவும் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU