SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் – NCERT ) வெளியிட்ட 7 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானியம் பற்றிய எந்தக் குறிப்பும் அளிக்கப்படவில்லை.
இதுவரை இந்தப் புத்தகத்தில் முகலாயப் பேரரசு மற்றும் டெல்லி சுல்தானகம் குறித்து சுருக்கமான பாடங்கள் இருந்தன.
ஆனால் 2025-26 ஆண்டுக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்திலிருந்து இந்தப் பாடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது.
பல வகுப்புகளுக்கான புத்தகங்கள் இன்னும் வந்து சேரவில்லை.

முகலாயர்கள் மற்றும் சுல்தான்களின் காலம் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கம்

பட மூலாதாரம், NCERT
7 ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில் ஐந்து தலைப்புகளின் கீழ் 12 பாடங்கள் உள்ளன.
அதன் முதல் தலைப்பு ‘இந்தியாவும் உலகமும்: நிலமும் மக்களும்’ என்பதாகும். அதில் மூன்று பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் புவியியல் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, இந்தியாவின் வானிலை மற்றும் காலநிலையைப் பற்றியதாக அதன் உள்ளடக்கம் உள்ளது.
‘கடந்த கால அடுக்குகள்’ என்பது அதன் இரண்டாவது தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இந்தப் பகுதியில் வரலாற்று விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
‘புதிய தொடக்கங்கள்: நகரங்கள் மற்றும் அரசுகள், பேரரசுகளின் எழுச்சி, மறுசீரமைப்பின் சகாப்தம், குப்தர்களின் காலம்: முடிவில்லா படைப்பாற்றலின் காலம்’ போன்றவை அதன் பாடங்களாக உள்ளன.
‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்’, ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்’ மற்றும் ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார அறிவு’ போன்றவை அந்தப் புத்தகத்தில் அடுத்தடுத்த தலைப்புகளாக உள்ளன.
என்.சி.ஆர்.டி புத்தகத்திலிருந்து முகலாய மற்றும் சுல்தானிய ஆட்சிக்காலங்கள் குறித்த குறிப்புக்கள் நீக்கப்பட்டிருந்தாலும், தென்னிந்தியாவின் ஆட்சியாளர்கள் குறித்த குறிப்புக்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி, இந்தப் பாடநூலில் மௌரியப் பேரரசின் உருவாக்கம் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகரின் எழுச்சியைப் பற்றிக் குறிப்பிடும் இந்த பாடம் , அந்த காலகட்டத்தின் வாழ்க்கை முறை பற்றிய விளக்கத்தையும் தருகிறது.
‘மறுசீரமைப்பு காலம்’ என்ற தலைப்பிலான அடுத்த அத்தியாயம், சுங்க, சாதவாகன, யதி, சோழ, சேர, பாண்டிய மற்றும் குஷான் போன்ற வம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்தப் பாடப்புத்தகத்தில் குப்த வம்சம் பற்றிய ஒரு அத்தியாயமும் உள்ளது.
இந்தப் புத்தகத்தில் ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்’ என்று மூன்றாவது தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ‘இந்த நிலம் எவ்வாறு புனிதமானது’ என்ற ஒரு அத்தியாயமும் அதில் உள்ளது.
மத ரீதியான வழிபட்டு தலங்கள் , புனித யாத்திரைகள் மற்றும் புனித தலங்களின் முக்கியத்துவத்தை புத்தகத்தின் இந்த பகுதி ஆய்வு செய்கிறது.
இந்தப் பாடத்தின் ஒரு பகுதி கும்பமேளா பற்றி கூறுகிறது. அதில், இந்த ஆண்டு, (அதாவது 2025 ஆம் ஆண்டு) நடைபெற்ற கும்பமேளாவில் 66 கோடி மக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டின் 7 ஆம் வகுப்பு என்.சி.ஆர்.டி சமூக அறிவியல் புத்தகத்தில், டெல்லி ஆட்சியாளர்கள் பற்றிய விரிவான பாடம் இருந்தது.
அது கில்ஜி மற்றும் துக்ளக் வம்சங்களின் ஆட்சி முறையைப் பற்றிக் குறிப்பிட்டது. முகலாயர்களின் நிர்வாகம் பற்றிய பாடமும் அதில் இடம் பெற்றது.
முகலாயர்களைப் பற்றிய பாடத்தில், அவர்கள் வம்சத்தின் வரலாறு மற்றும் முகலாயர்களின் ராணுவப் பிரச்சாரங்கள் பற்றிய விரிவான விளக்கம் இருந்தது.
இந்தப் பாடப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் இந்தப் பாடங்கள் இருந்தன. இதுவரை குறிப்பிட்ட இந்த சமூக அறிவியல் புத்தகத்தின் முதல் பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற காலகட்டங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று என்.சி.ஆர்.டி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து அரசாங்கம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
இந்த புத்தகத்தின் இரண்டாம் பகுதி அடுத்த சில மாதங்களில் வெளி வரும் என்று அதிகாரிகள் கூறியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், வெளிவர உள்ள இரண்டாம் பாகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய பாடம் இடம் பெறுமா இல்லையா என்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து கல்வி நிபுணரும் உத்கல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான சஞ்சய் ஆச்சார்யா கூறுகையில்,
“அனைத்து புத்தகங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. எந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன, எந்த பாடங்கள் நீக்கப்படவில்லை என்பது குறித்து அனைத்து புத்தகங்களும் வெளியிடப்பட்டால் மட்டுமே விவாதிக்க முடியும்” என்றார்.
மத்திய அரசின் கல்வி இணை அமைச்சர் சுகாந்த் மஜும்தாரிடம் என்.சி.ஆர்.டி புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் முகலாய காலத்தை நீக்கியது குறித்து கேட்டபோது, முகலாயர் காலம் புத்தகத்திலிருந்து நீக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்த கருத்துக்கள் தான் நீக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
“அது நீக்கப்படவில்லை. திரும்பத் திரும்ப வரும் கருத்துக்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. ஒரே கருத்து மீண்டும் மீண்டும் வரக்கூடாது. முகலாய காலம் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால் மற்ற காலகட்டங்களுக்கும் அதே முக்கியத்துவம்
கொடுக்கப்பட வேண்டும்” என்று சுகாந்த் மஜும்தார் கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
“முகலாய காலம் இந்திய வரலாற்றின் இருண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. அது கற்பிக்கப்பட வேண்டும், ஆனால் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் கூறப்படக்கூடாது. சமநிலையான பார்வை பெறுவதற்கு, பிற வம்சங்கள் மற்றும் பேரரசுகளின் வரலாறும் உரிய முக்கியத்துவம் பெற வேண்டும்” என்றும் சுகந்த மஜும்தார் கூறினார்.
மேலும் வரலாற்றுப் புத்தகங்களில் முகலாய ஆட்சியாளர்களுக்கு அதிக இடம் கொடுத்து, மற்ற பேரரசுகளைப் புறக்கணிப்பது பற்றிய கேள்வி இந்தியாவில் எழுப்பப்பட்டுள்ளது.
கேள்வி எழுப்பியுள்ள திரைப்பட நடிகர் ஆர். மாதவன்
தான் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் தென்னிந்திய வரலாறு புறக்கணிக்கப்பட்டதாக திரைப்பட நடிகர் ஆர். மாதவன் சமீபத்தில் கூறியுள்ளார்.
தென்னிந்திய வரலாற்றுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“இதைச் சொல்வதால் நான் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். ஆனாலும் நான் இதைக் கூறுவேன். நான் பள்ளியில் வரலாறு படிக்கும் போது, முகலாயர்களைப் பற்றி எட்டு அத்தியாயங்களும், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரிகங்களைப் பற்றி இரண்டு பாடங்களும், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் இந்தியாவின் சுதந்திர இயக்கம் பற்றி நான்கு அத்தியாயங்களும் இருந்தன. ஆனால் சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர வம்சம் போன்ற தென்னிந்திய ராஜ்ஜியங்களைப் பற்றி ஒரே ஒரு பாடம் மட்டுமே இருந்தது ” என்று ஆர். மாதவன் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
சோழ வம்சம் 2400 ஆண்டுகள் பழமையானது என்றும், முகலாயர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் மொத்தம் 800 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் ஆர். மாதவன் கூறினார்.

இவ்வாறு வரலாற்றுப் புத்தகங்களில் தென்னிந்திய வரலாற்றுக்குக் குறைவான இடம் கொடுக்கப்படுவது குறித்து ஆர். மாதவன் சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழைய என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் டெல்லி சுல்தானகம் மற்றும் முகலாயர்கள் பற்றி ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்கள் இருந்தபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சி பற்றி பல அத்தியாயங்கள் இருந்தபோது ஹரப்பா பற்றியும் ஒரு அத்தியாயம் இருந்தது.
பழைய புத்தகங்களில் தென்னிந்திய வம்சங்களுக்கு குறைந்த இடம் மட்டுமே வழங்கப்பட்டது.
“சோழ வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், வாசனை பொருட்கள் ரோம் வரை சென்றது. அவர்கள் கடல் போக்குவரத்தின் முன்னோடியாக இருந்தனர். ஆனால் நமது வரலாற்றில் இந்தப் பகுதி எங்கே? அங்கோர் வாட் வரை நமது கோயில் கட்டப்படுவதும் நமது சக்திவாய்ந்த கடற்படையும் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?” என்று வரலாற்றுப் புத்தகங்கள் குறித்து ஆர். மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் பள்ளி பாடத்திட்டப் புத்தகங்களிலிருந்து முகலாய காலம் குறித்த கருத்துக்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில், 7 ஆம் வகுப்பு புத்தகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அதில் தென்னிந்திய வம்சங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்திலிருந்து முகலாயர்கள் தொடர்பான அத்தியாயங்களை என்.சி.இ.ஆர்.டி நீக்கியது.
‘இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள்’ என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில், “மன்னர்கள், வரலாறு மற்றும் முகலாய அரசவை” என்ற ஒன்பதாவது அத்தியாயம் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது.
அப்போது, பாடப்புத்தகங்களில் இருந்து முகலாய காலத்தை நீக்குவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது, மாணவர்கள் மீதான பாடத்திட்டச் சுமையைக் குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக என்.சி.இ.ஆர்.டி கூறியது.
பாடப்புத்தகங்களில் இதற்கு முன்பும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2000 இன் கீழ் பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
பின்னர் 2002-2003 ஆண்டின் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் முகலாயப் பேரரசு பற்றிய உள்ளடக்கம் குறைக்கப்பட்டது.
இடைக்கால இந்தியா தொடர்பான அத்தியாயங்கள் மாற்றப்பட்டு, பாடப்புத்தகங்களில் இந்து மன்னர்களுக்கு இடம் வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில், முகலாயர்கள் தொடர்பான பாடங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களிலிருந்து நீக்கப்படவில்லை, ஆனால் அவற்றின் தொனி மாற்றப்பட்டது.
உதாரணமாக, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கோயில்களைத் தாக்கிய ஆட்சியாளராக சித்தரிக்கப்பட்டார்.
இருப்பினும், பாடத்திட்டத்தில் ஔரங்கசீப்பின் ஆட்சியின் நிர்வாக அமைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் இந்திய வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று, வரலாற்றாசிரியர்கள் ரொமிலா தாப்பர் மற்றும் இர்ஃபான் ஹபீப் ஆகியோர் 2021 ஆம் ஆண்டில் கூறினர்.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் குறித்த தகவல்களை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவது, இந்திய கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை நீக்குவதாகும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மீண்டும் முகலாயர்கள் குறித்த கருத்துக்களை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கியுள்ள நடவடிக்கை, ‘பாடப் புத்தகங்களை காவிமயமாக்குதல்’ குறித்த விவாதம் தொடங்குவதற்கு காரணமாக அமையலாம்.
“ஏழாம் வகுப்புப் புத்தகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் இறுதியானவை என்றால், முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் குறித்த தகவல்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தால், அது மிகவும் தவறு, ஏனென்றால் வரலாற்றின் ஒரு பகுதியை எந்தப் பாடத்திட்டத்திலிருந்தும் அப்படியே நீக்க முடியாது” என்கிறார் வரலாற்றாசிரியர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி வந்து முகலாயர்களுக்கும் சுல்தான்களுக்கும் இடம் கொடுத்தாலும், அவர்களுக்கு எவ்வளவு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
இடைக்காலம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும், அதை அப்படியே வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது” என்றும் கூறுகிறார்.
“வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும், அது பண்டைய வரலாறாக இருந்தாலும் சரி, இடைக்கால வரலாறாக இருந்தாலும் சரி, புத்தகங்களில் போதுமான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மிகவும் திறமையான வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட பழைய வரலாற்று புத்தகங்களில், அனைத்து மதங்கள், பேரரசுகள் மற்றும் வம்சங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.”
வரலாற்றின் ஒரு பகுதியை நீக்குவது குறித்து கேள்விகளை எழுப்பி, “குழந்தைகளுக்கு வரலாற்றை பகுதியளவு மட்டுமே கற்பிப்போமா? குழந்தைகள் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படிப்பார்களா? வரலாறு என்பது வரலாறு, அதை இப்படி சிதைக்க முடியாது” என்கிறார் மிருதுளா.

பட மூலாதாரம், NCERT
இதற்கிடையில், புத்தகங்களிலிருந்து முகலாய வரலாறு நீக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று முன்னாள் என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் பேராசிரியர் ஜே.எஸ். ராஜ்புத் கூறுகிறார்.
பேராசிரியர் ராஜ்புத் கூறுகையில், “இந்த விமர்சனம் அறியாமையால் முன் வைக்கப்படுகின்றது. புதிய உண்மைகள் வெளிவந்தால், புத்தகங்கள் மாற்றப்படும்.
முகலாயர்கள் குறித்த கருத்துக்கள் நீக்கப்படுகின்றன என்பது அடிப்படையற்ற கருத்து. ஒருவர் முகலாயர்களை வரலாற்றிலிருந்து நீக்க வேண்டும் என்று விரும்பினாலும், அந்த குறிப்புகளை நீக்க முடியாது”என்றார்.
“இப்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் போலவே, எனது பதவிக் காலத்திலும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளேன்.
இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாக வெளிவர உள்ளது. அனைத்து பகுதிகளும் வெளியிடப்பட்ட பின்னரே விமர்சனம் செய்யப்பட வேண்டும்” என்று பேராசிரியர் ராஜ்புத் கூறுகிறார்.
முகலாயர்கள் குறித்த பாடங்களை நீக்குவது குறித்த கேள்விக்கு, பேராசிரியர் ராஜ்புத் பதில் அளிக்கையில்,
“வரலாற்றில் முகலாயர்கள் எப்படி காட்டப்பட வேண்டுமோ அப்படித்தான் காட்டப்படுவார்கள்.
முப்பத்தைந்து ஆண்டுகளாக என்.சி.ஆர்.டி ஒரு சித்தாந்தத்தின் செல்வாக்கின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது விஷயங்கள் சரி செய்யப்படும்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஒரு இடம் வழங்கப்படுகிறது.
வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவுக்கு வரலாற்றில் இடம் வழங்கப்படவில்லை, இப்போது அவர்களுக்கு இடம் வழங்கப்படுகிறது.” என்றார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், “என்.சி.ஆர்.டி எந்த அரசியல் கட்சியின் நிறுவனமும் அல்ல, மாறாக நாட்டின் நலனுக்காக செயல்படுகிறது. தேவையான மாற்றங்கள் புத்தகங்களில் செய்யப்படும்.” என்றும் கூறினார்.
தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
நரேந்திர மோதி அரசாங்கம் பாடப்புத்தகங்களை காவிமயமாக்குவதாக எதிர்க்கட்சிகளும் விமர்சகர்களும் முன்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும், அரசாங்கம் அத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து எதையும் நீக்கும் திட்டம் இல்லை என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வை முகலாய படையெடுப்பாளர்களின் வெற்றிகளுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் வரலாற்றுப் புத்தகங்களில் இந்து மன்னர்களுக்குப் போதுமான இடம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பி வருகின்றன.
மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் கதை சமீபத்தில் வெளியான ‘சாவா’ திரைப்படத்தில் காட்டப்பட்டது.
இந்தப் படம் வெளியானதற்கு பிறகு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பல பாஜக தலைவர்கள் முன் வைத்தனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில்
வெளியிட்ட அறிக்கையில், “நமது வரலாற்றுப் புத்தகங்களில், ஔரங்கசீப் போன்ற கொடூரமான மற்றும் இரக்கமற்ற ஆட்சியாளர் புகழப்பட்டுள்ளார். இந்தத் திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் காரணமாக, சிலர் ஔரங்கசீப்பை ஒரு ஹீரோவாகக் காட்ட முயற்சிக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC