SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், @draramadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை அக்கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளனர். கட்சியின் பெரும் பகுதி அன்புமணி ராமதாஸ் பின்னால் திரள்வதை குறிக்கிறதா?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் வெள்ளிக்கிழமையன்று (மே 16) கூட்டியிருந்த கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே டாக்டர் ராமதாஸிற்கும் அவரது மகனும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை பலர் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று காலை பத்து மணியளவில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தைலாபுரம் தோட்டத்தில் கூட்டுவதாகும் அதில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் மே 15ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவின் மூலம் அறிவித்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.
இந்தப் பதிவின் மூலம் 250க்கும் மேற்பட்டோருக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டாலும் அந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மட்டத்திலான முக்கிய நிர்வாகிகளில் சுமார் 15 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
அக்கட்சிக்கு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, ரா. அருள் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்றனர்.
பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன் உள்ளிட்ட சுமார் 50 பேர் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அன்புமணி ராமதாஸ் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை.

சுமார் பத்து மணியளவில் கூட்டத்திற்கு வந்த டாக்டர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசினார்.
பெரும்பாலானவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லையே எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, “மாநாட்டுப் பணிகளால் களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. சிலர் என்னை தொலைபேசியில் அழைத்து காரணம் சொன்னார்கள். கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அன்புமணி வரலாம், வந்து கொண்டிருக்கலாம். எப்படி படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது என்கிற வித்தையை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சொல்லிக் கொடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், தான் இன்னும் தீவிரமாகச் செயல்படுவதைக் குறிக்கும் வகையில், “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை என்பார்கள். ஆனால், சிங்கத்தின் கால்கள் பழுதுபடவேயில்லை” என்றும் தெரிவித்தார் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் அவரது மகனும் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸிற்கும் இடையிலான மோதலின் மற்றொரு வெளிப்பாடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
பிரச்னையின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், @draramadoss
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டானூரில் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற பா.ம.கவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணித் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். இந்த அறிவிப்பிற்கு அந்த மேடையிலேயே தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.
இதையடுத்து, “கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது” எனக் கூறினார் ராமதாஸ்.
அதற்கு சில தினங்கள் கழித்து “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை, கட்சிப் பிரச்னைகளை பேசி சரிசெய்துவிட்டோம்” என ராமதாஸ் தெரிவித்தார்.
ஆனால், அடுத்த சில நாட்களில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்களுடன் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில்தான் ஏப்ரல் பத்தாம் தேதி தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், “இனி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான். அன்புமணி ராமதாஸ் கட்சியில் செயல் தலைவராகச் செயல்படுவார்” என்று அறிவித்தார். அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 11ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவிருந்த நிலையில், ராமதாஸ் இந்த அறிவிப்பைச் செய்ததால், பா.ஜ.கவுடன் கூட்டணியை இறுதி செய்ய அன்புமணி முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஊகங்கள் கிளம்பின.
இது குறித்து கட்சியிலிருந்து யாரும் தெளிவான விளக்கத்தை அளிக்காத நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மோதல் தீரவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புலப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 11ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள திருவிடந்தையில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது. ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையில் மோதல் வெடித்த பிறகு நடக்கும் முதல் மிகப் பெரிய பொது நிகழ்வு என்பதால் இந்த மாநாடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
முகுந்தனின் கையைப் பிடித்துக்கொண்டு மாநாட்டிற்கு வந்த ராமதாஸ், இந்த மாநாட்டில் பேசிய பேச்சு அதிரடியாக இருந்தது.
“நான் தனியா கட்சி ஆரம்பிச்சப்போ யானைச் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் ஜெயித்தோம். இப்போது கூட்டணியில் இருந்தும் ஐந்து தொகுதிகளில்தான் ஜெயிக்க முடிகிறது. இது அவமானம். பொறுப்பாளர்கள் கட்சிக்காக வேலை செய்வதில்லை. அவர்கள் வெவ்வேறு வேலைகளைப் பார்க்கிறார்கள்.
இனியும் அப்படி இருந்தால் உங்கள் பொறுப்பு உங்களிடம் இருக்காது. எந்த திசைக்குப் போய் காக்காப் புடுச்சாலும் ஒன்னும் நடக்காது. கட்சிக்குள்ளேயே கூட்டணி, கூட்டு எல்லாம் இனி நடக்காது தம்பி, நடக்காது கண்ணு. நீ உன்னைத் திருத்திக்கொள். இல்லையென்றால் உங்களை மாற்ற ஒருவன் வருவான். அவனை நானே கொண்டுவருவேன்” என்று பேசினார்.
பிரச்னைக்குக் காரணம் என்ன?

பட மூலாதாரம், @draramadoss
அவரது இந்தப் பேச்சு, கட்சிக்குள் இப்போதும் ஏதும் சுமுகமாகவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதைப் போலத்தான் இருந்தது. இந்த நிலையில்தான், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதாக ஃபேஸ்புக் மூலம் அறிவித்தார் ராமதாஸ்.
பா.ம.கவைப் பொறுத்தவரை இந்த விவகாரம் குறித்துப் பேசுவதையே தவிர்க்க விரும்புகின்றனர்.
கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமாவிடம் கேட்டபோது, “இதுவரை பல மாவட்டச் செயலாளர், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் அது குறித்து ஒரு சிறிய செய்தியைக்கூட யாரும் வெளியிட்டதில்லை. இப்போது மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? இன்று நடந்ததுபோன்ற கூட்டங்கள் அவ்வப்போது நடப்பதுதான். இதில் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றார்.
பெயரைத் தெரிவிக்க விரும்பாமல் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர் “பெரியவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், இப்படித் தடாலடியாக வெளிப்படையாகப் பேசினால் கட்சியினருக்குத்தான் சிக்கல். இந்நிலையில், நாங்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்கிறார்.
யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் மோதல் என்பதைப்போல சிலர் கருதினாலும், ராமதாஸின் குடும்பத்திற்குள் இருக்கும் அழுத்தம்தான் பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
“சமீபத்தில் நடந்து முடிந்த மாநாட்டின் வெற்றிக்கு காரணமே, அன்புமணி ராமதாஸ்தான். மூன்று மாதங்களாக இந்த மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்தார். ஆனால், மாநாட்டில் பேசிய ராமதாஸ், அன்புமணியைப் பாராட்டி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மாறாக, அதிகாரம் முழுக்க தன்னிடமே இருக்கிறது என்று காண்பிப்பதிலேயே குறியாக இருந்தார்.
ராமதாஸின் குடும்பத்தில், அன்புமணியின் குடும்பத்தைத் தவிர்த்து வேறு சிலருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் மகள் வழிப் பேரனான முகுந்தனின் நியமனம். ஆனால், கட்சி அன்புமணியைத் தாண்டி ராமதாஸிடம் வருவது நடக்குமெனத் தோன்றவில்லை” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
மூத்த பத்திரிகையாளரான கார்த்திகேயனும் இதே கருத்தையே எதிரொலிக்கிறார்.
“இந்தப் பிரச்னைக்குப் பின்னால் கூட்டணி, சித்தாந்தம் போன்றவை இருப்பதுபோலத் தெரியவில்லை. இது தந்தை – மகன் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறது. சித்திரை முழு நிலவு மாநாடு கட்சியின் வலிமையைக் காட்ட நடத்தப்படும் ஒரு மாநாடு. ஆனால், அந்த மாநாடே தந்தை – மகன் இடையிலான மோதலைக் காட்டும் மாநாடாக முடிவடைந்திருப்பது தொண்டர்களைச் சோர்வடையச் செய்திருக்கிறது.
மேலும், பா.ம.கவுடன் கூட்டணி வைப்பவர்கள் யாருடன் பேச வேண்டும் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கட்சி இத்தனை ஆண்டுகளாக அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலில்தான் நடந்திருக்கிறது. அதில் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. அதைச் சரிசெய்ய ராமதாஸ் விரும்பலாம். ஆனால், இப்படி வெளிப்படையாக அன்புமணியை ஓரங்கட்டுவதுபோலக் காட்டுவது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும்” என்கிறார் அவர்.
பா.ம.க-வின் தொடர் பின்னடைவுகள்

பட மூலாதாரம், @draramadoss
கார்த்திகேயன் சொல்வதைப் போல 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ம.க தொடர் பின்னடைவுகளைச் சந்தித்துவருகிறது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 18 இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம்பெற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் கூட்டணியில் இடம்பெற்று ஒரே ஒரு இடத்தைப் பெற்றது பா.ம.க.
இதற்குப் பிறகு, எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற கோஷத்தை முன்வைத்த பா.ம.க., 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் கட்சி சுமார் ஐந்தரை சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றாலும் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., அந்தத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களைப் பிடித்தது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றாலும், ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் கட்சியில் தானே அதிகாரம்மிக்கவர் எனக் காட்டிக்கொள்ள ராமதாஸ் விரும்பினாலும் கட்சியினர் அன்புமணியின் பக்கமே செல்ல விரும்புகிறார்கள் என்கிறார் கார்த்திகேயன்.
“இன்று ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு பெருமளவிலான நிர்வாகிகள் வராததற்குக் காரணம், அவர்கள் பா.ம.கவின் எதிர்காலம் இனி அன்புமணி ராமதாஸ் என முடிவுசெய்துவிட்டதுதான். மேலும், பா.ம.கவின் வாக்கு வங்கி எளிதில் பா.ஜ.கவின் வாக்கு வங்கியாகும் அபாயமிருக்கிறது. அதனை ராமதாஸ் உணர்ந்திருக்கிறார்.
அன்புமணி ராமதாஸும் இதனை உணர வேண்டும். அதை நோக்கி அவரை வழிநடத்திச் செல்லலாம். அதைவிட்டுவிட்டு வெளிப்படையாக அவரை விமர்சிப்பது கட்சிக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காது” என்கிறார் அவர்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் தந்தை – மகன் இடையிலான முரண்பாடுகள் வெடித்துள்ளன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC