SOURCE :- BBC NEWS

சிஎஸ்கே பிளேஆஃப் செல்லும் ஒரே வாய்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

18-வது ஐபிஎல் டி20 சீசன் தொடங்கி ஏறக்குறைய 74 ஆட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டங்கள் முடிந்துவிட்டநிலையில் இன்னும் எந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாத சூழல்தான் இருக்கிறது.

நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன்கள், முதல்முறையாக கோப்பைக்காக போராடும் அணிகள், 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் அணி என ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப்-க்கு நுழைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடி வருகின்றன

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகள் தவிர மற்ற அணிகள் 7 ஆட்டங்களை முடித்துள்ளன. அந்த இரு அணிகள் மட்டும் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.

இனிவரும் ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாகும். ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல விரும்பும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 8 வெற்றிகளைப் பெற வேண்டும் அல்லது சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல 9 வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதால் அடுத்துவரும் லீக் போட்டிகள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும்.

ஒவ்வொரு அணிகள் முன் இருக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்புக் குறித்துப் பார்க்கலாம்.

சிஎஸ்கேவுக்கு நெருக்கடி

சிஎஸ்கே பிளேஆஃப் செல்லும் ஒரே வாய்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே அணி ருதுராஜ் கேப்டன்ஷியில் அடுத்தடுத்து வாங்கிய தோல்விகள், வீரர்களின் மோசமான செயல்பாடு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு ஆகியவற்றால் முதல் போட்டியில் மட்டும் வென்ற சிஎஸ்கே அடுத்த 5 தோல்விகளை சந்தித்து மோசமான நிலைக்கு சென்றது.

காயம் காரணமாக ருதுராஜ் தொடரிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி அணியை வழிநடத்துகிறார்.

தோனி வழிநடத்திய முதல் போட்டியில் மோசமாக தோற்ற நிலையில் 2வது போட்டியில் சிஎஸ்கே வென்றது. மூன்றாவதாக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது.

இதுவரை சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். அவ்வாறு அடுத்துவரும் 6 போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றால் 12 புள்ளிகள் பெறும் ஏற்கெனவே 4 புள்ளிகளுடன் சேர்த்து 16 புள்ளிகள் பெறும். ஆனால் 16 புள்ளிகள் வைத்திருந்தால் நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளேஆஃப் வாய்ப்பு அமையும். ஆகவே, நிகர ரன்ரேட்டையும் பராமரிக்க வேண்டிய நெருக்கடி சிஎஸ்கேவுக்கு உள்ளது.

அடுத்ததாக இம்மாதம் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது.

பேட்டிங்கில் சிஎஸ்கே அணியை விழுங்கிவிடும் வகையில் அசுரத்தனமாக இருக்கும் சன்ரைசர்ஸ் அணி, பந்துவீச்சிலும் பெரிய படையை வைத்துள்ளதால், சன்ரைசர்ஸை சாய்ப்பது சிஎஸ்கேவுக்கு சாதாரண விஷயமல்ல.

வரும் 30-ம் தேதி சேப்பாக்கத்தில் ஸ்ரோயஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே அணி. ஏற்கெனவே பஞ்சாப்பிடம் தோற்ற சிஎஸ்கே 2வது ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் மோதுகிறது.

மே மாதம் 3-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

முதல் லீ்க்கில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியிருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கும். ஆனால் பழிதீர்க்கும் வகையில் சிஎஸ்கே விளையாடினால் வெற்றி பெறலாம்.

சிஎஸ்கே பிளேஆஃப் செல்லும் ஒரே வாய்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images

மே 7-ம் தேதி கொல்கத்தாவில் கொல்கத்தா அணியுடனும், மே12-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணியுடனும், 18-ம் தேதி ஆமதாபாத் நகரில் குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இந்த 3 அணிகளில் 2 அணிகளிடம் ஏற்கெனவே சிஎஸ்கே அணி உதைபட்டுள்ளதால் சவாலாகவே இருக்கும். அடுத்துவரும் சிஎஸ்கேயின் 7 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நடப்பது மட்டும்தான் ஆறுதலானது.

சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியதில் 6 முறை சேஸிங் செய்து அதில் ஒருமுறை மட்டுமே வென்றது. அதிலும் 180 ரன்களுக்கு மேல் அதிகமான ஸ்கோரை சிஎஸ்கே சேஸ் செய்யவில்லை.

சிஎஸ்கேவின் நடுப்பகுதி பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. தோனி வந்துதான் பினிஷ் செய்ய வேண்டிய எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. பல வீரர்களை மாற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதனை முயற்சியில் சிஎஸ்கே இருக்கிறது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றியும் பெறலாம், கையையும் சுட்டுக்கொள்ளலாம்.

தோனியின் தலைமையில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், அது கடினமான பாதை.

சிஎஸ்கே ப்ளேஆஃப் வாய்ப்பு கணக்கீட்டளவில் கடினம், நம்பிக்கையளவில் வாய்ப்புள்ளது. சிஎஸ்கேயின் ஆட்டம் அடுத்த 6 போட்டிகளில் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும்.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியை ஒப்பிடும்போது நிகர ரன்ரேட்டில் +0.483 என இருப்பது ஆறுதலானது.

மும்பை அணிக்கு 6 போட்டிகள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றால் புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளின் நிலையை வைத்து ஒருவேளை ப்ளே ஆஃப் செல்லலாம். 5 போட்டிகளில் வென்றால் 18 புள்ளிகளுடன் மும்பை அணி சிரமமின்றி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

மும்பை அணியின் நிகர ரன்ரேட் ஓரளவு பராவாயில்லை என்ற ரகத்தில் இருக்கிறது. தொடர்ந்து 5 போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் நல்ல ரன்ரேட்டில் 16 புள்ளிகளுடன் இருந்தாலே ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

மும்பை அணி 27-ம் தேதி லக்னெள அணியுடனும், மே 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் மும்பை விளையாடுகிறது.

மே 6-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும், 11-ம் தேதி பஞ்சாப் அணியுடனும், 15-ம் தேதி டெல்லி அணியுடனும் மும்பை மோதுகிறது. மும்பை அணி அடுத்து மோதவுள்ள 6 போட்டிகளில் 3 போட்டிகளை வான்கடே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.

முன்னணியில் ஆர்சிபி

பட மூலாதாரம், Getty Images

முன்னணியில் ஆர்சிபி

ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன் ரேட் பிளஸ் 0.472 என சிறப்பாக இருக்கிறது.

ஆர்சிபி சிக்கலின்றி ப்ளே ஆஃப் வாயப்பை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் இன்னும் 3 வெற்றிகள் மட்டுமே தேவை.

ஆர்சிபி அணிக்கு அடுத்துவரக் கூடிய 6 போட்டிகளில் 4 போட்டிகள் பெங்களூருவில் நடக்கின்றன. எல்லா அணிகளுக்கும் சொந்த மைதானம் சாதகம் என்றால் நடப்பு சீசனில் ஆர்சிபியைப் பொருத்தவரை அது நேரெதிராக உள்ளது. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் வெளியூர் மைதானங்களில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ள ஆர்சிபி, சொந்த மைதானத்தில் நடந்த 3 போட்டிகளிலும் தோறுள்ளது.

மே 3-ஆம் தேதி சிஎஸ்கே அணியுடன் மோதும் ஆட்டம் ஆர்சிபிக்கு முக்கியமாகும்.

சென்னையில் சிஎஸ்கே அணியை 17 ஆண்டுகளுக்குப் பின் வீழ்த்தியதால், அடிபட்ட சிங்கமாக சிஎஸ்கே வரும் என்பதால் அந்த ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும்.

டெல்லியில் 27-ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், லக்னெளவில் மே 9-ஆம் தேதி லக்னெள அணியுடனும், முலான்பூரில் 20-ஆம் தேதி பஞ்சாப் அணியுடனும் ஆர்சிபி வெளி மைதானங்களில் மோதுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு நெருக்கடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே போலவே நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுமே நெருக்கடியில் சிக்கியுள்ளளன. தலா 4 புள்ளிகளுடன் அந்த இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.

கடந்த சீசனில் 2வது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி 2 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளில் 9வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனஸில் இருக்கிறது. ஆதலால், சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 7 ஆட்டங்களில் மாபெரும் 6 வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடிய 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டிலும் மைனஸில்தான் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. அந்த 6 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றால்தான் ப்ளே ஆஃப் ரேஸில் 16 புள்ளிகளுடன் நிற்க முடியும்.

குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

முதலிடத்திற்கு 5 அணிகள் கடும் போட்டி

குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் அணி முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி கேபிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவற்றில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் கூடுதலாக ஒரு ஆட்டம், அதாவது 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.

முதலிடத்தைப் பிடிக்க இந்த 5 அணிகளும் கடுமையாக முட்டி மோதும் நிலையில் அடுத்து வரவிருக்கும் ஆட்டங்கள் இந்த அணிகளுக்கு முக்கியமானவை. புள்ளி பட்டியலில் இரண்டாவது பாதியில் இருக்கும் அணிகள் பிளேஆஃப் வாய்ப்புக்கு போட்டியிடும் நிலையில், இந்த அணிகள் முதலிடத்திற்கு மோதுகின்றன. அடுத்து வரும் ஒவ்வொரு ஆட்டமும் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU