SOURCE :- BBC NEWS
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார மற்றும் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும்.
இரு நாடுகள் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் சூழலில், இந்த தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதின், “ரஷ்யாவும், இரானும் வெளிநாட்டு அழுத்தங்களை கடுமையாக எதிர்க்கும்,” என்று கூறினார்.
இந்த ஒப்பந்தங்கள், இரு நாட்டின் மூலோபய ஒத்துழைப்பின் புதிய துவக்கம் என்றும், இரானின் ‘அண்டை நாடுகள் கொள்கையில்’ ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்றும் பெசெஷ்கியன் கூறினார்.
எந்தெந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது?
பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 ஆண்டுகளுக்கான மூலோபய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.
யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் வழங்கி வருகிறது என்று மேற்கத்திய நாடுகளின் உளவு முகமைகள் குறிப்பிடுகின்றன.
இரானுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ரஷ்யாவோ, ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் இரானோ தத்தம் பிராந்தியங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யாவும் இரானும், ராணுவ மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆலோசனை மற்றும் பதிலடி தருவோம் என்று முடிவெடுத்துள்ளன. இரு நாடுகளிலும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு இருநாட்டிலும் எரிசக்தி மற்றும் வர்த்தகத்துறை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு அரசுமுறை பயணம் மட்டுமல்ல, இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பயணம் என்று இரான் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இது இருநாட்டு உறவையும் வலுப்படுத்தும் ஒப்பந்தம். இது ஒரு அரசியல் உடன்படிக்கை அல்ல. இது எதிர்காலத்திற்கான பாதை என்று இரான் வெளியுறத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, டெலிகிராம் வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- பரஸ்பர பாதுகாப்புக்கு இரு நாடுகளும் ஒப்புதல்
- ரஷ்யாவை தாக்க இரானும், இரானைத் தாக்க ரஷ்யாவும் மற்ற நாடுகளுக்கு உதவாது
- கூட்டு ராணுவ பயிற்சிகள்
- இரு நாட்டு அதிகாரிகளின் கூட்டு பயிற்சி திட்டத்திற்கு ஒப்புதல்
- வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள்
ஆகியவை இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன.
இரானில் புதிய அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் புதின் குறிப்பிட்டார்.
தன்னிடம் உள்ள எரிவாயுவை ரஷ்யா இரானுக்கு வழங்க உள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கிய போது, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதை குறைத்தது. இதனால் தற்போது ரஷ்யா புதிய வாடிக்கையாளர்களை தேடி வருகிறது.
ரஷ்யாவில் இருந்து இரான் வரை எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பான முடிவு எட்டப்பட்டால், அஜர்பைசான் வழியாக அந்த குழாய் இரானுக்கு செல்லும்.
ரஷ்ய எரிசக்தி துறை அமைச்சர் செர்கெய் சிவிலியெவ் இந்த தகவலை அளித்ததாக ஜனவரி 17-ஆம் தேதி இன்டர்ஃபேக்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.
ராணுவ விவகாரங்களை விட பொருளாதார பிரச்னைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுக்க விருப்பம் கொண்டிருக்கும் இரு நாடுகளையும் இந்த ஒப்பந்தங்கள் மேலும் நெருக்கமாக்கும் என்று கூறியுள்ளது அந்த செய்தி.
பல துருவ உலகை உருவாக்கும் முயற்சியில் இரான், ரஷ்யா
பெசெஷ்கியன், இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் இதர அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை அன்று மாஸ்கோ சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவரை வரவேற்றார் ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் செர்கெய்.
சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரானின் நிலை பலவீனம் அடைந்து வருவதாக கருத்து நிலவுகிறது. இத்தகைய சூழலில் இரான் அதிபர், ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
இரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி, புதினுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததாக புதினிடம் பெசெஷ்கியன் கூறினார்.
இரு நாட்டுக்கும் இடையே ராணுவம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரு நாட்டினரும் சந்திக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்க்க ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு உதவும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன என்ற ரஷ்யாவின் அதிபர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ராய்ட்டர்ஸ் முகமை வெளியிட்டுள்ள செய்தியின் படி, ‘பல துருவ உலகை’ உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் உள்ளன என்று இரான் அதிபர் கூறியுள்ளார்.
ஆனால் இரானிய தூதர் கஸிம் ஜலாலி, இரானிய செய்தி முகமையான ஐ.ஆர்.என்.ஏ.விடம் பேசிய போது, “நம்முடைய நாட்டின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் சுயசார்பு போன்றவை தான் முக்கியமானது. எந்த பிரிவிலும் இணைய இரானுக்கு விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது படையெடுத்த பிறகு பெலராஸ், இரான், சீனா, மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ரஷ்யா தனது உறவை ஆழப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தையும் வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். மத்திய கிழக்கு விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ரஷ்ய நிபுணர் ருஸ்லான் சுலேமானோவ், “இது இரு நாட்டு உறவிலும் அடுத்த அத்தியாயம் இல்லை. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே இருந்த உறவை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மேற்கொண்டு பேசிய அவர், “இரானில் இருந்து வரும் ஆயுதங்களை ரஷ்யா நம்பியுள்ளது. பொருளாதாரத்திற்கு ரஷ்யா அமீரகத்தை அதிகம் நம்பியுள்ளது. சர்வதேச விஅவகாரங்களில் ஒற்றை துருவ உலகம் மற்றும் ஒரு நாட்டின் மேலாதிக்கத்தை இந்த ஒப்பந்தங்கள் மூலமாக ரஷ்யாவும் இரானும் நிராகரிக்கின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யா வட கொரியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. டிசம்பரில் பெலாரஸ் நாட்டுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது. அதன் மூலம் பெலாரஸில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது மட்டுமின்றி பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பையும் ரஷ்யா வழிநடத்துகிறது. காகசஸ் பிராந்தியத்தில் உள்ள பெலாரஸ், ஆர்மீனியா, மத்திய ஆசியாவில் உள்ள கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் அடங்கிய அமைப்பை ரஷ்யா வழிநடத்தி வருகிறது.
இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் தாக்குல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்ற அடிப்படையில் இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
யுக்ரேன் மீது போர் துவங்கிய நாளில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளுடன் பிரச்னையை சந்தித்து வருகிறது ரஷ்யா. தற்போது, அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது ரஷ்யாவின் அந்தஸ்தை உலக அரங்கில் மேம்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். அவர் ஆட்சியில் இரானை தனிமைப்படுத்தி, அதன் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை தரும் என்று நம்பப்படுகிறது.
இரான் மற்றும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ரஷ்யா சமீபத்தில் வடகொரியாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் இரானுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் அதுபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தம் ஏதும் இல்லை.
யுக்ரேனுக்கு எதிராக தாக்குதல் நடத்த வட கொரிய துருப்புகளை ரஷ்யா அனுப்பியது என்று மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டை ரஷ்யா ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலை தரும் அம்சமாக கருதப்படும் ஆயுத பரிமாற்றம் தொடர்பாக ரஷ்யா – இரான் ஒப்பந்தங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU