SOURCE :- BBC NEWS
55 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (21/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி கூறுகிறது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“வடலூர் வள்ளலார் கோயிலில் சர்வதேச மையம் கட்டுவது விதிகளுக்கு முரணானது, அந்த இடம் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து, இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழ்க அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் 3.18 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. ஆனால், சத்திய ஞானசபைக்கு இடம் கொடுத்திருந்த பார்வதிபுரம் மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெருவெளியில் மறுஉத்தரவு வரும் வரை எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் போலீஸாரிடம் வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்டு, ஞானசேகரனை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாருக்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து ஞானசேகரனை அழைத்துச் சென்ற போலீஸார், தனி இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்
கர்நாடக மாநில பெண் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 55 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 8 பேர் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்டரங்கில் வேட்பாளர்களுக்க சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வந்தது.
சுயேச்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவரான பத்மாவதியின் வாக்கு அங்குள்ள கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் எவ்வாறு போட்டியிடலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பத்மாவதிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா அங்கே விரைந்து சென்றார். அதிகாரிகளுடன் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்றிரவு 9 மணி வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.
உச்ச நேர மின்பயன்பாட்டை அறிய டி.ஓ.டி. மீட்டர் – மின்வாரியம் உத்தரவு
சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ‘பீக் ஹவர் சார்ஜ்’ எனப்படும் உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன்படி, காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் உச்சநேர மின்கட்டணமாக, ஒரு யூனிட் கட்டணத்துடன், 25 சதவீதம் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு யூனிட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப உச்சநேரம், சலுகை நேரம் மற்ற நேர மின்பயன்பாட்டை தனித்தனியே கணக்கெடுக்க டிஓடி எனப்படும் ‘டைம் ஆஃப் தி டே’ மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டர்கள் உயரழுத்தப் பிரிவில் இடம்பெறும் மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ளன.
தாழ்வழுத்த பிரிவில் சிறு தொழில்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் உச்சநேர மின்பயன்பாடு இடம் பெறுகிறது.
இந்த மின்இணைப்புகளில் டிஓடி மீட்டர் பொருத்தப்படும் வரை மொத்த மின்பயன்பாட்டு கட்டணத்துடன் சேர்த்து 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்க 2022-ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வசூலிக்கப்படுகிறது. பலர் இரவில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு சலுகை கேட்கின்றனர். எனவே, இதுவரை பொருத்தப்படாத மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டை கணக்கெடுக்கும் டிஓடி மீட்டர் பொருத்துமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.
யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது “வேலை வேண்டும்! வேலை வேண்டும்! பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும்! பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம்! என்றவாறு பல முழக்கங்களை எழுப்பிய வண்ணம் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர் இருப்பினும் ஆளுநரின் செயலாளர் ஒருவர் குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிசாருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார்.
போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். இதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU