SOURCE :- BBC NEWS
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்த பிறகு, பெரியாரைக் கடுமையாக எதிர்த்துவந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அவரையும் அவருடைய சித்தாந்தங்களையும் தீவிரமாக ஆதரித்தே வந்துள்ளது.
இந்த மாற்றம் ஏற்பட்டது ஏன்? பெரியாரின் சித்தாந்தத்தில் முரண்பாடு இல்லையென்றால், தனியாக கட்சி துவங்கியது ஏன்?
பெரியார் மற்றும் அண்ணா இடையிலான முரண்பாடு
1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் மணியம்மையை திருமணம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பெரியாருக்கும் அண்ணா உள்ளிட்ட திராவிடர் கழகத்தின் பல நிர்வாகிகளுக்கும் இடையில் முரண்பாடு வெளிப்படையாக வெடித்தது. நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலும், ஜூலை 9ஆம் தேதி மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்தார் பெரியார்.
இதையடுத்து 1949 செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்த நாளன்று, புதிய கட்சியைத் துவங்க சி.என். அண்ணாதுரை உள்ளிட்டவர்கள் முடிவுசெய்தனர். இதற்கு அடுத்த நாள் மாலை ராபின்சன் பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடானது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க. என்ற புதிய கட்சி உருவானது.
இந்தக் காலகட்டத்தில், தன்னிடமிருந்து பிரிந்துசென்றவர்கள் குறித்து பெரியாருக்கு கடுமையான விமர்சனம் இருந்தது. ஆனால், பிரிந்து சென்றவர்களின் தளபதியான அண்ணா, பெரியார் குறித்து கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை.
“பெரியாரின் திருமணத்தையொட்டி, திராவிட நாடு இதழில் ‘கண்டனக் கணைகள்’ என்ற தலைப்பில் திருமணத்தைக் கண்டித்தோரின் பட்டியல் நான்கைந்து பக்கங்கள் வெளியாகியிருந்தது.
“‘ஏன் நெடுஞ்செழியன், நாம் பெரியாரைக் கண்டிக்கிற அளவுக்கா வளர்ந்துவிட்டோம்? அடுத்த வாரத்திலிருந்து ‘கண்டனக் கணைகள்’ என்று தலைப்புப் போடாதே.. ‘கண்ணீர்த் துளிகள்’ என்ற தலைப்பில் வெளிவரட்டுமே’ என்றார் அண்ணா.
‘கண்ணீர்த் துளிகள்’ என்ற தலைப்பு தி.மு.கவை நையாண்டி செய்ய பெரியாருக்கு வசதியாகப் போனது” என தனது ‘Anna: The Life and Times of C.N.Annadurai’ நூலில் குறிப்பிடுகிறார் ராஜரத்தினம் கண்ணன்.
தவிர, புதிதாக துவங்கப்பட்ட கட்சிக்கு தலைவர் என்று அண்ணா யாரையும் ஏற்படுத்தவில்லை. “வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. வராது. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கூட தலைவரை ஏற்படுத்தவில்லை” என்று அண்ணா குறிப்பிட்டார்.
ஆனால், பெரியார் தொடர்ந்து தி.மு.கவினரைத் தாக்கிவந்தார். இருந்தாலும் பல தருணங்களில் பெரியாருக்கு தி.மு.கவின் ஒத்துழைப்பு தொடர்ந்தது. 1950ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து முழு அடைப்புக்கு பெரியார் அழைப்பு விடுத்த போது, அதற்கு தி.மு.க. ஒத்துழைப்பு வழங்கியது. “பிராட்வேயில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த ஊர்வலத்திலும் பங்குகொண்டனர்” என்கிறார் இரா. கண்ணன்.
அதேபோல, 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழிக்க பெரியார் அழைப்பு விடுத்தபோது, இந்தப் போராட்டத்தில் தி.மு.கவும் பங்கேற்றது. இத்தனைக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் தி.மு.கவினரைக் கடுமையாகத் தாக்கி விடுதலை இதழில் எழுதியிருந்தார் பெரியார் என தனது நூலில் குறிப்பிடுகிறார் கண்ணன். இருந்தபோதும் தி.மு.கவினர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
‘பகுத்தறிவு என்பதை ஏற்றாலும் கடவுள் மறுப்பை கைவிட்டனர்’
“1949ல் திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பிளவிற்கு முக்கியக் காரணம், சமூக இயக்கமாக இயங்கலாமா அல்லது அரசியல் கட்சியாக இருக்கலாமா என்ற விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுதான். அரசியலில் பங்கேற்பது என்ற முடிவை எடுத்த பிறகு, தி.மு.கவினர் தங்கள் பார்வை பரப்பை விரிவாக்கினார்கள். பகுத்தறிவு என்பதை ஏற்றாலும் கடவுள் மறுப்பை கைவிட்டனர்.”
“பரப்பை விரிவாக்குவது என்றால், ஏற்கனவே இருப்பதை நிராகரித்துவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. இதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் இரு இயக்கங்களுக்கும் இடையில் சிந்தனை முரண்பாடு ஏற்பட்டதாகத் தோன்றும். ஆனால், அது அப்படியல்ல.” என்கிறார் ‘Karunanidhi: A life’ நூலின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான திருமாவேலன். “அடிப்படையில் தி.மு.கவுக்கும் தி.கவுக்கும் இடையில் பெரிய முரண்பாடுகள் கிடையாது. 1949ல் பிரிந்து வந்துவிட்டாலும்கூட சில போராட்டங்களில் ஒன்றாகப் பங்கேற்றார்கள். பிரிந்திருக்கிறார்களா, சேர்ந்திருக்கிறார்களா என்று கேட்கும் அளவுக்கு தி.மு.கவினர் நடத்தும் பத்திரிகைகளில் பெரியாரின் பொன்மொழிகள் இடம்பெற்றுவந்தன” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான திருமாவேலன்.
“எங்களுக்கு பெரியார் – மணியம்மை திருமணம் ஒரு காரணமே தவிர வேறல்ல. உண்மையான காரணம், அரசியல் இயக்கம் காண்பதும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும்தான்” என்று பிரிவுக்கான காரணம் குறித்து, தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன் 80களில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டுகிறார் திருமாவேலன்.
பிரிந்து வந்த பிறகு, பெரியார் அழைப்பு விடுத்த பல போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்றாலும், சில விஷயங்களில் அவரிடமிருந்து விலகியே இருந்தது.
1955 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இந்தி திணிப்புக்கு எதிராக தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்தபோது, அண்ணா அதிலிருந்து விலகியிருந்தார். அதே வருடம் ராமர் படத்தைக் கொளுத்தும் போராட்டத்திலிருந்தும் தி.மு.க. விலகியிருந்தது.
மற்றொரு பக்கம், மொழிவழி மாகாணங்கள் பிரியும்போது தேவிகுளம் – பீர்மேடு பகுதிகள் கேரளாவுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. போராட்டம் அறிவித்த போது, பெரியார் அதனை ஏற்கவில்லை.
காமராஜருக்கு ஆதரவாக இருந்த பெரியார்
இதற்குப் பிந்தைய தேர்தல்களில் பெரியார் தொடர்ந்து, தி.மு.கவுக்கு எதிராக, காங்கிரசுக்கு குறிப்பாக காமராஜருக்கு ஆதரவாகவே பெரியார் இருந்தார். இந்த காலகட்டத்தில் தி.மு.க. தலைவர்களும் பெரியாரை விமர்சித்துவந்தனர். 1967-ல் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபோது, அது பெரியாருக்கு பெரும் ஏமாற்றமளித்தது. ஆனால், அந்தத் தேர்தல் வெற்றி, தி.மு.க. – பெரியார் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக அமைந்தது.
தேர்தலில் வெற்றிபெற்ற அண்ணா, கூட்டணிக் கட்சித் தலைவரான ராஜாஜி, முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்த பிறகு, பெரியாரைச் சந்திக்க திருச்சிக்குச் செல்ல முடிவெடுத்தார். “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால் அது மனிதப் பண்பே ஆகாது” என்று அண்ணா குறிப்பிட்டதாக, பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் கவிஞர் கருணானந்தம் குறிப்பிட்டார்.
‘என்னைக் கூச்சப்பட வைத்துவிட்டீர்கள்’ என்றார் பெரியார். இதற்குப் பிறகு, 1967ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி பெரியார் ஒரு அறிக்கையை வெளியிட்டார். “நான் அவர்களை ரிசர்வேஷன் இல்லாமல் எவ்வளவு கண்டித்து, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய காலத்திலும் தி.மு.க. தலைவர்களில் ஒருவர்கூட என்னைக் கடிந்தோ, குறைகூறியோ ஒரு வார்த்தைகூடச் சொன்னது கிடையாது” என்றார் பெரியார்.
இதற்குப் பிறகு பெரியாரை அரவணைத்துத்தான் ஆட்சி நடந்தது. “பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பு பெரியாரிடம் கருத்துக் கேட்பார்கள். அண்ணா சிகிச்சைக்காகப் புறப்பட்டுச் செல்லும்போது பெரியார் விமான நிலையத்திற்குச் சென்றார்” என்கிறார் திருமாவேலன்.
அண்ணா முதலமைச்சரான பிறகு, தனது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது, அந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் முரசொலி மாறன் போட்டியிட்டார். அப்போது முதல்முறையாக தி.மு.க. வேட்பாளர் ஒருவருக்காக பெரியார் பிரசாரம் செய்ததாகக் குறிப்பிடுகிறார் ரா. கண்ணன்.
தி.மு.கவுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு
அண்ணா மறைந்த பிறகு, மு. கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப் பிறகு நான்காண்டுகள் மட்டுமே பெரியார் உயிரோடு இருந்தார். இந்த காலகட்டத்தில் பெரியார் தனது போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினாலும் தி.மு.கவுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவு நீடிக்கவே செய்தது.
அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறி வந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார். தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக் கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.
இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
“1971 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய போது, ஒரு ஊர்வலத்தில் ராமர் படத்தின் மீது செருப்பு வீசப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம் நடந்து, அப்போதைய தி.மு.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், அதையடுத்து வந்த தேர்தலில் 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. தன்னால், தி.மு.க. அரசுக்கு நெருக்கடி வந்ததோ என கருதிக் கொணடிருந்த பெரியார், இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ‘உங்களுக்குப் புகழ் வந்தது, எனக்குப் பழி தீர்ந்தது’ என்று செய்தி அனுப்பினார்” என்கிறார் திருமாவேலன்.
பெரியார் மறைந்து இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிந்தைய தி.மு.கவின் போஸ்டர்களில் பெரியாரின் படம் தொடர்ந்து இடம்பெற்றது. பெரியார், அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் முகங்களை பக்கவாட்டில் ஒன்றின் பின் ஒன்றாக வரையும் போக்கும் துவங்கியது.
“திராவிட இயக்கத்தின் அடிப்படையான அம்சம், சுயமரியாதையும் சமதர்மமும்தான். சமூகப் பாகுபாடு அதற்குத் தடையாக இருக்கிறது. அதை நீக்க வேண்டுமென்பதில் திராவிட இயக்கம் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறது. தி.மு.கவின் முன்பாக இருந்த கேள்வி, ஆட்சியைத் தக்கவைக்கப் போகிறார்களா அல்லது பெரியாரின் வழியில் அந்த மாற்றத்தைச் முன்னெடுத்துச் செல்லப்போகிறார்களா என்பதுதான்.”
“அவர்கள் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., ஆட்சியில் இல்லாத ஆண்டுகள்தான் அதிகம். இதைப் புரிந்துகொண்டால் எல்லாம் விளங்கிவிடும்”என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC