SOURCE :- BBC NEWS


பட மூலாதாரம், ANI
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் இன்று (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
”ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிடுபவர்களை தண்டிப்பதையும், பயங்கரவாத கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டிருந்தது” என்றார் ராஜீவ் கய்.

பட மூலாதாரம், ANI
‘100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்’
இந்தியாவின் முதல் கட்ட ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூரின்’ போது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராஜீவ் கய் கூறினார்.
மேலும், “துல்லியமாக குறிவைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், உயர்நிலையில் உள்ள பயங்கரவாதிகளான யூசுஃப் அசார், அப்துல் மாலிக் ரவுஃப் மற்றும் முதாஸ்ஸிர் அகமது ஆகியோரும் அடங்குவர்.” என்றார் அவர்
இந்த மூன்று பேருமே கந்தஹார் விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என ராஜீவ் கய் கூறினார்.
மேலும், ”இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானால் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன. எதிரியின் பீதியடைந்த, தவறான தாக்குதல்களால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்பட்டன. பல பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.” என்றார் ராஜீவ் கய்

‘அலை அலையாக வந்த டிரோன்கள்’
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பேசுகையில், மே 7- ம் தேதி முதன்முறையாக தாக்குதல் நடத்தப்பட்ட போது பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்றார்.
”பயங்கரவாத பயிற்சி முகாம்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. துல்லியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ” என்றார் ஏ.கே.பார்தி.
படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக அவர் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்
“மே 7ம் தேதி மாலையில் பாகிஸ்தானிலிருந்து பல டிரோன்கள் இந்தியாவின் விமானப்படைத் தளங்களை தாக்கின. ஜம்மு, உதம்பூர், பதான்கோட், அமிர்தசரஸ், பதிண்டா, டல்ஹவுசி , ஜெய்சல்மர் ஆகிய விமானப்படைத் தளங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த டிரோன்கள் ஒரே நேரத்தில் அலை அலையாக வந்தன. இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இதற்காகத் தயார் நிலையில் இருந்தன. இந்த டிரோன்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளால், தளங்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை.” என்று கூறினார் ஏ.கே.பார்தி.
ரஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதா?
ஷார்ட் வீடியோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மேலும் அவரிடம் இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,”நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் ‘ஆம்’ பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் ‘ஆம்’.” என்றார்
மேலும் அவர், ”இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றார்
”என்னால் சொல்ல முடிவது இதுதான்,’நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்’. மேலும் ‘நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்” என்று கூறினார் ஏ.கே.பார்தி.
‘கராச்சியைத் தாக்கத் தயாராக இருந்தோம்’ – கடற்படை கூறுவது என்ன?
ஷார்ட் வீடியோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்,” இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது” என்றார்.
ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்,” அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது” என கூறினார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்,” என்று பிரமோத் தெரிவித்தார்.
கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், “இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்” என்றார்
தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை எப்படி தொடங்கியது?
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய் பேசுகையில், “பாகிஸ்தானிலிருந்து ஹாட்லைனில் வந்த அழைப்பின் பேரில், நேற்று (மே 10) பிற்பகல் 3.35 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் உடன் தொலைபேசியில் பேசினேன். இதன் அடிப்படையில் எல்லை தாண்டிய குண்டு வீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது” என்றார்.
மேலும், “பாகிஸ்தானுடன் மே12ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தத்தை நீண்ட காலத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிப்பேன்” எனவும் ராஜீவ் கய் கூறினார்.
“ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில மணி நேரங்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் ராணுவம் அதனை மீறி, எல்லைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரவு முதல் காலை வரை தாக்குதல்கள் தொடர்ந்தது. இவை அனைத்தும் எதிர்கொள்ளப்பட்டன” என கூறிய ராஜீவ் கய், இது குறித்து பாகிஸ்தானுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
‘நடவடிக்கை தொடர்கிறது’: இந்திய விமானப்படையின் அறிவிப்பு என்ன?
இந்தநிலையில் இன்று பிற்பகல் தனது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னமும் செயல்பாட்டில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.
எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”ஆபரேஷன் சிந்தூரின் கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறை நேர்மையோடும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது” என இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னமும் செயல்பாட்டில் இருப்பதால், இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் கொடுக்கப்படும் எனவும், இது குறித்த ஊகங்களையும், சரிபார்க்கப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
சண்டை நிறுத்த மீறல் புகார் – பாகிஸ்தானின் பதில் என்ன?
சனிக்கிழமை ஏற்பட்ட ராணுவ நடவடிக்கை நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவு ஒன்றில்,” இருநாடுகளுக்கிடையே சண்டை நிறுத்தத்தை உண்மையாக அமல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. சில பகுதிகளில் இந்திய படையினர் மீறல்களை நிகழ்த்தியதால் எங்கள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுடன் நிலைமையை கையாண்டு வருகின்றனர். சண்டை நிறுத்தத்தை அமைதியாக அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் சரியான நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சரி செய்யப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். களத்தில் உள்ள படைகள் கட்டுப்பாட்டுடன் உள்ளன” என்று கூறியுள்ளார்.
“ராவல் பிண்டி வரை தாக்கினோம்”

பட மூலாதாரம், PIB
‘ஆபரேஷன் சிந்தூர்’ வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது இந்தியாவின் மன உறுதியின் சின்னம் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணைக்கான ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை ராஜ்நாத் சிங் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங்,” இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், எல்லை தாண்டி வசித்தாலும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றார்.
“இந்தியாவுக்கு எதிரான மற்றும் பயங்கரவாத சக்திகளின் கைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதிகிடைப்பதை பாதுகாப்புப் படைகள் உறுதி செய்திருக்கின்றன” என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியதன் மூலம் சரியான பதிலடி கொடுத்திருப்பதாகக் கூறிய ராஜ்நாத்சிங், “இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகள் மட்டுமல்லாது, நமது ராணுவப்படைகள் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல் பிண்டியையும் எட்டியுள்ளன” என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
‘சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல்’
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சனிக்கிழமை இரவில் காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே சனிக்கிழமை மாலை எட்டப்பட்ட உடன்பாட்டை கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் மீறி வருகிறது.
எல்லையில் நடக்கும் மீறல்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டு இதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்
சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ”நிலவரத்தை ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் எந்தவொரு அத்துமீறல்களையும் சமாளிக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
மத்தியஸ்தம் செய்ததாகக் கூறும் அமெரிக்கா
சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுமே அதை உறுதி செய்துள்ளன. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்தன.
இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில், “அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில், “அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியா தொடர்ச்சியாக தயங்காமல் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இனியும் தொடரும்.” என பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார், தங்கள் நாடு சண்டை நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடங்கியது எங்கே?
கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது.
மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தன.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC