SOURCE :- BBC NEWS

மாற்றங்களை முன்னெடுத்த பழமைவாதி – போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் சாதித்தது என்ன?

9 நிமிடங்களுக்கு முன்னர்

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துகள்” தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.

சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, “அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்” என்று கூறினார்.

ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

“அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்” என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.

”இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது”

”நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்” எனவும் அவர் கூறியுள்ளார்.

போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.

உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.

இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU