SOURCE :- BBC NEWS
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
-
15 ஜனவரி 2025, 03:48 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரவில் எல்லோரும் தூங்கிய பிறகும் அலைபேசியை திறந்தபடி எதையாவது பார்க்கவும், வாசிக்கவும் தோன்றுகிறதா?. கண்கள் தாமே சோர்ந்து உறங்கும் வரை மனம் அமைதியிழந்தபடி உள்ளதா?.
இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்லை. பகல் நேரத்தில் தனக்கான நேரம் கிடைக்காமல் வேலையிலும், மற்றவர்களின் அழுத்தத்திலும் ஆளாகக் கூடியவர்கள் இரவில் தூக்கம் இழந்து தனக்கு பிடித்ததைச் செய்து அதிலேயே மூழ்கிக் கிடப்பது இப்போது அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் இந்தப் போக்கினை Revenge Bedtime Procrastination (தூக்கத்தை தள்ளிப் போட்டு பழிவாங்குதல்) என்று அழைக்கிறார்கள்.
தெரிந்தே இவ்வாறு தூக்கத்தை தள்ளிப்போடுவது தனியாக ஒரு நோயில்லை என்றாலும், இந்த வாழ்க்கை முறை சார்ந்த சிக்கல் வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நீங்களும் இதை செய்கிறீர்களா?
நீங்களும் இதை செய்கிறீர்களா என்று தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் ..
படுக்கைக்கு செல்லும் நேரத்தை தொடர்ந்து தாமதப்படுத்துதல்:
தொலைக்காட்சி அல்லது வெப் தொடர்களின் பல பாகங்களை தொடர்ந்து ஒரே நேரத்தில் பார்ப்பது (binge watching), சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்துக் கொண்டிருப்பது, தனிப்பட்ட பணிகளை முடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட, இரவு தூங்காமல் விழித்திருக்க முடிவு செய்யலாம்.
எதிர்மறை விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு:
இதில் ஈடுபடும் பலர் இரவில் வெகு நேரம் விழித்திருப்பது சோர்வை உண்டாக்கும், காலையில் எழுந்திருப்பது சிரமமாகும் என்பதை அறிவார்கள். ஆனாலும் அவர்கள் தூக்கத்தை விட ஓய்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறார்கள்.
கட்டுப்பாட்டு உணர்வு:
இப்படி செய்வது ஒருவரின் நேரத்தின் மீதான கட்டுப்பாட்டு உணர்வை வழங்கக் கூடும், குறிப்பாக மிக நெருக்கடியான வேலை சூழலை கொண்டவர்கள், தூக்கத்தை இழந்தாலும், இரவில் தாமதமாக விழித்திருப்பதால் தனக்கான நேரத்தின் மீதான அதிகாரம் கிடைத்திருப்பதாக உணர முடியும்.
செல்போன் இல்லாமல் தூக்கமே வருவதில்லை
“இரவில் செல்போனில் இரண்டு மணி நேரமாவது செலவிடுகிறேன். இதனால் தூக்கம் கெடுகிறது. ஆனாலும் செல்போன் இல்லாமல் தூங்கவே முடிவதில்லை” என்று கூறினார் அசோக் குமார்.
காணொளி பதிவாளராக பணியாற்றும் அவர், “தூங்கலாம் என்று படுக்கைக்கு சென்றாலும் உடனே தூக்கம் வராது. செல்போனில் இன்ஸ்டாகிராம், யூ டியூபில் வீடியோக்கள் பார்ப்பேன். இரவு 1 மணி அல்லது 2 மணிக்கு தூங்கி, எட்டு மணி நேரம் தூங்கி பின் எழும் போது, கிட்டத்தட்ட பாதி நாள் முடிந்துவிட்டது போலவே தோன்றும். நண்பர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருப்போம். இன்ஸ்டாகிராமில் வரும் ரீல்ஸ்களை மாற்றிமாற்றி பகிர்ந்து கொள்வோம், தனியாக ஒரு குழுவில் அது குறித்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம்” என்கிறார்.
இரவில், யூ டியூபில் வரும் முக்கியமான கருத்துகளை கொண்ட நேர்காணல்களை பார்க்கும் போது, நேரத்தை உபயோகமாக கழிப்பதாக உணர்வதாக கூறுகிறார் அசோக் குமார், “எப்படியும் தூக்கம் வரவில்லை, அந்த நேரத்தை சில நல்ல விசயங்களை கேட்பதற்கு பயன்படுத்தலாமே என்று தோன்றுகிறது” என்கிறார்.
எனக்கான நேரம் கிடைப்பதே இரவில்தான் என்பதால்,இந்த பழக்கத்தை விடமுடியவில்லை என்று கூறினார் சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக அவர் பணிபுரிகிறார்.
“நாள் முழுவதும் வேலை செய்து விட்டு வரும் போது, எனக்கான நேரம் தேவைப்படுகிறது. சில நாட்களில் எனக்கு இரவு 10 மணிக்கு தான் வேலை முடியும். அதன் பிறகு வீட்டு வந்து எனது இரவு உணவை சாப்பிடுவேன். படுக்கைக்கு செல்ல இரவு 11 மணி ஆகிவிடும். பத்து மணி வரை எனது மனதில் வேலை குறித்த எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கும், குறித்த கால அவகாசத்துக்குள் பேட்டிகளை எடுக்க வேண்டும், செய்திகளை கொடுக்க வேண்டும் என்று ஓய்வு எடுக்க முடியாது. அப்படி வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரத்தில் தூங்க வேண்டும் என்று நினைத்தால், என்னால் முடியவில்லை. வேலை, தூக்கம் இவை இரண்டுக்கும் இடையில் எனக்கான நேரம் தேவைப்படுகிறது. உடம்பு என்பது இயந்திரம் இல்லையே. 100 கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த வண்டி திடீரென அப்படியே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு. ஆனால் இப்படி செய்வதால் நான் என் தூக்கத்தை இழக்கிறேன் என்பது எனக்கு தெரியும், சில நேரங்களில் குற்றம் உணர்ச்சியாக கூட இருக்கும். எனினும் அந்த நேரம் எனக்கு தேவைப்படுகிறது” என்கிறார்.
மூத்த மன நல மருத்துவர் ஹேமா தரூர், இது தனியாக கண்டறியப்படும் நோயல்ல என்கிறார். “கவனக் குறைபாடு இருப்பவர்கள். தூக்கமின்மை கொண்டவர்கள் என்னிடம் வரும் போது அவர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. எனது தூக்கத்தை தள்ளி போடுவதற்கும், குறைப்பதற்கும் எனக்கு சுதந்திரம் உண்டு என்று அவர்கள் கூறுவார்கள். தற்போதுள்ள தலைமுறையினர், ‘FOMO -Fear of Missing Out’ என்று கூறுகிறார்கள், அதாவது தங்கள் நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் இருப்பதாகவும் அதனால் ஆன்லைனில் நேரம் செலவழித்து தொடர்பில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.” என்கிறார்.
பணிச்சுமை காரணமாக வரும் பழக்கம்
தொழில்நுட்பம் வேகமாக மாறிக் கொண்டே இருக்கும் காலத்தில் தொழில் சந்தையில் ஒருவர் தன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து கற்றுக் கொண்டு, புதிய திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum) கூறுகிறது.
எப்போதும் வேலையிலிருந்து மனதை அகற்ற முடியாததும் இந்த பழக்கத்துக்கான காரணம் என்று கூறினார் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெல்கின் அழகுநம்பி.
“ஐடி துறையில் பணிபுரிபவர் தொடர்ந்து புதிதாக விசயங்களை கற்றுக் கொண்டு தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் அவரது மனதில் வேலை சார்ந்த எண்ணங்கள், கேள்விகள் ஓடிக்கொண்டே இருக்கும். எனது மனதை வேலையிலிருந்து, நான் நினைத்தாலும் விலக்கி வைக்க முடியவில்லை. தூங்க வேண்டும் என்று நினைத்து படுக்கைக்கு சென்றாலும் மனம் வேலை சார்ந்த எண்ணங்களையே கொண்டுள்ளதால் தூங்க முடியவில்லை. எனவே ரீல்ஸ் பார்ப்பது, வெப் சீரீஸ் பார்ப்பது மூலம் எனது மனதை என்னால் திசை திருப்ப முடிகிறது. செல்போன் ஸ்கீரினை தள்ளிக் கொண்டே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பது எனக்கு தற்காலிக ஆறுதலாக இருக்கிறது. அப்படி செய்தால் தூக்கம் வந்துவிடும் என்ற நோக்கத்தில் தான் செல்போனை எடுப்பது.” என்று அவர் கூறினார்.
ஆண்கள் அதிக நேரம் செல்போனை வைத்துக் கொண்டு கழிவறையில் செலவிடுவது குறித்து பல மீம்ஸ்களை பார்த்திருப்போம். அது ஆண்கள் தனக்கான நேரத்தை தேடும் செயல் என்கிறார் அழகுநம்பி.
“அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகள் எல்லாவற்றையும் வீட்டில் வந்து கூற முடியாது. வீட்டில் பேச வேண்டிய விசயங்களே நிறைய இருக்கும். எனவே வேலைக்கும் வீட்டுக்கும் இடையில் எனக்கான நேரம் தேவைப்படுகிறது” என்கிறார்.
ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?
தூக்கத்தை இழந்து வெகு நேரம் செல்போனில் நேரம் கழிப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அறிவாற்றல் திறனையும் குலைக்கும் என்கிறார் மனநல மருத்துவர் லக்ஷ்மி விஜயகுமார்.
“நமது வாழ்க்கை முறை எவ்வளவு மாறியிருந்தாலும், நமது உடல் பல ஆயிரம் ஆண்டுகளாக இரவில் தூங்குவதற்கு தான் பழக்கப்பட்டுள்ளது. அதை வலுக்கட்டாயமாக மாற்றினால், உடலில் சுரப்பிகளின் சம நிலையின்மை உருவாகலாம். அதிக நேரம் ஸ்கிரீன் பார்த்துக் கொண்டிருந்தால், மூளையின் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று உலக அளவில் பல ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்கிரீனிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தை கண்கள் பார்க்கும் போது, இன்னும் இரவு நேரம் வரவில்லை என்று மூளை கருதும். எனவே உடல் ஓய்வு எடுக்க தயாராகாது.” என்கிறார்.
குறிப்பாக பதின்பருவத்தினரிடம் இந்த பழக்கம் அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார். ” இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, கூடுதலாக ஸ்கிரீன் பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஆண் பிள்ளைகளிடம் மூர்க்கத்தனமும், பெண் பிள்ளைகளிடம் பதற்றம் மற்றும் மன சோர்வு 10% அதிகரிக்கிறது. மேலும் தற்கொலை எண்ணம் தோன்றுவதும் அதிகரிக்கிறது.” என்கிறார்.
என்ன செய்ய வேண்டும் ?
ஆரோக்கியமான தூக்க பழக்கத்தை கொண்டிருக்க மருத்துவர்கள் சில அறிவுரைகளை கூறுகின்றனர். அவை :
- பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது
- அதிக நேரம் ஸ்கிரீன் (அலைபேசி, டி.வி.) பார்ப்பதை தவிர்ப்பது
- ‘மீ டைம்’ என்று கூறுவதை செல்போன் பார்க்கும் நேரமாக இல்லாமல் தூங்குவதற்கான நேரமாக மாற்றிக்கொள்வது
- செல்போன் பார்ப்பது அல்லாமல், இளைப்பாற வேறு சில விசயங்களை செய்வது
- இரவு 9 மணிக்கு பிறகு செல்போன், டிவி பார்ப்பதை தவிர்ப்பது
- சில செயலிகளில் நேரம் செலவிடுவதை கண்காணித்து கட்டுப்படுத்துவது.
- ‘ஸ்கிரீன் டைம்’க்கு பதிலாக ‘ஏர் டைம்’ எடுத்துக்கொள்ள வேண்டும் (ஏர் டைம் என்பது எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருப்பது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU