SOURCE :- BBC NEWS

சிவில் பாதுகாப்பு ஒத்திகை, இந்தியா, பாகிஸ்தான், உள்துறை அமைச்சகம்

பட மூலாதாரம், ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் மே 7ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகையை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உள்துறை அமைச்சகத்தின் ‘பொது தீயணைப்பு சேவைகள் இயக்குநரகம், குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை’, மே 5 அன்று இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன.

இதில், நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில், பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சிவில் பாதுகாப்புச் சட்டங்களின்படி, இதுபோன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிடும் அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1971 இந்தியா- பாகிஸ்தான் போருக்கு முன் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை

இந்த பாதுகாப்பு ஒத்திகை இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், 1968-இன் படி நடத்தப்படுகின்றது என உள்துறை அமைச்சகத்தின் ‘பொது தீயணைப்பு சேவைகள் இயக்குநரகம், குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை’ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய பாதுகாப்புச் சட்டம், 1968-இன் படி ‘சிவில் பாதுகாப்பு’ என்பது, உண்மையான போர் நடவடிக்கையாக இல்லாத எந்தவொரு நடவடிக்கையையும் உள்ளடக்கியது.

இந்தியாவில் அல்லது அதன் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு நபர், சொத்து, இடம் அல்லது பொருளை வான், நிலம், கடல் அல்லது பிற வழிகளில் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கை, ‘சிவில் பாதுகாப்பு’ என்று குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்தச் சட்டம் ‘சிவில் பாதுகாப்பு ஒத்திகை’ குறித்த அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.

இதற்குமுன், 1971ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ‘சிவில் பாதுகாப்பு ஒத்திகையை’ நடத்துவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

அதே வருடம் டிசம்பர் 3ஆம் தேதி, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியது. 13 நாட்கள் தொடர்ந்து அப்போரில் பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பர் 16ஆம் தேதியன்று டாக்காவில் சரணடைந்தனர். அதே நாளில் உலக வரைபடத்தில் சுதந்திர வங்கதேசம் பிறந்தது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ‘சிவில் பாதுகாப்பு ஒத்திகை’ நடத்துவதற்கான உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவில் பாதுகாப்பு ஒத்திகை, இந்தியா, பாகிஸ்தான், உள்துறை அமைச்சகம்

பட மூலாதாரம், Getty Images

அந்த அறிவிப்பில், சிவில் பாதுகாப்பு ஒத்திகைகளின் நோக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  • வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறனை மதிப்பிடுதல்.
  • இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை செயல்படுத்துதல்.
  • கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டைச் சோதித்தல்.
  • மக்கள் விரோதத் தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ‘சிவில் பாதுகாப்பு’ அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்கு பயிற்சி அளித்தல்.
  • விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல்.
  • முக்கிய ஆலைகள் / நிறுவனங்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு.
  • வார்டன் (உள்ளூர் தன்னார்வலர்கள்) சேவைகள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் எதிர்வினை மற்றும் செயல்பாட்டை உறுதிப்படுத்த.
  • விபத்து தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதை மதிப்பிடுதல்.
  • மக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களின் தயார்நிலை மற்றும் அவற்றின் செயல்பாட்டை மதிப்பீடு செய்தல்.

ஒத்திகையின் போது என்ன நடக்கும்?

சிவில் பாதுகாப்பு ஒத்திகை, இந்தியா, பாகிஸ்தான், உள்துறை அமைச்சகம்

பட மூலாதாரம், ANI

உண்மையில், சிவில் பாதுகாப்பு ஒத்திகையில், அவசரகால சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது கவனிக்கப்படுகிறது. இதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திடீர் தாக்குதல், விபத்து அல்லது தீ விபத்து போன்ற அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு எந்தளவு தயாராக இருக்கிறோம் என்பதை அறியவே இத்தகைய ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மே 7ஆம் தேதி நடைபெறும் சிவில் பாதுகாப்பு ஒத்திகை இந்திய நகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை நடத்தப்படும்.

இந்த ஒத்திகையில் பல வகையான பயிற்சிகள் செய்யப்படும். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது, கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டைக் கவனிப்பது மற்றும் தாக்குதல்களின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

சிவில் பாதுகாப்பு ஒத்திகை நேரத்தில், மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது நிறுவனங்களிலோ உள்ள அனைத்து விளக்குகளையும் சிறிது நேரம் அல்லது முழுவதுமாக அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்படலாம். மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதையும் இந்தப் பயிற்சியில் காணலாம்.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, மாவட்டக் கட்டுப்பாட்டாளர், மாவட்டத்தின் பல்வேறு அதிகாரிகள், சிவில் பாதுகாப்புத் தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படை, என்சிசி, நாட்டு நலப்பணித் திட்ட (NSS) தன்னார்வலர்கள், நேரு யுவ கேந்திர சங்கதன் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த ஒத்திகையில் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எம்.ஜெயா சிங் (ஐஐஎஸ்), “பாதுகாப்பு ஒத்திகை என்பது பலரும் நினைப்பது போல போர் ஒத்திகை அல்ல. ஒரு அவசரநிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த ஒத்திகை. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அந்தந்த மாநில அரசுகள் இதை செயல்படுத்தும்.” என்று கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் பதற்றம்

சிவில் பாதுகாப்பு ஒத்திகை, இந்தியா, பாகிஸ்தான், உள்துறை அமைச்சகம்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் உச்சத்தில் உள்ளன, இதற்கிடையில், இரு நாடுகளின் அரசியல்வாதிகளிடமிருந்தும் அறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

“இந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதும் என் கடமைதான்” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்திருந்தார்.

‘பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் நீங்கள் விரும்பும் அனைத்தும் நடக்கும்’ என்றும் கூறினார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனாதன் சன்ஸ்கிருதி ஜாக்ரான் மஹோத்சவ நிகழ்ச்சியில் பேசினார் ராஜ்நாத் சிங். இந்த சமயத்தில் அவர் பஹல்காம் தாக்குதலையோ, பாகிஸ்தானையோ குறிப்பிடாமல் பல விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தினார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல அரசியல்வாதிகள், இந்தியாவின் ராணுவ நடவடிக்கை குறித்து அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற அறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானின் நீர்வழிப்பாதையை நிறுத்தவோ அல்லது மாற்றவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பையோ அல்லது கட்டுமானத்தையோ கட்டினால், அது அழிக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பல மதரஸாக்களை பாகிஸ்தான் காலி செய்துள்ளது.

சிவில் பாதுகாப்பு ஒத்திகை, இந்தியா, பாகிஸ்தான், உள்துறை அமைச்சகம்

பட மூலாதாரம், ANI

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல முடிவுகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதைத் தவிர, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களையும் இந்தியா முற்றிலுமாக தடை செய்துள்ளது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்று கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து அனைத்து வகையான நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிகளையும் உடனடியாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று மே 2 அன்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளது. மேலும், வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது.

சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர, சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது, மேலும் இவை ரத்து செய்யப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU