SOURCE :- BBC NEWS

மருத்துவக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, முக்கியச் செய்திகள், தனிநபர் நிதி

பட மூலாதாரம், Getty Images

மாத இறுதியில் அனைத்து ஈ.எம்.ஐக்களும், வரிகளும் முழுமையாகச் செலுத்தப்படுகின்றன.

அந்த மாதத்தில் நிதியை நிர்வகிக்கும் நபர், நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று பட்ஜெட்டை தயாரிக்கிறார். அதன் அடிப்படையில் அடுத்த மாதத்துக்கு மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஆண்டுக்கும் சேர்த்து செலவுகளைத் திட்டமிடுகிறார்.

குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வு போன்ற அனைத்தையும் முன்கூட்டியே யோசிப்பவர் யார் தெரியுமா?

வேறு யாருமில்லை… நீங்கள் தான்!

குடும்பத்தைப் பற்றி இவ்வளவு யோசிக்கும் நீங்கள், எப்போதாவது உங்களைப் பற்றி அக்கறையோடு யோசித்திருக்கிறீர்களா ?

உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் மதிப்பு தெரியும், ஆனால் அதை நீங்கள் எப்போதாவது உண்மையாக உணர்ந்திருக்கிறீர்களா?

குறைந்தபட்சம் 2025 ஆம் ஆண்டிலாவது உங்களுக்கான திட்டமிடலைத் தொடங்குங்கள்.

உயிரோடு இருக்கும்போதும் சரி, உயிரிழந்த பிறகும் சரி… இப்போது இருப்பதை போலவே, நீங்கள் என்றும் நாயகனாகவே இருங்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஊழியர்கள் பொதுவாக தனிப்பட்ட காப்பீடு குறித்து அதிகமாக கவலைப்படுவதில்லை.

நிறுவனம் வழங்கும் சில சிறிய காப்பீட்டுத் தொகையை வைத்து சமாளித்துக் கொள்ளும் அவர்கள், ஆயுள் காப்பீடு போன்ற முக்கியமான ஒன்றைப் பற்றி கவலைப்படுவதில்லை.

விபத்துக் காப்பீடு, தீவிர சிகிச்சை மற்றும் மகப்பேறு காப்பீடு போன்றவற்றைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதனால் நீங்கள் திட்டமிட வேண்டிய காப்பீட்டுக் கொள்கைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு இல்லையென்றால், நீங்கள் பல ஆண்டுகளாக சேர்த்த அனைத்து சொத்துக்களும் சில நாட்களுக்குள் கரைந்துவிடும், கவனமாக இருங்கள்.

இந்தியாவில் மருத்துவ செலவுகள் வருடத்துக்கு சராசரியாக 14 சதவிகிதம் உயருகின்றன என்று, 2024ம் ஆண்டில் வெளியான வாட்சன் குளோபல் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

அதாவது, இன்று ரூ.10,000 செலவாகும் ஒரு சிகிச்சைக்கு, அடுத்த வருடம் ரூ.11,400 செலவாகும் என்பது தான் அதன் பொருள்.

இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில், சிகிச்சைக்கான செலவுகள் எவ்வளவு அதிகரிக்கப் போகின்றன என்பதற்கான விளக்கத்தைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களால் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது ஒரு நல்ல முன்னேற்றம் தான். இன்று நம்மில் பலர் 80 வயதுக்கும் மேல் வாழ்கிறோம்.

ஆனால், நாம் உயிருடன் இருக்கும் வரை நமக்கு ஏற்படக்கூடிய சிறிய உடல்நலப் பிரச்னைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் அவற்றுக்கான செலவுகளுக்கு யார் பொறுப்பேற்கிறார்கள்? இதைப்பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

ஆயுட்காலத்தை அதிகரிப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், அதற்கேற்ப நாம் திட்டமிடவில்லை என்றால் அது எதிர்காலத்தில் சவாலாக மாறிவிடும்.

மருத்துவக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, முக்கியச் செய்திகள், தனிநபர் நிதி

பட மூலாதாரம், boonchai wedmakawand

என்ன செய்ய வேண்டும் ?

குறைந்தபட்சம் ரூ.10-15 லட்சம் மதிப்புள்ள குடும்ப மருத்துவக் காப்பீடு திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மகப்பேறு, தீவிர நோய், வெளி நோயாளி சிகிச்சை போன்ற கூடுதல் காப்பீட்டுத் திட்டங்களையும் பரிசீலியுங்கள்.

வாழ்நாள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு செலுத்த வேண்டிய தொகைக்கு உச்சவரம்பு இல்லாத மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

கூடுதல் குறிப்பு – ரூ.5 லட்சம் தள்ளுபடி உடன் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சூப்பர் டாப்-அப் காப்பீட்டை வாங்குங்கள். இதற்கு உங்களுக்கு ரூ.2500-4000 வரை செலவாகும்.

டெர்ம் இன்ஸ்யூரன்ஸ்

உங்கள் முழு குடும்பமும் உங்களைச் சார்ந்திருந்தால், நீங்கள் நிச்சயமாக கால ஆயுள் காப்பீட்டை (டெர்ம் இன்சூரன்ஸ்) எடுக்க வேண்டும். இதுதான் தற்போது சந்தையில் உள்ள மிகவும் மலிவான காப்பீட்டுத் திட்டமாகும்.

உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள் என்ற எண்ணத்தில் யூலிப் (ULIP: Unit Linked Insurance Plans- யூலிப் திட்டம் என்பது முதலீடு மற்றும் காப்பீடு என இரண்டு அம்சங்களை ஒன்றாக கொண்ட ஒரு முதலீட்டு அம்சம்) மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

மலிவு விலையில் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த திட்டம் மட்டுமே ஒரே வழி.

எந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்?

உங்கள் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 15-20 மடங்கு வருமானத்தை வைத்து காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

(உதாரணமாக, உங்களது ஆண்டு சம்பளம் ரூ. 5 லட்சமாக இருந்தால், ரூ. 50-75 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு)

65 வயது வரை பணம் செலுத்தி, அதிகபட்சம் 80 வயது வரை காப்பீடு வழங்கும் திட்டங்களை தேர்ந்தெடுக்கவும்.

இந்தக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளக்கூடிய குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 60 அல்லது 65 ஆகவும் உள்ளது.

முடிந்தால், விபத்து பாதுகாப்பு மற்றும் தீவிர நோய்களுக்கான காப்பீடுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, முக்கியச் செய்திகள், தனிநபர் நிதி

பட மூலாதாரம், Getty Images

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திட்டங்கள்

கால ஆயுள் காப்பீடு (டெர்ம் பாலிசி) எடுப்பதற்கு தாமதிக்காதீர்கள்.

உங்களுக்கு வயதாகும் போது காப்பீட்டுத் தொகையும் 10-15 சதவிகிதம் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விபத்து காப்பீடு

நம்மில் பலருக்கும் இது குறித்து தெரியாது. ஆனால் இவை மிகவும் முக்கியமானவை.

தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) 2022ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒருவர் விபத்துகளால் ஒரு மூட்டு அல்லது கையை இழந்து நிரந்தரமாக மாற்றுத்திறனாளியாகிறார்.

பொதுவாக, ஆயுள் காப்பீடோ அல்லது வேறு எந்தவொரு விபத்து கொள்கையோ, எதுவாக இருந்தாலும், விபத்துகளால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக மாறினால் காப்பீடு வழங்கப்படாது.

ஏனென்றால், விபத்து ஏற்பட்டால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள். அப்போது ஏற்படும் மருத்துவச் செலவுகளை மருத்துவக் காப்பீடு ஈடுகட்டும்.

ஒரு விபத்தில் உங்கள் உடலின் ஒரு பாகம் நிரந்தரமாக பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? சில மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலை வந்தால் என்ன செய்வது?

அல்லது வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய முடியாது எனும் சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இது போன்ற ஒரு கடினமான சூழ்நிலையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அதனால் தான் இதுபோன்ற விபத்துக் காப்பீட்டுத் திட்டங்கள் அவசியம்.

இவற்றின் மூலம்,

  • நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டால் பெரிய தொகை வழங்கப்படும்.
  • தற்காலிகமாக பாதிக்கப்பட்டால், அந்த காலத்துக்கு வாரந்தோறும் ஒரு நிலையான வருமானமும் வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் வரையிலான காப்பீட்டுக்கு, அதிகபட்சம் ரூ.1000 மட்டுமே செலவாகும் .

வெறும் ரூ.400 முதல் ரூ.500 வரை செலுத்தினாலே, பெரும்பாலான வங்கிகள் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.19 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை தற்செயல் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் நிரந்தரமாக பாதிக்கப்பட்டால் மட்டுமே காப்பீடு வழங்குகிறது .

18 முதல் 70 வயதுக்குள் உள்ள யார் வேண்டுமானாலும் இந்தக் காப்பீட்டை பெறலாம்.

உங்களுக்கு, உங்களின் வாழ்க்கைத் துணைக்கு, குழந்தைகள் என உங்களது குடும்பத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, முக்கியச் செய்திகள், தனிநபர் நிதி

பட மூலாதாரம், Getty Images

தீவிர நோய்

புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டால், இந்த தீவிர நோய்க் காப்பீட்டுத் திட்டங்கள் போதுமான ஆதரவை வழங்குகின்றன.

நீங்கள் எந்த வகையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்தாலும், எவ்வளவு பெரிய தொகைக்கு முதலீடு செய்தாலும் பொதுவாக மருத்துவமனை செலவுகளுக்கு மட்டுமே காப்பீடு உண்டு.

ஆனால் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், மருத்துவமனை சாரா பிற தேவைகளுக்கு அதிகமாக செலவாகும். உதாரணமாக, மருத்துவமனைக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, வேறொரு மருத்துவரின் ஆலோசனை, வேலை செய்ய இயலாத நிலை, இதனால் ஏற்படும் வருமான இழப்பு போன்ற சூழல்கள் ஏற்படும்.

அதனால் தான், தீவிர நோய் காப்பீட்டுத் திட்டம் சுமார் 30 முதல் 60 முக்கியமான கடுமையான உடல்நலக் குறைகளுக்கு ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது. நோய் கண்டறியப்பட்டவுடன், நீங்கள் மேற்கொள்ளும் மருத்துவச் செலவுகள் எவ்வளவு இருப்பினும், ஒரு பெரிய தொகை நேரடியாக உங்களுக்கு வழங்கப்படும்.

இந்தக் காப்பீடு குறைந்தபட்சம் ரூ. 10 முதல் 25 லட்சம் வரை இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முடிந்தால், ஒரு தனி காப்பீட்டு திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இல்லையெனில், அதை ‘கால ஆயுள் காப்பீட்டோடு’ , கூடுதல் காப்பீடாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, முக்கியச் செய்திகள், தனிநபர் நிதி

பட மூலாதாரம், Getty Images

மகப்பேறு மற்றும் கருவுறுதல் காப்பீட்டுத் திட்டம்

குடும்ப திட்டமிடலுக்கு இந்தக் காப்பீடுத் திட்டங்கள் கட்டாயம் தேவை.

வழக்கமாக எந்த மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும் மகப்பேறு காப்பீட்டுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதிகபட்சம் ரூ. 25-50 ஆயிரம் அளித்துவிட்டு, பிறகு அந்நிறுவனங்கள் கைவிட்டுவிடுகின்றன.

மேலும், இந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஐவிஎஃப் மற்றும் கருவுற இயலாமை போன்ற பிரச்னைகளை பெரிதாக கருத்தில் கொள்வதில்லை.

அதனால், ரூ. 1-2 லட்சம் மதிப்பிலான மகப்பேறு காப்பீடு கொண்ட சில்லறை விற்பனைத் திட்டங்களைத் தேடுங்கள்.

ஐவிஎஃப், கருவுற இயலாமை, மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சலுகைகள் சில நிறுவனங்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆகவே, அவற்றை தேர்ந்தெடுங்கள்.

இந்த காப்பீடுகளைப் பெறுவதற்காக காத்திருக்க வேண்டிய காலம் 2-4 ஆண்டுகளாக உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் குழந்தை பெற்றுக்கொள்ள அல்லது திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்தை விரைவில் முயற்சியுங்கள்.

இந்த காப்பீடு குறைந்தபட்சம் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும்போதாவது பயன்படும்.

இவ்வளவு பணம் காப்பீட்டுக்கு செலவாகும்போது, வேறு என்ன மிச்சம் இருக்கும்? எதை சேமிக்க முடியும் என பலரும் குழப்பம் அடைவார்கள்.

ஆனால், நாம் உயிரோடு இருந்து, வாழ்வில் முன்னேறினால் தானே எதையும் சாதிக்க முடியும்?

இதுவரை குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான காப்பீட்டுத் திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்தாலும், ஆண்டுதோறும் அதற்கு சுமார் ரூ. 25,000 தான் செலவாகும். அதாவது, மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ. 2200 மட்டுமே செலவாகும்.

வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், நோய், விபத்துகள், மருத்துவமனைச் செலவுகள் போன்றவை தவிர்க்க முடியாதவை.

அதனால், இன்றைய காலத்தில் காப்பீடு ஒரு ஆடம்பரப் பொருளல்ல. அதுதான் அனைவருக்கும் உயிர்நாடியாக உள்ளது.

குறிப்பு: இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் அளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன.

நிதி தொடர்பான எந்தவொரு முடிவுகளையும் மேற்கொள்ள நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU