SOURCE :- BBC NEWS

வங்கதேசத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

34 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கதேசத்திலிருந்து வரும் பல முக்கியமான பொருட்களின் இறக்குமதிக்கு இந்திய அரசு மே 17 சனிக்கிழமை அன்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவின்படி , இப்போது வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மரத்தால் ஆன நாற்காலி, மேசை போன்ற பொருட்களை சாலை வழியாக இந்தியாவிற்கு கொண்டு வர முடியாது.

கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள துறைமுகங்களில் இருந்து மட்டுமே ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

முன்னதாக கடந்த மாத தொடக்கத்தில், வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட ‘டிரான்ஸ்ஷிப்மென்ட்'(இந்தியா வழியாக பிற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வது) வசதியையும் இந்தியா திரும்பப் பெற்றது .

இத்தகைய சூழ்நிலையில், இந்தியா விதித்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்தியா – வங்கதேச வர்த்தகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆய்வாளர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள்? இந்தப் புதிய கட்டுப்பாடுகளை வர்த்தகக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

புதிய முடிவு என்ன?

  • சாலை வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்வது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை இப்போது கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக மட்டுமே வர முடியும்.
  • அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள சாலை எல்லை சோதனைச் சாவடிகள் வழியாக வங்கதேசத்திலிருந்து பழங்கள், பழச் சுவை கொண்ட பானங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • பேக்கரி பொருட்கள், சிற்றுண்டிகள் மற்றும் மிட்டாய் பொருட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இனி இந்த எல்லைச்சாலை வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வர முடியாது.
  • நூல் மற்றும் பருத்தி நூல் கழிவுகள், பிவிசி மற்றும் பிளாஸ்டிக்-ஆல் செய்யப்பட்ட பொருட்கள், மரத்தால் ஆன நாற்காலி, மேசை, அலமாரி போன்ற பொருட்களுக்கும் இதே கட்டுப்பாடுகள் பொருந்தும்.
  • இருப்பினும், மீன், எல்பிஜி(எரிவாயு), சமையல் எண்ணெய் மற்றும் நொறுக்கப்பட்ட கல் போன்ற பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
  • மேலும் வங்கதேசம் வழியாக நேபாளம் மற்றும் பூட்டானுக்கான ஏற்றுமதிகள் இந்த கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாது.

வங்கதேசத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

வர்த்தகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2023-24 நிதியாண்டில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே மொத்தம் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், வங்கதேசம் இந்தியாவிற்கு சுமார் 1.97 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. வங்கதேசத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் ஆகும்.

வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதி வருவாயில் சுமார் 83 சதவீதம் ஆயத்த ஆடைகளிலிருந்து வருவதாக தரவுகள் காட்டுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் டெல்லியை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அறிக்கையின்படி, இந்திய அரசாங்கத்தின் புதிய உத்தரவால், வங்கதேசத்திலிருந்து 770 மில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகள் பாதிக்கப்படும்.

இது வங்கதேசம் இந்தியாவுக்கு செய்யும் ஏற்றுமதியில் 42 சதவீதமாகும்.

வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதி வருவாயில் சுமார் 83 சதவீதம் ஆயத்த ஆடைகளிலிருந்து வருவதாக தரவுகள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வரும் ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பிடப்பட்ட மதிப்பு 618 மில்லியன் டாலர்கள் என்று அறிக்கை கூறுகிறது. இப்போது இந்த ஆடைகள் கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக மட்டுமே இந்தியாவிற்கு வர முடியும்.

மேலும், வங்கதேச ஏற்றுமதியாளர்கள் வரி இல்லாத சீன ஆடைகள் மற்றும் ஏற்றுமதி மானியங்களால் பயனடைவதாகவும் இதன் மூலம் இந்திய சந்தையில் 10-15% குறைந்த விலையில் பொருட்களை விற்பதாகவும் இந்திய ஜவுளி நிறுவனங்கள் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றன என அந்த அறிக்கை கூறியுள்ளது.

குறைந்த விலை வெளிநாட்டு ஆடைகளை தடையின்றி விற்பனை செய்வது குறித்து தொழில்துறையின் நீண்டகால கவலையை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த முடிவு உள்ளது என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தோஷ் கட்டாரியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

“வெளிநாட்டு ஜவுளிகள் அதிகளவில் இங்கு இறக்குமதி செய்யப்படுவதை தடுக்கும் வகையிலும், இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு உதவும் வகையிலும் இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், இந்திய உற்பத்தியாளர்களுக்கான திறன்களை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான ஆதரவின் மூலம் இந்தக் கொள்கையை வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவரான ராகேஷ் மெஹ்ரா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம், “ஏப்ரல் 2025இல், வங்கதேசம் இந்தியாவில் இருந்து சாலை வழியாக பருத்தி நூல் இறக்குமதிக்கு தடை விதித்தது. இந்த ஒருதலைப்பட்ச வர்த்தக தடைக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை” பார்க்கப்படுகிறது.” என்றார்.


வங்கதேசத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

வங்கதேச தொழிலதிபர்கள் குறிப்பாக ஆயத்த ஆடைகள் உற்பத்தியுடன் தொடர்புடையவர்கள், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கான ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்கள் என்கிறது பிபிசி வங்க சேவை செய்தி.

இதனுடன், வங்கதேச பொருட்களின் சந்தை வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பரவியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல நிறுவனங்களும் இந்த மாநிலங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தன.

இப்போது பல தொழிலதிபர்கள் இந்த இரண்டு விஷயங்களும் இந்த புதிய முடிவால் பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். ஏனெனில் இப்போது ஆயத்த ஆடைகளை சாலை வழியாக அனுப்புவதற்கு பதிலாக கடல் வழியாக அனுப்ப வேண்டியிருக்கும். இது செலவு மற்றும் நேரத்தை அதிகரிக்கும்.

இருப்பினும், வங்கதேச ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (BGMEA) முன்னாள் மூத்த துணைத் தலைவரான பைசல் சமத், இந்த முடிவு இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகிறார்.

“சாலை வழியாகபொருட்களை அனுப்புவதற்கு எங்களுக்கு குறைந்த செலவாகும். குறைந்த நேரத்தில் அனுப்பலாம். துறைமுகம் வழியாக அனுப்புவது செலவு மற்றும் நேரத்தை அதிகரிக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல, இந்திய இறக்குமதியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ” என்று பைசல் சமத் பிபிசி வங்க சேவையிடம் கூறினார்.

இந்தியாவிற்கான வங்கதேசத்தின் ஏற்றுமதி மிக அதிகமாக இல்லை என்றாலும், மொத்த வங்கதேச ஏற்றுமதியை வைத்து பார்க்கும்போது இந்த பங்கு மிக முக்கியமானது என டாக்கா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையின் இணைப் பேராசிரியர் முகமது மோனிருல் இஸ்லாம் பிபிசி வங்க சேவையிடம் கூறினார்

“இந்தியாவின் இந்த முடிவு வங்கதேச வர்த்தகத்தை நிச்சயமாக பாதிக்கும். ஏனென்றால் நமது சந்தைகள் குறைவாக இருப்பதுடன், பல்வேறு வகையான தயாரிப்புகளும் குறைவாக உள்ளன. இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்ப முடியாது. இது தவிர, கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கான செலவும் மிக அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

ஏற்றுமதி சந்தையில் ஏற்படக்கூடிய நெருக்கடியைச் சமாளிக்க வங்கதேசக் கொள்கை வகுப்பாளர்களிடம் எந்தவிதமான உறுதியான திட்டமிடல் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இதனால்தான் இந்தியாவுடனான ஏற்றுமதியில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான தீர்வு அல்லது மாற்று குறித்து விஷயங்கள் தெளிவாக இல்லை என்றார் அவர்.

பிரதமர் மோடியும் வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் ஏப்ரல் 2025 இல் தாய்லாந்தில் சந்தித்தனர்.

பட மூலாதாரம், ANI

வணிகக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்க வேண்டுமா?

வங்கதேசத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி அமைப்பான சென்டர் ஃபார் பாலிசி டயலாக் (CPD)-யின் மூத்த ஆய்வாளரான தேபப்ரியா பட்டாச்சார்யா, இது பொருளாதார பிரச்னை மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளையும் பிரதிபலிக்கிறது என்று பிபிசி வங்க சேவையிடம் கூறினார்

பிரதமர் நரேந்திர மோதிக்கும் வங்கதேச இடைக்கால அரசின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸுக்கும் இடையே பாங்காக்கில் சமீபத்தில் நடந்த சந்திப்புக்குப் பிறகும் இதுபோன்ற ஒரு முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

“இதுபோன்ற நடவடிக்கைகள் தற்செயலாக எடுக்கப்பட்டவை அல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிக்கலானதாகவும் நிலையற்றதாகவும் மாறி வருவது கவலைக்குரியது. இதைக் கடக்க, அரசியல் மட்டத்தில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நலன்கள் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் இந்தியா-வங்கதேச உறவுகள் மீண்டும் நிறுவப்பட வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

“இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான தற்போதைய வர்த்தக தகராறு இறக்குமதி – ஏற்றுமதியோடு மட்டும் முடிந்துவிடவில்லை” என குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) குழுவின் அறிக்கை கூறுகிறது.

இருநாடுகள் இடையிலான பிளவு வர்த்தகத்தில் மட்டும் முடியவில்லை என்றும் முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமாகி 2.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது என்றும் அறிக்கை கூறியுள்ளது.

சீனாவின் வளர்ந்து வரும் பிராந்திய செல்வாக்கிற்கு எதிரான ஒரு உத்தியாகவே இந்தியாவின் நடவடிக்கை பார்க்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU