SOURCE :- BBC NEWS

காட்டுத் தீ

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
  • பதவி, பிபிசி செய்தி
  • 11 ஜனவரி 2025, 13:20 GMT

    புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில பகுதிகளில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.

காட்டுத் தீ காரணமாக, குறைந்தது 11 பேர் இங்கு இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் எரிந்துள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, வரும் நாட்களில் இந்த தீ மேலும் பரவலாம் என அஞ்சப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

சமீபத்திய நிலைமை என்ன?

அப்பகுதியில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதைத் தவிர, இரண்டு லட்சம் பேர் விரைவில் வீடுகளை காலி செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தீ பரவியபோது “அங்கு வெடிகுண்டு வீசப்பட்டதைப் போன்று”, உணரப்பட்டதாக லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி ஷெரிப் (காவல் அதிகாரி) ராபர்ட் லூனா தெரிவித்தார்.

அது மட்டுமின்றி, மக்கள் வெளியேற்றப்பட்ட சில பகுதிகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்த வழக்குகளில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லூனா குறிப்பிட்டுள்ளார்.

பெலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான தீயைப் போலவே, ஈட்டன் பகுதியிலும் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் பரவிய தீ குறையத் தொடங்கியுள்ளது, ஆனால் அதுவும் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக கட்டடங்கள் உட்பட 5,300 கட்டடங்கள் அழிந்துள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பயம்

ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் சன்செட் பவுல்வர்டில் அமைந்துள்ள வணிக கட்டிடங்கள் உட்பட 5,300 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

காட்டுத் தீயால் வீடுகளை இழந்த பிரபலங்களில் சில நாட்களுக்கு முன்பு கோல்டன் குளோப் விருதுகளில் கலந்து கொண்ட லைடன் மீஸ்டர், ஆடம் பிராடி மற்றும் பாரிஸ் ஹில்டன் ஆகியோர் அடங்குவர்.

அமெரிக்க காப்பீட்டுத் துறையானது, அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் விலையுயர்ந்த காட்டுத் தீயாக இருக்கும் என்று அஞ்சுகிறது. ஏனெனில் தீயினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது.

சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள காப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் தெற்கு கலிஃபோர்னியாவிற்கான தீ முன்னறிவிப்பு மிகவும் தீவிரமான நிலையில் இருந்து கடுமையானதாக குறைக்கப்பட்டுள்ளது.

பிபிசியின் வானிலை அறிவிப்பாளர் சாரா கீத்-லூகாஸ் கூறுகையில், குறைந்தபட்சம் அடுத்த வாரம் வரை இந்த பகுதியில் மழை பெய்யும் என்று எந்த முன்னறிவிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்த தீயால் லாஸ் ஏஞ்சலிஸில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கலிஃபோர்னியாவின் பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

தீ அணைப்புக்கான ஏற்பாடுகள் குறித்தும் அரசியல் சர்ச்சை கிளம்பியுள்ளது. சில தீயணைப்பு வீரர்கள், தீயணைக்கப் பயன்படுத்தும் குழாய்களில் தண்ணீர் கூட இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இம்மாதம் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், இப்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தீயணைப்புத் துறையின் தலைவர் அந்தோணி மரோன் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​தீயணைப்பு வீரர்களுக்கு தண்ணீர் இல்லாததாக எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.

இதுகுறித்து குறிப்பிட்ட பசடேனா தீயணைப்புத் தலைவர் சாட் அகஸ்டின், சில தீ அணைப்பு தண்ணீர் குழாய்களில் குறைந்த அழுத்தத்தை குறுகிய காலம் அனுபவிக்க நேர்ந்தது என்றார்.

எவ்வாறாயினும், அனைத்துப் பிரச்னைகளும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் உறுதியளித்தார்.

ஒரே நேரத்தில் பல டேங்கர்களில் தண்ணீர் நிரப்பியதால் இவ்வாறு நடந்துள்ளது என்றார். தண்ணீர் குழாய்களில் அழுத்தம் குறைந்ததற்கு மின்வெட்டுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

பாலிசேட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

தீ பரவுவதற்கான காரணங்கள்

லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலையே காரணம் என உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வானிலையால் மரங்கள், செடிகள் காய்ந்து, தீ பரவுவது எளிதாகிவிட்டது.

ஆனால், தீக்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலிஃபோர்னியா தீயணைப்பு சேவைத் தலைவர் டேவிட் அகுனாவின் கூற்றுப்படி, இப்பகுதியில் ஏற்படும் 95 சதவீதம் காட்டுத்தீ மனிதர்களால் ஏற்படுகிறது. இருப்பினும் தற்போதைய தீ எவ்வாறு தொடங்கியது என்று அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.

பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை

பட மூலாதாரம், Getty Images

காலநிலை மாற்றத்தின் பங்கு

அதிக காற்று மற்றும் மழையின்மை தற்போதைய தீ பரவ காரணமாக இருந்தாலும், காலநிலை மாற்றம் சூழலை மாற்றுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்கு அமெரிக்காவில் ஏற்படும் மிகப்பெரிய காட்டுத் தீ, காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்று அமெரிக்க அரசாங்கத்தின் ஆராய்ச்சி தெளிவாகக் கூறுகிறது.

“காலநிலை மாற்றம், உயரும் வெப்பநிலை, நீண்ட வறட்சி காலங்கள் மற்றும் வறண்ட வளிமண்டலம் ஆகியவை மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படும் அபாயத்தையும் பரவலையும் அதிகரிக்கிறது” என்று அமெரிக்கப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறுகிறது.

வெப்பமிகுந்த கோடைக்காலம் மற்றும் சமீபத்திய மாதங்களில் மழையின்மையின் காரணமாக, கலிஃபோர்னியா பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறியப்படுகின்றது.

எந்த நேரத்திலும் தீ ஏற்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்படும் காலமாக, மே முதல் அக்டோபர் மாதங்கள் பொதுவாக கருதப்படுகிறது.

ஆனால் காட்டுத்தீ ஆண்டு முழுவதும் ஏற்படும் சிக்கலாக ஏற்கனவே மாறிவிட்டது என்று அம்மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசோம் கூறியுள்ளார்.

மேலும் “காட்டுத்தீ ஏற்படுவதற்கு குறிப்பிட்ட பருவம் என்று எதுவும் இல்லை. வருடம் முழுவதும் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசியிடம் பேசிய கலிஃபோர்னியா தீயணைப்பு சேவையின் தலைவர் டேவிட் அகுனா, கடந்த 30 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய தீ பெலிசேட்ஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.

சாண்டா அனா காற்று

சாண்டா அனா காற்று

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தீ பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் நிலத்திலிருந்து கடற்கரையை நோக்கி வீசும் ‘சாண்டா அனா’ எனப்படும் காற்றாகும்.

மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் இந்தக் காற்று, தீயை எரியூட்டியதாக நம்பப்படுகிறது.

கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை நோக்கி சாண்டா அனா காற்று வீசுகிறது. மேலும் வருடத்திற்கு பல முறை இக்காற்று வீசுவதாக அறியப்படுகின்றது.

மேலும் சாண்டா அனா காற்று லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவின் சில பகுதிகளில் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

ஆனால், இந்தக் காற்றும் காட்டுத் தீயும் இணையும் போது, மிகப்பெரிய அழிவு ஏற்படுகின்றது.

சாண்டா அனா காற்று பொதுவாக செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து மே மாதம் வரை வீசும். பொதுவாக இந்த காற்று சில நாட்களுக்கு மட்டுமே வீசும், ஆனால் சில நேரங்களில் அவை பல வாரங்களுக்கு தொடர்ந்து வீசுவதையும் காணமுடியும்.

இம்முறை காற்று மிக அதிக வேகத்தில் வீசுகிறது. பொதுவாக, அவற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 மைல்கள் வரை இருக்கும், ஆனால் சில சமயங்களில் அவை மணிக்கு 100 மைல்கள் வேகத்தில் வீசும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU